நெடுநல்வாடையில் இடம்பெற்றுள்ள உவமைகளும்
அவற்றிற்குரிய நிலைக்களன்களும்
முன்னுரை
சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில்
ஏழாவதாக அமைந்துள்ள இலக்கியம் நெடுநல்வாடையாகும். இந்த இலக்கியத்தின் ஆசிரியர்
மதுரை கணக்காயனர் மகனார் நக்கீரர் ஆவார். நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல
குளிர்க்காற்று என்பது பொருளாகும். மழைக் காலத்தில் வீசுகின்ற வாடைக்காற்று
தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவிக்குத் துன்பத்தைக் கொடுப்பதோடு அவளது
கண்களில் நீரையும் நிரப்புகின்றது. அதனால், அவளுக்கு அவ்வாடைக் காற்று மிக நீண்டதாகத்
தோன்றுகின்றது. அதே வேளை போர்ப் பாசறையிலே தங்கியுள்ள வீரர்களிடம் பரிவோடு பேசி
அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்ற தலைனுக்கு அது நல்லதாக இருப்பதோடு புத்துணர்ச்சியையும்
கொடுக்கின்றது. சுருக்கமாகச் சொன்னால் ‘நெடுநல்வாடை’ தலைவியின் அரண்மனை இருப்பையும் தலைவனின் பாசறை இருப்பையும் 188 அடிகளில் பாடுவதாக
நீண்டு அமைந்துள்ளது.
பொதுவாகக்
கவிதைகளைத் தகுதியாக்குவதற்கும் அழகுபடுத்துவதற்கும் மட்டுமின்றிப் பொருளின்
தன்மையை அறிந்துகொள்வதற்கும் உவமைகள் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வகையில் நக்கீரரும்
தம் நெடுநல்வாடையில் உவமைகளை ஆங்காங்கே கையாண்டுள்ளார். இத்தகைய உவமைகளின் சிறப்புகளும்
அவை இப்பாடலுக்குப் பயன்படும் அழகும் ஈண்டு நோக்கத்தக்கது. இதனைப் பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர்
கூறும் உவமைகளும் அவற்றின் நிலைக்களன்களும்
ஒரு பொருளை மற்றொரு பொருளுக்கு உவமையாகக்
கூறும்போது அவ்விரண்டிற்கும் பொதுவாகிய ஒரு தொழில் காரணமாகவும் அந்தத் தொழிலால் பெறும்
பயன் காரணமாகவும் மெய்யாகிய வடிவு காரணமாகவும் மெய்யின்கண் நிலைபெற்றுத் தோன்றும் உருவாகிய
வண்ணம் காரணமாகவும் ஒப்பிட்டு உரைக்கப்பெறும். இதனைத் தொல்காப்பியர்,
‘வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற
வந்த உவமத் தோற்றம்’ (உவமயியல் நூற் இளம்
1) என்று விதி செய்து காட்டுவார். வடிவும் வண்ணமும் பண்பில் ஒன்றாக அடங்குமாயினும்
கட்புலன் பண்பு, உற்றுணர் பண்பு எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினையும்
உருவினையும் வேறு வேறாகப் பிரித்துரைத்தார். வினை,
பயன், மெய், உரு என்னும் நான்கனுள் அளவும் சுவையும் தன்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும்
அடங்குமாதலின், இந்நான்கே உவமப் பகுதியென்று தொல்காப்பியர் வரையறுத்தார்.
மேலும், அவர்
உவமையின் நிலைக்களமமாகச் சிலவற்றைக் கூறியுள்ளார். அதாவது,
வினையுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமம் எனத் தோன்றும் உவமைகள் சிறப்பு, நலன், காதல், வலி என்ற நான்கனுள் ஒன்றை நிலைக்களமாகக்கொண்டே அமைதல் வேண்டுமென்கிறார். இதனை, ‘சிறப்பே
நலனே காதல் வலியோடு
அந்நாற்
பண்பும் நிலைக்களம் என்ப’ (உவமயியல் நூற் 4)
என்ற நூற்பாவால் அறியலாம். இவற்றுள் சிறப்பு என்பது,
உலகத்துள் இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையால் பெறுவது என்றும் நலன்
என்பது வரும்பொருளின்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை என்றும் காதல் என்பது, நலனும் வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவை உள்ளனவாகக்
கொண்டு கூறுவது என்றும் வலி என்பது, ஒரு பொருளுக்குத்
தன் தன்மையால் உள்ளதாகிய ஆற்றல் என்றும் பொருள் தருகிறார் தொல்கப்பியர். இத்தகைய உவமைகளும்
அவற்றிற்குரிய நிலைக்களன்களும் நெடுநல்வாடையில்
எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நெடுநல்வாடையில்
உவமைச் சிறப்பும் அழகும்
1. கூதிர் காலத்தின் தன்மை
கூதிர்க்காலத்தில் குளிரின் மிகையைக்
கூறுவதற்காக நக்கீரர் ‘வையம் பனிப்ப’ என்று நெடுநல்வாடைப் பாட்டைத் தொடங்கி அதில் கோவலரும்
ஆநிரைகளும் அடையும் துன்பத்தை விளக்குகிறார். அதாவது,
குளிர்காலத்தில் வாடை மிகுதியால் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் இயல்புடைய
விலங்குகள் அம்மேய்ச்சலை மறந்திருந்தன. மந்திகள் குளிரால் நடுங்கின. மரத்தில்
உறையும் பறவைகள் பிடிப்பின்றி நிலத்தில் வீழ்ந்தன. கன்றுகளை அரவணைக்கும் பசுக்கள்
தமது கன்றுகளைப் பாலுண்ண அனுமதிக்காது உதைத்தன என்று விளக்குகிறார். மேலும், நிலையாக இருக்கும் உயிரற்ற மலையே குளிரால் நடுங்குகின்றது என்பதனைக்
கூறவந்தவர், ‘குன்று குளிர்ப்பன்ன’ என்ற தொடரில் தொல்காப்பியர் சுட்டும் பயன் உவமையைக் கையாண்டிருக்கிறார்.
இதன்மூலம் குளிரின் மிகுதியான வலிமையை உணர்த்த ஆசிரியர் குன்றின் நடுக்கத்தையே உவமையாகக்
கூறியதால் இவ்வுவமை வலி என்னும் நிலைக்களனைக்கொண்டு அமைந்துள்ளது என்பது இனிது
புலனாகும்.
2. மழைக்காலத்தில் ஊரினது செழிப்பு
நக்கீரர் ஊரின் சிறப்பையும் செழிப்பையும்
ஒருசேரப் புலப்படுத்துகிறார். மழைக்காலத்தில் ஊரில் உள்ள தாவரங்கள்,
நீர்நிலைகள், பறவைகள், மீன்கள், நெல், கமுகு, சோலை
முதலியவற்றைப் பற்றித் தன் சொல்திறத்தால் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.
அதாவது, கூதிர் கால மழைத்துளியும் குளிர்வாடையும் ஊரில் உள்ள
இயற்கையை எழிலுறச் செய்கின்றன என்கிறார். ஓரிடத்தில் புதர்கள் தோறும் பின்னிப்
பிணைந்து வளர்ந்துள்ள முசுண்டைக் கொடியும் பீர்க்கங்கொடியும் பூத்துக்
குலுங்குகின்றன. அவற்றில் பீர்க்கம்பூவைப் பொன்னின் வண்ணத்தோடு ஒப்பிடுகிறார். மற்றோரிடத்தில்
பாக்கு மரத்தின் கழுத்துப் பகுதியைப் பசுமையும் நீலமும் கலந்த நீலமணியின் வண்ணத்தோடு
ஒப்பிடுகிறார். இவ்விரண்டையும் உருவுவமைகளாகப் பயன்படுத்திப்
பொருத்திக்காட்டுவது மிகச் சிறப்பானதாகும். மேலும்,
இவ்வுவமைகள் தொல்காப்பியர் கூறியது போல் சிறப்பு என்னும் நிலைக்களனைக்கொண்டு
அமைந்திருப்பது தெளிவாகிறது. இவற்றை, ‘பொன்
போல் பீரமோடு’, ‘மும்முதர்
கமுகின் மணியுறழ் எருத்து’ என்ற பாடலடிகளால் அறியலாம்.
3. தெருக்களின் அமைப்பு
ஊரில் உள்ள
தெருக்களின் அமைப்பையும் சிறப்பையும் பற்றிக் கூறவந்த நக்கீரர் அவற்றில் நடைபெறும்
இயல்பான நிகழ்வுகளையும் ஒருசேரப் பாடுகின்றர். உயர்ந்தோங்கிய மாளிகைகள் பல நிறைந்த
பழஞ்சிறப்பினை உடைய ஊரில் உள்ள அகன்ற தெருக்களில் இறுகிய தோளையும் முறுக்குண்ட
உடலையும் உடைய கீழ்மக்கள் வண்டுகள் மொய்க்கும் கள்ளினை உண்டவராய்த் தம்மீது பட்டுத்
தெறிக்கின்ற கூதிர் கால மழைத் திவலைகளுக்கு அஞ்சாது, தழைகள் பொருந்திய
மாலையையும் முன்பக்கமும் பின்பக்கமும் தொங்கக்கூடிய ஆடையையும் அணிந்தவராகத்
தெருக்களில் திரிகின்றனர் என்று கூறுகிறார். மேலும், அந்தத்
தெருவின் அமைப்பைக் கூறும்முகத்தான் ‘ஆறு கிடந்தன்ன அகல்
நெடுந் தெருவில்’ என்று ஆற்றின் வடிவைத்
தெருவுக்கு மெய்யுவமையாக வெளிப்படுத்துவதன்மூலம் நம் நக்கீரரின்
சொல்லாட்சியின் அழகு புலப்படுகிறது. ஆறு இருபக்கமும் கரையைக் கொண்டுள்ளதுபோல், நகரத்துத் தெருக்களும் இரண்டு பக்கமும் கரையைப் போன்று மாளிகைகளைக் கொண்டு
இயல்பான நலம் தோன்ற வனப்புடன் விளங்குகிறது. எனவே, இவ்வுவமை, தொல்காப்பியர் சுட்டியது போல் நலன் என்பதனை நிலைக்களனாகக் கொண்டு
அமைந்ததுள்ளது எனத் தெளிவாகிறது.
4. மாலை நேரமும் பெண்களின் வழிபாடும்
மாலைநேரத்தில் வழிபாடு செய்யும் அழகிய பெண்களின்
எழிலைக் கூறவந்த நக்கீரர் அவரது அணிகலன்களையும் அவற்றை அணிந்திருக்கும்
முறைமைகளையும் கூறுகிறார். அதாவது, வெள்ளி போன்ற
வெண்ணிறச் சங்குவளையல் அணிந்த இறுகிய முன்கையினையும் மூங்கில் போன்ற தோள்களையும் மெத்தென்ற
சாயலினையும் முத்துப் போன்ற பற்களையும் மகரக்குழை அணிந்த காதுகளையும் இவற்றோடு
கூடிய குளிர்ந்த நோக்கினையுடைய கண்களையும் பெற்ற மடவரல் மகளிர் அவர்கள் எனக்
கூறுகிறார். இதனை,
வெள்ளி வள்ளி, வீங்குஇறைப் பணைத் தோள்,
மெத்தென்
சாயல்,
முத்துஉறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்தெழில்
மழைக்கண்...’ என்ற பாடல்
வரிகளால் அறியலாம். இவற்றில் வெள்ளி வள்ளி என்னும் உருவுவமையும்,
வீங்குஇறை, பணைத்தோள், முத்து, பூங்குழை, மழைக்கண் போன்ற மெய்யுவமைகளையும் பயன்படுத்தியிருப்பது
ஆசிரியரின் இலக்கிய நயத்திற்குச் சான்றாக விளங்குகிறது. இவற்றில் இயற்கை நலம்
மட்டுமின்றிச் செயற்கை நலம் தோன்ற மகளிர் வனப்புடன் விளங்குகின்றனர். எனவே, இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டுவது போல் சிறப்பு என்பதனை
நிலைக்களனாகக் கொண்டு அமைந்துள்ளது என்பது தெளிவாகும்.
5.
கூதிர் காலத்தால் நேர்ந்த விளைவுகள்
வாடை மிகுந்து கூதிர் காலம் வந்ததால் பறவைகள், விலங்குகள், மானிடர்கள் செயல்கள்
பருவத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளதனை நக்கீரர் நயம்தோன்ற உரைக்கின்றார். புறாக்கள்
கூதிர் காலக் குளிருக்கு அஞ்சி தம் இயல்பான நிலையினின்று மாறி உணவு தேடாமல் இரவு, பகல் தெரியாது செயலற்று ஓரிடத்திலேயே நிற்கின்றன. இது மட்டுமல்லாது
குற்றேவல் செய்யும் பணிமக்கள், குளிர்ச்சியைப்
போக்கும் கத்தூரி முதலிய சாந்துகளைக் ‘கொள்’ என்னும் தானியம் போன்ற நிறத்தை உடைய கல்லில் அரைக்கின்றனர்
என்கின்றார். இப்பாட்டில் நக்கீரர், பூச்சுக்கள் அரைக்கும்
கல்லின் நிறத்தைக் குறிக்க உருவுவமையைப் பயன்படுத்தியிருப்பது
பாராட்டத்தக்கது. இதனைக் ‘கொள்உறழ் நறுங்கல், பலகூட்டு மறுக’ என்ற
தொடரால் அறியலாம். ‘கொள்’ என்னும் தானியத்தைப்
போல நிறத்தையுடைய கல் என்று அதன் இயல்பு நலம் தோன்ற உவமை கூறியிருப்பதால் இவ்வுவமை
நலன் என்பதனை நிலைக்களமாகக் கொண்டு அமைத்திருப்பதை அறியலாம்.
6. அரண்மனைத் தோற்றமும் உள்ளெழும்
ஓசைகளும்
அரண்மனை நுழைவாயிலின் தோற்றம் மிக உயர்ந்த
மலையைப் போன்றுள்ளது என்பதை ‘ஓங்குநிலை வரைப்பு’ என்றும் அதில் நீண்ட நெடிய கதவுகள்
பொருத்தப்பட்டுள்ள நிலையினை ‘நெய்யணி நெடுநிலை’ என்றும் ஓங்கி உயர்ந்த அரண்மனைக்
கோபுரத்து வாயிலைச் சுட்டுமிடத்து ‘குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்’ என்றும் நக்கீரர் பாடுகிறார்.
அதாவது, குன்றைத் துளைத்தாற் போன்று வடிவுடைய ஓங்கிய நிலைகளைக் கொண்ட வாயில் என மெய்யுவமையைப்
பயன்படுத்திருப்பது அவரது ஒப்பீட்டுத் திறமைக்கு மேலும் ஒரு சான்று எனலாம்.
இதன்மூலம் அரண்மனை வாயிலின் வலிமையை உணர்த்த ஆசிரியர் குன்றை உவமை கூறியதால்
இவ்வுவமையின் நிலைக்களன் வலி என்பது இனிது புலனாகும்.
அரண்மனை
முற்றத்து மணலில் கவரிமானும், அன்னமும் சுற்றித் திரிகின்றன. அச்சூழலுக்கேற்ப
பந்திகளிலுள்ள குதிரையின் தனிமைப் புலம்போசையும் மகரவாய் போன்று பகுக்கப்பட்ட
செயற்கை நீரூற்றில் விழும் நீரின் ஓசையும் கேட்கின்றன என்கிறார். மயில்களின்
ஓசையைக் கொம்பு ஊதும் ஓசைக்கும், அரண்மனையில் உண்டாகும்
ஆராவாரத்தை மலையில் உண்டாகும் ஆராவாரத்திற்கும் ஒப்புமைப்படுத்திப் பயனுவமைகளாகக்
காட்டிச் செயற்கை நலம் தோன்ற அமைத்திருப்பது ஆசிரியரின் மனம் இயற்கையோடு
ஒன்றியிருத்தலைக் காட்டுகிறது. இதனை,
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை,
நளிமலைச்
சிலம்பின் சிலம்பும் கோயில்’ (நெடுநல்வாடை
99, 100) என்ற அடிகளால் அறியலாம். மேலும், இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டும் சிறப்பினை நிலைக்களனாகக்
கொண்டு அமைந்துள்ளன என்பது தெளிவாகும்.
7. அந்தப்புரத்தின் அமைப்பும் அழகும்
அரண்மனையில் பரவியுள்ள இருள் நீங்குமாறு யவனரால்
செய்யப்பட்ட பாவை விளக்குகளில் நெய் வார்க்கப்பட்டு, பருத்தித் திரி
கொளுத்தப்பட்டு ஒளிர்கின்றன. மன்னனைத் தவிர குறுந்தொழில் புரியும் பணிமக்களும்
அணுக முடியாத காவலை உடையாதாக அரண்மனை விளங்குகின்றது என்று ஆசிரியர் கூறுகிறார்.
அவ்வகை அரண்மனை எப்படிப்பட்டது என்பதை ‘வரைகண் டன்ன தோன்றல
வரைசேர்பு’ என்கிறார். அதாவது மலையை ஒத்த உயரமுடைய
அரண்மனை என்று மெய்யுவமையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், வலிமையான மலையை உவமை கூறியதால் இவ்வுவமையின் நிலைக்களன் வலி
என்பது இனிது புலனாகும்.
அரண்மனையின்
அந்தப்புரப் பகுதிகளில் வானவில் போன்று பல நிறமுடைய கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதனை, ‘வில்கிடந்
தன்ன கொடிய பல்வயின்’ என உருவுவமையைப்
பயன்படுத்தியிருக்கிறார். மேலும், அந்தப்புரச் சுவர்களில்
வெள்ளி நிறத்திலான வெண்சாந்து பூசப்பட்டுள்ளதை ‘வெள்ளி யன்ன விளங்கும்
சுதையுரீஇ’ என்றும் நீலமணியைக் கண்டாற்
போன்ற கரிய திண்ணிய தூண்களை ‘மணிகண் டன்ன மாத்திரள் திண்கல்ச்’ என்றும் செம்பின் நிறமொத்த சுவற்றைச் ‘செம்புஇயன் றன்ன
செய்வுறு நெடுச்சுவர்’ என்றும் ஒரே கொடியில்
வடிவமும் அழகும் உடைய பூக்களை உடைய பூங்கொடி போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளதை ‘உருவப்
பல்பூ ஒருகொடி வளைஇக்...’ என்றும்
ஒப்புமைப்படுத்திக் கூறியிருக்கிறார். இவை காட்சிக்கு இனிமையானதாக அமைத்ததோடு
மட்டுமல்லாமல் பொருள்களுக்கேற்ற உருவுவமைகளையும்
பயன்படுத்தியிருப்பது ஆசிரியரின் விரிந்த இலக்கிய அறிவைப் புலப்படுத்துகிறது.
மேலும், இவற்றில் வானவில்
நிறத்தைக் கொடிகளுக்கும் வெள்ளியின் நிறத்தை அரண்மனைச் சுவற்றின் நிறத்திற்கும்
நீலமணியின் நிறத்தை அந்தப்புரத் தூண்களுக்கும் செம்பின் சிவந்த நிறத்தை அந்தப்புரச்
சுவற்றிற்கும் செயற்கை நலம் தோன்றப் பொருத்திக் காட்டியிருப்பது சிறப்பு. எனவே, இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டியது போல் சிறப்பினை நிலைக்களனாகக்
கொண்டு அமைந்துளளன என்பது தெளிவாகும்.
8. கட்டிலின் அமைப்பு
நாற்பது வயது
நிரம்பிய முரசு போன்ற கால்களையுடைய யானை போரில் ஈடுபடும்போது தானாக விழும் அதன் தந்தத்தை
எடுத்து வந்து தொழில் தெரிந்த தச்சனிடம் கொடுத்துச் செய்யப்பட்டது பாண்டில்
என்னும் கட்டில் என்கிறார் நக்கீரர். இதனைத் ‘ தச நான்கு எய்திய பணைமருள் நோன்றாள்...’ என்ற
படலடியால் அறியலாம். இதில் முரசு போன்ற கால் என்ற மெய்யுவமையைப்
பயன்படுத்தியுள்ளார். மேலும், இக்கட்டிலின் வேலைப்பாட்டு வடிவத்தைச்
சிறப்புடைய உவமைகளால் எடுத்துரைக்கின்றார். அதாவது, தந்தத்தால்
ஆக்கப்பட்ட கட்டிலின் பக்கங்கள் ‘தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை
கடுப்பப்...’ என்றும் அக்கட்டிலின் கால்களை ‘உள்ளி
நோன்முதல் பொருத்தி, அடியமைத்துப்...’ என்றும் நக்கீரர் நயம்பட மெய்யுவமைகளைக் கையாண்டிருப்பது
போற்றத்தக்கது. இவற்றில் முரசினை யானையின் கால்களுக்கும் மகளிர் மார்பகங்களைக்
கட்டிலின் பக்கங்களுக்கும் உள்ளிப்பூண்டைக் கட்டிலின் கால்களுக்கும் சிறப்பிக்கும்
பொருட்டுச் செயற்கை நலம் தோன்ற உவமையாகப் பொருத்திக் காட்டுவது மேன்மையுடையது.
எனவே, இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டும் சிறப்பினை
நிலைக்களனாகக் கொண்டு அமைந்துள்ளன என்பது தெளிவாகும்.
9. புனையா ஓவியம் போல் அரசி
கலைநுட்பமும்
எழில் நலமும் மென்மைச் சிறப்பும் மிக்க பாண்டில் என்னும் கட்டிலில், முன்பு
பல்வகை அணிகலன்களை அணிந்து மகிழ்ந்த தலைவி அவற்றையெல்லம் களைந்து சோகமே உருவாகப்
படுத்திருக்கின்றாள். மேலும், அன்று வாளை மீனின் பிளந்த
வாயைப் போன்ற மோதிரம் அணியப்பட்ட அவள் விரல் இன்று மோதிரமின்றித் தழும்பாக உள்ளது.
இதனை, ‘வாளைக் பகுவாய்க் கடுப்ப
வணக்குறுத்துச்...’ என்ற
பாடலடியின்மூலம் விளக்குகிறார். அன்று பட்டாடை தரித்த இடையில் இன்று அழுக்காடை
சுற்றப்பட்டிருக்கிறது என்பதையும் அன்று ஓவியப் பாவையாக இருந்த தலைவியின் இன்றைய
நிலை கவலையே வடிவாக எழிலற்று வண்ணந்தீட்டப்படாத கோட்டு ஓவியமாக உள்ளது என்பதையும்
கூறவந்த நக்கீரர், ‘அம்மாசு ஊர்ந்த அவிர்நூல்
கலிங்கமொடு புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்’
என்ற பாடலடிகளின்மூலம் மெய்யுவமைகளைப் பயன்படுத்துகின்றார். இவற்றில்
வாளைப் பகுவாய், புனையா ஓவியம் போல என்று தலைவியின் செயற்கை
நலம் தோன்ற உவமை கூறியிருப்பதால் இவ்வுவமைகள் நலன் என்பதனை
நிலைக்களமாகக்கொண்டு அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
10. தலைவியைத் தேற்றும் தோழியர்
தலைவனைப் பிரிந்து துயரத்தில்
வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழியர் தேறுதல் மொழிகளைக் கூறுகின்றனர் என
உரைக்கும் நக்கீரர் அத்தோழியரின் எழில் நலத்தைத்
‘‘தளிர்ஏர் மேனித் தாய
சுணங்கின்,
அம்பனைத்
தடைஇய மென்றோள், முகில் முலை...’’ என்று வருணிக்கிறார்.
அதாவது, மாந்தளிர் போன்ற மேனி என்று கூறும்போது உருவுவமையையும் தேமல், அழகிய மூங்கில் போன்ற மெல்லிய தோள், தாமரை மொட்டுப்
போன்ற மார்பு ஆகியவற்றைக் கூறும்போது மெய்யுவமைகளையும் பயன்படுத்தி இத்தகைய
மெத்தென்ற தன்மையுடைய தோழியர் என்று உவமைப்படுத்திக் கூறுவது அவரது நுழைமான்
நுண்புலத்தைக் காட்டுகின்றது. மேலும், தோழியரின் அழகினை
இயற்கை நலம் தோன்ற உவமை கூறியிருப்பதால் இவ்வுவமை நலன் என்பதனை
நிலைக்களமாகக் கொண்டது என்பதை அறியலாம்.
11. போர்ப் பாசறையும் அரசனின் ஆறுதலும்
நள் என்னும் ஒலியெழுப்பும் இரவு நேரத்தில்
சிறிதும் கண் துஞ்சாது, மன்னன் தன்னுடைய கடமையை ஆற்ற விருப்புடன்
போர்களப் பாசறைக்கு வருகின்றான். அவ்வாறு வரும் அவன் அங்குள்ள காயம்பட்ட
வீரர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு வருகின்றான். அப்போது அவன் முன் வழி நடக்க
வீரனொருவன் ஒளிப் பந்தத்தைக் கையிலேந்திப் பின்தொடர்கிறான். அக்காலம் கூதிர்காலம்
என்பதால் வாடைக் காற்று வடக்குத் திசையிலிருந்து வீசுகின்றது. இதனால் ஒளிப் பந்தத்தின்
சுடர் தெற்குநோக்கி அலைபாய்கின்றது. இதனை,
‘வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்குஏர்பு
இறைஞ்சிய தலைய நன்பல்
பாண்டில்
விளக்கில் பரூஉச்சுடர் அழல’ என நக்கீரர்
உரைக்கும் விளக்கின் சுடர் அசைவினை நாமும் நேரடியாகக் காண்பது போல உணர்கின்றோம்.
போர்க்களத்தில் கட்டப்பட்ட யானைகளும்
குதிரைகளும் போரில் பட்ட புண்களாலும் வாடையாலும் வருந்துகின்றன. குதிரையின்மீது
இடப்பட்ட சேணம் கழற்றப்படாது உள்ளது. அதனை உணர்த்த ‘பருமம் களையாப் பாய்பரி’ என
உரைக்கிறார். இதன்மூலம் போர் முடியவில்லை தொடர்ந்து நடைபெறும் என்பது
தெரியவருகிறது. கட்டப்பட்டக் குதிரைகள் கால் மாறி வைப்பதால் களத்தில் உள்ள
சேற்றுத்துளிகள் மன்னன் மேல் தெறிக்கின்றன. இது எதனையும் பொருட்படுத்தாது மன்னன்
கடமையே கண்ணாகப் போர்ப் பாசறையில் கடமையாற்றுகின்றான்.
கூதிர்கால வாடையில் நள்ளிரவில்,
வெண்கொற்றக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் தவ் என்னும் ஓசையினையும்
செறிவுமிக்க இரவில், இருளோசையையும் ‘தவ்வெவென்று
அசைஇ நள்ளென் யாமத்து’ என உரைப்பார்
நக்கீரர்.
முடிவுரை
நக்கீரரின்
நெடுநல்வாடை என்னும் இந்தச் சொல்லோவியம் பழஞ்சிறப்பினை உடைய மூதூர் கோட்டை
வாசலிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு இடமாக உள்ளே நுழைந்து தலைவியின்
கடைக்கண்ணில் வழியும் கண்ணீரைக் கண்டு மனம் தவிக்கிறது. தவித்த அக்காட்சி, கண்ணீரில் கிளம்பி, அக்கண்ணீருக்குக் காரணமாக
விளங்கும் தலைவனாகிய அரசன் அலைந்து ஆறுதல் சொல்லும் போர்ப் பாசறையைக்
காட்சிப்படுத்துகிறது. இந்தச் சொல்லோவியக் காட்சி, தலைவியாகிய
அரசியின் பிரிவுத் துயரை நமக்குள்ளும் தூண்டி, அவல உணர்வை
மிகுவித்து, தலைவிக்காக நம்மையும் தவிக்க வைக்கிறது.
இத்தவிப்பே, நக்கீரரின் சொல்லோவியத்திற்கும் உவமை
நயத்திற்கும் கிடைத்த வெற்றி எனலாம். மேற்கூறப்பட்டுள்ள கட்டுரையின்வழி கோட்டையின்
வெளிப்புறத்தே தொடங்கும் கூதிர்கால வாடையிலிருந்து அந்தப்புரத்தில் வேலைப்பாடு
மிகுந்த தந்தக்கட்டிலில் துயருடன் வீழ்ந்து கிடக்கும் தலைவியாகிய அரசியின் துயரில்
பங்குகொள்ளும் காட்சி வரை மட்டுமே நக்கீரர் உவமைகளையும் அவற்றிற்குரிய
நிலைக்களன்களையும் கொண்டு சொல்லோவியமாகத் தீட்டுகின்றார் என்றால் அதனை
மறுப்பதற்கில்லை.
கட்டுரைக்கு உதவிய துணைநூல்கள்
1. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை – டாக்டர். ந. சுப்புரெட்டியார், நான்காம் பதிப்பு, 2002,
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600014.
2. புனையா ஓவியம் – வெங்கட்ராம செட்டியர். இரண்டாம் பதிப்பு, 1962, பறம்பு நிலையம், சென்னை
– 09.
3. நக்கீரர் அருளிய நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும் – முனைவர் யாழ். சு.
சந்திரா, முதற்பதிப்பு, 2008, செல்லப்பா பதிப்பகம், மதுரை – 625001.
4. சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே – டாக்டர் ச. அகத்தியலிங்கம், இரண்டாம் பதிப்பு, ஜனவரி 2000, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600108
5. நக்கீரர் ஓர் ஆய்வு – மு. பெரி. மு. இராமசாமி,
முதற்பதிப்பு, 2000, பார்வதி
பப்ளிகேஷன், சேலம்.
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.