வியாழன், 11 மே, 2017


நீர் படரும் அடையாளம்


காட்சி காட்டும் அடையாளங்கள்
ஏதோ சங்கடத் தவிப்புகளாய்
நிறம் கண்ட அழிந்தொழித்தும்

மீண்டும் மீண்டும் தன் சுயத்தை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது

முன்னவன் தனக்கென்று இல்லாமல்
உலகுக்கு ஈந்தவன்

என் பேரனின் பிஞ்சுக் கரங்களில்
அழுந்தி பிடிக்க தேடியும் கிடைக்கப்பெற்றதில்லை
எந்த அடையாளமும்

நதிக்கரையின் படுகைகளில்
பரந்து கிடந்தவை
யாருமற்றதாய் ஆகிப் போனது

மூழ்கியவனுக்குத்
தட்டுப்பட்ட அடையாளம்

என் பேரனின் நெஞ்சு குருதியின்
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்


      கவிஞர் திரு எம். கருணாகரண் அவர்களுடையநீர் படரும் அடையாளம் என்னும் கவிதைத் தலைப்பு அருமையான தலைப்பாகும். இத்தலைப்பை அவர் எந்தக் காரணத்திற்காக இந்தக் கவிதைக்கு வைத்தாரோ தெரியாது. இந்தக் கவிதையைப் பாடிக்கும் வாசகர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான புரிதல்கள் தோன்றுகின்றன. அவற்றில் ஒன்று இந்தக் கவிதையைப் பற்றி விளக்கிய நண்பர் திரு எம். சேகர் அவர்களின் புரிதல்கள். அவர், அழிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நம் அடையாளங்கள் நீர்நிலைகளால் வெளிக் கொணரப்பட்டு மீண்டும் காணமலேயே போகின்றன என்பதை அருமையாக விளக்குவதோடு அதற்கான ஆதாரங்களையும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல எவ்வளவுதான் மறைத்தாலும் நாளைய தலைமுறையினர் முயன்றால் அவற்றை மீட்டெடுத்து உலகரங்கில் வெளிப்படுத்துவதில் வெற்றியும் காணலாம் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.

இந்தக் கவிதையைப் படித்த நான் அதன் புரிதலை என் கோணத்தில் பார்க்கும்போது இந்தக் கவிதையை எழுதிய கவிஞர் நீரின் மேன்மையோடு நம் அடையாளத்தின் மேன்மையையும் ஒப்பிட்டுக் காட்டி அவற்றின் இன்றைய நிலைகளையும் அவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தைச் சுட்டவே இத்தலைப்பை வைத்திருப்பாரோ எனத் தோன்றுகின்றது. அதாவது, நீர் எப்போதும் ஓரிடத்தில் இருப்பதில்லை. அது ஏதோ ஒருவகையில் பூமிக்கு அடியிலோ பூமிக்கு மேலோ படர்ந்துகொண்டே இருக்கும். அதாவது ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவிக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் உயிரின் ஆதாரமாகவும் இருக்கும். அதுபோலத்தான் நம் தமிழர்களுடைய நாகரீக வளர்ச்சியின் பெருமைகளும் அடையாளங்களும் தொன்றுதொட்டு உலகெங்கும் படர்ந்துகொண்டு வருகின்றன. அதாவது, பரவிக்கொண்டு வருகின்றன. இவை மற்ற இனங்களின் நாகரீக வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் விளங்கின, விளங்குகின்றன இனியும் விளங்கும். இவற்றை அடிப்படையாகக்கொண்டே என்னுடைய பார்வை அமைந்தது. அவை பின்வருமாறு,

காட்சி காட்டும் அடையாளங்கள்
ஏதோ சங்கடத் தவிப்புகளாய்
நிறம் கண்ட அழிந்தொழித்தும்...


இன்றைய நவீன யுகத்தில் பூமிக்கு மேலே நீர் படரும் அடையாளமாய்க் காட்சி காட்டும் ஆறுகளும் ஓடைகளும் அருவிகளும் ... இன்னபிற நீர்நிலைகளும் சில சுயநலமிகளால், தன் சுயத் தன்மையையும் நிறத்தையும் இழந்து குப்பைகளாலும் கழிவுகளாலும் புதிய நிறமேற்றி அழிந்துகொண்டு இருக்கிறது அல்லது அழிக்கப்பட்டுக்கொண்டு இருகின்றது. அதுபோலவே நம் தமிழர்களுடைய வரலாற்றின் மேன்மையையும் பழமையையும் பறைசாற்ற அவ்வப்போது நீர்நிலைகளிலும் அகழ்வாரய்ச்சியிலும் காட்சிதரும் அடையாளங்கள் இனம் (நிறம்) கண்டு அழிக்கப்படுகின்றது.


மீண்டும் மீண்டும் தன் சுயத்தை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது


எவ்வளவுதான் கழிவுகளாலும் குப்பைகளாலும் நிறம் மாறிய நீர் ஆவியாகி மேகத்தின் உதவியால் மீண்டும் மீண்டும் தன் சுயத் தன்மையையும் மேன்மையையும் இழக்காமல் தூய மழைநீராய்ப் பூமியில் வெளிப்படுகின்றது. அதுபோலவே ஓரிடத்தில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறும் மேன்மையும் இயற்கையின் நிகழ் மாற்றத்தின் வாயிலாகவோ அகழ்வாய்வின் மூலமாகவோ மீண்டும் மீண்டும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

முன்னவன் தனக்கென்று இல்லாமல்
உலகுக்கு ஈந்தவன்

மேகங்கள் தன்னிடமுள்ள நீரைத் தனக்கென்று வைத்துக்கொள்ளாமலும் உயர்வு தாழ்வு, மேடு பள்ளம் என வேறுபாடு பார்க்காமலும் உலகில் உள்ள அனைவருக்கும் எல்லா இடத்திற்கும் பயன்படுமாறு அளிக்கின்றது. அதுபோலவே நம் பண்டையத் தமிழனும் தன்னிடமிருந்த மரபு, பண்பாடு, கலை, செல்வம் போன்றவற்றையும் அவை வெளிப்படுமாறு செய்து வைத்த அடையாளங்களையும் தனக்கென வைத்துக்குக்கொள்ளாமல் பிறருக்காகவே கொடுத்துச் சென்றுள்ளான்.

என் பேரனின் பிஞ்சுக் கரங்களில்
அழுந்தி பிடிக்க தேடியும் கிடைக்கப்பெற்றதில்லை
எந்த அடையாளமும்


இன்றையத் தலைமுறையினருக்கு (பேரன்) இயற்கை வனப்புகளாலான நீர்ப் படுகைகளோ அதன்மூலம் கிடைத்து இன்புறக்கூடிய தூய்மையான நீரோ எங்குத் தேடியும் காணமுடிவதில்லை. அப்படியே கண்டாலும் அவை அழிக்கப்பட்டு, அதற்கான அடையாளங்கள் மாற்றப்பட்டுச் செயற்கையாய்க் காணப்படுகின்றன. அதுபோலவே நீருக்கடியில் மூழ்கிப்போன இயற்கை வனப்புகள் நிறைந்த குமரிக் கண்ட நாடுகள் பற்றிய அடையாளங்களும் அவற்றிற்கான செய்திகளும் கிழக்காசிய நாடுகளில் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்களும் இன்றையத் தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை.   

நதிக்கரையின் படுகைகளில்
பரந்து கிடந்தவை
யாருமற்றதாய் ஆகிப் போனது


நதிகளின் படுகைகளில் பரந்து சென்று யாவருக்கும் பயன்பட்ட நீர்; குளிர்பானம், தோல் தொழிற்சாலைகள் போன்றவற்றால் உறிஞ்சப்பட்டும் கழிவுகள் சேர்க்கப்பட்டும் ஒன்றுமில்லாமல் வரண்டுபோனது. அதுபோல பண்டையத் தமிழன் நதிக்கரை படுகைகளில் ஆரம்பித்து வைத்த முதல் குடும்ப வாழ்க்கைமுறைக்கான சான்றுகளும் முதல் நாகரீக வளர்ச்சிக்கான அடையாளங்களும் அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு யாவுமற்றதாய்ப் போனது.
  

மூழ்கியவனுக்குத்
தட்டுப்பட்ட அடையாளம்
என் பேரனின் நெஞ்சு குருதியின்
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்


மண்ணைக் குடைந்தும் மூழ்கியும் எடுக்கப்பட்ட இந்தத் தூய்மையான நீர் இன்று எனக்குக் கிடைக்காவிட்டாலும் நாளை என் அடுத்த தலைமுறையினரின் தாகம் போக்கி அவர்களுடைய நெஞ்சைக் குளிர வைக்கும். அதுபோல இன்று மண்ணைத் தோண்டியும் நீரில் மூழ்கியும் செய்யப்பட்ட ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற நம் தமிழினத்தின் சிறப்புகளும் அடையாளங்களும் இன்று எனக்கு முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் என் அடுத்தத் தலைமுறையினருக்கு முழுமையாகக் கிடைத்து அவர்களுடைய நெஞ்சத்தை மகிழ்விக்கும்.

முடிவாகக் கூறவேண்டுமென்றால், நம் முன்னோர்கள் ஆறுகளிலும் குளங்களிலும் தேக்கி வைத்துப் பயன்படுத்திய நீரை இன்று குழாய்களிலும் தொட்டிகளிலும் அடைத்து வைத்துப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், அதன் தரமும் தன்மையும் கெடாதவாறு பாதுகாக்கவேண்டும். அன்று இயற்கை இலவசமாகக் கொடுத்த தண்ணீரை இன்று பணத்திற்கு விற்பனை செய்கிறோம். இதற்குக் காரணம் தண்ணீர் பற்றக்குறையே ஆகும். அதனால், தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தினால் அடுத்த தலைமுறையினரும் நீருக்குக் கஷ்டப்படாமல் இருப்பார்கள்.

நம் முன்னோர்கள் பல மரபுகளையும் பண்பாடுகளையும் நமக்காக விட்டுச் சென்றிருந்தாலும் அவற்றை முழுமையான வரலாறாகவோ அடையாளமாகவோ விட்டுச் செல்லவில்லை. அவர்களால் பாதுகாக்கப்படாமல் விட்டுச் சென்ற சில சிறப்புகளையும் பெருமைகளையும் பற்றித்தான் பேசினோம், பேசுகின்றோம். ஆனால், அவற்றை முழுமையாகத் தேடுவதற்கும் தேடியவற்றைத் தகுந்த சான்றுகளோடு உறுதிப்படுத்துவதற்கும் நம்மால் முடியவில்லை. இதனை மனத்தில் கொண்டு நாம் படைக்கும் வரலாற்றையும் நம் அடையாளங்களையும் முறைப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும். அவற்றுக்கான முயற்சிகளில் நாம் இன்றே ஈடுபட்டாலன்றி நாளையத் தலைமுறையினருக்கு இன்றைய நம் அடையாளங்களை முழுமையாக விட்டுச் செல்லமுடியாது. எனவே, நாம் படைக்கும் இலக்கியமானாலும் ஓவியமானலும் வரலாறானாலும் அவற்றை முறையோடு பதிவு செய்து அடுத்த தலைமுறையினர்க்குக் கொடுப்போமாக.

பொன். கணேசுகுமார்,

சிங்கப்பூர்

1 கருத்து:

  1. அருமையான பகுப்பாய்வு. கவிதைத் தொடர்பான உரையாடல் சிறப்பு. நம் அடையாளங்களை நோக்கி நம் நகருதல்கள் எப்படிப்பட்டவையாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு