ஞாயிறு, 8 ஜனவரி, 2012

           
        வந்தாள் தைப்பாவை

புத்தாண்டாய் வருகின்றாள்
                புதுப்பொலிவு தருகின்றாள்

உத்தமியாம் தைப்பாவை
                உலகோரை வாழ்த்திடவும்
முத்தமிழின் படைப்புகளை
      முகமலர ஏற்றிடவும்                   (புத்தாண்டாய்.....)
            
தமிழன்னை பெற்றெடுத்த
                தலைமகளாம் தமிழ்மொழியை
தம்மீது தாங்கியவள்
                தரணியிங்கு வந்திடவே                                    (புத்தாண்டாய்.......)

முத்தமிழாம் நறுந்தமிழை
      முடிமீது சூட்டிட்ட
சித்திரத்தைப் போலிங்கு
                சிறப்பான வடிவோடு                  (புத்தாண்டாய்.....)

சங்ககால இலக்கியமும்
      சமகால இலக்கியமும்
              அங்கமெங்கும் பூட்டிட்ட
      அருந்தமிழை வாழ்த்திடவே                                   (புத்தாண்டாய்.....)

புத்தியோடு புகழ்சேர்த்து
      புதுவாழ்வு வாழ்ந்திடவும்
மத்தாளம் கொட்டியினி
                மகிழ்வோடு இருந்திடவும்                               (புத்தாண்டாய்.......)

பெற்றோர்தம் பிள்ளையென
                பெருவாழ்க்கை வாழ்ந்திட்ட
உற்றார்நல் உறவோடு
                உளமாற வாழ்த்திடவே                                    (புத்தாண்டாய்.......)

                                                                   பொன். கணேசுகுமார்
                                                                            சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக