வியாழன், 25 அக்டோபர், 2018



ஜீவா! ஜீவா! ஜீவா!

கண்கொண்டு பார்க்குமுன்னே
     காரிருள்தான் வந்ததென்ன? -  ஜீவா
உண்மையுள்ள இளையவன்நீ
     உலகைவிட்டு போனதென்ன?

உதிராத உறவாக
     ஊர்கூடி வாழ்ந்தாலும் - ஜீவா
மதியாட வைத்துவிட்டு
     மறைந்துநீ போனதென்ன?

நேற்றுவரை வாழ்ந்தஉன்
     நினைவோடு வந்தசோகம் - ஜீவா
காட்டாற்று வெள்ளம்போல்
     கரைபுரண்டு ஓடுதைய்யா

எண்ணத்தை இழையவிட்டு
     எங்குநாம் பார்த்தாலும் - ஜீவா
கண்ணத்தை நனையவைக்கும்
     கண்ணீர்தான் பெருகுதைய்யா

ஆண்டொன்று போனதென்று
     அடுத்தவர்கள் சொன்னாலும் - ஜீவா
மீண்டுமொரு பிறவியோடு
     வீடுவந்து சேருமைய்யா


ஓ!வண்டினமே!

கள்ளிருக்கும் பூவினிலே
     கால்பதிக்கும் வண்டினமே
உள்ளிருக்கும் மதுவுண்டு
     ஊர்சுற்றி வரலாமோ

கன்னிமொழிப் பிள்ளைகளும்
     களமாடும் மறவர்களும்
உன்னோடும் உறவாட
      ஒருபொழுது வந்திடுமோ

என்னினத்து மக்களங்கே
     எரிகனையில் வீழ்ந்தகதை  
சொன்னாலும் கேட்பதற்கு
     சுரனையுள்ள ஆளில்லை

புல்லுருவி கூட்டமொன்று
     புழுதிவாரி கொட்டியதால்
உள்ளமின்று படும்பாட்டை
     உனக்குநான் உரைத்திடுவேன்

வன்கொடுமை செயல்கண்டு
     வாயடைத்துப் போனதனால்
என்னிருக்கும் சோகமொன்று
     எரிதழலாய் வாட்டுதிங்கே

வன்னிவயல்ப் பரப்பெங்கும்
     வான்வெளிக் குண்டுகளால்
புன்னாகிப் போனகதை
     புகல்கின்றேன் கேட்பாயோ

கள்ளமில்ல புன்சிரிப்பில்
     கரைபுரண்ட தமிழினமோ
எல்லையில்லா துன்பத்திலே
     ஏதுமின்றி தவிக்குதுபார்

இமயத்தில் கொடிநாட்டி
     இருமாந்த நம்மினமோ
இமைமூட வழியின்றி
     ஏங்கித்தான் தவிக்குதுபார்

நரவேட்டை யாடுகின்ற
     நாதாரிக் கூட்டமொன்று
நறுந்தமிழர் ஈழத்தில்             
     நம்மினத்தை அழித்ததுபார்

புறமுதுகு காட்டாது
     புலியாகப் பாய்ந்தஇனம்
புறம்போற்றும் நானூறின்
     பொற்சுவடாய் ஆனதுபார்

               பொன். கணேசுகுமார்
                   சிங்கப்பூர்

வியாழன், 18 அக்டோபர், 2018

கண்ணதாசன் பாட்டு - எண்சீர் விருத்தம்


கண்ண தாசன் உள்ளம் கண்டதெல்லாம்
                  காட்சி யாகும் கலையின் வடிவமாகும்
எண்ணி முடிக்கும் முன்னே எழுதிடுவார்
                 ஏழு கட்டை யிசைக்கு வித்திடுவார்
கண்ணில் தோன்றும் யாவும் அவருக்கு
                  ஒலியின் வடிவாய் வந்த சொல்லாகும்
தன்னில் தோன்று வதெல்லாம் கருத்தாகும்
                தரத்தில் உயர்ந்த நல்ல பாட்டாகும்

புதன், 17 அக்டோபர், 2018

கண்ணதாசன் பாட்டு 3 - சமனிலைச்  சிந்து


சிறுகூடல் பட்டிதன்னில் பிறந்தவர் - தம்
சொந்தத்தில் மகனாக வளர்ந்தவர்
சிறுவயதில் குறும்புபல செய்தவர் - தம்
சேட்டைக்குத் தண்டனையும் பெற்றவர்

சிந்தையிலே செந்தமிழைக் கொண்டவர் - உயர்
சிந்திக்கு மாற்றலினால் சிறந்தவர்
சந்தத்தில் சிந்துபல தந்தவர் - பாட்டுச்
சீர்மையிலே சிகரம்போல் நின்றவர்

திரைப்படத்தில் உரையெழுத வந்தவர் - பாட்டுத்
துறையினிலே தொலைதூரம் சென்றவர்
கரைகாணக் கற்பனையை கண்டவர் - மனக்
கணக்கில்லாக் கவிதைகளைத் தந்தவர்

எண்ணத்தின் எல்லைகளைத் தொட்டவர் - தமிழ்
எழுத்துகளில் வண்ணத்தைச் சேர்த்தவர்
பண்பாட்டின் பெரும்பொருளை யறிந்தவர் - நம்
பழந்தமிழின் பெருமையினை யுணர்ந்தவர்

அகப்பாட்டும் புறப்பாட்டும் கற்றவர் - அவற்றை
அனைவருக்கும் எளிதாக்கிக் தந்தவர்
சுகவாழ்வும் சுமைவாழ்வும் பெற்றவர் - அவற்றை
சமவாழ்வா யெண்ணியெண்ணி வாழ்ந்தவர்

முத்தமிழின் முதற்பொருளை யுணர்ந்தவர் - அதில்
முக்கனியின் சாற்றினையே சுவைத்தவர்
சித்தரையும் புத்தரையும் படித்தவர் - நல்ல
சிந்தனையில் சீர்தூக்கிப் நடந்தவர்

திங்கள், 15 அக்டோபர், 2018

நகரம் 



ஜூரோங் மேற்காம் எங்கள் நகரம்
சுத்தம் நிறைந்த சிங்கை நகரம்
ஜூரோங் எங்கும் வருவாய் ஈட்டும்
சிறப்பு வாய்ந்த தொழில்களின் கூடம் 

பறவைப் பூங்கா பக்க முண்டு 
பலபல வண்ணப் பறவைக ளுமுண்டு
அறிவியல் பூங்கா அருகி லுண்டு
ஆய்வுப் பொருள்க ளங்கு முண்டு

கப்பல் கட்டும் துறைக ளுமுண்டு
கணக்கி லடங்கா வருவா யுமுண்டு
கப்பலை யுடைக்கும் கரைக ளுமுண்டு
காணக் கிடைக்கா காட்சிக ளமுண்டு



2017 ஆம் ஆண்டு கண்ணதாசன் வெண்பா


கன்னித் தமிழோடு கன்னல் சுவைகூட்டிப்
பண்பட்ட சொற்களால் பாவடித்த - மன்னவன்
கண்ணதாச னென்னும் கவிதைத் தலைமகன்
குன்றாப் புகழ்கொண்ட குன்று.
கண்ணதாசன் வெண்பா 2


மெட்டுக்குப் பாட்டெழுத முன்னெடுக்கும் நேரத்தில்
கட்டுக்கு ளில்லாத  காட்சிகளும் - வெட்டிவைத்த
சித்திரமாய்ச் சீர்பெற்று, சந்தமற்ற சொற்கூட

முத்தான பாட்டாகும் பார்.



தென்பொதிகைத் தென்றலிலே கால்பதித்த வாழ்வியலைத்
தன்பதிப்பாம் தென்றலிலும் தக்கதொரு - முன்னுரையாய்
மென்படுத்திக் கற்பவரும் கேட்பவரும் பண்படவே
கண்ணதாசன் செய்தார்  கவி.


குன்றொத்த வீடும் குறைவில்லா செல்வமும்
நன்றெனச் சொல்லும் நலமான வாழ்க்கையும்
கொண்டாரும் கொள்ளாரும் பாரினி லுண்டெனக்
கண்ணதாசன் பாடினார்நற் பா.



அகமும் புறமும் அமைந்திட்ட வாழ்வைப்
பகுத்தறிவு சிந்தையுள் பாடிச் - சுகமான
சந்தமோடு நல்லறமும் சாற்றியே தந்திட
முந்திடுவார் முத்தையா பார்.



கொஞ்சுதமிழ்ச் சொற்களோடு சிந்தனையும் சேர்ந்திருக்க
பஞ்சு அருணாச் சலமும் துணையிருக்க
விஞ்சுகின்ற கற்பனையில் வித்திட்ட பாட்டுகளை
நெஞ்சினிக்கத் தந்திட்டார் கேள்

கண்ணதாசன் வெண்பா 1


செட்டிநாடு ஈன்றுதந்த கண்ணதாசப் பாவலன்தன்
பட்டறிவு பாட்டறிவு யாவையும் - கொட்டிவார்த்த
கன்னித் தமிழ்பாக்களில் நல்ல கருத்தோடு
பண்பாட்டுக் கூறுகளு முண்டு


ஏட்டிலுள்ள காப்பியமும் காவியமும் சொன்னவற்றைப்
பாட்டாலே பாடியவன் பாமரனுக்கும் - ஊட்டியவன்
கன்னல் மொழியில் நவின்றவன் ஆண்டவனாம்
கண்ணனுக்குத் தாசனாய்த் தேர்ந்து


உன்னத வாழ்வின் உயர்வினை யூட்டிடும்
சின்னஞ் சிறிய தொடராலே - நன்முத்தா
யெண்ணமெல்லாம் ஊற்றெடுக்க இன்பந்தான் தந்திடுமே
கண்ணதாசன் பாட்டின் சுவை


முத்துமுத்தாய்ச் சொல்கொண்ட முத்தையா பாட்டிலே
தத்துவச்சீ ரான சமதர்ம வித்தோடு
பத்துமெட்டும் சேர்ந்த பதினெண் இலக்கியமும்
சத்தூட்டும் சாறாகும் காண்


சங்ககாலப் பாட்டையும் சாத்திரத்தி னேட்டையும்
பங்கமின்றிக் கற்றதனால் பைந்தமிழின் சீர்மையினைத்
தங்கநிகர் பாட்டுகளால் தட்டின்றித் தந்தமகன்
சிங்கத்தின் சீற்றம்போல் பாய்ந்து