நாள் : 21 (21/04/2021)
தலைப்பு : மேகத்தில் ஒளியும் நாணம்
பெட்டகத்தில் பூட்டிவைத்த அரும்பொருளைப்
பெருநாளில்
திறந்துவைத்துப் பூசிப்பதுபோல்
பட்டுவண்ண நிறம்தாங்கிப் பால்நிலவாய்ப்
பொழிகின்ற
பூமகளே பௌர்ணமியே
எட்டாத உயரத்தில் இருந்தாலும்
எழிலுருவாய்
ஒளிர்கின்ற ஒளிவிளக்கே
வட்டவடி வானவளே வான்மகளே
வெண்மேகம்
சூழ்கின்ற வெண்ணிலவே
ஊரில்லா உழவில்லா நிலத்தினிலும்
உன்னொளியை
ஒளிரவிட்டு உலவிடவும்
பேரில்லாப் பிறப்பில்லா பூமியிலும்
பொன்னொளியால்
பூத்தூவிப் பரவிடவும்
பூரிப்பால் பொங்கிவரும் பொலிவான
புன்னகையில்
பொழுதுசாய வந்தவளே
சூரியனின் இளங்காலை வரவுகண்டு
சுந்தரியே
சொக்கித்தான் போனதெங்கே
முதிர்ந்திட்ட முன்னிரவில் முழுவட்ட
முழுநிலவாய்
முந்திவந்து சொலித்தாலும்
கதிரவனின் கரமோங்கும் காலையினைக்
கண்கொண்டு
பார்ப்பதற்கு நாணப்பட்டு
உதிராமல் உறங்காமல் ஓடியோடி
ஒளிவெள்ள
ஓடையிலே இளைப்பாறி
சதிராடும் கார்வண்ண மேகத்தில்
சாயுங்கா லம்வரையில்
ஒளிந்திருப்பாய்
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக