செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இறையாய் என்றும் இருப்பாய் நீயே

சிங்கைத் தாயே சிங்கைத் தாயே
      சிறப்புடன் விளங்கும் சிங்கைத் தாயே
எங்கள் வாழ்வு ஏற்றம் பெறவே  
      எழுந்து வந்த ஏணி நீயே

அன்பும் அறனும் அணியாய் அணிந்து
      அங்கம் எல்லாம் அழகு சேர்த்து
அன்னை வடிவாய் அருளின் உருவாய்
அமைதி வாழ்வை அளித்தாய் நீயே

பல்லின மக்கள் பண்புடன் பழக
      பன்மொழிப் புலமை பாங்குடன் ஓங்க
வல்லமை யோடு வளமையும் சேர்த்து 
வறுமை போக்கி வளர்த்தாய் நீயே

கல்வி கேள்வி கலைகள் யாவையும்
      கருத்தாய் விளக்கிக் களிப்புச் சேர்க்க
எல்லை யில்லா இன்பம் நல்கும்
      இறையாய் என்றும் இருப்பாய் நீயே

தேசிய தினத்தின் மேன்மையை எங்கள்
      தேசம் வாழும் சிரியோர் பெரியோர் 
பேசிப் போற்றிப் புகழ்ந்திட நல்ல 
      பெருமை பெற்றே உயர்வாய்  நீயே

உவகை கொண்ட உள்ளத்தால் நாங்கள்  
      உன்னைப் போற்றிப் பாடவே என்றும்
சிவப்பு வெள்ளை வண்ணமாய் எங்கள்
      சிங்கைக் கொடியில் வீற்றிருப் பாயே


                                                    கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக