புதன், 7 மார்ச், 2018


உளமாற வாழ்த்துப் பாடுகிறோம்


அன்பு என்ற ஒன்றையே
ஆர மாகப் பூண்டவர்
பண்பும் பரிவும் காட்டியே
பழகும் தன்மை கொண்டவர்


ஆற்ற லோடு அறிவையும்
அழகுத் தமிழின் புலமையும்
ஆற்றின் ஒழுக்காய்க் கொண்டவர்
அமர கீதா என்பவர்


கன்னல் மொழியாம் தமிழையே
கவச மாக அணிந்தவர்
எண்ணும் எண்ணக் கருத்தையே
எடுத்து இயம்பும் வல்லவர்


எங்கள் பள்ளி யூனிட்டி
ஏற்றம் பெற்று உயரவே
பங்க மில்லா உழைப்பினைப்
      பணியாய்க் கொண்டு உழைத்தவர்


தாய்மொழி கற்பிக்கும் தகையோரில்
      தமிழைச் சார்ந்து வழிநடத்தி
தாய்போல் விளங்கும் பண்பாளர்
      தங்கமனம் கொண்ட நம்கீதா


தாய்மொழிப் பாடத்தில் ஒன்றாகத்
      தமிழ்மொழி படிக்கும் மாணவர்க்கு
வாய்மொழி யோடு இணையத்தின்
      வளத்தையும் இணைத்தே கற்பிப்பார்


இணையில்லா இந்திய இசைகளை
      இன்றைய மாணவரும் இசைத்திட
இணைப்பாட வகுப்பில் ஒன்றாக
      இணைத்திடச் செய்தார் நம்கீதா


எத்தனைச் செயல்கள் செய்தாலும்
      இன்முகம் கொண்டு செய்வதால்
அத்தனைச் செயல்களும் வெற்றியாய்
அமைந்திடச் செய்வார் நம்கீதா


புதியவர் பழையவர் பாராது
      புன்னகை யோடு பழகியே
புத்து ணர்ச்சி தருகின்ற
      புதுமைப் பெண்தான் நம்கீதா


அவனி போற்றும் தமிழ்போல்
அமர கீதா வாழவே
உவகை கொண்ட புன்னகையால்
உளமாற வாழ்த்துப் பாடுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக