நாள் : 10 (10/04/2021)
தலைப்பு : நதியே!
நதியே!
நறுமலை தன்னில் மழையெனப் பொழிய
நதியெனப் பாய்ந்து
புவியினில் வந்தாய்
நறுமுகை மலரும் மிதந்திட தவழ்ந்து
நானில மெல்லாம் செழித்திடப்
புகுந்தாய்க்
குறுமணல் கூட்டிக் குளங்களை நிறைத்து
குன்றென வளத்தைக்
கழனியில் விதைத்தாய்
உறுதவப் பெண்ணாய் உலகினி லோடி
உழைத்திடும் மக்கள்
உயர்ந்திடச் செய்தாய்
திருவருள் கொண்ட தீர்த்தமாய்ப் பாய்ந்து
திக்குக ளெட்டும்
திளைத்திடச் செய்தாய்
கருவறை வாழும் கடவுளா யுன்னைக்
கண்டிட வைத்துத்
தொழுதிடச் செய்தாய்
பெருமணல் பெருகிப்
பாறைகள் மறைய
புல்வெளி போன்று
புதர்களை வளர்த்தாய்
பெருவெளி யெங்கும் வெற்றிடம் மூட
பல்பொருள் கூட்டிப்
பரப்பிடச் செய்தாய்
நானிலம் வாழ்வோர் வளமுடன் வாழ
நன்மைகள் செய்து
நலம்பல புரிந்தாய்
தேனினும் இனிய பனியுடன் கூடி
தென்திசை நோக்கித்
திருத்தளம் புகுந்தாய்
வானிலை கண்டு வயல்தனை உழுகார்
வளம்பெற வேண்டி விரைந்துநீ
வந்தாய்
மேனிலை வாழ்வை மனதினில் வைத்து
மருகிடும் மக்கள்
மகிழ்ந்திடச் செய்தாய்
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக