வியாழன், 12 செப்டம்பர், 2024

 

மணவாழ்த்துப் பாடுகின்றோம்

                      (எண்சீர் விருத்தம்)

பல்லிசை வல்லோர் தாள மிசைக்க

பாவையர் கூட்டம் பாட்டுப் பாட

பல்திறன் கொண்ட காளை யரெல்லாம்

பாட்டுடன் நடனம் ஆடித் திளைக்க

கல்லினில் வடித்த சிலைபோல் தோன்றும்

கவினுரு காதலன் கடைக்கண் காட்ட

வில்லினை யொத்த புருவ முயர்த்தி

வெண்கரு விழியாள் வியப்பைக் காட்ட

 

அருட்பெரும் ஆன்றோர் அடிகள் முன்னே

ஆவணித் திங்கள் இருபத் திமூன்றில்

திருநிறைச் செல்வன் விக்னேஷ் கரத்தில்

திருமண நாணை எடுத்துக் கொடுக்க

திருவளர்ச் செல்வி ரம்யா கழுத்தில்

திருமறை பாடித் திருநாண் பூட்ட

இருமனம் ஒன்றாய்க் கலந்தே இணைந்து

இல்லற வாழ்வை இனிதே தொடங்கும்

 

மணவிழா நிகழும் நன்னா ளின்று

மதிநிறை பெரியோர் வந்து கூடி

மனங்கவர் மறைநூல் விளக்கும் பொருளில்

மங்களச் சொற்கள் சொல்லிப் போற்ற

மணவினை கொள்ளும் மணாளன் மணாட்டி

மாண்புடன் என்றும் வாழ வேண்டி

மனம்தொடும் சொல்லால் வாழ்க வென்று

மகிழ்வுடன் வாழ்த்துப் பாடு கின்றோம்

திரு கணேசுகுமார் பொன்னழகு - சிங்கப்பூர்

 

 

வெள்ளிவிழாக் காணும் கவிமாலைக்கு வாழ்த்து!

(எண்சீர் விருத்தம்)

கண்ணதாசன் பிறந்தநாளில் கவிமாலை யமைப்பாகக்

காற்கோல் நடப்பட்டு கவிபாடும் யியக்கமிது

எண்ணத்தை எழுத்தாக்கி எழுத்துகளைக் கவியாக்கி

இனிமையுடன் எடுத்தியம்ப ஏற்றதொரு இடமாகிப்

பண்ணமைத்தப் பாக்களையும் படித்துணர்ந்த நூல்களையும்

பாலகரும் மாணவரும் பரவசமாய்ப் பகிர்ந்திடவே 

எண்ணுகின்ற இயக்கமாக வெள்ளியாண்டை எட்டினாலும்

இனிதுபல நூறாண்டுத் தழைத்தோங்க வேண்டுகிறேன்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

மனிதம் காத்திடுக

(அறுசீர் விருத்தம்)

குயில்கள் கூவும் வயநாட்டில்

குவிந்து விழுந்த மழைவெள்ளம்

புயல்போல் புகுந்து புரட்டியதால்

புல்லும் பூண்டும் புதைந்து அன்று

குயவன் குழைத்த கலவைபோல்

குழைந்து குவிந்து வந்திடவே

வயதும் வரம்பும் பார்க்காது

வசதி வாய்ப்பும் வார்க்காது

 

இயற்கைத் தாயின் சீற்றத்தால்

இழந்த உயிர்கள் பலவாகும்

பெயர்ந்து விழுந்த மண்ணடுக்கில்

பலபேர் இன்னும் புதைந்துள்ளார்

பயந்து நடுங்கும் மக்களிடம்

பாரா முகமாய் இருப்பதேனோ

முயன்று விரைவில் முதலுதவி

முடித்தே மனிதம் காத்திடுக


கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

 

விட்டு விடுதலையாகி – ஆகஸ்டு 2024

(எண்சீர் விருத்தம்)

 

                        முற்றோதும் குருமாரும் முடிவில்லா முனிமாரும்
                            மூச்சடக்கிப் பேச்சடக்கி முறையான தவத்தாலே
                        பற்றற்ற வாழ்வுதனைப் பரிசாகப் பெற்றாலும்
                            பண்போடும் பணிவோடும் பாசமிகு பரிவோடும்  
                        கற்றுணர்ந்த காவியங்கள் கற்பிக்கும் கருத்துகளில்
                            கரைகண்ட ஞானிகளாய்க் கண்முன்னே நின்றாலும்
                        வெற்றிபுகழ் வீரமென வீற்றிருந்த காலமதை
                            விட்டுவிடு தலையாகி வெளிச்செல்ல முடியாது
 
                        பட்டுடுத்திப் பகட்டுடுத்திப் பரிவட்டம் தானுடுத்திப்
                            பார்போற்றும் பழம்பெருமை பேசித்தான் வாழ்ந்தாலும்
                        ஒட்டிவந்த உறவோடு உடன்பிறந்த உறவுகளும்
                            ஒன்றுகூடி உளமகிழுந்து ஊர்மெச்ச வாழ்ந்தாலும்
                        விட்டுவிடு தலையாகி வெளிவீதி போவதற்கு
                            விரும்பித்தான் விரைவுடனே முயற்சிபல எடுத்தாலும்
                        கட்டுண்ட வாழ்க்கையிலே கடலளவு  துன்பங்கள்
                            கவலைகளாய் மாறித்தான் கண்களுக்கு முன்நிற்கும்
                                                                                               
 
 
திரு கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்


 


 

சங்கத்தில் பாடாத கவிதை – ஜூலை 2024

(எண்சீர் விருத்தம்)

 

பொங்குதமிழ் பெட்டகத்தின் பொன்மகளாம் பூமகளைப்

புறைதீர்ந்த பொன்மொழியால் பூசித்துப் போற்றுகின்ற

தங்கநிகர் தமிழன்னை தானுரைக்கும்  மொழியாலே

தர்மத்தைத் தலைகொண்டு தரணியெங்கும் தாழ்பதித்தாள்

அங்கமெல்லாம் அணிகின்ற அழகூட்டும் அணிகலனாய்

அகத்தியத்தின் வழிநூல்தொல் காப்பியத்தைக் கொண்டிங்குச்

சங்ககால வாழ்வியலின் சமதர்மச் சமத்துவத்தைச்

செவ்வியலின் செம்மாந்த இலக்கியமாய் வடித்தெடுத்தாள்

 

எங்குமுள்ள இலக்கியங்கள் எழுத்தாக ஏடாக

எவ்வகையில் வந்தாலும் அனைத்துவகை படைப்பினிலும்

வெங்களத்தின் வெற்றியையும் தோல்வியையு முரைத்தாலும்

                  வசந்தகால வாழ்வியலை வகுத்துரைத்தும் பாடினாலும்

சங்கத்தில் பாடாத கவிதைகளின் பாடுபொருள்

                  சகத்தினிலே யில்லையென்று சத்தியமாய் நானுரைக்க

பங்கமில்லாப் படைப்புகளைப் பூமியிலே புழங்கவிட்டு

                  பழமைகளும்  மறையாமல் புதுமைகளைப் புகுத்துகின்றாள்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

திங்கள், 24 ஜூன், 2024

 

இயற்கை என்றொரு கவிஞன்

(எண்சீர் விருத்தம்)

 

நிந்தனைக் கப்பால் நினைவுறு முலகில்

நிறைவுறா யியற்கை என்றொரு கவிஞன்

எந்நிலை வந்தும் எத்திசை போயும்

இயம்பிடும் படைப்பாய் எழிலுறும் காட்சி

சிந்தனைக் கினிய விந்தைகள் போல

சிறப்புடன் விளங்கிப் பழம்புகழ் பேசும்

செந்தமிழ் மொழியும் செவ்விய நடையில்

செரிவுடன் திரட்டி யுண்மைகள் சொல்லும்

 

வெந்தணல் தீயாய்க் வெயிலவன் விரைய

விரிகதிர் பரப்பிப் புனலினை யுறிஞ்சும்

மந்தென மாறும் வானிடை யெங்கும்

மையிருள் கொண்டு காரென நகரும்

சிந்திடும் சாரல் தூறலாய்ப் பெய்ய

சிறுதுளி யாகிப் பெருமழை யாகும்

வந்திடும் தண்ணீர் ஆறெனப் பாய்ந்து

வயல்வெளி யெங்கும் வளத்தினைச் சேர்க்கும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

அன்புள்ள அம்மாவிற்கு

(எண்சீர் விருத்தம்)

விண்வெளியின் வீதி யெங்கும் விரவினாலும்

விடிவெள்ளிக் கூட்டந் தன்னில் ஒளிர்கின்ற

வெண்மதியின் குளுமை தன்னைப் பெற்றிலங்கும்

விந்தையினை வேறு வேறாய்க் காட்டாது

பெண்ணினத்தின் பெருமை சொல்லும் பெட்டகமே!

பேரறிவே! அன்பிற் கினிய எனதம்மா!

வண்ணமய வாழ்க்கை பெற்று வாழ்ந்தாலும்

வயிற்றிலொரு பிள்ளை வளர வேண்டுமென்று

 

எண்ணத்தில் ஏற்றம் கொண்ட எனதம்மா!

எங்கெங்கோ தேடிக் கண்டத் திரவியமாய்

அண்டத்தில் பிண்டம் வைத்துச் சுமந்தாலும்

ஐயிரண்டு திங்கள் அயர்ந்தும் அயராமல்

கண்ணிரண்டும் காட்டு கின்ற கவலைதனை

களிப்பாக மாற்றி நிற்கும் விந்தையோடு

எண்ணில்லா ஏக்கம் தன்னில் இரஞ்சினாலும்

எல்லையில்லா மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றார்.

 

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்