திங்கள், 13 நவம்பர், 2017

மானிடனின் - மனிதம்

கள்ளமில்லா மனிதனிடம் அவன்
வெள்ளைமனம் காண மழை
வெள்ளமெனப் பாய்ந்துவந்து மனித
உள்ள மெல்லாம்  ஈரமாகக்
கொள்ளளையிட்டுச் சென்றதிந்த இயற்கை
பிணம் தின்னும் கழுகு

மனத் தீயின் வெப்பம்
அடங்கிவிடாமல் இருக்க கேவும்
உணர்வுகளுக்கு தீனியாக நான்

அத்தனை இடர்களையும் கடந்து
வந்தேறியக் கரையில் பிணம்
தின்னும் கழுகு காத்திருந்தது

அதன் கூரிய அலகில் சிக்கிய
இறைச்சி துண்டை நகத்தில்
கிழித்துக் கொண்டே என்னைப்
பாத்தது

நான் பயந்து ஓடாமல் அதையே
பார்த்து நின்றிருந்தேன்.
                     
                                          எம். கருணாகரன்

இந்தக் கவிதை வரிகளைப் படித்தபொழுது என்னுள்  எழுந்த எண்ண அலைகளை என் பார்வையாகவே பதிவிடுகின்றேன். அதாவது, 'மனத்தின் தீ அடங்கிவிடாமல் இருக்க' என்ற வரியைப் படிக்கும்போதே அந்த வரிக்குரியவர் ஏதோ ஒரு பெரிய பாதிப்பையோ அவமானத்தையோ துன்பக் கடலாகப் பெற்றிருக்கிறார் என்பதையும் அதை எளிதில் மறக்கமுடியாமல் தவிக்கும் தவிப்புக்குத் தீனியாகத் தன்னையும் தன் உணர்வுகளையும் ஒப்படைத்தவர் என்பதையும் உணரமுடிகின்றது.
இருப்பினும், 'அத்தனை இடர்களையும் கடந்து வந்தேறியக் கரையில் பிணம்தின்னும் கழுகு காத்திருந்தது' என்ற வரிகள், அந்தத் துன்பக் கடலிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொண்டு கரையேறிய இடத்திலும் வேறொரு வடிவில்  நம்பியவராகவோ நம்ப வைத்துக் கழுத்தறுப்பவராகவோ காத்திருந்திருக்கலாம்.
அந்தக் காத்திருப்பு எப்படி இருந்ததாகக் கூறுகிறார் தெரியுமா? 'அதன் கூரிய அலகில் சிக்கிய இறைச்சி துண்டை நகத்தில் கிழித்துக் கொண்டே என்னைப் பார்த்தது' என்கிறார். அதாவது, வா! மகனே! வா! இவ்வளவு மனத்துன்பத்திலும் இருந்து மீண்டுவிட்டாயா? உன்னை நான் அவ்வளவு சீக்கிரமாக விடமாட்டேன் என்று கையில் புதிய பிரச்சினையோடு நின்று பார்ப்பதாகக் கூறுகிறார். இதில் முத்தாய்ப்பு என்னவென்றால் தன்னுடைய கவிதையின் கடைசி வரியில் 'நான் பயந்து ஓடாமல் அதையே பார்த்து நின்றிருந்தேன்'  என்று முடித்திருப்பார். அதாவது, நான் எவ்வளவோ துன்பங்களையும் பிரச்சினைகளையும் பார்த்தவன் நீயெல்லாம் எம்மாத்திரம் என்று அந்தப் பிணம் தின்னும் கழுகைப் பார்த்துக் கேட்பதுபோல் முடித்திருப்பதாக உணர்கிறேன். கவிஞருக்கு நன்றி.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

தும்பிகளின் வெளி.

இதயங்களை கிழித்து வைத்து கொள்ளலாம்
ஒழிகியோடும் குருதிப் புனலில்
கெக்கெலிக்கலாம்
ஓரினக் கூட்டத்தின்
வெற்று வெற்றி ஓலம்

யாரும் முன் நிறுத்த முடியாத செயல் கூட்டில்
எங்கும்
விரவி கிடக்கும் மனப் புழுக்கம்
ஈரம் காய காலக் கெடு
அறுதியிட்டு கூற இயலாது

சேர்த்து கையிறுக்கி சொல்லுவோம்

எந்தப் போரும் வாழ்வை திருத்தி அமைக்காது

கை கால் இழந்த உயிரிகளை
பூமியெங்கும் சிதறி வைக்கும்.

எம்.கருணாகரன்


கவிஞர் கருணாகரன் அவர்களின் தும்பிகளின் வெளி என்னும் கவிதை பற்றிய என் எண்ண வெளிப்பாடுகள்.
கவிஞர் கருணாகரன் அவர்களின் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசையின் வெளிப்பாடாக மட்டுமல்ல இவ்வுலக வாழ் மனிதர்களில் பெரும்பாலனோரின் ஆசையாகவும் இந்தக் கவிதை வரிகளை வடித்துள்ளார். இந்த உலகில் எத்தனையோ இனங்கள் இருந்தாலும் அவ்வினங்களில், இக்கருத்தினைச் சொல்ல நம் தமிழினத்திற்கு மட்டும்தான் அதிக அனுபவம் இருக்கிறது. ஏனென்றால், நம் இனம் பட்ட வலிகளும் வேதனைகளும் ஏராளம் ஏராளம். நம் இனத்தார் யாம் பெற்ற இன்பத்தை மட்டுமே மற்றவர் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால், தான் பெற்ற துன்பத்தை மற்றவர் அனுபவிக்க எண்ணார். எனவேதான் நம்மினக் கவிஞருக்கும் அந்த எண்ணம் தோன்ற போரினால் ஏற்படும் விளைவுகளைக் கவிதையாய் வடித்துள்ளார். கவிஞருக்கு என் நன்றியுடன் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
இப்படிக்கு,

கணேசுகுமார் பொன்னழகு.
ஆசிரியர்


உரியோர் பெரியோர் உதிர்த்திட்ட

      உயர்ந்த எண்ணக் கருத்தோடு

அரிய பெரிய ஆற்றலையும்

      அமுதாய் ஊட்டும் ஆசிரியர்


கற்றுத் தெளிந்த கல்வியினை

      காலம் நேரம் பாராது

கற்றுக் கொடுக்கும் கண்ணியமே 


      கடமை தவறா ஆசிரியர்



கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.

                 பெண் 
நேற்று இன்று நாளை 


அன்று...


கல்லூரிப் பருவத்தில்

      கனவென்னும் நித்திரையில்

உல்லாசப் பார்வையாலே

      உலாவந்த பெண்ணணங்கே


இன்று...


வாழ்வென்னும் சோலையிலே

      வசந்தத்தைப் பரப்பிடவே

சூழ்கொண்ட மலராகச்

      சுற்றிவரும் பைந்தொடியே 


நாளை...


களைப்புற்ற சந்ததிக்குக்

கனியோடு தண்ணிழலும்

அளிக்கின்ற தருவாக


      அமைந்திட்ட அன்புருவே



கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.


                    தேடல் 


இளஞ்சிறார் நாவினிலே

      இன்தமிழைப் புகுத்திடவே

வளர்தமிழ் இயக்கத்துடன்

      வரைந்திட்ட ஒருதிட்டம்

சங்கத்தமிழ்ச் சாற்றினையே

      சகலரும் அருந்திடவே

சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கம்

      சிறப்புடனே நடத்துகின்ற

தேடலென்னும் நிகழ்ச்சியில்

      தெவிட்டாத தேன்தமிழை

நாடுகின்ற மாணவர்காள்

      நலமுடனே ஒப்படைத்தார்.


கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.


ஆசிரியர் தின வாழ்த்துகள்!


அன்பை அரணாய்க் கொண்டிங்கு
அறிவு புகட்டும் ஆசிரியர்  
பண்பும் பணிவும் தலைத்தோங்க
பரிவை முதலாய்க் கற்பிப்பார்
என்னை உன்னைக் கொண்டிங்கு
      இயங்கு கின்ற வகுப்பறையில்
கன்னித் தமிழால் போதித்துக்
கண்ணிய வாழ்வைப் புகுத்திடுவார்      

நாடும் வீடும் போற்றுகின்ற
நல்ல பண்பை ஊட்டிடவும் 
வாடும் பிள்ளை முகமறிந்து
வாட்டம் போக்கச் செய்திடவும்
பாடும் குயிலின் இராகத்தில்
படிக்கும் பாடம் செய்திடுவார்
வீடு பேரு அடைந்திட்ட
வீரர் கதையும் சொல்லிடுவார்

நானும் நீயும் நம்மவரும்
நலமாய் என்றும் வாழ்ந்திடவும்
மேன்மை கொண்ட மறைதன்னை
      மேதினில் கொண்டு ஒழுகிடவும்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வறுமை போக்கத் தெரிந்திடவும்
நானிலம் போற்றும் நல்லறத்தை
      நயம்பட நமக்கு உரைத்திடுவார்

மாண்புறு கொண்ட மானிடரில்
      மதிப்புப் பெற்ற ஆசிரியரே
பேணும் பெற்றோர் இருவருக்கும்
அடுத்த நிலையில் விளங்கிடுவார்
வானில் தோன்றும் வளர்நிலவின்
      வறுமை யில்லாக் குளிரொளிபோல்
காணும் பிள்ளை யாவர்க்கும்
      கருணை யொளியாய்த் தெரிந்திடுவார்

கற்றுத் தேர்ந்த கல்வியோடு
      கேட்டுத் தெளிந்த அறிவினையும்
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரைக்
      கண்ணாய்க் கருதும் நம்மினத்தில்
உற்றோர் பெற்றோர் உடனிருக்க
ஒருங்கே குவித்த கரம்கொண்டு
பற்றுக் கொண்ட பாசத்தால்
      பணிவு கொண்டு போற்றிடுவோம்


கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

வியாழன், 11 மே, 2017


நீர் படரும் அடையாளம்


காட்சி காட்டும் அடையாளங்கள்
ஏதோ சங்கடத் தவிப்புகளாய்
நிறம் கண்ட அழிந்தொழித்தும்

மீண்டும் மீண்டும் தன் சுயத்தை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது

முன்னவன் தனக்கென்று இல்லாமல்
உலகுக்கு ஈந்தவன்

என் பேரனின் பிஞ்சுக் கரங்களில்
அழுந்தி பிடிக்க தேடியும் கிடைக்கப்பெற்றதில்லை
எந்த அடையாளமும்

நதிக்கரையின் படுகைகளில்
பரந்து கிடந்தவை
யாருமற்றதாய் ஆகிப் போனது

மூழ்கியவனுக்குத்
தட்டுப்பட்ட அடையாளம்

என் பேரனின் நெஞ்சு குருதியின்
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்


      கவிஞர் திரு எம். கருணாகரண் அவர்களுடையநீர் படரும் அடையாளம் என்னும் கவிதைத் தலைப்பு அருமையான தலைப்பாகும். இத்தலைப்பை அவர் எந்தக் காரணத்திற்காக இந்தக் கவிதைக்கு வைத்தாரோ தெரியாது. இந்தக் கவிதையைப் பாடிக்கும் வாசகர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான புரிதல்கள் தோன்றுகின்றன. அவற்றில் ஒன்று இந்தக் கவிதையைப் பற்றி விளக்கிய நண்பர் திரு எம். சேகர் அவர்களின் புரிதல்கள். அவர், அழிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நம் அடையாளங்கள் நீர்நிலைகளால் வெளிக் கொணரப்பட்டு மீண்டும் காணமலேயே போகின்றன என்பதை அருமையாக விளக்குவதோடு அதற்கான ஆதாரங்களையும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல எவ்வளவுதான் மறைத்தாலும் நாளைய தலைமுறையினர் முயன்றால் அவற்றை மீட்டெடுத்து உலகரங்கில் வெளிப்படுத்துவதில் வெற்றியும் காணலாம் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.

இந்தக் கவிதையைப் படித்த நான் அதன் புரிதலை என் கோணத்தில் பார்க்கும்போது இந்தக் கவிதையை எழுதிய கவிஞர் நீரின் மேன்மையோடு நம் அடையாளத்தின் மேன்மையையும் ஒப்பிட்டுக் காட்டி அவற்றின் இன்றைய நிலைகளையும் அவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தைச் சுட்டவே இத்தலைப்பை வைத்திருப்பாரோ எனத் தோன்றுகின்றது. அதாவது, நீர் எப்போதும் ஓரிடத்தில் இருப்பதில்லை. அது ஏதோ ஒருவகையில் பூமிக்கு அடியிலோ பூமிக்கு மேலோ படர்ந்துகொண்டே இருக்கும். அதாவது ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவிக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் உயிரின் ஆதாரமாகவும் இருக்கும். அதுபோலத்தான் நம் தமிழர்களுடைய நாகரீக வளர்ச்சியின் பெருமைகளும் அடையாளங்களும் தொன்றுதொட்டு உலகெங்கும் படர்ந்துகொண்டு வருகின்றன. அதாவது, பரவிக்கொண்டு வருகின்றன. இவை மற்ற இனங்களின் நாகரீக வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் விளங்கின, விளங்குகின்றன இனியும் விளங்கும். இவற்றை அடிப்படையாகக்கொண்டே என்னுடைய பார்வை அமைந்தது. அவை பின்வருமாறு,

காட்சி காட்டும் அடையாளங்கள்
ஏதோ சங்கடத் தவிப்புகளாய்
நிறம் கண்ட அழிந்தொழித்தும்...


இன்றைய நவீன யுகத்தில் பூமிக்கு மேலே நீர் படரும் அடையாளமாய்க் காட்சி காட்டும் ஆறுகளும் ஓடைகளும் அருவிகளும் ... இன்னபிற நீர்நிலைகளும் சில சுயநலமிகளால், தன் சுயத் தன்மையையும் நிறத்தையும் இழந்து குப்பைகளாலும் கழிவுகளாலும் புதிய நிறமேற்றி அழிந்துகொண்டு இருக்கிறது அல்லது அழிக்கப்பட்டுக்கொண்டு இருகின்றது. அதுபோலவே நம் தமிழர்களுடைய வரலாற்றின் மேன்மையையும் பழமையையும் பறைசாற்ற அவ்வப்போது நீர்நிலைகளிலும் அகழ்வாரய்ச்சியிலும் காட்சிதரும் அடையாளங்கள் இனம் (நிறம்) கண்டு அழிக்கப்படுகின்றது.


மீண்டும் மீண்டும் தன் சுயத்தை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது


எவ்வளவுதான் கழிவுகளாலும் குப்பைகளாலும் நிறம் மாறிய நீர் ஆவியாகி மேகத்தின் உதவியால் மீண்டும் மீண்டும் தன் சுயத் தன்மையையும் மேன்மையையும் இழக்காமல் தூய மழைநீராய்ப் பூமியில் வெளிப்படுகின்றது. அதுபோலவே ஓரிடத்தில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறும் மேன்மையும் இயற்கையின் நிகழ் மாற்றத்தின் வாயிலாகவோ அகழ்வாய்வின் மூலமாகவோ மீண்டும் மீண்டும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

முன்னவன் தனக்கென்று இல்லாமல்
உலகுக்கு ஈந்தவன்

மேகங்கள் தன்னிடமுள்ள நீரைத் தனக்கென்று வைத்துக்கொள்ளாமலும் உயர்வு தாழ்வு, மேடு பள்ளம் என வேறுபாடு பார்க்காமலும் உலகில் உள்ள அனைவருக்கும் எல்லா இடத்திற்கும் பயன்படுமாறு அளிக்கின்றது. அதுபோலவே நம் பண்டையத் தமிழனும் தன்னிடமிருந்த மரபு, பண்பாடு, கலை, செல்வம் போன்றவற்றையும் அவை வெளிப்படுமாறு செய்து வைத்த அடையாளங்களையும் தனக்கென வைத்துக்குக்கொள்ளாமல் பிறருக்காகவே கொடுத்துச் சென்றுள்ளான்.

என் பேரனின் பிஞ்சுக் கரங்களில்
அழுந்தி பிடிக்க தேடியும் கிடைக்கப்பெற்றதில்லை
எந்த அடையாளமும்


இன்றையத் தலைமுறையினருக்கு (பேரன்) இயற்கை வனப்புகளாலான நீர்ப் படுகைகளோ அதன்மூலம் கிடைத்து இன்புறக்கூடிய தூய்மையான நீரோ எங்குத் தேடியும் காணமுடிவதில்லை. அப்படியே கண்டாலும் அவை அழிக்கப்பட்டு, அதற்கான அடையாளங்கள் மாற்றப்பட்டுச் செயற்கையாய்க் காணப்படுகின்றன. அதுபோலவே நீருக்கடியில் மூழ்கிப்போன இயற்கை வனப்புகள் நிறைந்த குமரிக் கண்ட நாடுகள் பற்றிய அடையாளங்களும் அவற்றிற்கான செய்திகளும் கிழக்காசிய நாடுகளில் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்களும் இன்றையத் தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை.   

நதிக்கரையின் படுகைகளில்
பரந்து கிடந்தவை
யாருமற்றதாய் ஆகிப் போனது


நதிகளின் படுகைகளில் பரந்து சென்று யாவருக்கும் பயன்பட்ட நீர்; குளிர்பானம், தோல் தொழிற்சாலைகள் போன்றவற்றால் உறிஞ்சப்பட்டும் கழிவுகள் சேர்க்கப்பட்டும் ஒன்றுமில்லாமல் வரண்டுபோனது. அதுபோல பண்டையத் தமிழன் நதிக்கரை படுகைகளில் ஆரம்பித்து வைத்த முதல் குடும்ப வாழ்க்கைமுறைக்கான சான்றுகளும் முதல் நாகரீக வளர்ச்சிக்கான அடையாளங்களும் அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு யாவுமற்றதாய்ப் போனது.
  

மூழ்கியவனுக்குத்
தட்டுப்பட்ட அடையாளம்
என் பேரனின் நெஞ்சு குருதியின்
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்


மண்ணைக் குடைந்தும் மூழ்கியும் எடுக்கப்பட்ட இந்தத் தூய்மையான நீர் இன்று எனக்குக் கிடைக்காவிட்டாலும் நாளை என் அடுத்த தலைமுறையினரின் தாகம் போக்கி அவர்களுடைய நெஞ்சைக் குளிர வைக்கும். அதுபோல இன்று மண்ணைத் தோண்டியும் நீரில் மூழ்கியும் செய்யப்பட்ட ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற நம் தமிழினத்தின் சிறப்புகளும் அடையாளங்களும் இன்று எனக்கு முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் என் அடுத்தத் தலைமுறையினருக்கு முழுமையாகக் கிடைத்து அவர்களுடைய நெஞ்சத்தை மகிழ்விக்கும்.

முடிவாகக் கூறவேண்டுமென்றால், நம் முன்னோர்கள் ஆறுகளிலும் குளங்களிலும் தேக்கி வைத்துப் பயன்படுத்திய நீரை இன்று குழாய்களிலும் தொட்டிகளிலும் அடைத்து வைத்துப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், அதன் தரமும் தன்மையும் கெடாதவாறு பாதுகாக்கவேண்டும். அன்று இயற்கை இலவசமாகக் கொடுத்த தண்ணீரை இன்று பணத்திற்கு விற்பனை செய்கிறோம். இதற்குக் காரணம் தண்ணீர் பற்றக்குறையே ஆகும். அதனால், தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தினால் அடுத்த தலைமுறையினரும் நீருக்குக் கஷ்டப்படாமல் இருப்பார்கள்.

நம் முன்னோர்கள் பல மரபுகளையும் பண்பாடுகளையும் நமக்காக விட்டுச் சென்றிருந்தாலும் அவற்றை முழுமையான வரலாறாகவோ அடையாளமாகவோ விட்டுச் செல்லவில்லை. அவர்களால் பாதுகாக்கப்படாமல் விட்டுச் சென்ற சில சிறப்புகளையும் பெருமைகளையும் பற்றித்தான் பேசினோம், பேசுகின்றோம். ஆனால், அவற்றை முழுமையாகத் தேடுவதற்கும் தேடியவற்றைத் தகுந்த சான்றுகளோடு உறுதிப்படுத்துவதற்கும் நம்மால் முடியவில்லை. இதனை மனத்தில் கொண்டு நாம் படைக்கும் வரலாற்றையும் நம் அடையாளங்களையும் முறைப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும். அவற்றுக்கான முயற்சிகளில் நாம் இன்றே ஈடுபட்டாலன்றி நாளையத் தலைமுறையினருக்கு இன்றைய நம் அடையாளங்களை முழுமையாக விட்டுச் செல்லமுடியாது. எனவே, நாம் படைக்கும் இலக்கியமானாலும் ஓவியமானலும் வரலாறானாலும் அவற்றை முறையோடு பதிவு செய்து அடுத்த தலைமுறையினர்க்குக் கொடுப்போமாக.

பொன். கணேசுகுமார்,

சிங்கப்பூர்
கவிஞர் திரு எம் கருணாகரனின் வேண்டுதல்

கடவுளிடம் கேட்டுப் பார்க்கலாம்
புண்ணிய ஆத்மாக்களின்
வருகைக்கான கால அளவை
நீட்டி வைக்காமல்
வேண்டுதலை நிறைவேற்ற
சீக்கிரம்
வருகையைத் துரிதப்படுத்தலாம்
என்று

வந்து போகின்றவர்களின்
ஆத்ம பரிவர்த்தனை
ஆக்கத்தையழித்து அழிவுகளைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறது

மனிதம் அழித்து மனிதம் வாழ
உபாசனைகள் தொடர்வதைத்
தடுக்க முடிவதில்லை

கடவுளைத் தேடிப் போனேன்

அவர் மழுங்கியக் கத்தியைத்
தீட்டிக் கொண்டிருந்தார்

சொற்செலவைக் குறைத்து, பொருட்பொதிவைக் கூட்டுகின்ற பைந்தமிழின் பெட்டகம்தான் கவிதை. இந்தக் கவிதைகள் மரபு சார்ந்தும் இருக்கலாம் அல்லது மரபினின்று விலகிப் புது வடிவாய் விளங்குகின்ற புதுக்கவிதை, ஹைக்கூ, குக்கூ .... இன்னும் பலவாய் இருக்கலாம். எது எப்படியோ கவிஞன் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளையோ செயல்களையோ தன் எண்ண உணர்வின் வெளிப்பாடாகப் பதிவிடுகிறான். அவை கவிதைகளாக மிளிர்கின்றன.

அந்தக் கவிதைகளைப் படிக்கும் வாசகன் அக்கவிதைகள் உணர்த்தும் செய்திகளை முதலில் தன் மனத்தின் ஓட்டத்திற்கு ஏற்பவோ தன் அனுபவத்திற்கு ஏற்பவோ தன் புறச் சூழலுக்கு ஏற்பவோதான் புரிந்துகொள்கின்றான். அடுத்ததாகத்தான் அக்கவிதைகளை வடித்த கவிஞனின் உள்ளத்தையும் அனுபவத்தையும் புறச் சூழலையும் புரிந்துகொள்கின்றான் அல்லது புரிந்துகொள்ள முற்படுகின்றான்.

அந்தவகையில் கவிஞர் எம் கருணாகரனின் வேண்டுதல் என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது நான் என் மனவோட்டத்திற்கும் அனுபவத்திற்கும் புறச்சூழலுக்கும் உட்பட்டே புரிந்துகொள்ள முற்பட்டேன். என் மனத்தில் தோன்றியது எவையெனில் இந்த உலகத்தில் நடக்கின்ற வேண்டாத செயல்கள், மனத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள், பிறருக்குத் தீங்கிழைக்கும் கொடுமைகள், பலிவாங்கும் எண்ணங்கள் போன்றவையே ஆகும். இவற்றின்மூலம் இவ்வுலகம் இற்றை நாளில் எதை நோக்கிச் செல்கிறது? இவற்றைப் போக்கும் வழிதான் என்ன? போன்ற வினாக்களும் தோன்றவே செய்கின்றன.

இவ்வினாக்களுக்கு விடை தேடிச் செல்லும் நம் கவிஞர் விருப்பமும் வாசகனான என் விருப்பமும் ஒன்றே. ஆம், அது இவ்வுலகை உய்விக்கும் உண்மையான புண்ணிய ஆத்மாக்களின் வருகையே. அப்போதாவது ஆக்கத்தை அழித்து, அழிவைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களையும் மனிதம் அழித்து மனிதம் வாழ உபாசனைகள் செய்பவர்களையும் தடுக்கலாம் அல்லவா?.

இருப்பினும், இவ்வாசையை நிறைவேற்ற கடவுளைத் தேடிப் போகும் கவிஞர் அங்கே மழுங்கிய கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த கடவுளைக் காண்பதாக முடிக்கிறார். இவ்வரியை கவிஞர் எந்தக் கருத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதினாரோ எனக்குத் தெரியாது. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அதுவும் எனக்குத் தெரியாது. அப்படி கடவுள் இருக்கும்பட்சத்தில் அந்தக் கவிதை வரிகளைப் படித்த வாசகனான எனக்குத் தோன்றியது ஒன்றுண்டு.

அதாவது, கடவுள் கத்தியைத் தீட்டிக்கொண்டு இருப்பது எதற்காக? என்று நான் ஆழ்ந்து சிந்திக்கும்போது கவிஞர் குறிப்பிடுவதுபோல் இவ்வுலகில் வந்து போகின்றவர்களின் ஆத்ம பரிவர்த்தனையானது ஆக்கத்தை அழித்து, அழிவைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மனிதம் அழித்து மனிதம் வாழும் உபாசனைகளைத் தொடர்கிறது. அத்தகைய ஆத்மாக்கள் தம்முடைய கொடிய பணியை முடித்துவிட்டு எப்படியும் தன்னை நாடி வரும். அப்பொழுது அவை செய்த செயல்வழி நின்று தண்டிப்பதற்காகவே என்று தோன்றியது.

பொன். கணேசுகுமார்,

சிங்கப்பூர்.