வியாழன், 1 ஜூலை, 2021

 

'உயிர் மீள்தல்'

 

கரைகாணாக் கடலுக்குள் கட்டுமரம் மீதேறிக்

கடக்கின்ற மீனவரைக் கடலலைகள் மிரட்டினாலும்

தரைகாணா ஆழத்தில் தானிருக்கும் வேளையிலும்

தாவிவரும் பேரலைகள் தள்ளிவிடத் துடித்தாலும் 

நுரையில்லா நீராலப் பகுதிக்குள் நுழைந்தவுடன்

நூலிழைபோல் கானல்நீர் கண்ணுக்குத் தெரிந்தாலும்

திரையோடு உறவாடிக் கடலோடும் கூட்டத்தார்

தினந்தோறும் துன்பமின்றி உயிர்மீள்தல் அரிதாகும்

 

நிறையில்லா வாழ்வுதனை நித்தநித்தம் எதிர்கொண்டு

நித்திரையைத் தொலைக்கின்ற பரதவரின் வாழ்க்கையிலே

குறையில்லாச் செல்வத்தைக் கொண்டுவந்து சேர்த்திடவே

குறுவோட்டை வலையோடு கலமேறிச் செல்கின்றார்

பிறையில்லாப் பொழுதினிலும் பரந்திருக்கும் கடல்நடுவே

பிடித்தாலும் நொடித்தாலும் பிழையில்லாத் தொழிலாக்கிக்

கறையில்லாக் கரம்கொண்டு கடல்மீனைப்  பிடித்தாலும்

காலமெல்லாம் உயிர்மீண்டு வாழ்வதிங்கே அரிதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக