புதன், 7 மார்ச், 2018


உளமாற வாழ்த்துப் பாடுகிறோம்


அன்பு என்ற ஒன்றையே
ஆர மாகப் பூண்டவர்
பண்பும் பரிவும் காட்டியே
பழகும் தன்மை கொண்டவர்


ஆற்ற லோடு அறிவையும்
அழகுத் தமிழின் புலமையும்
ஆற்றின் ஒழுக்காய்க் கொண்டவர்
அமர கீதா என்பவர்


கன்னல் மொழியாம் தமிழையே
கவச மாக அணிந்தவர்
எண்ணும் எண்ணக் கருத்தையே
எடுத்து இயம்பும் வல்லவர்


எங்கள் பள்ளி யூனிட்டி
ஏற்றம் பெற்று உயரவே
பங்க மில்லா உழைப்பினைப்
      பணியாய்க் கொண்டு உழைத்தவர்


தாய்மொழி கற்பிக்கும் தகையோரில்
      தமிழைச் சார்ந்து வழிநடத்தி
தாய்போல் விளங்கும் பண்பாளர்
      தங்கமனம் கொண்ட நம்கீதா


தாய்மொழிப் பாடத்தில் ஒன்றாகத்
      தமிழ்மொழி படிக்கும் மாணவர்க்கு
வாய்மொழி யோடு இணையத்தின்
      வளத்தையும் இணைத்தே கற்பிப்பார்


இணையில்லா இந்திய இசைகளை
      இன்றைய மாணவரும் இசைத்திட
இணைப்பாட வகுப்பில் ஒன்றாக
      இணைத்திடச் செய்தார் நம்கீதா


எத்தனைச் செயல்கள் செய்தாலும்
      இன்முகம் கொண்டு செய்வதால்
அத்தனைச் செயல்களும் வெற்றியாய்
அமைந்திடச் செய்வார் நம்கீதா


புதியவர் பழையவர் பாராது
      புன்னகை யோடு பழகியே
புத்து ணர்ச்சி தருகின்ற
      புதுமைப் பெண்தான் நம்கீதா


அவனி போற்றும் தமிழ்போல்
அமர கீதா வாழவே
உவகை கொண்ட புன்னகையால்
உளமாற வாழ்த்துப் பாடுகிறோம்


                 புத்தகம்

புத்தகம் நல்ல புத்தகம்
      புதிய புதிய புத்தகம்
நித்தம் வந்து குவியுதாம்
      நம்ம ஊரு கடையிலே

கருத்து விளக்கக் கதைகளும்
      கடவுள் சார்ந்த கதைகளும்
பொறுப்பாய் தன்னுள் தாங்கியே
      பதித்து வந்தப் புத்தகம்

கற்றுக் கொடுக்கும் கல்வியும்
கருணை கொண்ட நீதியும்
பெற்றுத் தந்த புத்தகம்
      பெருமை சொல்லும் புத்தகம்

அம்மா அப்பா இருவரும்
      ஆசை யோடு வாங்கியே
நமக்குக் கொடுக்கும் புத்தகம்
      நல்ல தமிழ்ப் புத்தகம்

சிறுவர் முதலாய் பெரியவர்
      சிறப்பாய்ப் படிக்கும் புத்தகம்
அருமை யான முறையிலே
      அடுக்கி யுள்ள புத்தகம்

பள்ளிப் பிள்ளைகள் யாவரும்
      படித்துப் பயிற்சி செய்திட
நல்ல நல்ல புத்தகம்
      நாளும் கிடைக்கும் வாருங்கள்


பள்ளி

பள்ளிக் கூடம் போகலாம்
      பாடம் தன்னைப் படிக்கலாம்
துள்ளி ஓடும் வயதிலே
      துன்ப மின்றி வாழலாம்

பரந்து விரிந்த பள்ளியில்
      பார்க்கும் இடத்து அருகிலே
மரங்கள் சூழ்ந்து நிற்குமே
      மலர்கள் மணத்தை வீசுமே
     
சின்னஞ் சிறுவர் பலருமே
      சேர்ந்து படிக்கும் பள்ளியில்
அண்ணன் தம்பி போலவே
      அன்பாய் பழகிப் படிப்போமே

கன்னித் தமிழைக் கற்கவும்
      கலைகள் யாவும் அறியவும்
எண்ணம் கொண்டு நாளுமே
      ஏற்ற மோடு படிக்கலாம்
     
கல்வி கற்கும் வேளையில்
      கற்றுக் கொடுத்த ஆசானை
நல்ல எண்ணம் கொண்டுமே
      நாளும் தொழுது வணங்கலாம்

பட்டப் படிப்பு யாவையும்
      படித்து வந்த போதிலும்
கட்டு ஒழுங்கு மீறாமல்
      கவன மோடு இருக்கலாம்


நட்பு

நட்பு நல்ல நட்பு
      நாட றிந்த நட்பு
நட்பு இல்லா வாழ்வை
      நலியச் செய்யும் நட்பு

உயர்வு தாழ்வு இன்றி
      உயிராய்ப் பழகும் நட்பு
அயர்வு கொண்ட போதும்
      அழிந்தி டாத நட்பு

கள்ளம் கபடம் இன்றி
      கனிவாய்ப் பழகும் நட்பு
உள்ளம் மகிழத் தானே
      உண்மை பேசும் நட்பு

இன்பம் வந்த போது
      இனிமை கொள்ளும் நட்பு
துன்பம் வந்திட் டாலும் 
      துவண்டி டாத நட்பு

பட்டி தொட்டி எங்கும்
      பரந்து விரிந்த நட்பு
கட்டித் தங்கம் போல
      கறையில் லாத நட்பு

காற்று வீசும் திசையாய்
      கலந்து இருக்கும் நட்பு
நேற்று இன்று என்றும்
      நேர்மை குன்றா நட்பு


தமிழ்

எங்கள் பாப்பா எழிலம்மா
             ஏற்றம் பெறவே வாயம்மா
தங்கப் புதையல் மொழியம்மா
            தரணி போற்றும் தமிழம்மா
சிங்கை நாட்டைப் பாரம்மா
            சிறப்பு வாய்ந்த நாடம்மா
எங்கள் நாட்டைப் போலவே
            எங்கும் உண்டோ கூறம்மா