நாள் : 30 (30/04/2021)
தலைப்பு : நாம் தொலைந்ததெல்லாம் தொலைக்காட்சியில்தான்
தொலைதூரச் செய்திகளும்
தூரதேசச் செய்திகளும்
கலைநுட்பக் காட்சிகளும்
கண்களுக்கு விருந்தாக
அலைவரிசை அர்ப்பணிப்பில்
ஆங்காங்கே பரவிடவே
தொலைக்காட்சிப் பெட்டிமூலம்
துல்லியமாய்க் கண்டுணர்ந்தோம்
ஆரம்ப அலைவரிசை
அரசுதந்த அலைவரிசை
நேரத்தைச் சுருக்குகின்ற
நிழலுருவ காட்சிகளும்
பேரங்கள் பேசாத
பெரியபடம் சிறியபடம்
வாரங்கள் தவறாது
வந்ததெங்கள் வீட்டிற்கே
அலைவரிசை ஆர்ப்பரிப்பில்
அங்குமிங்கும் அசைவின்றிச்
சிலைபோன்ற சித்திரமாய்ச்
சுவற்றோரம் சாய்ந்திருந்தோம்
உலையின்றி உணவின்றி
ஒளிபரப்பைப் பார்ப்பதற்குச்
தொலைந்துபோன நேரமெல்லாம்
தேடினாலும் திரும்பிடாது
தனியார்தம் அலைவரிசை
தாராளம் காட்டிடவே
சினிமாவை மிஞ்சுகின்ற
சீரியநெடுந் தொடர்களையும்
தனிமனிதக் கருத்துகளில்
தரமான கருத்தினையும்
இனிதான நிகழ்ச்சிகளாய்
இன்றளவும் தருகின்றார்
கோர்த்தெடுத்த வார்த்தையிலே
குறையில்லா கருத்துகளைப்
பார்ப்பதற்கும் கேட்பதற்கும்
பட்டிமன்ற விவாதங்கள்
வார்த்தெடுத்த வகைகளிலே
வண்ணவண்ணச் சித்திரத்தால்
சீர்பட்டுச் சிறப்பதற்குச்
சிறுவருக்கும் சிறப்புரைகள்
ஏர்பிடிக்கும் உழைக்கின்ற
ஏழைமக்கள் வாழ்வினையும்
கார்கால மேகத்தின்
காற்றழுத்த சூழலையும்
ஊர்புறத்துச் செய்திகளாய்
உலகோரும் அறிந்திடவே
கூர்தீட்டிக் கொடுக்கின்ற
குறையில்லா நிகழ்ச்சிகளும்
கலைகளெனக் கொண்டுவந்து
கண்ணுக்குக் காட்சியாக்கும்
விலையில்லா நேரத்தை
வீணின்றி விரையமாக்கும்
தொலைக்காட்சிப் பெட்டியால்தான்
தொன்மையான மரபுகளும்
தொலைதூரம் சென்றதென்று
தொடுக்கின்றார் வாதமின்று
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக