புதன், 29 டிசம்பர், 2021

 

நாடு காக்கும் நாயகர்கள்

 

சிங்கை யென்னும் நம்நாட்டை

சிறப்பு வாய்ந்த நாடாக்க

பங்க மில்லா அரசுவந்து

      பாடு பட்டு உழைத்தாலும்  

 

நோயும் நொடியும் அண்டியோரை

நொந்த பார்வை பார்க்காது

தாயாய்க் காக்கும் மருத்துவரும்

தாங்கிப் பிடிக்கும் தாதியரும்

 

தூய்மை செய்யும் வேளையிலும்

      துன்பம் வந்து சேர்ந்தாலும்

தூய மனத்தின் எண்ணத்தால்

தொற்றுப் பரவைத் தடுப்போரும்

 

கட்டுப் பாடு விதித்தாலும்

கால வரையு மில்லாது

சட்ட திட்டம் காக்கின்ற

சீர்மை மிக்கக் காவலரும்

 

பாது காப்பு முறையோடு

பள்ளிப் பாடம் முழுவதையும்

ஓதும் பாங்கில் கற்பித்து

ஒளிரச் செய்யு மாசிரியரும்

 

இம்மைப் பொழுதும் உறங்காது

இயன்ற உதவி செய்வதற்கும்

அம்மை யப்பன் போலிங்கு

அருகில் இருந்து காப்பதற்கும்

 

தம்மை யொப்புக் கொடுக்கின்ற

தன்மை வாய்ந்த தகையோராய்

நம்மில்  இருந்து உழைக்கின்றார்

நன்மை பலவும் புரிகின்றார்

 

ஓடும் நதிபோல் பயனுறவே  

உயர்ந்த எண்ணம் கொண்டதனால்

நாடு காக்கும் நாயகராய்

      நம்மி லின்றும் வாழ்கின்றார்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக