செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் சுட்டும் பாண்டிய நெடுஞ்செழியனின் சிறப்புகளும் மனித நிலையாமையும்.
                               பொன். கணேசுகுமார்
                    மாணவ ஆசிரியர் தேசியக் கல்விக் கழகம்
                                   சிங்கப்பூர்
முன்னுரை

     சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டுப் பழந்தமிழ் இலக்கியங்களிலும் அகம், புறம் என்ற இரு பாடுபொருள்கள் மீண்டும் மீண்டும் பயின்று வருகின்றன. அதாவது,  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அன்பின் ஐந்திணையும் கைக்கிளை, பெருந்திணை என்ற இரு திணையுமாக ஏழு திணைகள் அகம் எனப்படுகின்றன. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற எழுதிணைகளும் புறம் எனப்படுகின்றன.
     குறிப்பாக, பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்னும் மூன்று நூல்களும் அவ்வவ்திணை பொருந்திய அகத்திணைப் பாடல்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநாறாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்), மதுரைக்காஞ்சி என்னும் ஆறு நூல்களும் புறத்திணைப் பொருந்த அமைகின்ற பாடல்களாகும். நெடுநல்வாடை என்ற ஒரு நூல் மட்டும் அகமா?, புறமா? என்ற ஆராய்ச்சிக்கும், பாலைத்திணையா?, வஞ்சித்திணையா?, வாகைத்திணையா? என்ற வினாக்களுக்கும் கூதிர்ப்பாசறையா? கொற்றவை நிலையா? என்ற துறை பற்றிய விவாதத்திற்கும் உரியதாக இருக்கிறது. இவற்றில் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் சுட்டும் பாண்டியனின் சிறப்புகளையும் மனித நிலையாமையும் பற்றிக் இக்கட்டுரையில் காண்போம்.

மதுரைக் காஞ்சி

     மதுரைக் காஞ்சி என்னும் நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இப்பத்துப்பாட்டு நூல்களுள் 782 அடிகளைக் கொண்ட பெரிய நூலும் இதுவேயாகும். இந்நூலின் ஆசிரியர் மாங்குடி மருதனார் ஆவார். இவர் மதுரையை ஆண்ட மன்னனுக்கு  உலக இன்பம், பொருட்செல்வம், இளமை யாக்கை இவையெல்லம் நிலையில்லாதவை என்னும் கருத்தினைத் தம் மதுரைக் காஞ்சி என்னும் நூலில் விரித்துக் கூறுகிறார். காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும் சொல்லாகும். பாண்டியன் நெடுஞ்செழியன்தான் மதுரைக் காஞ்சி என்னும் நூலின் பாட்டுடைத் தலைவனாவான்.

மதுரையின் சிறப்பு

     தேவர் உலகமே விரும்பும் அழகுமிக்கது கூடல் மதுரை. அம்மதுரை மாநகரின் தெருக்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும், செம்பு நிறை கொள்வாரும், பூவும், புகையும், ஆயும் மக்களும் நிறைந்து ஆராவாரத்துடன் காணப்படுவர். மயில் போன்ற சாயலையும், மாந்தளிர் போன்ற மேனியையும், முல்லை போன்ற பற்களையும், தாமரை போன்ற முகத்தையும் உடைய மகளிர் நிறைந்து காணப்படுவர். அத்தகைய சிறப்பு வாய்ந்தது மதுரை மாநகர்.
     மதுரை மாநகருக்கு அரணாக நெடிய மதில்களும் ஆழமான அகழிகளும் உள்ளன. இத்தகைய பாதுகாப்பு மிகுந்த மதுரை நகரத்தில் பகல் பொழுதில் நாளங்காடி என்னும் பெயரில் கடைவீதிகளில் வாணிபம் நடந்து வருகிறது. அதைப்போல அல்லங்காடி என்னும் பெயரில் இரவிலும் சிறப்பாக நடைபெறுகிறது. வைகை நதிக் கரையில் பெரும்பாணர்கள் வாழ்கின்றனர்.
    பௌத்தர், சமணர், அந்தணர் ஆகியோருக்கு சிறப்புப் பள்ளிகளும் நடந்து வருகின்றன. அவர்கள் இரவு நேர வாழ்க்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வாழ்கின்றனர்.
      மூதாதையர்களுடைய திட்டங்களைப் பின்பற்றி புகழோடு சிறப்பான பணிகளைச் செய்து புகழ் பெற்றப் பாண்டியனின் நாட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதி மன்றங்களை அறங்கூறு அவையம் என்று பொருத்தமாக அழைக்கிறார்கள்.

பாண்டியனின் நல்லாட்சி

      தென்னாடு ஆண்ட பாண்டியர், முறை வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தனர். அதனால், பாண்டிய நாட்டில் வானத்தில் வீசும் காற்று வலப்பக்கமாக சுழன்றது. இதை தென்மேற்கு திசையிலிருந்து வீசும் மழைக் காற்றாகவும் கொள்ளலாம். அசுவினி முதலிய வின்மீன்கள் தங்களுக்குரிய வானவீதியில் ஒழுங்காகச் செல்கின்றன.      
     காலையில் புலர்ந்து கதிர்களை வீசி ஒளியையும் வெப்பத்தையும் தரும் செங்கதிரவன் தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது. இரவில் குளிர்ச்சியையும் ஒளியையும் தருகின்ற வெண்ணிலவும் தன் கடமையைச் செய்கின்றது. மற்றக் கோள்களும் நன்மையே செய்கின்றன.
      மேகங்கள் குறித்த பருவ காலங்களில் மழை பெய்து மண்ணைக் குளிர வைத்தன. மண் குளிர்ந்தால் உழவுத் தொழிலுக்குப் பெரும் பயன் கிடைக்கும். திக்குகள் தழைத்தன. ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரக்கணக்கில் பெருகின. விளை நிலங்கள், மரங்கள் ஆகியவை உயிர்களுக்குப் பயன் தருதலை மேற்கொண்டு தழைத்தன.
     பசிக்கொடுமை, உயிரை வதைக்கும் நோய் இவை இரண்டும் மக்களைவிட்டு நீங்கின. புராணக் கூற்றுப்படி உலகம் என்னும் பெரும் பாரத்தை வலிமை பொருந்திய யானைகள் திக்குக்கு ஒன்றாக நின்று சுமந்திருக்கின்றன. பாண்டியர்கள் யானைகளின் சுமக்கும் தொழிலை தாங்களே ஏற்றுக் கொண்டனர். இதனால், பாரம் நீங்கிய யானைகள் ஓய்வு பெற்றன. பழைய பொலிவு மீண்டும் வந்தது.
        பாண்டியர் ஆட்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மக்கள் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர். இந்தக் காட்சிகளைக் கண்ணாரக்கண்டு இன்புறுவோர் மேலும் மேலும் காணத்துடிப்பர். உலகத்து உயிர்கள் எல்லாம் உண்டும் குறையாத செல்வம் உணவு தானியம் கிடங்குகளில் தேங்கிக் கொண்டிருக்கின்றன.
        தெருக்கள் ஆகழமாக உள்ளன. வீடுகள் இருமருங்கிலும் ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ளன. மக்கள் பொய் பேசுதலை அறியாதவர்கள். சிறந்த அறங்களைக் கடைப்பிடிக்கும் பாண்டிய மன்னர்களுக்குப் பக்கபலமாக அமைச்சர்கள் நல்ல ஆலோசனைகளைக் கூறிவந்தனர். இத்தகையச் சிறப்புகளோடு பாண்டிய நெடுஞ்செழியனும் நல்லாட்சி செய்து வந்தான். அப்பாண்டியனின் நல்லாட்சியின் பெருமைகளை
          வலமா திரத்தான் வளி கொட்ப
            வியல் நாள்மீன் நெறி ஒழுக.....
            ....மை தீர்ந்து கிளர்ந்து விளங்க....
            உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக.....என்னும் பாடலடிகளின் மூலம் அறியமுடிகிறது.

பாண்டியனின் வீரமும் சூளுரையும்

     பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் வயதிலேயே ஆட்சிக்கு வந்தவன். இவனைச் சிறுவன்தானே; போர் பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்று தப்புக் கணக்குப் போட்டு சேரன், சோழன் இவர்களுடன் ஐந்து குறுநில மன்னர்களும் சேர்ந்து இவன்மீது போர் தொடுத்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் வீறுகொண்டு எழுந்தான். போருக்குப் புறப்படுவதற்கு முன் அவன் இவ்வாறு கூறுகிறான்.
     அதாவது, சிறு சொல் சொல்லி என்னை எதிர்த்து வரும் பகைவர்களை வென்று அவர்களை அடக்கி, அவர்களுடைய முரசங்களைக் கைப்பற்றுவேன். இல்லையெனில், என் குடிமக்களே என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும். என்னைத் தேடி வருபவர்களுக்கு எதுவும் கொடுத்துதவ என்னிடம் உள்ள செல்வம் இல்லாமலே போகட்டுமென்கிறான். அதாவது,
           சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
           அருஞ்சமர் சிதையத் தாக்கி முரசமொடு
           ஒருங்கு அகப்படேஎன் ஆயின், பொருந்திய
           என்நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
           கொடியன் எம்இறையெனகெ கண்ணீர் பரப்பி
           குடிபழி தூற்றும் கோலேன் ஆகுகஎன்று சூளுரைத்தவாறே தலையாலங்கானம் என்னும் ஊரில் நடந்த போரில், பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவர்களை வென்று அவர்களுடைய முரசங்களைக் கைப்பற்றுகிறான். இதனால்தான் அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பட்டப் பெயரோடு விளங்கினான்.
      மேலும், பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்குச் சென்று விழுப்புண் படாத நாளையெல்லாம் தம் வாழ்நாளோடு வைத்து எண்ணாத பெருமிதம் படைத்தவன். பாண்டியன் தன் எதிரி நாட்டவர் யாராயினும் அவர்களுடைய நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை அழித்துவிடுவான். அவன் அந்நாட்டில் பசுக்கள் தங்கும் இடமெல்லாம் புலி, சிங்கம் முதலிய விலங்குகள் தங்கும்படி அழித்துக் காடாக்குவான். பின்னர் அந்நாட்டில் தங்கி வளம்பெறச் செய்து நல்லாட்சியுடன் ஆண்டு வருவான்.

நீதியின் பிறப்பிடமே பாண்டியன் ஆட்சி

      பாண்டியன் நெடுஞ்செழியன் நீதி தவறாது ஆட்சி புரிந்தவன். அவன் ஆட்சியில் நீதி வழங்கும் நீதிபதிகள் கடவுளைப் போன்றவர்கள். இன்னாரிடம் வழக்கு சென்றால் ஒழுங்கான தீர்ப்பு கிடைக்காது என்று வழக்குத் தொடுப்பவர்கள் மனத்தில் அச்சமும் ஐயமும் பதற்றமும் ஏற்படுத்துதல்போல் இருக்கக்கூடாது என்று வாழ்ந்தார்கள்.
      ஒரு வழக்கு என்றால் இரண்டு பக்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் பக்கம்தான் நியாயம் உள்ளது என்று வாதாடுவர். ஆனால், நீதிபதிகள் இரண்டு பக்க நியாயங்களைக் கேட்டு, சாட்சிகளை விசாரித்து, ஆவணங்களைச் சரிபார்த்து முடிந்த முடிபாகத் தீர்ப்புச் சொல்வார்கள். தண்டனையும் வழங்குவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க ஆணையிடுவார்கள்.
      சில வழக்குகளின் ஆவணங்களைப் படித்துப் பார்த்தும் நீதிபதிகளுக்குக் கோபம் வரலாம்; இன்னும் சில வழக்கின் ஆவணங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி வரலாம். ஆனால், நீதிபதிக்கு அழகு, கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் எதுவும் தன்னை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
       சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல நடுநிலை நின்று விருப்பு வெறுப்பின்றி நேர்மை, தந்நலமற்ற நிலையுடன் நீதியைக் காப்பாற்றுவதுதான் அறம் கூறு அவையமாகும். இதனை,
            அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
              செற்றமும் உவகையும் செய்யாது காத்து
              ஞெமன் கோலன்ன செம்மைத்து ஆகச்
       சிறந்த கொள்கை அறங்கூறு அவையம் (489 – 492) என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.
      மேலும், அமைச்சர்களின் ஒழுக்கத்தையும் திறமையையும் நேர்மையையும் பொறுத்தே ஒரு மன்னனின் நல்லாட்சியும், அந்நாட்டின் நீதி முறையும் அமைந்திருக்கும் என்பதுதான் நாம் காணும் உண்மை. அதாவது, 
                     ‘நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
                      அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
                      பழிஒரீஇ, உயர்ந்து, பாய்புகழ் நிறைந்த
                      செம்மை சான்ற காவிதி மாக்களும் என்னும் பாடலடிகள் மூலம் அரசனுக்கு ஆலோசனை கூறும் அமைச்சர்கள் ஒழுங்கு தவறாது நடந்துகொள்வர். நல்லது கெட்டது ஆராய்ந்து அரசர்களை நல்ல எண்ணத்தின்படி நடக்க வழி காட்டுவார்கள். அன்பையும் அறத்தையும் கைவிடாமல் காப்பார்கள். குடிமக்களிடம் அன்புடன் பழக அறிவுறுத்துவார்கள். இவ்வாறு சிறப்புடன் செயல்படும் அமைச்சர்களுக்கு காவிதிஎன்னும் பட்டத்தை அரசர்கள் அளிப்பார்கள்.

பாண்டியனுக்கு நிலையாமை உணர்த்துதல்

     பாண்டியன் நெடுஞ்செழியன் போரிடுவதிலேயே நாட்டம் கொண்டுள்ளது புலவர் மாங்குடி மருதனாருக்குக் கவலையைத் தருகிறது. எனவே அவர் பாண்டியனுக்கு அறிவுரையின் மூலம் பின்வருமாறு உணர்த்துகிறார்.
    மன்னா! உன்னைப் போலவே உன்னுடைய மூதாதையர்கள் தம் பகைவர்களை வென்றார்கள். நாடுகளைக் கைப்பற்றினார்கள். பெரும் புகழ் பெற்றார்கள். அப்புகழைப் பாடும் பாணர்களுக்கும், புலவர்களுக்கும் பரிசுகள் பல தந்து பாரட்டினார்கள். அத்தகைய மன்னர்கள் எண்ணிக்கை, கடல் மண்ணைக் காட்டிலும் அதிகம். ஆனால், அந்த மன்னர்கள் இப்போது எங்கே உள்ளனர்?.
     அவர்கள் எல்லாம் வாழ்வின் உண்மையானப் பொருளை அறியாமல் வாழ்ந்து மறைந்தனர். அவர்களைப் போலவே உனக்கும் ஐம்பொறிகளினால் நுகரப்படும் பொருள்களோடு உள்ள தொடர்பு அறுந்து போகும் காலம் வரும். எனவே, இவ்வுலக வாழ்வோடு உள்ள தொடர்பு நிலைக்கும் என்று எண்ணாமல் இவ்வுலக வாழ்வினும் நிலைபேறுடைய பொருளைத் தேடு என்கிறார். இதனை,
             காலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ
             மறம் கலங்கத் தலைச் சென்று..
             ......கரை பொழுது இரங்கும் கனை இருமுந்நீர்த்
    மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே எவ்விடத்தும் பரவும்படி அகன்ற இடம் பொருந்திய உலகங்களை ஆண்டவர்கள். மக்களுக்குரிய மன உணர்வு இல்லாமலும் பிறப்பைப் போக்க முயலாமலும் பயன் ஏதும் இன்றி வீணாகினர்.
      மேலும், இந்த உலகம் உயர்ந்து எழுகின்ற ஓசையோடு கூடிய அலைகள் எப்போதும் வீசுகின்ற கடலையும், உயர்ந்த தேன் கூடுகளைக் கொண்ட மலைகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. அவற்றில், மலைகள் நிலைத்து நிற்பன. அலைகள் எழுந்ததும் மறைவன. அதாவது, அலைகள் நிலையாமையைக் குறிக்கின்றன என்கிறார். இதனை,
                          ஓங்கு திரைவியன் பரப்பின்
                            ஒலிமுந் நீர்வரம் பாக
                            தேன்தூங் குமுயர் சிமைய
                          மலைநா றியவியன் ஞாலம்.... என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.

முடிவுரை

      மதுரைக் காஞ்சி என்னும் நூலில் மாங்குடி மருதனார், பாண்டிய நெடுஞ்செழியனின் முன்னோர்களின் பெருமைகளையும் சிறப்புகளையும் கூறிப் புகழ்வதுடன், அவனுடைய வீரத்தையும், ஆட்சியில் காணும் சிறப்புகளையும், நீதி தவறாத முறைகளையும் பாடல்கள் மூலம் வலியுறுத்துகிறார்.
      மேலும், பாண்டியனிடம், மக்களாகப் பிறந்தவர் வீடுபேற்றைப் பெறக் கூடும் வழியை நாடவேண்டும். அதைவிடுத்து நிலையற்ற உலகத்தின் பொய்யான பெருமைகளுக்காக வருந்தி முயன்று அழியக்கூடாது என்று நிலையாமையை உணர்த்துவதன் மூலம் அவனுடைய மண்ணாசையை விட்டொழிக்கச் சொல்கிறார் என்பது புலனாகிது.

கட்டுரைக்கு உதவிய நூல்கள்

1. சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு, எம். நாராயண வேலுப்பிள்ளை, முதற்பதிப்பு 2000,
  நர்மதா பதிப்பகம், சென்னை – 600 034.

2. சங்க இலக்கியத் தேன்துளிகள் பத்துப்பாட்டு, சி.டி. சங்கரநாராயணன், முதற்பதிப்பு டிசம்பர்
   2007, கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

3. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், தமிழறிஞர். சாமி. சிதம்பரனார், நான்காம் பதிப்பு, 1986,
  சிவகாமி சிதம்பரனார் இலக்கிய நிலையம், சென்னை – 600 094.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக