சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 6 (06/04/2021)

தலைப்பு : தேயும் நிலவு  

 

ஓய்வொ ழிச்ச லின்றி

      உழலு மிந்த உலகில்

ஆய்ந்து தெளிந்த வுண்மை

      அறிந்து கொள்ள வேண்டும்

தாய்தான் தன்னை வருத்தி

தலைக்கச் செய்த போதும்

சேய்கள் செய்யும் பிழையால்

சிறப்பு வாய்ப்ப தில்லை

 

பகைமை நெஞ்சைப் பெற்றோர்

பாங்காய் வாழும் வாழ்வில்

சுகமாய் இருந்து பின்னே

சுருங்கிப் போகு மென்று 

அகத்தில் உண்மை யூட்ட

அண்ட வெளியின் நடுவே

முகம்போல் மலர்ந்த நிலவு

முழுதாய்த் தோன்றித் தேயும்

 

வஞ்ச எண்ணம் கொண்டு

வாழும் மனிதர்க் கெல்லாம்

நெஞ்சம் நிறைந்த மகிழ்வு

நிரந்த ரமில்லை யென்ற

பஞ்ச பூதக் கணக்கை

பதிய வைக்க வேண்டி

மஞ்சம் கண்ட நிலவும்

மெல்ல மெல்லத் தேயும்

 

காய்ந்து கருகும் நிலத்தைக்

      கழனி காணச் செய்யப்

பாயு மாற்றின் நீரைப்

      பாய்ச்சி யடையும் பயன்போல்

மாயும் மாந்தர் வாழ்வில்

மனிதம் பிறக்கச் செய்யத்

தேய்ந்த நிலவு மொருநாள்

திரும்பத் தோன்றி வளரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக