சனி, 5 டிசம்பர், 2020

 

அப்துல் கலாமென்னு மறிஞர்


அன்பின் வடிவமாய்த்தி கழும்நம்

அப்துல் கலாமென்னு மறிஞர்

முன்பு தான்கண்ட கனவை

முடித்துக் காட்டியநன் முனைவர்

நன்றாய் இளையரோடு பேசி

நலத்தைப் போதிக்கும் மனிதர்

சின்னஞ் சிறுவரோடும் சேர்ந்து

சிரித்துப் பழகுகின்ற தலைவர்

 

இராம நாதபுர மருகில்

இயற்கை சூழ்ந்தநற் றீவில்

கிராமம் சூழ்ந்தநக ராகக் 

கிழக்கு நோக்கிடவீற் றிருக்கும்

இராமன் வணங்கியநன் னிலமாம்

ஈசன் வாழுமுயர் நிலமாம்

இராமேஸ் வரமென்னு மூரில்

எங்க ளினியகலாம் பிறந்தார்

 

பெரிய குடும்பத்தில் பிறந்து

பெற்றோர் ஆதரவில் வளர்ந்து

அரசு பள்ளிதனில் படித்து

ஆய்வுத் துறைகளிலே நுழைந்தார்

பொறியி யலில்பட்டம் பெற்று

பாது காப்பாய்வில் சேர்ந்தார்

விரைவு ஏவுகணை யொன்றை

விண்ணில் செலுத்தியிவர் வென்றார்

 

பொட்டல் வெளிதனிலே அணுவைப்

புகைத்துச் சோதனைகள் செய்யக்

கட்டம் கட்டமாக முயன்று

கவனம் சிதறிடாது முடித்தார்

திட்டம் திறம்படவே தீட்டித்

திருப்ப மேற்படவும் வைத்தார்

பட்டம்  பதவிகளும் பெற்றுப்

பாரோர் போற்றிடவே வாழ்ந்தார்

 

மூன்று கடல்சூழிந் தியாவின்

மூத்த குடிமகனா யுயர்ந்து

சான்றோர் கூடுகின்ற அவையில்

சங்கத் தமிழ்மறையைப் பேசி

ஆன்றோர் அகமகிழச் செய்த

அப்துல் கலாமென்னு மறிஞர்

ஈன்ற பெற்றோர்தம் புகழை

ஏற்றம் கொண்டொழுகச் செய்தார்

 

 


 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக