*நன்னெஞ்சர் குருசாமி
நலமோடு வாழ்கவாழ்க!*
குன்றாத குணமோடும்
குறையாத மனமோடும்
அன்பான அரவணைப்பில்
அனைவரையும் நேசித்து
நன்றான பாதையில்
நாளெல்லாம் பயணிக்கும்
நன்னெஞ்சர் குருசாமி
நலமோடு வாழ்கவாழ்க!
மாணவர்கள் மாவுலகில்
மாண்புறவே வேண்டுமென்று
தேனென்று இனிக்கின்ற
தீந்தமிழின் மொழியினிலே
கோனென்று உயர்ந்துவாழும்
கொள்கையோடு இலக்கினையும்
கானம்போல் கற்பிக்கும்
கண்ணியவான் வாழ்கவாழ்க!
பருவத்தின் மாற்றத்தால்
படிக்கின்ற மாணவர்கள்
உருமாறி வந்தாலும்
உளமோடு வரவேற்று
பெருந்தேர்வுப் பயிற்சிகளைப்
பிழையின்றிக் கற்பிக்கும்
குருவாக வீற்றிருந்த
குருசாமி வாழ்கவாழ்க!
நிலையத்தின் நிலைமையினை
நித்தமிங்கு வளர்த்திடவே
பலபேரின் மத்தியிலே
பண்புடனே பேசினாலும்
நலமான கல்விகொண்டு
நயமாகக் கற்பிக்கும்
குலமகனார் குருசாமி
குறையின்றி வாழ்கவாழ்க!
நேயத்தின் நினைவாளர்
நற்குணத்தின் குருவாளர்
ஓய்வின்றி உழைப்பதற்கு
உடல்நலனும் உளநலனும்
தேய்வின்றி நலம்பெறவும்
தெளிவான வளம்பெறவும்
நோயின்றி நொடியின்றி
நூறாண்டு வாழ்கவாழ்க!
என்றும்
அன்புடன்....
கணேசுகுமார்
பொன்னழகு
தமிழாசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக