புதன், 28 செப்டம்பர், 2016

                             நட்பின் பெருமை

                                 காட்சி 1

இடம் :      உயர்நிலை பள்ளி வளாகம்      
காலை :    உணவு இடைவேளை
நடிகர்கள் : கவின், முகம்மது.

    (உயர்நிலை இரண்டு படிக்கும் கவின் தன் நோட்டு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் முகம்மது கவினுடன் பேசுகிறான்.)

முகம்மது : கவின் ! கவின் !! என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?

கவின் :    இம் பல்லாங்குழி விளையாடுகிறேன். என்ன என்னைப்  
            பார்த்தால் உனக்குக் கிண்டலாக உள்ளதா?

முகம்மது : இல்லை நண்பா நீ எதோ எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பது
            தெரிகிறது. ஆனால் அது என்னவென்றுதான் தெரிய வில்லை.

கவின் :    நேற்று நம் தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் அன்பான நண்பனை
           ஆபத்தில் அறியலாம்என்ற தொடருக்கு அதற்கான விளக்கம்
           சொன்னார் அல்லவா? அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக்
           கொண்டிருக்கிறேன்.

முகம்மது :  உனக்கென்ன வகுப்பிற்கு வெளியேயும் எதையாவது
             எழுதிக்கொண்டே இருப்பாய். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.

கவின் :     ஆமாம் இவ்வளவு நேரம் நீ எங்குச் சென்றாய்?

முகம்மது :  கடைக்குச் சென்று சாப்பிட தின்பண்டம் வாங்கி வந்தேன். நீயும்
             எடுத்துக்கொள்.

கவின் :     வேண்டாம் இப்போதுதான் உணவு சாப்பிட்டேன். சரி நம்முடைய
             தமிழாசிரியர் சொன்ன தலைப்பில் கட்டுரை எழுதுவதைப் பற்றிப்    
             பேசுவோம்.

முகம்மது : சரி எதுவாக இருந்தாலும் நடந்துகொண்டே பேசுவோம்.
           அப்போதுதான் எனக்கு செரிமானம் ஆகும்.

கவின் :    சரி நான் உன்னுடைய வழிக்கே வருகிறேன். நடந்துகொண்டே
           பேசுவோம். ஆனால், அது கட்டுரையைப் பற்றியதாக மட்டும்தான்
           இருக்கவேண்டும்.

முகம்மது : கவின் ரொட்டி நல்லா பொறிந்து மொறு மொறுவென்று இருக்கு.
            நீயும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளேன்.

கவின் :    உனக்கு எப்போதும் மாடு அசை போடுவதுபோல் அசை போட்டுக்
           கொண்டே இருக்க வேண்டும். உனக்குப் படிப்பைப் பற்றிய நினைப்பே
           வராதா?.

முகம்மது : இங்கே பார் கவின் நீ தேவையில்லாமல் பேசுகிறாய். உனக்கு
           வேண்டாம் என்றால் விட்டுவிடு. அதற்காக மாடு அது இதுவென்று
           பேசாதே. அங்கு பார் எல்லோரும் என்னையே ஏளனமாகப்
           பார்க்கிறார்கள்.

கவின் :    நான் அப்படித்தான் பேசுவேன். சரியென்றால் என்னோட வா
           இல்லையென்றால் உன் வழியைப் பார்த்துப் போ

      (இருவரும் முறைத்துக் கொண்டு எதிரெதிரே பிரிந்து செல்கிறார்கள்)

                          காட்சி 2

இடம் :      உயர்நிலை பள்ளி மைதானம் நடைபாதையோரம் உள்ள மரத்தடி.
நடிகர்கள் :  குமார், முகிலன்.

(குமாரும், முகிலனும் பள்ளி மைதான நடைபாதையோரமாக உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து கவினையும் முகமதுவையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

குமார்:      டே! முகிலா அங்கே பார் இன்று இரட்டையர்கள் தனித்தனியாகப்
            போகிறார்கள். ஏன் தெரியுமா?

முகிலன்:   ஆமாம் இவர்கள் வகுப்பிலும் சேர்ந்தே இருப்பார்கள்.
            வீட்டுக்கும் சேர்ந்தே போவார்கள். இன்று என்ன ஆச்சு?
 
குமார்:      அது என்ன விஷயம் என்று தெரியாது. ஆனால், இப்போது
            இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லையென்பது மட்டும் தெரியும்.

முகிலன்:    பாவம் எப்படி இருந்தவர்கள் இப்படி பிரிந்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு
            மிகவும் வருத்தமாக உள்ளது.

குமார்:      ஆமாம் முகிலா இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக
           இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் போல் இருந்தனர். நாம்தான்
           ஏதாவது செய்து அவர்களை மீண்டும் சேர்த்து வைக்கனும்.

முகிலா:     சரியாகச் சொன்னாய். நீ கவினிடம் சென்று கால்பந்து
            விளையாடும்போது முகம்மதுவிற்கு காலில் அடிபட்டுவிட்டதாகக்
            கூறு. நான் சென்று முகம்மதுவிடம் கவினுக்கு அடிபட்டதாகக்
            கூறுகிறேன்.

                          காட்சி 3

இடம் :      உயர்நிலை பள்ளி மைதானம்
நடிகர்கள் :  கவின், முகம்மது, குமார், முகிலன்.

    (குமாரும், முகிலனும் கூறியதைக் கேட்டு கவினும் முகம்மதுவும் உள்ளம் பதைத்து பள்ளி மைதானத்துக்கு ஓடி வருகிறார்கள்.)

கவின் :    முகம்மது முகம்மது என்ன ஆச்சு உனக்கு காலில் அடிபட்டதாக குமார்
            கூறினான். பார்த்து விளையாடக் கூடாதா?

முகம்மது : என்ன? உனக்குத்தான் காலில் அடிபட்டதாக முகிலன் வந்து
            கூறினான். நான் பதறி ஓடி வந்தேன்.

கவின் :     அப்படியா ஏன் அவர்கள் இப்படி நம்மை ஏமற்றினார்கள்.

முகம்மது :  அதுதானே எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

கவின் :      வா நாம் சென்று அவர்களிடமே கேட்போம்.

முகம்மது :   இரு அவர்களே நம்மை நோக்கி வருகிறார்கள்.

குமார் :      கவின் முகம்மது நீங்கள் இருவரும் முதலில் எங்களை மன்னித்து
             விடுங்கள். நாம் இருவரும் சிங்கப்பூரர் நமக்குள் வேற்றுமை
             இல்லை என்ற கொள்கைக்கிணங்க விளங்கியவர்கள் இப்போது
             பிரிந்திருப்பது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

முகிலன் :    ஆமாம், நீங்கள் பிரிந்து இருப்பது எங்களுக்கு என்னவோ மாதிரி
              இருந்தது. உங்களை பழையபடி ஒன்று சேர்க்கவே இப்படித்
              தவறான செய்தியைச் சொன்னோம். மன்னிக்கவும்.

குமார்:       உங்களில் ஒருவருக்கு பாதிப்பென்றால் எப்படித் துடித்துக்கொண்டு
              ஓடி வந்தீர்கள். இதுதான் உண்மையான நட்பு. இதை விடுத்து
              பிரிந்திருந்தீர்களே.

முகிலன்:     அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்ற பழமொழியின்
             கருத்து எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? இனிமேலாவது
             பிரியாமல் இருங்கள். வருகிறோம். 

கவின்:       நன்றி முகிலா, நன்றி குமார். முகம்மது நீ என்னை மன்னித்துவிடு
             அன்று நான் உன்னை அப்படி பேசியிருக்கக் கூடாது.

முகம்மது:    இல்லை நானும் அன்று அதற்காகக் கோபப்பட்டிருக்கக் கூடாது.

கவின்:       சரி சரி நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை
             நல்லவையாக இருக்கும்படி செயல்படுவோம். 

பெயர் கணேசுகுமார் பொன்னழகு
                                     மாணவ ஆசிரியர்
                                                    தேசியக் கல்விக் கழகம்
                                                    சிங்கப்பூர்.

   
நாள்         :   24 – 10 - 2012 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக