நாள் : 26 (26/04/2021)
தலைப்பு : தனிமையான சாலைகள்
முள்மரங்கள் சூழ்ந்திருக்கும்
மூன்றுமைல் தொலைவிருக்கும்
கள்ளிமலர்ச் செடிகளூடே
காடாக
வளர்ந்திருக்கும்
குள்ளநரி மறைந்திருக்கும்
குறுமுயலும் குடியிருக்கும்
பள்ளமேடு குண்டுகுழிப்
பாதையிலே
நிறைந்திருக்கும்
பள்ளிசென்று படிப்பதற்கும்
பக்கத்தூர் செல்வதற்கும்
துள்ளியாடும் மனத்தோடு
தொலைதூரம்
செல்வதற்கும்
வெள்ளைநிற சாலைகள்போல்
வீற்றிருக்கும் காட்டுவழி
உள்ளத்தில் பயமூட்டும்
ஊருக்கோ
வழிகாட்டும்
அணியணியாய் மரம்வளர்ந்து
அழகழகாய்க் காய்த்திருக்கும்
கனியுண்டு களித்திடவும்
களைப்புதனைப் போக்கிடவும்
அணிலோடு அழகுபட்சி
அத்தனையும் அங்குவரும்
இனிமையான குரலெழுப்பி
இணையினையும் குசிப்படுத்தும்
காலத்தின் கோலத்தால்
காடெல்லாம் வீடாக
வேலமரக் காடுகளும்
வெற்றிடமாய்க் காட்சிதர
ஆலமரம் அரசமரம்
அத்துனையும் அழித்தொளித்து
நாலுவழிச் சாலைகளாய்
நெடுந்தூரம் நீண்டிருக்கு
இனிமையான பயணங்கள்
இன்றெமக்குக் கிடைத்திடவே
பிணிபோக்கும் மரங்களையும்
பிற்போக்காய் வெட்டிவிட்டு
நனிச்சாலை யமைத்தாலும்
நலமான பிடிப்பின்றித்
தனிமையான சாலைகளாய்த்
தடம்போலே விரிந்திருக்கும்
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக