வியாழன், 29 செப்டம்பர், 2016

கவிஞர் பாத்தேறல் இளமாறனின் படைப்புகள் ஒரு திறனாய்வு.

முன்னுரை

சிங்கப்பூர்த் தமிழிலக்கியங்கள் என்றால் 1965ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட தமிழ் இலக்கியங்களையே குறிக்கும். ஏனென்றால் ‘1965ஆம் ஆண்டிற்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களை மலேசிய இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம் எனப் பிரித்துப் பார்க்க இயலாது; அக்காலத்திற்கு முன்பு வரை இரண்டு நாடுகளும் ஒரே நாடாய் இருந்தன. அதனால், அதுவரை மலர்ந்த இலக்கியத்தை மலேசிய இலக்கியம் என்று குறிப்பிடுதல் சாலப் பொருந்தும்.

சிங்கப்பூர் தனிக்குடியரசான பின்  (1965) அந்நாட்டு இலக்கியப் போக்குகள் மாறின; தனித்தன்மை அடையலாயின. என்றாலும், தொடக்ககால மலேசிய இலக்கியத்துக்கு அடி எடுத்துக்கொடுத்தது சிங்கப்பூரே என்பது குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்றாகும் என்று உரைப்பர்.
சங்கத்தொகுப்பு போல, ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் தொகுத்தளித்த முரசு நெடுமாறன் அவர்கள் கூறுவது யாதெனில்; சிங்கப்பூர் மலேசிய இலக்கியங்கள் அடிமரமும் கிளைகளும் போன்றவை. இடம், காலம் என்ற வேறுபாடுதவிர வேறு எதுவும் இல்லை எனலாம். என்றாலும், அவை அந்தந்த நிலத்துக்குரிய  பிரச்சனைகளைப் பேசுவதில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன என்கிறார்.

       சிங்கப்பூர் படைப்பாளர்களின் சிற்றிலக்கியப் படைப்பாயினும் சரி, பக்தி இலக்கியப் படைப்பாயினும் சரி தாய்த் தமிழகத்தின் தாக்கத்தைப் பெற்றே பெரும்பாலும் படைக்கப்பட்டுள்ளன. தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு இலக்கிய நிலையிலும் முற்றிலும் அற்றுப் போய்விடவில்லை என்பதையே இது காட்டுகின்றது. எனினும், அவை கூறும் முறையிலும், பாடுபொருள்களிலும், தனக்கெனத் தனித்தன்மை கொண்டு விளங்குகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் படைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் பாத்தேறல் இளமாறனின் படைப்புகளும் அடங்கும். கவிஞரின் படைப்புகள் சிங்கப்பூரில் அல்லது தமிழ் கூறும் நல்லுலகில் எத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

கவிஞர் பற்றி

       பாத்தேறல் இளமாறன் சிங்கப்பூரின் முன்னணிப் பாவலர்களுள் ஒருவர். இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தாலுகாவில் 1945ஆம் ஆண்டு பிறந்த்தார். பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். சமையல் கலையில் வல்லுநரான திரு இளமாறன் சாப்பாட்டுக் கடை நடத்தி வருகிறார். இவர் இளவயதில் இருந்தே கவிதைகள் இயற்றி வருபவர். இவர் ஒரு தனித் தமிழ்ப் படைப்பாளி!

       சிறுவயதிலிருந்தே தமிழார்வம் மிக்க அவரின் முதல் கவிதை 1964இல் தமிழ் மலரில் வெளியானது. 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வரும் அவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும், பாடல்களையும், கட்டுரைகளையும், பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிக்கு அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

       சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினரான திரு. இளமாறன், அதன் செயலாளராகவும் பின்னர், துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். கொள்கை முழக்கம் எனும் திங்கள் இதழின் ஆசிரியராகச் சில காலம் பணியாற்றியுள்ளார்.
       1989ஆம் ஆண்டில் அன்றைய மலேசியப் பொதுப் பணி அமைச்சரும், இந்திய காங்கிரசின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலமையில் பொன்பாவலர் மன்றம் இவருக்குப் பாத்தேறல் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

கவிஞரின் படைப்புகள்

       இளமாறனின் முதல் நூல் பாத்தேறல் என்பதாகும். சிறுவர் இலக்கியம் முதல் ஏழு கவிதை நூல்களைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்ல நான்கு ஒலிப்பேழைகளையும் வெளியிட்டுள்ளார்.

அவை, பாத்தேறல் (1981, 2002),முருகன் காவடிப் பாடல்கள் (1982), பனிக்கூழ் மழலையர் பாத்தொகுப்பு (1988, 2009), திங்கள் மாணவர் பாத்தொகுப்பு (1988), நினைக்க சுவைக்க (1990, 1997), குமுறல் (2002),சிதறல் (2009) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், முருகன் பாடல்கள், மழலையர் பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், மாமாரி மாகாளி பாடல்கள் ஆகிய தலைப்புகளில் நான்கு ஒலிநாடாக்களுமாகும்.

கவிஞரின் படைப்புகள் குறித்தத் திறனாய்வுப் பார்வை

1. ‘பாத்தேறல்

       பாத்தேறல்என்னும் இந்நூல் இளமாறன் அவர்கள் வெளியிட்ட முதல் படைப்பாகும். இந்நூல் அவர் தன் பதினெட்டாம் வயதிலிருந்து எழுதிய பல்வேறு தலைப்புகளில் அமைந்த பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலைப் பற்றி அவர் முன்னுரையில்

நான் எப்பொழுதும் எதையுமே சேர்த்து வைத்துக்கொள்ளும் மனப்பாங்கில்லாதவன். சோம்பேறியுங்கூட. அதனால், நான் எழுதத் தொடங்கிய 1964 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலான பாக்களில் ஏதோ இன்று என்னிடம் இருந்தவற்றுள் சில சிறிய பாக்களையே உங்களின் பொன்னான தமிழ்க் கரங்களிலே தவழவிட்டுள்ளேன் என்று கூறுகிறார்.

இந்த நூலில் தமிழ், குமுகாயம் (சமுதாயம்), நாடு, சுவைக்காக, பல்சுவை என்னும் பெரும் பிரிவுகளில் மொத்தம் 69 பாடல்கள் உள்ளன.

இந்த நூலில் அன்னை மொழியாகிய தமிழையும் அதன் சுவையையும் அறியாமல் தீய்ப்பவர்களைப் பற்றி, தேன்விட்டு வேம்பின் நெய்குடித்தல் போலத்
                         தெளிவிழந்து நந்தமிழைத் தீய்க்கின்றீரே என்றுப் பாடியுள்ளார். இவ்வரிகளின் மூலம் இளமாறனின் நெஞ்சம் இரங்குவது தெளிவாகிறது.

அடுத்த ஒரு பாட்டில் சிங்கப்பூரின் முன்னால் பிரதமரும் சிங்கப்பூரை கட்டியமைத்தவருமான லீ குவான் இயூவின் இணையில்லா ஆற்றலைப் பாடியுள்ளார். இதனை,
காடெனக் கிடந்த மேட்டைக்
கடலிலே சேர்த்தான் அங்கே
வீடுகள் கட்டி வைத்தான்
விருந்துகள் படைத்து வைத்தான்
தேடரும் பொருள்கள் எல்லாம்
தெருவெல்லாம் கிடைக்க வைத்தான்
ஆடக மனத்தேன் லீதான்
அரும்பணி செய்தான் வாழி என்றப் பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

நாட்டைப் பற்றிப் பாடும்போது தன் நன்றி மறவாமையை வெளிப்படுத்துகின்றார். அந்தப் பாடல்களில் புகழ்பெற்ற சிங்கை என்னும் தலைப்பிலான பாடல் நம்மைப் பெரிதும் கவர்கிறது. அதாவது,         முன்னம் பிறந்தவள் என்னைக் கவர்ந்தவள்
                                 முத்தினைப் போன்றவளாம் – செங்
                       கன்னற் சுவையினைத் தன்னுள் அடக்கிய
                                 கன்னித் திருமகளாம் – என்
                      அன்னைத் தமிழோடிங் கின்னும் பிறமொழி
                                ஆட்சியிற் கண்டவளாம் – மிகச்
                     சின்னஞ் சிறியவள் பொன்னின் தரமவள்
                                சிங்கைப் பிறைமகளாம் என்னும் பாடல் வரிகளில் நமது குடியரசின் பல சிறப்புகளை நம் கண்முன் கொண்டு வருகிறார்.

மேலும், பெண் வர்ணனை, இந்தியத் தலைவர்கள், உள்ளூர் முன்னணித் தலைவர்கள் போன்றோரைப் பற்றியெல்லாம் பல்வேறு உட்டலைப்புகளில் பாடியுள்ளார்.
      
2. ‘திங்கள் மாணவர் பாத் தொகுப்பு

       சிங்கைவாழ் செந்தமிழ்ப் பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் யாத்துள்ள திங்கள் என்னும் பாத் தொகுப்பு இவரது இரண்டாவது படைப்பாகும்.      இப்படைப்பில் இளம் மாணவர்கள் பயின்று பயன் பெறுதற்பொருட்டுப் புனையப் பெற்றுள்ளது. இந்நூலில் ஓரிரு சொற்கள் தவிர மற்றவையெல்லாம் தனிச் செந்தமிழில் அமைந்திருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.

       இந்நூலில் திங்கள், கங்குல் முதலான சொற்களுக்குச் சிறுவர்கள் உள்ளத்தில் பதியுமாறு பொருள் சொல்லும் பாங்கு நன்று. மேலும், அறிஞர் அண்ணாவையும், தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரையும் மாணக்கர்க்கு அறிமுகப்படுத்துவது சிறப்பாக உள்ளது.

       பெயரெடு என்று அறிவுறுத்திப் பயன்மொழிகளையும் எடுத்துக் கூறிப் பணிவன்பையும் புகட்டுவது எதிர்காலத் தமிழ்க் குமுகம் ஏற்றமுற வேண்டும் என்னும் பாவலரின் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது.

       பூனையும் மீனும் என்னும் தலைப்பில் அமைந்துள்ள கற்பனை உரையாடல் நயமாகவும் பொருள் பொதிந்ததாகவும் உள்ளது.

       தென்றல், கடல், நிலா, வாழை, மக்கள் முதலான பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ள அனைத்துப் பாடல்களும் சிறுவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டி அறிவு வளத்தைப் பெருக்கும் என்பதில் ஐயமில்லை.

       தமிழ்த்திரு இளமாறனின் பாத்திறத்திற்கும், உவமை நலத்திற்கும் தம்பி கேட்ட நிலா என்னும் தலைப்பில் அமைந்துள்ள,

                     வானத்தில் நீந்திவரும் தெப்பம் – அந்த
                                வட்டநிலா எங்கள் வீட்டு அப்பம்
                        காணத்தான் வேண்டுமெனக் கேட்டான் – தம்பி
                                கைப்பிடித்துத் தாவென்றே அழுதான் என்னும் பாடலையும், மறைமலையடிகளாரைக் குறித்து வரைந்துள்ள,

                     தனித்தமிழ் வளர்த்தவர்
                                தமிழ்க்கென உழைத்தவர்
                        மணித்துளி தோறும் நம்
                                மாத்தமிழ் வளர்த்தவர்
                        மறைமலை அடிகள் அறிவாயா?நீ
                        மறைமலை அடிகள் அறிவாயா? என்னும் பாடலையும் எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

       இளஞ்சிறாரின் உள்ளத்தில் இன்றமிழை வளர்க்கும் நோக்கில் முயற்சி மேற்கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ள பாத்தேறல் இளமாறன் பெரிதும் பாராட்டுக்குரியவர் என்பது தெளிவாகிறது.

3. குமுறல்

        சாதாரன நிலையில் உள்ள மனிதர்கள் தம் கண்முன் நடக்கும் தவறுகளைக் கண்டு மனம் குமுறுவர். ஆனால், சொல் திறம் கொண்ட கவிஞர்களோ ஒருபடி மேலே சென்று கவிதைகளின் மூலம் தம் குமுறல்களை வெளிப்படுத்துவர். குமுறல் என்பதற்கு பொங்குதல், எதிர்த்தல், கொதித்தல் எனப் பல பொருள் கொள்ளலாம்.

இக்குமுறல்களின் வெளிப்பாடு சங்ககாலம் முதற்கொண்டு இக்காலம் வரை உள்ளது. எடுத்துக்காட்டாக, பாட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் என்று கண்ணகியின் கூற்றாக இளங்கோவடிகளும், சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர் என்று சாதிக்கெதிராக திநாவுக்கரசரும், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான் என்று பிச்சையெடுப்பவர்களுக்கு எதிராக வள்ளுவரும், தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பொதுவுடைமைக்கு ஆதரவாக பாரதியாரும், ‘கொலை வாளினை எடடா, கொடியோர் செயல் அறவே எனக் கொடுமை செய்வோர்க்கு எதிராக பாரதிதாசனும் குமுறுகிறார்கள்.

இவர்களைப் போலவே இக்காலக் கவிஞர்களில் ஒருவரான அதுவும் சிங்கப்பூர் கவிஞரான பாத்தேறல் இளமாறன் அவர்களும் தம் குமுறல் என்னும் நூலில் தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்புக்கு எதிராகவும், தமிழர்கள் தம் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்காமல் இருப்பதற்கு எதிராகவும் குமுறுகிறார்.

தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்புக்கு எதிரானத் தம் குமுறலை

தேய்ந்த இசைத்தட்டில்
செவிக்குண்டோ முழுப்பாட்டு?
மாய்ந்தமொழிக் கலப்பால்
மலர்ச்சி தமிழ்பெற்றிடுமா?

என்றும், தமிழர்கள் தம் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்காமல் இருப்பதற்கு எதிரானத் தம் குமுறலை    தமிழினப் பிள்ளைகள்
தமிழ்ப்பெயர் தாங்கியே
தளிர்ப்பதுதானே முறை
என்றும் வெளிப்படுத்துகிறார். 

          மேலும், அவர் பக்தர்களுக்காக ஓங்காரக் காளியிடமே தம் குமுறலை 
            ‘வேண்டி உன்ன பணிஞ்ச – எங்க
வேதனையைத் தீர்க்காவிட்டா
     நீயுமென்ன அருள்நிறைஞ்ச சாமி - கொடும்
நீசருக்குத் தானோநீ மாமி என்று வெளிப்படுத்துகிறார்.

இந்த நூலில் முதுமைப் புலம்பல் என்னும் தலைப்பில் ஐந்து பகுதிகள் பாடியுள்ளார். அவற்றில் ஒரு மனிதன் வாழ்க்கையில் முதுமையடையும் பொழுது என்னென்ன மாற்றங்களை உணர்கிறான் என்பதையும் அதற்கு அவன் இளமையில் செய்த வினைப்பயனே காரணம் என்று தன் சுய நிகழ்வுகளையே படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

4. ‘பனிக்கூழ் மழலையர் பாத் தொகுப்பு

பனிக்கூழ் என்னும் இந்த நூல் கவிஞர் பாத்தேறல் இளமாறனால், குழந்தைகளுக்காக மூன்றாவதுப் படைப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் எளிய இனிய சொற்களாலான பாடல்கள் நிறைந்துள்ளன. இப்பாடல்களைப் படிக்கும்போது தானாகவே ஓசையின்பமும், பொருளின்பமும் மிளிர்கிறது. குழந்தைகள் எவற்றை விரும்புவார்கள், எவற்றைச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்து அவர்கள் விரும்பும் வண்ணம் பாடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பனிக்கூழ் (ஐஸ்க்ரிம்) என்றால் கொள்ளை ஆசை. அதனை,

   பனிக்கூழ் பனிக்கூழ்
        பார் பார் பலவகை
   பழம்பால் கொக்கோ
        சேர்ந்தது சுவைசுவை
   சில்லென இருக்கும்
        சிறுவரை மயக்கும்... என்ற பாடல் வரிகளால் அறியமுடிகிறது. மேலும், அவர்களுக்கு கதை கேட்பதென்றாலும் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களின் மனதறிந்து ஏமந்த காக்கை என்னும் தலைப்பில் காக்கை, நரி கதையை,

கடையில் வடையைத் திருடிக் கொண்டு
        காக்கை மரத்தில் அமர்ந்ததாம்
வடைமேல் ஆசை கொண்டோர் நரியும்
பாட்டுப் பாடச் சொன்னதாம்
       கா..கா என்றே காக்கை, பாட
                வடையும் கீழே விழுந்ததாம்
       ஆகா இனிமை என்றே நரியும்
      அதனைக் கவ்விச் சென்றதாம் என்றும், 

அடுத்து சிந்தனை என்னும் தலைப்பில் சிங்கம் முயல் கதையை,

அடர்ந்த காட்டில் அரிமா மன்னன்
        ஆட்சி செய்து வந்தனன்
அடிமைப் பட்டே விலங்கு யாவும்
        உணவாய்த் தம்மைத் தந்தன
செறிந்த அறிவு நிறைந்த முயலோர்
        தந்தி ரத்தால் மன்னனை
செத்து மடியச் செய்த கதைபோல்
        சிறக்க வேண்டும் சிந்தனை என்றும் பாடலாகவே பாடி மகிழ்விக்கின்றார்.

இப்பாடல்கள் ஒவ்வொன்றும் தாத்தா பாட்டி அருகிலிருந்து குழந்தைகளுக்காகப் பாடுவதுபோன்றும் கதை சொல்வது போன்றும் உள்ளது.  கவிஞர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் தம்முடைய தனித்தமிழ் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பைக் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பித்து வைக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதனை இப்பாடல் நூலின் பனிக்கூழ் என்றத் தலைப்பே அதற்குச் சான்றாகிறது.

5. ‘நினைக்க சுவைக்க

       பாத்தேறல் இளமாறனின் நினைக்க சுவைக்க என்னும் இந்த கவிதை நூல் பல்சுவை கலந்து எழுதப்பெற்றுள்ளது என்றால் அது மிகையில்லை. காரணம் இந்நூலிலும் மொழி, நாடு, குமுகாயம், சான்றோர், பெண் வர்ணனை போன்றவற்றைப் பாடுபொருளாக வைத்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் கோபம், விருப்பு, வெறுப்பு, இரங்கல், வாழ்த்துதல் போன்ற சுவைகளில் பாடியுள்ளார். மேலும் இந்நூலில் பெண்களின் இயல்புகளையும் அவர்களிடம் பெறும் இன்பங்களையும் பற்றி சில பாடல்களில் பாடியுள்ளார்.

       இந்த நூலில் மொழிப்பற்றையும், இனப்பற்றையும் வலியுறுத்தும் கவிஞர் அன்னைக்கோர் அறிவுரை என்னும் தலைப்பில்

அழுகின்ற பிள்ளைக்குப் பாலூட்டும் போதுநல்
        அன்னையே தமிழையும் ஊட்டு…..
தொழுகின்ற சாமியும் தமிழ்ச்சாமி யாகவே
                தொழுதிடக் கைவிரல் நீட்டு....என்று பாடுகிறார்.

கவிஞர் நம் தமிழர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காக விழி என்னும் தலைப்பில்,        
       ‘எதிரான ஞாயங்கள் எப்போதும் உண்டதன்
                        எதிராக நிற்கணும் விழி!
               புதிரான தத்துவம் பொய்யல்ல அதைக்காண
                        பொதுவாகத் திறக்கணும் விழி!....
                .... எனபுக்கும் தோலுக்கும் இசைபாடித் தாழாமல்
                        எண்ணிய சொல்லணும் விழி! என்று பாடி விழிப்பூட்டுகின்றார்.

கவிஞர் மற்றொரு பாடலில் குமுகாயத்தில் காதல் செய்பவர்களுக்கு சாதி ஒரு தடையாக உள்ளது என்றும் அதை தகர்க்கத் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். இதனை,

அடுப்படியில் பெண்ணைவைத்தல் அந்தக்கால வழக்கடி
ஆயிஅப்பன் சாதிப்பேச்சை அழிப்பதற்கு முழக்கடி
படிப்படியாய் பிரிவறுக்கப் பண்ணவேண்டும் உறவடி
பயப்படாமல் காதலிப்போம் மனக்கதவைத் திறவடி என்று பாடுகின்றார்.

கவிஞர்கள் தாம் செய்தத் தவறுகளை வெளிப்படையாகக் கூறத் தயங்கும் இக்காலத்தில் தம் மனம் பெண்களை நாடுவதாக வெளிப்படையாகவே பாடுகின்றார்.  அப்பாடலில் பெண்களைப் பற்றிப் பாடும்போதுகூட அவர்களின் ஒப்பனையையும் நகைச்சுவையாகப் பாடுகின்றார். இதனை,

காலையிளஞ் சூரியனை வெல்லுமோச்சு – நம்ம
        கன்னியர்கள் மேனியிலே செய்யும் பூச்சு
சேலைபல இப்பகவர் ஆளாச்சு – நான்
சிற்றிடையைப் பாடிரொம்ப நாளாச்சு....
      மானமில்லா நெஞ்சுமிங்கே எப்போதும் – எழில்
                மங்கையரை எண்ணுதடா இப்போதும் என்று பாடுகின்றார்.

மற்றொரு பாடலில் மது (கள்) அருந்துவோர் திருந்த வேண்டும் என்பதற்காக மாறும் நாள் எது?’ என்னும் தலைப்பில்
                     வான்மேகம் சிந்தும் கண்ணீர்
                                வயற்காட்டைச் செழிப்பாக்கும்
                        வயற்காட்டுப் பனையின் தண்ணீர்
                                வாழ்க்கையை அழிவாக்கும்....என்று பாடியுள்ளார்.

மேலும், இந்த நூலிலும் மொழியையும் நாட்டுப் பற்றையுமே முன்னிறுத்திப் பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது.

6. ‘சிதறல்
       
    பாத்தேறல் இளமாறன் படைத்த மற்றுமொரு நூல் இந்த சிதறல். இந்த நூலிலும் பாத்தேறல் மரபுத் தமிழிலேயே பல்வேறு பாடுபொருள்களில் பாடியுள்ளார். மேலும் தனித்தமிழ் பற்றை இந்த நூலிலும் வலியுறுத்துகின்றார். இதனை,

 தொல்பொருள்கள் விலையேறும் மதிப்பும் கூடும்
         தூயமொழிப் பண்பாடே நிலைத்து வாழும் என்ற பாடலடிகளால் அறியலாம்.

மேலும் ஒரு பாட்டில் நகர வாழ்கையாகிப் போன சிங்கப்பூரில் குருவி, நாரை, கிளி, மைனா, கொக்கு போன்றவற்றைப் பார்க்க முடியவில்லை. ஆனால், தாம் பிறந்த நாட்டிலும் பார்த்து அதனோடு உறவாடிய மேற்கூறியவற்றைப் பார்க்க முடியவில்லையே என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். இதனை,

       நான் கண்ட சிறகடிக்கும்
                நாரை காக்கை
        நறுஞ்சிட்டு கிளி மைனா
                கொக்கு கூட்டம்
ஏன் இன்றோ எங்குமில்லை?
        பெருகும் மாந்தர்
இயற்கைதனை அழித்துவிட்டார்
        நகராய் சிற்றூர்கீ
ஆனதனால் அக்காட்சி
        அழிந்து போச்சே என்று பாடுகின்றார். இவற்றில் அழகின் சிரிப்பு கண்ட இயற்கைத் தமிழன் புரட்சிக் கவிஞனின் விழிகளால் இயற்கையைப் பார்க்க மறந்த உலகமயமாதல் தமிழர்களின் மீதான குற்றச்சாட்டாய் விளங்குகின்றது.

மற்றொரு பாடலில் பிறை நிலைவை
மேகத் தோலுக்குள் மறைந்திருக்கும்   
        அரைவட்டச் சுளை... என்று பாடியிருப்பது கவிஞரின் ரசிப்புத் தன்மையைப் பறை சாட்டுகின்றது.

தமிழ் நாட்டில் உள்ள குற்றாலத்தின் செழுமையை கூறும் கவிஞர்,

                       சிற்றருவி பேரருவி அய்ந்தருவி
                        சிந்தும்நீர் குளுமையது பனைப்பதனி... என்று படிப்பவரையும் குற்றாலச் சாரலில் நனையவிட்டுப் பனைப் பதனியைப் பருக வைக்கின்றார்.

       மற்றொருப் பாடலில் இலங்கையில் நடந்த போரை யாரும் அதாவது எந்த நாடும் தட்டிக்கேட்கவில்லை என்ற தன் ஆதங்கத்தைக் கூறும்போது,

              உலகத்து நாடெல் லாமும்
                        உண்மையாய் இலங்கை நாட்டின்
                கலகத்தை நிறுத்த எண்ணம்
                        கருதிட வில்லை.... என்றுக் கூறி நம்மையும் ஆதங்கப்பட வைக்கின்றார்.

கவிஞர் படைப்பில் முந்தைய இலக்கியத் தாக்கம்

சிற்றிலக்கியம்

1. புலம்பல்
       ஆனந்தக் களிப்பு என்பது போலப் புலம்பல் என்ற ஒரு பாடல் வகை உண்டு. மாணிக்கவாசகர், திருப்புலம்பல் பாடுகின்றார். இறைவனின் கருணை கிட்டாமல் காலம் கழிந்து கொண்டுள்ளதே என எண்ணிப் புலம்புவதாக இது அமைந்துள்ளது.

   உற்றாரை யான்வேண்டேன்,
           ஊர்வேண்டேன் பேர் வேண்டேன் (556) எனப் புலம்புகின்றார்.

       பட்டினத்தாரின் அருட்புலம்பல் தத்துவச் செறிவுடையது; பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் புகழ்பெற்றது. முத்திதரும் ஞானமொழியாம் புலம்பல் சொல்ல
                         அத்திமுக வன்றன் அருள்பெறுவது எக்காலம்?’ என அவர் புலம்புகின்றார்.

       இவற்றைப் போலப் பாத்தேறல் இளமாறன் அவர்களும் புலம்பல் வகை இலக்கியம் படைக்கின்றார். ஆனால், இது வித்தியாசமான புலம்பல்; புதுமைப் புலம்பல்! முதுமைப் புலம்பல்’! இது நான்கு பகுதிகள் கொண்டது. அவற்றுள் இரண்டை நாம் நம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

       கவிஞரின் குமுறல் என்ற நூலில் வயது முதிர்ந்து அனுபவம் பெற்ற நிலையில் பாடுவதாக இப்புலம்பல் அமைந்துள்ளது. இளமை மனநிலை மாறிய தன்மையும், உடல் தளர்வுற்றுப் பற்கள் ஆடிக் கழன்று நிற்கும் நிலைமையும் அற்புதச் சொல்லோவியமாகப் படைக்கப்பட்டுள்ளன. பழைய மரபு வடிவத்தை எடுத்துக்கொண்டு புதுமைக் கருத்தாக இயல்பு வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதனை,

கடவுள் இல்லை இல்லையே என்று
                    கத்தின காலம் ஒன்று – எல்லா
               இடமும் இறைவன் இருப்பிட மென்றே
                  இன்னுரை செய்கிறேன் இன்று! .....
              இலையே இலையே என்றதால் தெய்வ
                 இலக்கியப் பாக்கள் வெறுத்தேன்- அந்த
             நிலையை விடுத்தேன் அருட்பா படித்தேன்
                நித்தமும் தமிழ்த்தேன் குடித்தேன்.

என்ற முதுமைப் புலம்பலில் கடவுள் இல்லை இல்லை இல்லையே என்று நான் கத்திய காலம் ஒரு காலம்; ஆனால் இன்றோ; எல்லா இடங்களும் இறைவன் இருப்பிடம் என்று இனிதாக உரைக்கின்றேன் என்று பாடுகின்றார். மற்றொரு பாடலில்
   
  வெட்டுப் பற்கள் கீழ்நான்கும்
        வெடவெட வென்றே ஆடிடுதே
  கட்டிப் பொருளைக் கடித்துண்ண
        இயல்வ தில்லைமனம் வாடிடுதே! .......
...... என்ன விந்தைச் செய்தியிது
        என்றே நினைக்கும் உங்கள் மதி?
   சின்ன வயதில் திமிர் கொண்டு
        செய்த பிழையால் வந்ததிது! அதாவது, வயது முதிர்ந்த ஒருவரின்
கடந்தகால, இக்கால நிலை குறித்த எண்ண ஓட்டம் உடைய அற்புதக் கவிதை இது. இளமையும் அதற்கு எதிரான முதுமையும் பற்றித் தொடித்தலை விழுத்தண்டினார் அனுபவித்துப் பாடிய புறநானூற்றுப் பாடல் (243) இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது.

       என் வாயில் உள்ள எதனையும் வெட்டிச் சுவைக்கின்ற கீழ்த்தாடைப் பற்கள் நான்கும் முதுமையால் – வயதாகிப் போனதால் – வெடவெட என்று ஆடுகின்றனவே. கரும்பு போன்ற கெட்டியாக உள்ள பொருளைக் கடித்துண்ண மனம் நினைத்தாலும் முடியவில்லை; அதனால், மனம் வருந்துகின்றது.

என்ன விந்தையான மாற்றம் இது? இது எவ்வாறு நிகழ்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். குமரப் பருவத்தில், இளமை எனும் திமிரால் செய்த பிழைகளினால் இந்தநிலை வந்தது எனப் புலம்புகிறார்.

       வயது முதிர்ந்த பற்கள் எல்லாம் விழுகின்ற வயதான ஒருவரின் எண்ண ஓட்டத்தினை மிக அழகாகக்க் கவிமாலையாகப் புனைந்துள்ள திறம் பாராட்டிற்குரியது. முதுமைப் புலம்பல் எனும் இப்படைப்பு சிங்கப்பூர் சிற்றிலக்கியப் போக்கில் ஒரு வித்தியாசமான நடைமுறை சார்ந்த, எதார்த்தமான ஓர் இலக்கியப் படைப்பு எனலாம்.

2. அம்மானை

அம்மானை பிரபந்த வகைகளுள் ஒன்று. மூன்று மகளிர் ஒருங்கே இருந்து அம்மானை ஆடுகின்றபொழுது ஒருத்தி பாட்டுடைத் தலைவன்  புகழை வினாவாகப்  பாடுவாள். ஒருத்தி அதற்கு விடை பகர்ந்து பாடுவாள். மற்றொருத்தி அதற்கு காரணம் கூறும் முறையில் பாடுவாள். இது பொதுவான அமைப்பு. வேறு சில அம்மானைப் பாடல்களில் ஒருத்தியே பாடுவதாகவும் அமைப்பர். மாணிக்கவாசகரின் திருவம்மானை ஒருத்தியே பாடுவதாக அமைந்தது.

        சிங்கப்பூர் கவிஞரான பாத்தேறல் இளமாறன் அவர்களும் பழைய மரபு வடிவத்தை எடுத்துக்கொண்டு விம்முதுளம் அம்மானை பாடியுள்ளார்.  அந்த அம்மானையில் புதுமைக் கருத்தாக இயல்பு வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டி அற்புதச் சொல்லோவியமாகப் படைத்துள்ளார். எடுத்துக்காட்டாக,

              ஊரறிந்தார் உலகறிந்தார் உருள்கோள்கள் தானறிந்தார்
                சீரறிந்தார் சிறப்பறிந்தார் செழிப்பறிந்தார் அம்மானை
                சீரறிந்து சிறப்பறிந்து செழிப்பறிந்தார் ஆனாலும்
                காருறைந்த மனங்களினும் கைவிளக்கே அம்மானை
                கைவிளக்கும் வான்விளக்காய்க் காண்பதன்றோ அம்மானை ... ........     ....... ........
இருவாக்யம் மண்மைந்தர் இடைவந்த தம்மானை
இடைவந்த மைந்தர்மட்டும் ஏறுவதோ அம்மானை என்றப் பாடலைக் கொள்ளலாம்.


நாட்டுப்புற இலக்கியம்

1. தாலாட்டு

       நாட்டுப்புறத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை அரவணைத்து, அழும் குழந்தைக்கு அமைதியை உருவாக்கி, குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பரம்பரை பரம்பரையாகப் பாடிவரும் இன்னிசைப் பாடல்களே தாலாட்டுப் பாடல்கள் என வழங்கப்பட்டு வருகின்றன.

       தாலாட்டு என்ற சொல், தால் + ஆட்டு என்ற சொற்களின் சேர்க்கையால் உருவாகியது. தால் என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றிருக்கலாம். தாலாட்டுப்பாடல் இசை வடிவானது, இனிமை வடிவானது, மனதை நெகிழ வைப்பது. இத்தகையத் தாலாட்டுப் பாடல்கள் தாய்க்குலம் வழி வழியாக வாய்மொழியில் வளர்த்த தமிழ் இலக்கியமாகும். இவ்விலக்கியத்தை நம் நாட்டு கவிஞரான பாத்தேறல் இளமாறனின் படைப்பிலும் எதிரொலிக்கிறது.

       இளமாறன் அவர்கள் பாத்தேறல் என்னும் நூலில் பைந்தமிழா, கண்ணுறங்கு என்னும் தாலட்டுப் பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலில் நாட்டுப் பற்றையும், சிங்கப்பூரின் தேசியக் கல்விக் கூறையும் வெளிப்படுத்தும் விதமாகப் பல அரிய செய்திகளோடுச் சேர்த்துப் பாடுகிறார். இதனை,

           கணண்ணுறங்கு கண்ணுறங்கு
                        கண்மணியே கண்ணுறங்கு
     பண்ணரங்க மாடிவந்த
                பைந்தமிழே கண்ணுறங்கு....
    ....பேரறிஞன் நல்லமைச்சன்
                        பெருமான்நம் லீயைப்போல்
            சீரமைய வளர்ந்திடஎம்
                        சின்னவனே கண்ணுறங்கு என்ற படல் வரிகளின் மூலம் அறியலாம்.

கவிஞரின் படைப்புகளில் என்னைக் கவர்ந்த படைப்பு எது? ஏன்?

கவிஞரின் படைப்புகள் அனைத்தும் என்னைக் கவர்ந்த படைப்புகள்தான். இருப்பினும் குமுறல் என்னும் படைப்பு தனித்துவமாக என்னைக் கவர்ந்தது. இப்படைப்பில் தமிழ்மொழியில் ஏற்படுத்தும் பிறமொழிக் கலப்பையும், தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டாமல் பிறமொழிப் பெயர்களைச் சூட்டுவதையும் தம் குமுறலாகக் குமுறியிருப்பது என் நெஞ்சைக் கிள்ளியது.

குறிப்பாக,  இந்நூலில் உள்ள முதுமைப் புலம்பல் என்னும் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. வயது முதிர்ந்து அனுபவம் பெற்ற நிலையில் பாடுவதாக இப்புலம்பல் அமைந்துள்ளது. மேலும், இளமை மனநிலை மாறிய தன்மையும், உடல் தளர்வுற்றுப் பற்கள் ஆடிக் கழன்று நிற்கும் நிலைமையும் அற்புதச் சொல்லோவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. பழைய மரபு வடிவத்தை எடுத்துக்கொண்டு புதுமைக் கருத்தாக இயல்பு வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதனை

கடவுள் இல்லை இல்லையே என்று
 கத்தின காலம் ஒன்று – எல்லா
  இடமும் இறைவன் இருப்பிட மென்றே
இன்னுரை செய்கிறேன் இன்று! .....
 இலையே இலையே என்றதால் தெய்வ
இலக்கியப் பாக்கள் வெறுத்தேன்- அந்த
நிலையை விடுத்தேன் அருட்பா படித்தேன்
நித்தமும் தமிழ்த்தேன் குடித்தேன்.

என்ற முதுமைப் புலம்பலில் கடவுள் இல்லை இல்லை இல்லையே என்று நான் கத்திய காலம் ஒரு காலம்; ஆனால் இன்றோ; எல்லா இடங்களும் இறைவன் இருப்பிடம் என்று இனிதாக உரைக்கின்றேன். மேலும், கருங்கல்லைக் கடவுள் என்று ஏன் கும்பிடுகின்றீர்கள்? பூமாலைகளை அக்கல்லிற்கு ஏன் சூட்டுகின்றீர்கள்? அவ்வாறு செய்வது உங்கள் பணத்தை வீணடித்துப் பாழாக்குவது அல்லவா? என்று உரைத்தேன். இன்று அது தவறு என்று உணர்ந்து கொண்டேன். அதன் உண்மையை நான் அறிந்து கொண்டேன்.

அதுமட்டுமல்ல அந்தக் கருங்கல் சிலைக்குப் பால்கொண்டு அபிசேகம் செய்யலாமா? விலையுயர்ந்த பல பொருள்களை அதன்முன் படைத்து வீணாக்கலாமா? இது பகுத்தறிவில்லாத செயல் அல்லவா? என நாலாவிதமாகப் பல வசைமொழிகள் கூறித் திரிந்தவன் நான். இன்றோ, அது உண்மை என நம்பிக்கை கொண்டு இரு கைகளையும் கூப்பித் தொழுகின்றேன்.

தெய்வம் கடவுள் இல்லை என்ற கருத்தினைக் கொண்டிருந்ததனால், அத்தெய்வங்களின் மேல் பாடப்பெற்ற இலக்கியப் பாக்களைப் (கவிதைகளை) படிக்காமல் வெறுத்து ஒதுக்கினேன். இன்றோ, உண்மை உணர்ந்ததனால் அந்த வெறுத்தொதுக்கும் மனப்பான்மை விட்டு அருட்பாக்களைப் படித்தேன். நாள்தோறும் தமிழ்த் தேனைப் பருகி மகிழ்ந்தேன் எனப் புலம்புகிறார்.

மற்றொரு புலம்பலில் 
   வெட்டுப் பற்கள் கீழ்நான்கும்
        வெடவெட வென்றே ஆடிடுதே
  கட்டிப் பொருளைக் கடித்துண்ண
        இயல்வ தில்லைமனம் வாடிடுதே! .......
...... என்ன விந்தைச் செய்தியிது
        என்றே நினைக்கும் உங்கள் மதி?
   சின்ன வயதில் திமிர் கொண்டு
        செய்த பிழையால் வந்ததிது!
அதாவது, வயது முதிர்ந்த ஒருவரின் கடந்தகால, இக்கால நிலை குறித்த எண்ண ஓட்டம் உடைய அற்புதக் கவிதை இது. இளமையும் அதற்கு எதிரான முதுமையும் பற்றித் தொடித்தலை விழுத்தண்டினார் அனுபவித்துப் பாடிய புறநானூற்றுப் பாடல் (243) இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது.

       என் வாயில் உள்ள எதனையும் வெட்டிச் சுவைக்கின்ற கீழ்த்தாடைப் பற்கள் நான்கும் முதுமையால் – வயதாகிப் போனதால் – வெடவெட என்று ஆடுகின்றனவே. கரும்பு போன்ற கெட்டியாக உள்ள பொருளைக் கடித்துண்ண மனம் நினைத்தாலும் முடியவில்லை; அதனால், மனம் வருந்துகின்றது.

       இளமைக் காலத்தில், பனைநுங்கு, தேங்காய், மாங்காய் போன்று கடினமான தோல் உடைய பொருட்களைக் கூடக் கத்தியால் வெட்டாமல், என் வலிமையான பற்களைக் கொண்டேதான் அவற்றின் தோலினை உரித்துண்பேன். வலிய கணுக்கள் கொண்ட கரும்பினைக் கூட விரைவாக மென்று சுவைத்திடுவேன். அத்தகு வலிமை கொண்டவை. இளமைக் காலத்திலிருந்த என் பற்கள்.சுவைநீர் அடைக்கப் பெற்ற போத்தல்களில் உள்ள மூடிகளை என் சிங்கப் பற்கள் கொண்டே கடித்துத் திறந்துவிடுவேன். (அதனைத் திறக்க இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த மாட்டேன்) அவையும் (சிங்கப் பற்களும்) இன்று அசைகின்றன. அடுத்து வருவது பற்கள் உதிர்ந்தபொக்கை வாய் அழகுதான்!

என்ன விந்தையான மாற்றம் இது? இது எவ்வாறு நிகழ்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். குமரப் பருவத்தில், இளமை எனும் திமிரால் செய்த பிழைகளினால் இந்தநிலை வந்தது எனப் புலம்புகிறார்.

       வயது முதிர்ந்த பற்கள் எல்லாம் விழுகின்ற வயதான ஒருவரின் எண்ண ஓட்டத்தினை மிக அழகாகக்க் கவிமாலையாகப் புனைந்துள்ள திறம் பாராட்டிற்குரியது. முதுமைப் புலம்பல் எனும் இப்படைப்பு சிங்கப்பூர் சிற்றிலக்கியப் போக்கில் ஒரு வித்தியாசமான நடைமுறை சார்ந்த, எதார்த்தமான ஓர் இலக்கியப் படைப்பு எனலாம்.

கவிஞரின் படைப்புகள் ஏற்படுத்தியத் தாக்கம்

       சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்பது மாறி மாறி ஓடும் ஒரு தொடரோட்டமே. இந்தத் தமிழிலக்கியத் தொடரோட்டம் சில காலம் தப்பித் தடம் புரண்ட நிலையில் சரியான பாதையில் ஓடி இழப்பைச் சரிகட்டியவர் பாத்தேறல் இளமாறனாவார்.

       இவருடைய தனித்தமிழ் தாக்கம் இன்றைய புதுக் கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குகிறது. அதன் விளைவாக தாம் படைக்கும் படைப்புகளில் நாட்டு நலன், மொழி நலன் இன ஒற்றுமைப் பற்றியெல்லாம் பரந்துபட்டு எழுதுகிறார்கள்.

       இவர் ஒரு இந்துவாக இருந்தாலும் எம்மதத்தையும் போற்றும் தன்மையாளராக உள்ளார். இவர் படைப்புகளில் காளியம்மனையும், முருகனையும் பாடியதோடு நபிகள் நாயகத்தைப் பற்றியும் பாடியுள்ளார். இத்தகைய பரந்த மனப்பான்மையை இன்றையக் கவிஞர்களும் தம் படைப்புகளில் கைக்கொண்டு வருகிறார்கள்.

கவிஞர் பற்றிச்  சமுதாய ஆர்வலர், கவிஞர், மாணவர் பார்வை

1. சமுதாய ஆர்வலர் பார்வையில்

       தனித்தமிழ் அறிஞர் மெ. சிதம்பரனார் (தமிழ் முரசு துணையாசிரியர்) அவர்கள் இவரைப் பற்றிக் கூறும்போது, ‘பாவலர் இளமாறன் தமது பெயருக்கேற்ற இளமைத் துடிப்பும் செயலூக்கமும் வாய்ந்தவர். நம் குடியரசும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்பதில் அவருக்கு உள்ள ஆர்வம் பெரிது. குடிநலம் பேணும் அந்த ஆர்வம் அவர் பாடல்களில் விரவி நிற்கிறது என்று அவரையும் அவர் பாடல்களையும் பாராட்டுகின்றார்.

நமக்கெல்லாம் நல்வாழ்வு தருகின்ற நம் குடியரசினிடம் தம் நன்றி மறவமையை இளமாறன் பல பாடல்களில் நிலையாக இடம்பெறச் செய்துள்ளார். எடுத்துக்காட்டாக,
 
முன்னம் பிறந்தவள் என்னைக் கவர்ந்தவள்
                                 முத்தினைப் போன்றவளாம் – செங்
                       கன்னற் சுவையினைத் தன்னுள் அடக்கிய
                                 கன்னித் திருமகளாம் – என்
அன்னைத் தமிழோடிங் கின்னும் பிறமொழி
                                ஆட்சியிற் கண்டவளாம் – மிகச்
                     சின்னஞ் சிறியவள் பொன்னின் தரமவள்
                                சிங்கைப் பிறைமகளாம்என்ற பாடலைக் கூறலாம்.

       நம் நாட்டில் தமிழ்ப் பாவலர்களின் ஆற்றல் படிப்படியாக உயர்ந்து வருவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இங்குள்ள பாவலர்கள் தமிழ் நாட்டுப் பாவலர்களுக்குச் சலைத்தவர்கள் அல்லர். அதற்கு பாத்தேறல் இளமாறனே சான்றாகும் என்றும் பாராட்டியுள்ளார்.


2. கவிஞர்கள் பார்வையில்

பாத்தேறல் இளமாறன் பற்றி மூத்தப் படைப்பாளரும் வெண்பா சிற்பியெனப் போற்றப்படுபவருமான இக்குவனம் அவர்கள்

       என்னன்பன் பாத்தேறல் இன்முகத்தே இன்பொன்ற
        நன்மனத்து நாம்நினைக்க நாம்சுவைக்க – இன்பமுறு
        செந்தமிழை நல்குநினை செந்தமிழ்நூல் தந்தானே
        எந்தமிழன் வாழியவே என்று வாழ்துகின்றார். அடுத்த மூத்த எழுத்தாளரும் ஆசியான் விருது பெற்றவருமான கவிஞர் இக்பால் அவர்கள்,

       எத்திக்கும் வாழ்த்துரைக்கும் இன்பத் தமிழ்ப்பாக்கள்
        தித்திக்கப் பாடுகின்ற தேனீயாம் என்று பாராட்டுவர். மேலும், பாத்தேறல் பற்றி பாத்தென்றல் முருகடியான் அவர்கள்

செந்தமிழ்த் திருவே செந்தமிழ்த் திருவே
எந்தமிழ் காக்கும் இன்றமிழ் உருவே
வடிவார் மொழிக்கு வடும்பாயிருக்கும்
வடிவேல் அறிவே! வளர்தமிழ்ச் செறிவே....
பனிக்கூழ் கொடுத்துப் பைந்தமிழ்ச் சிறாரைத்
தனிக்குடை நிழலில் தாங்குந் தங்கமே.... என்று பாரட்டிப் பாடுகின்றார்.

இவர் பற்றித் தமிழகக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கூறியுள்ளதாவது, இன விழிப்பு... மொழி விழிப்பு இரண்டிலும் மரபு சார்ந்த தொன்ம விழிப்புணர்வாளர்கள் சிங்கப்பூர்த் தமிழர்கள். இவர்கள் தமிழியத்தின் வேர்கள் அறுபடுகிற போதெல்லாம் கொதித்தெழும் அழுக்கற்ற தூயவர்கள். மரபுக் கவிதைக்கு இவர்கள் தருகின்ற இன்றியமையாமையும் இதற்குச் சான்று. அவர்களில் ஐயா! பாத்தேறல் இளமாறன் அவர்களும் ஒருவர். இவர் இடையறாத அடைமழையாய்ப் பொழிந்து கொண்டிருப்பதை வாழ்த்தி மகிழ்கின்றேன் என்று வாழ்த்துகின்றார்.

3. மாணவர் பார்வையில்

       சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் படிக்கும் அரப் உசேன் என்ற மாணவ ஆசிரியர் பாத்தேறல் இளமாறன் பற்றிக் கூறும் போது இவருடைய கவிதைகளில் ஒரு சிலவற்றைப் படித்துள்ளேன் இக்கவிதையில் உரை விளக்கமே இல்லாமல் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். அவருடைய பேச்சு மட்டும் வீரியமானது அல்ல அவருடைய கவிதை வரிகளும் வீரியமானவையே. எடுத்துக்காட்டாக,

அருந்தமிழில் பெயரிருக்க
அயல்மொழிப்பேர் சூட்டுகின்ற
பெருந்தவறு சிலரைவிட்டுப் போகட்டும் – தமிழா
பேரன் பேர்த்தித் தமிழ்ப்பெயரால் பொங்கட்டும்! என்ற பாடலடிகள் தமிழுணர்வை தட்டியெழுப்பக் கூடியவை என்று பாராட்டுகின்றார். அதுமட்டுமல்ல அவர் நன்றாக உணவு சமைப்பவருங்கூட நான் அவருடைய உணவகத்தில் பலமுறை சாப்பிட்டுள்ளேன் என்று கூறிகின்றார்.



மாணவர்களுக்கு ஏற்றப் படைப்பு

       இளமாறன் அவர்கள் தம் பாத்தேறல் நூலில் பல்சுவை என்னும் தலைப்பில் உள்ள பைந்தமிழா, கண்ணுறங்கு என்னும் தாலட்டுப் பாடலில் நாட்டுப் பற்றையும், சிங்கப்பூரின் தேசியக் கல்விக் கூறையும் வெளிப்படுத்தும் விதமாகப் பல அரிய செய்திகளோடுச் சேர்த்துப் பாடுகிறார். இதனை
                     ‘கணண்ணுறங்கு கண்ணுறங்கு
                                கண்மணியே கண்ணுறங்கு
               பண்ணரங்க மாடிவந்த
                        பைந்தமிழே கண்ணுறங்கு....
                ....பேரறிஞன் நல்லமைச்சன்
                                பெருமான்நம் லீயைப்போல்
                         சீரமைய வளர்ந்திடஎம்
                              சின்னவனே கண்ணுறங்கு என்ற படல் வரிகளின் மூலம் அறியலாம்.

இப்பாடல் சிங்கப்பூர் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றப் பாடலாகும். ஏனென்றால் சிங்கப்பூர் பல்லின மக்கள் சேர்ந்து வாழும் நாடு. இந்நாட்டின் ஒற்றுமை மிகவும் முக்கியம். எனவே ஒற்றிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் இளமாறனின் இப்பாட்டு ஏற்றதாகும்.
      
முடிவுரை

       மேற்கண்ட ஆய்வின் மூலம் கவிஞரின் படைப்புகளில் அதிகமாக மொழிப் பற்றே மேலோங்கியுள்ளது. மேலும் மொழியின் மீது கறை சேர்ப்பவர்களையோ அல்லது கல்ப்பு சேர்ப்பவர்களையோ அவர் கடிந்து கொள்ளவதில் தயங்காதவராகவே உள்ளார். அதே நேரத்தில் தமிழ்மொழிக்கும் தமிழர்க்கும் சிறப்புச் சேர்ப்பவர்களை மறவாமல் நன்றிக்கு உரித்தாக்குகிறார்.

அடுத்து சிங்கப்பூர் நாட்டின் பெருமைகளையும், நாம் அதன் மீது வைக்க வேண்டிய பற்றுறுதியையும் வலியுறுத்துகிறர். மேலும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுவந்த நம் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வையும், அதற்காக உழைத்த உழைப்பாளர்களையும் போற்றித் துதிக்கின்றார். பல கவிதைகளில் எப்போது எழுதியது, எதற்காக எழுதியது என்று குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும்போது கவிதைகள் முழுவதும் அவருடைய அனுபவத்தின் வெளிப்பாடுகள் போன்றே உள்ளன.


இவருடைய ரசிப்புத் தன்மையும், பெரும்பாலான கவிதை வெளிப்பாட்டு முறைகளும்  சிங்கப்பூரைச் சுற்றியதாக இருந்தாலும், தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு இலக்கிய நிலையிலும் முற்றிலும் அற்றுப் போய்விடவில்லை என்பதையே  பல கவிதைகள் காட்டுகின்றன. இன்றைய உலகமயமாதல் சூழலில் ஒவ்வொரு நாடும், இனமும் கொண்டும் கொடுத்தும் வரும் நிலையில் தாய்த் தமிழகமும், சிங்கையும் கொள்வதிலும் கொடுப்பதிலும் என்ன தவறு இருக்கப்போகிறது?. அந்த வகையில் இவருடைய படைப்புகள் கடல்கடந்தும் தம் மரபிலிருந்து மாறாமல் இருக்கின்றன என்றால் அது மிகையில்லை.

ஒப்படைப்பாளர்  :  கணேசுகுமார் பொன்னழகு
பட்ட மேற்படிப்பு பட்டயக் கல்வி (உயர்நிலை)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.
ஒப்படைப்பு நாள் :  19. 11. 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக