நாள் : 11 (11/04/2021)
தலைப்பு : இயலாததெல்லாம் முயலாததே
கருத்தாளர் கல்வியாளர் என்றபேரில்
கடமைகண் ணியம்கட்டுப்
பாடின்றிக்
கருத்துரையாய்ப் பொழிப்புரையாய்க் கொடுத்துவிட்டுக்
கண்டபடி குமுகத்தில்
நடந்திடுவார்
விருப்பத்தின் வேண்டுதலை விண்ணப்ப
வேலையாக மட்டுமிங்குச்
செய்துவிட்டு
இருந்தவர்கள் இருந்தபடி இருந்துகொண்டு
எல்லாமும் நடப்பதில்லை
யென்றுரைப்பார்
நயமான நல்வினைகள் ஆற்றுகின்ற
நல்லோர்கள் நானிலத்தில்
வாழ்ந்தாலும்
சுயநலத்தார் கூட்டமொன்று சுணங்கிநிற்க
சூழ்நிலைமேல் பழிபோட்டுப்
பதுங்கிடுவார்
இயலாத தெல்லாமும் இங்கில்லை
என்பதையே உணர்ந்தோரும்
ஏற்றோரும்
முயலாது முடமான மனத்தோடு
முன்னணியில் முந்திடவே
ஆசைகொண்டார்
வயதான ஆன்றோரும் சான்றோரும்
வாழ்க்கையில் வெற்றிதனைப்
பெற்றிடவே
சுயமான சிந்தனையில் உழன்றுழன்று
சோதனையைச் சாதனையாய்ச்
சாற்றிடுவார்
அயராத முயற்சியாலும் உழைப்பாலும்
அடைதற்கு முடியாத
ஆள்மையோடு
உயர்தற்கு முடியாத உயர்வினையும்
உலகத்தார் மெச்சுமாறு
தொட்டிடுவார்
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக