நாள் : 8 (08/04/2021)
தலைப்பு : குக்கூ
குக்கூ
சிரம்போ லிருந்து சீராட்டும்
சின்னஞ்
சிறிய கிராமத்தில்
அரண்போல் உயர்ந்து வளர்ந்திட்ட
ஆலம் விழுதின்
கிளைகளிலே
வரமாய் வந்து அமர்கின்ற
வண்ணக்
குயிலின் கூட்டத்தில்
கரமாய்ப் பற்றி விளயாடும்
காட்டு
அணிலின் குட்டிகளும்
விடியும் காலை நேரத்தில்
வீசும் வாடைப் மென்காற்றில்
படியும் குளிர்ந்த நீர்மொட்டாய்ப்
பசுமைப்
புல்லில் பனித்துளிகள்
செடியும் கொடியும் சூழ்ந்திடவே
செழிப்பாய்
வளர்ந்த மரக்கூட்டம்
குடிலா யுணர்ந்து குயில்கூட்டம்
குக்கூ குக்கூ
வெனக்கூவும்
அருகும் அகன்று வளர்ந்தாலும்
அடர்ந்த பனியால்
நிறைந்தாலும்
உருகி வடியும் பனித்துளிகள்
ஊர்ந்து மண்ணில்
புதைந்திடுமே
மருகி வந்த குயிலோசை
மனத்தை மகிழச்
செய்தாலும்
அருகில் அமர்ந்து கேட்கையிலே
ஆடிப் பாடச்
செய்திடுமே
குக்கூ குக்கூ வெனக்கூவும்
குயிலின் குரலோ சையெல்லாம்
திக்கு களெங்கும் ஒலித்தாலும்
திசைகள் மாறி சென்றாலும்
எக்குக் குழலில் இசைப்பதுபோல்
எங்கும் இனிமை கூடுவதால்
பக்கம் நின்றோர் பரவசத்தில்
பாடும் புலமை பெறுவாரே
கணேசுகுமார் பொன்னழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக