ஓ!வண்டினமே!
கள்ளிருக்கும் பூவினிலே
கால்பதிக்கும்
வண்டினமே
உள்ளிருக்கும் மதுவுண்டு
ஊர்சுற்றி
வரலாமோ
கன்னிமொழிப் பிள்ளைகளும்
களமாடும்
மறவர்களும்
உன்னோடும் உறவாட
ஒருபொழுது வந்திடுமோ
என்னினத்து மக்களங்கே
எரிகனையில்
வீழ்ந்தகதை
சொன்னாலும் கேட்பதற்கு
சுரனையுள்ள
ஆளில்லை
புல்லுருவி கூட்டமொன்று
புழுதிவாரி
கொட்டியதால்
உள்ளமின்று படும்பாட்டை
உனக்குநான்
உரைத்திடுவேன்
வன்கொடுமை செயல்கண்டு
வாயடைத்துப்
போனதனால்
என்னிருக்கும் சோகமொன்று
எரிதழலாய்
வாட்டுதிங்கே
வன்னிவயல்ப் பரப்பெங்கும்
வான்வெளிக்
குண்டுகளால்
புன்னாகிப் போனகதை
புகல்கின்றேன்
கேட்பாயோ
கள்ளமில்ல புன்சிரிப்பில்
கரைபுரண்ட
தமிழினமோ
எல்லையில்லா துன்பத்திலே
ஏதுமின்றி
தவிக்குதுபார்
இமயத்தில் கொடிநாட்டி
இருமாந்த
நம்மினமோ
இமைமூட வழியின்றி
ஏங்கித்தான்
தவிக்குதுபார்
நரவேட்டை யாடுகின்ற
நாதாரிக்
கூட்டமொன்று
நறுந்தமிழர் ஈழத்தில்
நம்மினத்தை
அழித்ததுபார்
புறமுதுகு காட்டாது
புலியாகப்
பாய்ந்தஇனம்
புறம்போற்றும் நானூறின்
பொற்சுவடாய்
ஆனதுபார்
பொன். கணேசுகுமார்
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக