வந்தாய் வாழி புத்தாண்டே!
தமிழே தமிழே முத்தமிழே
தரணி போற்றும் தாய்த்தமிழே
அமிழ்தம் உந்தன் மொழியாகும்
அதுவே எங்கள் விழியாகும்
நிமிர்ந்த நெஞ்சம் யாம்பெற்று
நேரிய வாழ்வு வாழ்ந்திடவே
தமிழர் போற்றும் புத்தாண்டாய்
‘தை’யில் வந்து குடிகொண்டாய்
பட்டி தொட்டி வீடெல்லாம்
பாலில் சோறு பொங்கிடவே
வெட்டி வந்த செங்கரும்பும்
வீட்டின் முற்றம் தங்கிடவே
கட்டி வைத்த செவ்வாழை
காற்றில் ஆடி அசைந்திடவே
கொட்டிக் கொடுத்த இன்தமிழே
கோலத் ‘தை’யில் நீவந்தாய்
குவித்து வைத்த நெல்மணிகள்
குலுக்கை எல்லாம் நிறைந்திருக்க
புவியில் உள்ளோர் உன்புகழை
போற்றிப் பாடி வரவேற்க
நவிழும் வார்த்தை அழகோடு
நாளும் உன்னைப் போற்றிடவே
செவிக்கு ஏற்ற செந்தமிழாய்
சிறந்த ‘தை’யில் நீவந்தாய்
இருளைப் போக்கும் சூரியனை
இனிதே போற்றிப் புகழ்ந்திடவும்
அருளைக் கொடுக்கும் அருந்தமிழை
அருகே இருத்தி பாடிடவும்
விருந்து வைத்துக் கொண்டாடி
வெற்றிக் களிப்பால் போற்றிடவும்
விரும்பும் ‘தை’யில் பிறக்கின்ற
வீரத் திருவே புத்தாண்டே
தமிழே உருவாய் கொண்டிங்கு
‘தை’யில் வந்து உதித்ததனால்
தமிழர் வாழும் நாடெல்லாம்
தாளம் மேளம் கொட்டியாடி
தமிழன் ஆண்டு உண்டென்று
தரணி எங்கும் குரலெழுப்பி
தமிழர் போற்றும் புத்தாண்டாய்
‘தை’யை என்றும் போற்றிடுவோம்
பொன்.கணேசுகுமார்
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக