வெள்ளி, 4 ஜூன், 2021

நாள் : 22 (22/04/2021)

தலைப்பு : ஆதலால் கடந்து செல்வீர்

 

முகத்தினில் முறுவல் காட்டி

மனத்தினில் வஞ்சம் வைத்து

முகத்துதி செய்யும் கூட்டம்

முனைப்புடன் முன்னே சென்று

சுகத்தினை வளமாய்ப் பெற்றும்

சுமையெனக் கொண்டே வாழ்வார்

அகத்தினில் மகிழ்வ தில்லை

ஆதலால் கடந்து செல்வீர்

 

குழந்தையின் மழலை சிரிப்பில்

குதுகலம் கொள்ளார் முன்னே

குழலிசை மீட்டி னாலும்

குறைபல சொல்லி வாழ்வார்

பழந்தமிழ் பெருமை தன்னை

பயின்றவர் உணர்ந்த போதும் 

அழகுடன் மொழிவ துமில்லை

ஆதலால் கடந்து செல்வீர்

 

அகத்தினில் அன்பு கொண்டு

அமைதியா யிருப்போ ரெல்லாம்

சகத்தினில் வாழும் மனிதர்

சமநிலை யென்ற போதும்

அகவயப் பார்வை யின்றி

அடுத்தவர் உயர்வை யெண்ணி

அகந்தையும் கொண்டே அலைவார்

ஆதலால் கடந்து செல்வீர்

 

வறுமையில் வாழும் எளியோர்

      வளம்பெற வேண்டி யுழைத்தும்

பொறுப்புடன் நடந்து கொள்ளாப்

      போக்கினைக் கொண்டோர்க் கெதிராய்ப்

பொறுமையும் ஒருநாள் மெல்லப்

      பொங்கிடப் பொசுங்கிப் போகும்

அறத்தினை அறிந்தோர் வாழ்வர்

      ஆதலால் கடந்து செல்வீர்

 

கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக