வியாழன், 1 ஜூலை, 2021

 

தந்தையின் மாண்புகள்

 

தந்தையென்னும் தகைமையினைப்

            தாயாலே தரப்பெற்றுச்

சிந்தையிலே சிறகடித்துச்

            சீர்மையாலே சிறப்புறுவார்

 

நேர்மையென்னும் நடத்தையிலே

            நித்தமொரு வகுப்பெடுத்துக்

கூர்மையான போதனையைக்

            குறைவின்றிப் போதிப்பார்

 

அறியாத அத்தனையும்

            அகிலத்தில் இருந்தாலும்

அறிந்திங்கு வாழ்ந்திடவே

            ஆவணங்கள் செய்திடுவார்

 

வறியோராய் வாழ்ந்தாலும்

            வழுவில்லா  வாழ்க்கையினை

உறவோர்க்கு உணர்த்திடவே

            ஒழுக்கமுடன் வாழ்ந்திடுவார்

 

தறிகெட்டுப் போகாமல்

            தரத்தோடு வாழ்ந்திடவே

அறிவூட்டி மகிழ்கின்ற

            ஆசானாய் விளங்கிடுவார்

 

நெறியான நல்லொழுக்கம்

            நிரலாகத் தொடர்ந்திடவே

செறிவான சிந்தனையை

            சிந்தையிலே ஊட்டிடுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக