வெள்ளி, 29 ஜூலை, 2011

22. மொழி

                                மொழி

நல்ல நல்ல மொழியாம்
           நமக்கு கிடைத்த மொழியாம்
வெல்லம் போல இனிக்கும்
           விரும்பி பேச சுவைக்கும்

அம்மா அப்பா நமக்கு
            அறியச் செய்த மொழியாம்
தம்பி தங்கை பேச்சில்
             சுவையை கூட்டும் மொழியாம்

பல்வகை இலக்கியக் காப்பியம்
              படைக்க வைத்த மொழியாம்
வள்ளுவன் இளங்கோ பாரதி
              வளர்த்து வந்த மொழியாம்

கள்ளம் கபடம் அற்ற
               களிப்பு நிறைந்த மொழியாம்
உள்ளம் கொள்ளை கொண்ட
                உயர்ந்த நம்தமிழ் மொழியாம்


21. மேகம் தந்த மழை


                 மேகம் தந்த மழை




 
மழையே மழையே வாராயோ
             மண்ணை நனைக்க வாராயோ
உழைப்பை உயிராய் எண்ணிடும்
              உழவர் வாழ வாராயோ

நிலத்தடி நீரை உறிஞ்சி
             நித்தம் குடிக்கும் மேகமே
பலத்தக் காற்றின் உதவியால்
              பலதுளி மழையாய் வாராயோ

ஆறு ஏரி குளமென
              அலைந்து திரியும் மேகமே
ஊரு உலகம் வாழ்ந்திட
               உயர்ந்த மழையாய் வாராயோ

பாவிய விதைகள் முளைத்திட
               பயிர்கள் யாவும் செழித்திட
ஆவியாய் அலையும் மேகமே
               அழகு மழையாய் வாராயோ

20. ஆடு

                          ஆடு

ஆடே ஆடே அங்கேபார்
           அழகு ஆடே அங்கேபார்
காடே நிறைந்த செடிகொடிகள்
             காட்சி தந்திடும் அழகைப்பார்

வீட்டை விட்டு வந்திங்கு
              விருப்ப மோடு விருந்துண்ண
காட்டு அன்னை வளர்த்திட்ட
               காட்டுக் கோடியை அங்கேபார்

அம்மா என்று குரலெடுத்து
               ஆசை யோடு ஓடிவரும்
தம்பி வளர்த்த ஆடுகளை
                தாயாய் அணைக்கும் அழகைப்பார்

வீட்டில் உள்ளோர் உன்பாலை
                விரும்பி குடித்து மகிழ்ந்திட
கூட்டத் தோடு வந்திங்கு
                  கூடிக் கறக்கும் அழகைப்பார்

19. சிங்கப்பூர்

                      சிங்கப்பூர்

நம்ம ஊரு சிங்கப்பூர்
          நாளும் வளரும் சிங்கப்பூர்
சும்மா யாரும் இல்லாமல்
          சுகமாய் வாழும் சிங்கப்பூர்

நேற்று வரைக்கும் நம்முன்னோர்
            நிலத்தில் சிந்திய வியர்வையில்
நாற்று கொடுக்கும் மகசூலாய்
             நலமாய் விளைந்த சிங்கப்பூர்

எல்லா நாட்டு ஊழியரும்
              இங்கு வந்து பணிசெய்ய
நல்ல நல்ல திட்டங்கள்
               நாளும் தீட்டும் சிங்கப்பூர்

வார்த்து எடுத்த வடிவாக
               வானை முட்டும் கட்டிடங்கள்
பார்த்து மகிழ இதுபோல
                பாங்காய் அமைந்த  சிங்கப்பூர்

18. நம் நாடு

                           நம் நாடு

உடலை வறுத்தி உழைத்திடும்
            உன்னத தொழில்கள் பலவிருக்க
கடலை முதலாய் கொண்டிங்கு
            கடமை யாற்றும் நம்நாடு

சிறிய தீவுக் கூட்டத்தை
             சிறந்த சுற்றுத் தளமாக்கி
அறிவு நிறைந்த மக்களோடு
              அழகாய் அமைந்த நம்நாடு

மீன்பிடித் தீவாம் நம்நாட்டை
             மீட்டு எடுத்து வளர்த்திட்டு
தீண்டும் இன்பச் சொர்க்கத்தை
             தினமும் படைக்கும் நம்நாடு

சிங்கை என்னும் நம்நாட்டில்
             சிறப்பாய் வாழும் மக்களினம்
இங்கு வந்து உழைப்போர்க்கு
              இனிதே நட்பு காட்டிடுவர்

17. பள்ளி

                           பள்ளி

பள்ளிக் கூடம் போகலாம்
            பாடம் தன்னைப் படிக்கலாம்
துள்ளி ஓடும் வயதிலே
            துன்ப மின்றி வாழலாம்

பரந்து விரிந்தப் பள்ளியில் 
            பார்க்கும் இடத்து அருகிலே 
மரங்கள் சூழ்ந்து நிற்குமே 
             மலர்கள் மணத்தை வீசுமே 

கல்வி கற்கும் வேளையில் 
             கற்றுக் கொடுத்த ஆசானை 
நல்ல எண்ணம் கொண்டுமே 
              நாளும் தொழுது வணங்கலாம் 

பட்டப் படிப்பு யாவையும் 
              படித்து வந்த போதிலும்
கட்டு ஒழுங்கு மீறாமல்
               கவன மோடு இருக்கலாம்


16. நாய்

                        நாய்

தாயைப் போல அன்பை
             தனக்கு ஊட்டும் இடத்தில்
சேயைப் போல என்றும்
             சிறப்பு செய்யும் தோழன்

நாயைப் போல நண்பன்
             நமக்கு கிடைத்து விட்டால்
வாய்மை யோடு எங்கும்
             வளர்ச்சி கண்டு வருவோம்

வீட்டைக் காக்க எண்ணி
              விரும்பி வளர்க்கும் நாயை
நாட்டில் உள்ள அனைவரும்
              நட்பு கொள்ள வேண்டும்

குழந்தை போலத் துள்ளி
             குதித்து ஆடும் நாயை
பழமும் சோறும் தந்து
              பாது காக்க வேண்டும்

15. தொடர்வண்டி

                     தொடர்வண்டி

வருது வருது தொடர்வண்டி
           வால்போல் நீண்ட தொடர்வண்டி
ஒருமைப் பாட்டைச் சொல்லியே 
            ஓடும் எங்கள் தொடர்வண்டி 

நாட்டில் உள்ள அனைவரும் 
             நலமாய் பயணம் செய்திட 
வீட்டைப் போல எண்ணியே 
             விரும்பி ஏறும் தொடர்வண்டி
 
சிறியோர் பெரியோர் யாவரும்
              சிரித்துப் பேசி மகிழ்ந்திட
உரிய இடத்தில சேர்த்திடும்
               உண்மை நண்பன் தொடர்வண்டி

14. வானம்

                                        வானம்

வானம் நீல வானம்
          வனப்பு மிக்க  வானம்
நானும் நண்ப ரோடு
           நாளும் பார்க்கும் வானம் 

 சின்ன சின்ன விண்மீன்
            சிறப்பாய் ஒளிரும் வானம்
வெண்மை வண்ண நிலவும்
           வீற்றி ருக்கும் வானம்

காலை மாலை என்று
           களைந்து செல்லும் வானம்
நாளை நமது என்று
            நம்பச் சொல்லும் வானம்

13. கடற்கரை

                                  கடற்கரை

கடற்கரை நல்ல கடற்கரை
            காற்று வீசும் கடற்கரை
தொடர்ந்து வரும் அலைகளை
             தடுத்து நிறுத்தும் கடற்கரை

கப்பல் படகு நகர்வதை
            கண்டு களிக்கும் கடற்கரை
அப்பால் தெரியும் யாவையும்
            அழகாய் காட்டும் கடற்கரை

மாலை நேரப் பொழுதெல்லாம் 
             மக்கள் கூடும் கடற்கரை
காலை கையை ஆட்டி 
              களைப்பு போக்கும் கடற்கரை

12. விமானம்

                                          விமானம்

வின்னில் பறக்கும் விமானம்
           விரைந்து செல்லும் விமானம்
கண்ணில் காணும் போதிலே
            காற்றாய் பறக்கும் விமானம்

உலகம் எங்கும் சென்றிட
            உதவும் நல்ல விமானம்
நிலவைப் போல உயரவே
             நித்தம் பறக்கும் விமானம்

சிங்கை நாட்டு விமானம்
              சிறப்பு வாய்ந்த விமானம்
எங்கள் நாட்டைப் போலவே
              என்றும் உயர்ந்த விமானம்

 



11. தமிழைப் படி

                               தமிழைப் படி

தம்பி தம்பி இங்கேவா 
          தமிழைப் படிக்க இங்கேவா 
நம்மைப் போன்ற குழந்தைகளை 
           நயந்து கூட்டி இங்கேவா 

அமுதம் போன்ற நம்மொழியை 
           அருந்தி மகிழ இங்கேவா 
நமது நண்பர் பலரோடு 
            நாளும் பருக ஓடிவா 

அன்பு பண்பு பாசத்தை 
            அனைவ ரோடு  பகிர்ந்திட 
முன்னோர் நமக்கு தந்திட்ட 
             முத்துத் தமிழைப் படிக்கவா

10. அப்பா

                                        அப்பா

அப்பா எங்கள் அப்பா
          அருமை யான அப்பா
தப்பு செய்யும் என்னை
           தடுத்து நிறுத்தும் அப்பா

உலகில் உள்ள யாவையும்
           உணரச் செய்யும் அப்பா
பலரின் உயர்வைச் சொல்லி
           படம் நடத்தும் அப்பா
  
உள்ளம் கேட்கும் அன்பை
            ஊட்டி வளர்த்த அப்பா
பள்ளி கூட்டி சென்று
            படிக்க வைக்கும் அப்பா


9. அம்மா

                                   அம்மா

அம்மா அம்மா அம்மா
          அன்பு கொண்ட அம்மா
தம்பி தங்கை என்னை
           தழுவி வளர்த்த அம்மா

கண்ணே கரும்பே என்று
           கட்டிக் கொஞ்சும் அம்மா
பொன்னே பூவே என்று
            போற்றி புகழும் அம்மா

பழக்க வழக்கத் தோடு
            பண்பைச் சொல்லும் அம்மா
ஒழுக்கத் தோடு என்னை
            உயர்த்தி வளர்க்கும் அம்மா

8. கொக்கு

                                     கொக்கு

 கொக்கு வெள்ளை  கொக்கு
           குளத்தில் இருக்கும்  கொக்கு
பக்கம் வந்த மீனை
           பறந்து பிடிக்கும்  கொக்கு

நீண்ட காலைக் கொண்டு
           நிலத்தில் நிற்கும்  கொக்கு
தூண்டில் போன்ற அலகால்
            துன்பம் கலையும்  கொக்கு

பள்ளிப் பிள்ளை அனைவரும்
             பார்த்து மகிழும்  கொக்கு
வெள்ளை நிறத்துக்  கொக்கு
              வேண்டும் அந்த  கொக்கு



7. குருவி

                                குருவி

சின்ன சின்னக் குருவி
            சிறகு விரிக்கும் குருவி
தின்ன அரிசி சோளம்
             தெருவில் தேடும் குருவி

வீட்டில் இருந்து பறந்து
              விரைந்து செல்லும் குருவி
தோட்டம் துறவு எங்கும்
               தொடர்ந்து சுற்றும் குருவி

ஆழ மரத்துக் கூட்டில்
                அழகாய் வாழும் குருவி
தோழர் பலரும் சேர்ந்து
                 துரத்திப் பிடிக்கும் குருவி

6. பொம்மை

                              பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை
           பொட்டு வைத்தப் பொம்மை
அம்மா எனக்கு தந்த
            அழகு நிறைந்த பொம்மை

பையப் பைய நகர்ந்து
            பக்கம் வந்திடும் பொம்மை
கையைக் காலை ஆட்டி
            களிப்பு தந்திடும் பொம்மை

தம்பி தங்கை யோடு
            தத்தி ஆடும் பொம்மை
தும்பி போல எங்கும்
            சுத்தி ஓடும் பொம்மை

5. பூனை

                                  பூனை

பூனை பூனை பூனைபார்
          புலியைப் போன்ற பூனைபார்
பானை உருட்டும் எலியைத்தான்
          பாய்ந்து பிடிக்கும் பூனைபார்

காலை மாலை வேளையில்
          காலை சுற்றும் பூனைபார்
பாலை கொண்டு வைத்தவுடன்
           பருகி மகிழும் பூனைபார்

பாட்டி அன்பாய் வளர்க்கின்ற
           பழுப்பு வண்ணப் பூனைபார்
வீட்டில் உள்ள அனைவரும்
           விரும்பி வளர்க்கும் பூனைபார்

4. கிளி

                            கிளி

கிளியே கிளியே வாவா
         கீச்சுக் குரலைத் தாதா
தெளிவு நிறைந்த பேச்சால் 
         திரும்பச் சொல்ல வாவா

கோவைப் பழத்தின் நிறத்தை 
          கொக்கி  அலகில் கொண்டு 
தேவை நிறைந்த தமிழில் 
           திகட்டி பேச வாவா 

கிள்ளை என்ற பெயரில் 
           கிறங்க வைத்த கிளியே 
பிள்ளை மொழியில் பேச 
            பெருமை கொண்டு வாவா 

3.குயில்

                     
                      குயில்

குயிலே குயிலே வாராய் 
      கூவும் இசையைத் தாராய்
தயிறு கலந்த உணவை 
       தருவேன் இங்கு  வாராய் 

காலை நேரப் பொழுதில் 
       கனிவாய் கூவும் குயிலே 
சோலை எங்கும் சுற்றி 
        சுகமாய் பாட வாராய் 

மதிய நேரப் பொழுதில் 
        மாற்று இனத்துக் கூட்டில் 
மெதுவாய் சென்று நீயும் 
        முட்டை இட்டு வாராய்  

2. மயில்

மயிலே மயிலே வா வா!
        மயக்கும் இறகை தா தா!
உயிராய் மதிக்கும் நாட்டுக்கு
        உயர்வு தரவே வா வா!

மேகச் சாரல் கண்டு
          மேனி சிலிர்க்கும் மயிலே 
தேகம் எல்லாம் கொண்ட
           தோகை விரித்தே வா வா!

பண்டைத் தமிழர் வாழ்வில்
            பங்கு கொண்ட மயிலே
கொண்டை அழகைக் காட்டி
            கொஞ்சி ஆட வா வா!


1. குட்டி பாப்பா





குட்டி குட்டி பாப்பா
         குறும்பு செய்யும் பாப்பா
எட்டி நின்று என்னை
         ஏங்க வைக்கும் பாப்பா

பட்டுப் போன்ற கன்னம்
        படைத்து வந்த பாப்பா
தொட்டு விட்டு என்னை
         தொலைவில் செல்லும் பாப்பா

சும்மா சும்மா பேசி
         துள்ளி குதிக்கும் பாப்பா
அம்மா அப்பா யாவரும்
         அன்பு செலுத்தும் பாப்பா