சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 3 (03/04/2021)

தலைப்பு : தாள்

 

நனித்தமிழர் வாழ்கின்ற சிங்கப்பூர் தன்னில்

பனிபோன்ற உள்ளமதைக் கொண்டோர் - இனிதான

செந்தமிழைச் சீராட்டிப் பாராட்டும் இந்நாளில்

முந்திப் பணித்திடுவேன்  தாள்

 

அன்னைத் தமிழை அரியனை ஏற்றியெம்

இன்பத் தமிழுயர் மாண்புகளை - மண்ணில்

புகழ்பெறச் செய்து மறைந்தோர் நினைவை

அகத்திலேந்தித் தாள்தொழு வேன்

 

சின்னஞ் சிறுவரும் சிந்தையில் மூத்தோரும்

கன்னித் தமிழ்போற்றும் காலத்தில் - முன்னின்று

துய்த்திடவே நல்ல நிகழ்வுகளை நாளெல்லாம்

செய்வோர்தம் தாள்தொழு வேன்

 

பண்பாட்டில் பேர்பெற்ற பைந்தமிழர் பேசுகின்ற

கன்னல் தமிழின் பெருமையினை - முன்னெடுத்துச்

செல்கின்ற செந்தமிழ்ப் பேராளர் தன்னையெம்

உள்ளத்தால் தாள்போற்று வேன்

 

தொடக்கநிலை மாணவரும் பங்குபெற்று வெல்லத்

தொடங்கும் தமிழ்விழாவைப் பாங்காய் - நடத்துகின்ற

ஆற்றலோடு நல்லவறமும் கொண்டோர் புகழினையே

போற்றிநான் தாள்பணி வேன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக