சனி, 5 டிசம்பர், 2020

 

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

ஆம்! தமிழ்நாட்டின் தென்பகுதியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான மக்களின் மனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள். இவர் இளைஞர்களின் கனவு நாயகனாகவும் விளங்குபவர். இந்தியாவின் விண்வெளி ஆய்வை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர். அதுமட்டுமல்லாமல் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்ததோடு முக்கிய தலைவராகவும் வலம்வந்துள்ளார். அத்தகைய ஓர் ஒப்பில்லா மனிதரைப் பற்றிப் பேசப் போகிறேன்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தையார் ஜைனுலாப்தீன். தாயார் ஆஷியம்மா என்பவர்கள் ஆவர். அப்துல் கலாம் அவர்கள் சிறு வயதிலேயே தன் குடும்பத்தின் நிலையை உணர்ந்து தந்தையின் படகுத்தொழிலில் உதவி செய்வது வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் போடுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வந்தார்.

அப்துல்கலாம் அவர்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்தார். இவர் படிப்பில் சாதாரண மாணவராகத் திகழ்ந்தாலும் தான் படித்தவற்றைச் சிந்தித்து செயல்படுத்தும் திறன் பெற்றவர். இந்தச் சிந்தனையாற்றலே இவரைப் பிற்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக உருவாக்கியது எனலாம். இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் 1954ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பின்னர், 1955ஆம் ஆண்டு சென்னையில் விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்து முனைவர் பட்டமும் பெற்றார்.  

அப்துல்கலாம் அவர்கள் தனது பொறியியல் படிப்பினை முடித்ததும் 1960ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில்(DRDO) சேர்ந்து பணியாற்ற துவங்கினார். அப்போது அவர் இந்திய ராணுவத்திற்காகச் சிறிய ஹெலிகாப்டரைத் தயாரித்ததன்மூலம் பலரின் பாராட்டுகளைப் பெற்றார். பிறகு அவர் 1969ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO) சேர்ந்து செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் SLV – III ஏவுகணையை வடிவமைக்கும் குழுவிற்குத் தலைவரானார். இந்த SLV – III ஏவுகணை “ரோகினி” என்ற செயற்கைகோளினைத் தாங்கி விண்ணில் பாய்ந்து வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகமாகச் சென்று இலக்கினை அடைந்தது. அந்த அளவிற்கு உலகம் கண்ட ஒரு முற்போக்குச் சாதனையினை நிகழ்த்திக்காட்டினார் கலாம். அடுத்ததாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தலினை மீறி அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி இந்தியாவின் வலிமையினை உலகிற்கு நிரூபித்தார்.

சுதந்திர இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். அன்றிலிருந்து 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் அவர் குடியரசுத்தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் சிறந்த ஆய்வாளர் என்பதனையும் தாண்டி உயர்ந்த தலைமைப் பண்புடைய மூத்த குடிமகனாகவும் விளங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கே எல்லா நிலை மாணவர்களையும் வரவழைத்து அவர்களுடன் உரையாடி மகிழ்வார்.

அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் மீது அளவில்லா அன்பும் அக்கரையும் கொண்டவர். இவர்கள்தான் வருங்கால இந்திய நாட்டை வழிநடத்தக்கூடியவர்கள் என்று நம்பினார். அதனாலேயே குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த விலகிய பின்பும் பல்வேறு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று மாணவ மாணவிகளையும் இளம் ஆய்வாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களிடமும் இளையர்களிடமும் கலந்துரையாடினார். அந்தக் கலந்துரையாடலின்போது, அவர்களிடம் நல்ல உயர்ந்த இலட்சியங்களை மனத்தில் கொண்டு கனவு காணச் சொன்னார்.

அப்துல் கலாம் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். அவருடைய மறைவு இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் எழுதிய நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் போன்ற நூல்கள் முக்கியமானவையாகும்.

அப்துல் கலாம் அவர்கள் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றிருந்தாலும் அவர் இளையர்களிடத்தில் விதைத்துள்ள கனவுகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து ஈடேறும் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக