நாள் : 19 (19/04/2021)
தலைப்பு : சத்தமில்லாமல் நகர்ந்து செல்லும் நான்
கண்ணும் கண்ணும் நோக்கிடவே
காதல் நெஞ்சில் குடியேறும்
வண்ண வண்ணக் கனவுகளும்
வந்து மனத்தில் விடைதேடும்
விண்ணில் மீனும் விரைந்தோடி
வீதி நோக்கி ஒளிர்ந்துவிடும்
மண்ணும் மலரும் மணத்திடவே
மௌன யுத்தம் தொடங்கிவிடும்
சத்த மேதும் இல்லாது
சபல மெதுவும்
கொள்ளாது
கத்தி போன்ற கண்கொண்டு
காதல் களத்தில்
நிற்கையிலே
முத்துப் பல்லின் முறுவலிலே
முன்னே
யிருப்போர் முகம்நோக்கி
யுத்த மொன்று நடக்குதுபார்
ஊமை மொழியில்
பேசுதுபார்
புத்தம் புதிய புரட்சிகளும்
புகுந்து நெஞ்சில்
போராடும்
சத்த மில்லா யுத்தம்தான்
சபையோர் நடுவே நடந்தாலும்
கத்தும் குரலில் அழைத்தாலும்
காத தூரம் சென்றவர்போல்
முத்துப் பல்லால் இதழ்கடித்து
முன்னே சென்று முகம்பார்க்க
மானும் மயிலும் விளையாடும்
மாலை நேரப்
பொழுதினிலே
தேனும் பாலும் திகட்டிவிடும்
தேவி யுந்தன்
பார்வையிலே
நானும் சத்த மேதுமின்றி
நகர்ந்து
செல்லும் வேளையிலே
காணும் காட்சி யாவிலுமே
கவனம் செலுத்த
மறந்திடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக