உருவம்
தீய்ந்த பிஞ்சுகள்
கோவில்கள்
நிறைந்த ஊராம்
கும்பகோண மென்னும் பேராம்
தாவிநாம் எட்டு வைத்தால்
சரசுவதி பள்ளிக் கூடம்
கூவியழும் கூக்குரல் கேட்டுக்
கூடுகின்றார் மக்கள் எல்லாம்
கேவியழும் சத்தம் கூடக்
கெடுவைத்தும் ஓய வில்லை
பள்ளிக் கூடம் தீப்பற்ற
பதறிப் பிள்ளை களோடிவர
கள்ளிக் காட்டில் விட்டதுபோல்
கண்கள் இரண்டும் அலைமோத
நல்ல பாதை இல்லாது
நலிந்த வழியில் மாட்டிவிட
கல்வி கற்கப் போனபிள்ளை
கருகித் தானே போனதைய்யா
உதவி செய்ய யாருமற்று
உழன்று துடித்த பிஞ்சுகளைப்
பதறி ஓடி தூக்கிறப்போ
பாவம் உயிரும் போனதைய்யா
கதறச் செய்யும் இந்நிகழ்வால்
காண்போர் நெஞ்சை உலுக்குதைய்யா
உதறல் எடுக்கும் இச்செய்தி
உலகை வாட்டி வதைத்தைய்யா
அள்ளிக் கொஞ்சி ஆர்பரித்து
அன்பு கொண்டு சேர்த்தணைத்து
உள்ளம் மகிழ வளர்த்தபிள்ளை
உருவம் தீய்ந்து போனதைய்யா
பள்ளிக் கூடம் போனபிள்ளை
பரித வித்து செத்தகாட்சி
சுள்ளிக் குவித்து எரித்ததுபோல்
சோகம் நெஞ்சை வாட்டுதைய்யா
பள்ளி போறே னென்றுசொல்லிப்
பாடப் பைதூக் கிச்செல்லும்
கள்ள மில்லாச் செல்வத்தைக்
கட்டி யணைத்து வழியனுப்ப
துள்ளி ஓடும் அழகுபிள்ளை
தீயில் வெந்து மடிந்தகாட்சி
துள்ளத் துடிக்க வைத்தென்னை
துவண்டு போகச் செய்ததைய்யா
கிள்ளிப் பழகும் குறும்புகளைக்
கீர்த்தி பொங்க பேசிடும்தன்
கள்ள மில்லாப் புன்சிரிப்பில்
கவலை மறக்கச் செய்தபிள்ளை
கொள்ளி வாய்க்கு இறையாகக்
கூட்டுப் புழுவாய் விழுந்தகாட்சி
உள்ளம் உறையச் செய்ததிப்போ
உருவ மற்றுப் போனதைய்யா
பொன். கணேசுகுமார்
வெள்ளிக்குறிச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக