வியாழன், 29 செப்டம்பர், 2016

          சிங்கை மா. இளங்கண்ணனின் வைகறைப் பூக்கள் ஒரு திறனாய்வு 

முன்னுரை

சிங்கப்பூர்த் தமிழிலக்கியங்கள் என்றால் 1965ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட தமிழ் இலக்கியங்களையே குறிக்கும். ஏனென்றால் ‘1965ஆம் ஆண்டிற்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களை மலேசிய இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம் எனப் பிரித்துப் பார்க்க இயலாது; அக்காலத்திற்கு முன்பு வரை இரண்டு நாடுகளும் ஒரே நாடாய் இருந்தன. அதனால், அதுவரை மலர்ந்த இலக்கியத்தை மலேசிய இலக்கியம் என்று குறிப்பிடுதல் சாலப் பொருந்தும்.

சிங்கப்பூர் தனிக்குடியரசான பின்  (1965) அந்நாட்டு இலக்கியப் போக்குகள் மாறின; தனித்தன்மை அடையலாயின. என்றாலும், தொடக்ககால மலேசிய இலக்கியத்துக்கு அடி எடுத்துக்கொடுத்தது சிங்கப்பூரே என்பது குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்றாகும் என்று உரைப்பர்.

சங்கத்தொகுப்பு போல, ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் தொகுத்தளித்த முரசு நெடுமாறன் அவர்கள் கூறுவது யாதெனில்; சிங்கப்பூர் மலேசிய இலக்கியங்கள் அடிமரமும் கிளைகளும் போன்றவை. இடம், காலம் என்ற வேறுபாடுதவிர வேறு எதுவும் இல்லை எனலாம். என்றாலும், அவை அந்தந்த நிலத்துக்குரிய  பிரச்சனைகளைப் பேசுவதில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன என்கிறார்.

      சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளில் குறிப்பாக, நாவல்கள் கதை கூறும் முறையிலும், அதன் கருப்பொருள்களிலும், தனக்கெனத் தனித்தன்மை கொண்டு விளங்குகின்றன. சிங்கப்பூர் படைப்பாளர்களில் ஒருவரான மா. இளங்கண்ணனின் படைப்புகளும் அடங்கும். அத்தகைய படைப்புகளில் ஒன்றான வைகறைப் பூக்கள் என்னும் தலைப்பிலான நாவலைப் பற்றித் திறனாய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

நாவலாசிரியரும் அவர் படைப்புகளும்

      மா. இளங்கண்ணன்சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் சிங்கப்பூரில் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். மா. இளங்கண்ணனின் இயற்பெயர் மா. பாலகிருஷ்ணன். இவர் 1960 ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இவர் ஒரு சிறந்தப் படைப்பாளி! இவரது படைப்புகள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மன்ற வெளியீடான சிங்கா இதழிலும், சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் வெளியாகியுள்ளன.

      இவர் தம் படைப்புகளைச் சிங்கப்பூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் உள்ள பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளியிட்டுப் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள போதிலும், 1982 இல் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மதிப்பு மிக்க தென்கிழக்கு ஆசிய எழுத்து விருதை பெற்ற முதல் தமிழ் எழுத்தாளராவார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1999 இல் தமிழவேள் விருதளித்துக் கௌரவித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் இலக்கிய விருது (2004), கலாச்சார பதக்க விருது (2005) போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூர்ச் சூழலில் சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் அனுபவத்தையும் மிக எதார்த்தமாகத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். வழி பிறந்தது (1975), குங்குமக்கன்னத்தில் (1977), கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன (1978), தூண்டில் மீன் (2001) முதலிய சிறுகதைத் தொகுப்புகளையும் அலைகள் (1976), வைகறைப் பூக்கள் (1990), நினைவுகளின் கோலங்கள் (1993) ஆகிய நாவல்களையும் வெளியிட்டுள்ளார். 

நாவல் விளக்கம்

      நாவல் புதுமை என்ற பொருளைத் தருவது. இது Novella என்னும் இத்தாலிய அடிச்சொல் Novel என்னும் ஆங்கிலச் சொல்லாக பிறந்து பின்னர்த் தமிழுக்கு வந்தது. தமிழில் இதனைப் புதினம் என்று அழைப்பர். கி.பி.16ஆம் நூற்றாண்டில்தான் இச்சொல் ஆங்கில மொழிக்கும் வந்ததென்பர். டெக்காமரான் என்ற நூலின் ஆசிரியரான பொக்காச்சியோ நாவலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

      நாவல் என்ற சொல் தற்பொழுது தமிழ்ச் சொல் போலவே வழங்கப்படுகிறது. நாவல் என்பதற்குப் புதுமை என்று பொருள் உள்ளதால் தமிழில் இதனைப் புதினம் என்றனர். சிறுகதையிலிருந்து வேறுபட்டு, பல நிகழ்ச்சிகளையும் செயல்களையும் தன்னகத்தே கொண்டு கதைமாந்தரின் பண்புகளுக்கு ஏற்ப ஒரு கதையை வளர்த்துச் சென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் உரைநடை இலக்கிய வகையே நாவலாகும். தொடக்கத்தில் இதனை நவீனம், நவீனகம், புனைகதை என்னும் சொற்களால் குறித்து வந்தனர்.

நாவல் கூறுகள்

     ஒரு பொருளை உருவாக்குவதற்குப் பல்வேறு மூலப்பொருள்கள் தேவை. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பொருத்தமுறச் சேர்ப்பதன்மூலம் பொருள் உருவாக்கப்படுகிறது. அதுபோலவே நாவலை உருவாக்க இலக்கியக் கூறுகள் தேவை. அவ்விலக்கியக் கூறுகளை நாவலாசிரியர் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தும் முறையில் நாவலை உருவாக்கிவிடுகிறார். எனவே நாவல் கூறுகள் என்பவை நாவல் உருவாக்கத்திற்குப் பயன்படக் கூடியவை ஆகும். இக்கூறுகளுள் பெரும்பகுதி ஒரு புதினத்தில் இடம்பெறும். இந்தக் கூறுகள் எந்த அளவுக்குச் சிறப்பாகப் படைக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு நாவல் சிறப்பிடம் பெறுகிறது. நாவலில் இடம்பெறும் இலக்கியக் கூறுகளாவன; கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, கதைகூறும்முறை, உரையாடல், பின்னணி, எடுத்துரை உத்திகள், நோக்குநிலை போன்றவைகளாகும்.

நாவலின் கதைச் சுருக்கம்

      வைகறைப் பூக்கள் என்னும் நாவலில் இடம்பெறும் கதை என்னவென்றால், நாவலின் தலைவனான அன்பரசன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடிச் சிங்கப்பூர் வருகிறான். வந்த இடத்தில் அவன் மாமன் தங்கவேலுவின் உதவியால் பிரிட்டிஷ் படைப் பிரிவினர் குடியிருப்பில் பணியாற்றுகிறான். தன் மாமன் மகள் மணிமேகலையைக் காதலிக்கிறான். இதனால், எதிர் பாத்திரமான நல்லையாவால் பல இன்னலுக்கு ஆளாகிறான். இயல்பிலேயே விடுதலை வேட்கை கொண்ட அன்பரசன் சென்னையில் நடந்த விடுதலைப் போராட்டக் கூட்டத்தில் கேட்ட பேச்சால் மேலும் விடுதலை வேட்கையில் பிடிப்பு கொள்கிறான்.    ஆங்கிலேயர்களின் ஆணவப் போக்கைக் கண்டு, தன் தாய்நாட்டின் விடுதலை பற்றிக் கவலைப்படுவதுடன் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவப் படையில் சேர்ந்து போருக்கும் செல்கிறான். போரில் ஜப்பானியர் தோல்விகண்டதைத் தொடர்ந்து மீண்டும் பர்மாவிலிருந்து சிங்கப்பூர் வருகிறான். தன்னைப் போல் மகளிர் படைப்பிரிவில் சேர்ந்து போரில் ஈடுபட்ட தன் முறைப்பெண் மணிமேகலையை மணந்துகொள்கிறான். இதுவே இந்நாவலின் கதைச் சுருக்கமாகும்.

நாவலில் கதைக்கரு

நாவல் எழுத மிக அடிப்படையானது நாவலின் கதைக்கருதான். கதைக்கருவை மனத்தில் பல நாட்கள், பல மாதங்கள் சுமந்து அதனை மனத்துள் விரிவுபடுத்திப் பின்பு நாவலை எழுதத் தொடங்குவது படைப்பாளியின் இயல்பாகும்.மலரில் கலந்த மணம் போன்று கருவானது நாவலின் ஊடே பரவிக்கிடக்கும் ஒன்று. வெளியில் அப்பட்டமாகத் தெரியக் கூடாது. சிந்திக்கச் சிந்திக்கப் புலனாக வேண்டும் என்று எழுத்தாளர் அகிலன் கூறுகிறார்.

நாவல் உருவாக்கத்தில் ஒரு கதைக் கருவை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், நாவலில், ஒரே ஒரு கதைக்கருதான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பல கருக்களைக் கொண்டும் நாவலை அமைக்கலாம்.

ஒரு நாவலின் கதைக் கரு என்பது கதைத் தலைவனை அடிப்படையாகக் கொண்டோ தலைவியை அடிப்படையாகக் கொண்டோ உருவாகலாம். தலைவனோ, தலைவியோ வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் போராட்டங்களையும் சிக்கல்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கருவாக்கி எழுதலாம். தலைவன் பெரும்பங்கு கொள்ளும் போராட்டங்கள் எந்தச் சமூக மாற்றம் ஏற்பட்ட காலத்தில் எழுந்தன என்று விவரிக்கலாம்.

அந்தவகையில், நாவலாசிரியர் மா. இளங்கண்ணன் அவர்களின் வைகறைப் பூக்கள் என்னும் நாவலின் கதைக்கான கரு பொதுவானதாக உள்ளது. இருந்தாலும், அவர் அக்கதையில் தலைவன், தலைவியின் காதலை முதன்மையாகச் சொல்லும்போது வரலாற்று நோக்கு, நுணுக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார். வைகறைப் பூக்கள் என்னும் நாவல் சிங்கப்பூரில் ஏற்பட்ட ஆட்சி அதிகார மாறுதல்களைக் குறிக்கிறது என்றால் அது மிகையில்லை.

இந்நாவல் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் கைதிகளாக அழைத்து வரப்பட்டு இங்கேயே தங்கிவிட்டத் தமிழர்களின் நிலையையும் பிழைப்புக்காகச் சிங்கப்பூர் வந்த தமிழர்களின் நிலையையும், எதார்த்தமாக வெளிப்படுத்துகிறது. மேலும், தமிழர்கள் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து முன்னின்று போராடியதையும் சுதந்திரத்திற்கு முந்திய சிங்கப்பூர் வாழ்க்கையையும் கதைக்கருவாக வைத்துப் பிரதிபலிப்பதில் வெற்றி பெறுகின்றது.

நாவலில் கதைப்பின்னல்

      கதைப் பின்னல், கதைக் கட்டுக்கோப்பு, கதைத்திட்டம், கதைக்கோப்பு ஆகியன ஒரு பொருளைக் குறிப்பன. கதைப்பின்னலை ஆங்கிலத்தில் Plot எனக் கூறுவர். அ. ச. ஞானசம்பந்தம் பிளாட் என்பதற்குச் சூழ்ச்சி, சதி எனப் பொருள் கூறுகின்றார். கதைப்பின்னல் என்பது கதையமைப்பு என்று சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி கூறுகிறது. கதையாசிரியர் நாவலில் பல்வேறு கதை நிகழ்ச்சிகளை ஒன்றனையடுத்து ஒன்றை வைத்து குறிப்பிடுவார். அவ்வாறு கதை நிகழ்ச்சிகளைக் காரண காரிய முறையில் ஒன்றனை அடுத்து ஒன்றை வைப்பது கதைப்பின்னலாகும்.

நாவலின் கதை நிகழ்ச்சி ஒவ்வொன்றும் சுவையாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த நிகழ்ச்சி என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை வாசகனுக்கு உண்டாக்க முடியும். பொதுவாகப் நாவலில் கதைப்பின்னல் வெளிப்பாடு, சிக்கல், முடிவு என்னும் மூன்று தன்மைகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. அவற்றில், வெளிப்பாடு என்பது உரிய முறையில் கதை தொடங்கப்பட்டுச் செல்லும்முறை. சிக்கல் என்பது கதையில் உண்டாக்குவதாகும். முடிவு என்பது கதையில் ஏற்படும் சிக்கலுக்குரிய தீர்வை சொல்வதாகும்.

அந்தவகையில் மா. இளங்கண்ணனின் வைகறைப் பூக்கள் என்னும் நாவல் இயல்பான விறுவிறுப்பான கதைப்பின்னலைக் கொண்டுள்ளது. இக்கதையில் தலைமை மாந்தர்களாகிய அன்பரசன், மணிமேகலை சார்ந்திருக்கும் பொதுச்சூழல், அதில் அவர்கள் அடைந்த நிலை, அவர்கள் செய்யும் முயற்சிகள், அவர்களின் நிலையில் ஏற்படும் மாற்றம், அவர்களின் நோக்கம் நிறைவேறுதல், இடையிடையே அவர்களின் காதல், உறவுநிலைகள் சார்ந்த நிகழ்வுகள் போன்றவை வெளிப்படுகின்றன.

மேலும், எதிர்த் தலைவனாகிய நல்லையாவின் குறுக்கீடுகள், நல்லையா செய்யும் குறுக்கீடுகளிலிருந்து அன்பரசனும் மணிமேகலையும் விடுபடல், இறுதியில் சமுதாய நிலையில் ஏற்படும் மாற்றங்கள், அம்மாற்றங்களினால் கதை மாந்தர்கள் அடையும் புதுநிலை முதலிய நிகழ்வுகளாலும் வைகறைப் பூக்கள் நாவலின் கதைப்பின்னல் அமைந்துள்ளது. இக்கதைப்பின்னல் இயல்பாக அமைந்து சமுதாயம், தனிக்குடும்பம் என இருவேறு பக்கங்களையும் சுவை குன்றாமல் காரண காரியத் தொடர்புடன் வெளிப்படுத்துகிறது.

பாத்திரப் படைப்பின் பண்புகளும் அவற்றின் வகைகளும்

      பாத்திரப் படைப்பு நாவல் கூறுகளில் ஒன்றாகும். இதனை நாவல் எழுத ஆசிரியர் மேற்கொள்ளும் உத்திகளுள் ஒன்றாகவும் கூறுவர். Characterisation என ஆங்கிலத்தில் இதனைக் கூறுவர். நாவல் சிறப்பதற்கு நல்ல பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே ஆகும். பாத்திரங்களின் மூலம் வாசகனுக்கு இன்னொரு உலகைப் படைப்பாசிரியர் காட்டுகிறார்.

      நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வகையை மேலைநாட்டார் பிரித்துக் கொள்வதைத் தமிழிலும் பின்பற்றுகின்றனர். தமிழில் முதன்மைப் பாத்திரம், துணைப் பாத்திரம் என இரு வகையாகக் கொண்டு புதினங்களை ஆய்வு செய்து வருகின்றனர். எனினும் திறனாய்வாளர்கள் பலரும் மேலைத் திறனாய்வாளர் கூறும் பாத்திர வகைப்பாட்டினையே மேற்கொள்கின்றனர். இ. எம். ஃபாஸ்டர் என்பார் தம்முடைய திறனாய்வில் முழுநிலை மாந்தர், ஒருநிலை மாந்தர் என இருவகைப் பாத்திரங்களைக் குறிப்பிடுகின்றார்.

முழுநிலை மாந்தர்

      முழுநிலை மாந்தர் என்போர் நாவலின் தொடக்க முதல் முடிவு வரை கதைச் சித்தரிப்பில் இடம்பெறுவர். இப்பாத்திரங்கள் முழுமையான வளர்ச்சியுடையனவாய் அமையும். ஆழமான குறிக்கோள் கொண்டவர்களாகவும் இம்மாந்தர்கள் இருப்பர். நாவலைப் படித்து முடிக்கும் வாசகன் மனத்தில் இப்பாத்திரங்கள் அல்லது கதை மாந்தர்கள் நிழலாடிக் கொண்டே இருப்பர். நாவலைப் படிக்கும் வாசகன் தானும் அப்பாத்திரத்தைப் போலச் சிறப்புடைய மனிதனாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் திகழும்படி இக்கதை மாந்தர்கள் படைக்கப்படுகின்றனர். முழுநிலை மாந்தர்கள் நல்ல குணச் சித்தரங்களாக விளங்குகின்றனர். இவர்கள் உருவத்தாலும் உள்ளத்தாலும் மெல்ல மெல்ல வளர்ந்து முழுமை அடைகிறார்கள். இவர்களுடைய தோற்றம், உள்ளம், உணர்ச்சி, கொள்கை, சிந்தனை யாவும் குறைவற்றுக் காணப்படும்.

அந்தவகையில் மா. இளங்கண்ணன் தம் வைகறைப் பூக்கள் நாவலில் அன்பரசன், மணிமேகலை பாத்திரங்களை மிக அழகான படைப்பாக உருவாக்கியுள்ளார். இவர்களுடைய பாத்திரப் படைப்பு நாவலில் ஆரம்பம் முதல் இறுதிவரைக் காட்டப்படுகின்றன. இவர்களுக்குள் ஏற்படும் காதலை வெளிப்படுத்தும் போதும் பின்னர், கொண்ட கொள்கைக்காகப் பிரியும்போதும் தமிழ்மரபை மீறாமல் அதற்கு உட்பட்டே காட்டுகின்றார். இவர்களுடையப் பாத்திரப் படைப்பைப் படிக்கும்போது காதலையும் வீரத்தையும் போற்றிய சங்க காலத் தமிழ்க் காதலர்களைப் பார்ப்பது போலவே உணரமுடிகிறது. மேலும், தியாகமும் தீரமும் கொண்ட வரலாற்று எதார்த்தத்தோடு இணைந்தவர்களாக இவ்விரு மாந்தர்களும் படைக்கப்பட்டுள்ளனர். நாவலில் வரும் பிற மாந்தர்களுடன் ஒப்பிடுகையில் தெளிவான, உறுதியான முழுநிலை மாந்தர்களாக அன்பரசன், மணிமேகலை பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாவலின் முழுநிலைப் பாத்திரங்களுள் ஒருவன் அன்பரசன். அவன், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு சென்னையில் நடந்த கூட்டத்தில் வெள்ளைக் குல்லா அணிந்திருந்த விடுதலை வீரர் ஒருவர் பேசிய பேச்சைக் கேட்கிறான். கூட்டத்தில் அவ்வீரர் நம் தாய்த்திரு நாட்டில் வெள்ளையர்கள் இருக்கும்வரை நாம் முன்னேற முடியாது. நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வும், வறுமையும் ஒழியாது! என்று பேசுகிறார். அப்பேச்சை அன்பரசன் என்றும் நினைவில் கொண்டு தாய்நாட்டின் விடுதலைக்குத் தன் உயிரையும் தரச் சித்தமாய் இருக்கிறான்.

அன்பரசன் சிங்கப்பூருக்கு வரும்போது கப்பலில் வரும் சக பயணியர்கள் அடையும் துண்பத்தைக் கண்டு மனம் வருந்துவதன்மூலம் அவனுடைய இரக்க குணத்தை அறிய முடிகிறது. மற்றொரு சூழலில் முத்தையாவிடம் பேசுகிறான். அப்போது பித்தம் ரொம்ப இருந்தா தலை தூக்கவே முடியாது என்று முத்தையா கூறுகிறார். அதற்கு, அன்பரசன் நீங்க சொல்றதும் சரிதான். பித்தம் இருப்பதால்தான் நாம் இன்னும் தலை தூக்கமுடியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தோ வந்த வெள்ளையர் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறான் இதிலிருந்து அவன் எவ்வளவு விடுதலை வேட்கையுடன் இருக்கிறான் என்பது வெளிப்படுகிறது.

அன்பரசன் போர்க்காலக் கொடுமைகளின் போதும் தவறான வழிகளில் நடக்கத் துணியாதவனாகவும் நல்லையாவினால் ஆபத்துகள் நிறைந்த வேளையிலும் அவனுக்கு உதவும் குணமுடையவனாகவும் இருக்கிறான். மேற்கண்ட பண்பு நலன்கள் வெளிப்படுமாறு நாவலில் இப்பாத்திரம் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்பாத்திரம் அக்காலத்தில் ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட இளைஞனிடத்தில் இயல்பாக இருந்த உணர்ச்சி, நாட்டுப்பற்று, வீரம், காதல் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. அன்பரசன் நல்ல குறிக்கோள் பலவற்றைக் கொண்டு திகழ்வதால் குறிக்கோள் பாத்திரமாகக் கொள்ளலாம்.

நாவலின் மற்றொரு முழுநிலை பாத்திரம் மணிமேகலை. அவள் தன் மாமா மகன் அன்பரசன் சிங்கப்பூருக்கு வரப்போகிறான் என்பதை அறிந்து மனத்துக்குள் காதலை வளர்த்துக்கொண்டாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் தமிழ் பண்பாட்டை மதிக்கும் பெண்ணாகவே காட்சியளிக்கிறாள். எதிர் பாத்திரமான நல்லையாவால் அன்பரசனுக்கு ஆபாத்து வருமோ என எண்ணி ஒவ்வொரு நாளும் பயப்படும்போது சராசரிப் பெண்ணாக விளங்குகிறாள்.

அன்பரசனைக் காதலித்தாலும் நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்று வீரசாகசங்கள் பலவற்றைச் செய்தாலும் ஆணவம் சிறிதுமின்றி அடக்கமும் நளினமும் கொண்ட குடும்பப் பெண்ணாகவே விளங்குகிறாள். நாட்டு விடுதலைக்குப் பிறகே திருமணம் செய்துகொள்கிறாள். இவளிடத்துச் சங்ககாலத்துப் பெண்களிடம் காணப்பட்ட வீரமும் காதலும் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

ஒருநிலை மாந்தர்

1. இயல்பு மாறாத ஒருநிலை மாந்தர் படைப்பு

    ஒருநிலை மாந்தர், ஒரேநிலை மாந்தர், மாறாப் பாத்திரம் எனப் பல பெயர்களால் இப்பாத்திரம் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நிலை மாந்தர் கதையில் தொடர்ந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. அப்படியே வந்தாலும் தொடக்கத்தில் இருந்தது போலவே காணப்படுவர். சில திரைப்படங்களில் தந்தை வேடத்தில் சிலர் வருவர். இறுதி வரை தந்தைக்குரிய சில நடத்தைகளே இருக்கும். எந்த மாற்றமும் தெரியாது. இப்பாத்திரங்களிடம் எந்த விதமான மனவளர்ச்சியும் பண்பு நலத்தின் வளர்ச்சியும் காணமுடிவதில்லை. அவர்களுக்கே உரிய சில மாறாத தனித்த போக்குகள் அவர்களிடம் காணப்பெறும்.

    அந்தவகையில், ‘வைகறைப் பூக்கள் என்னும் நாவலில் இடம்பெறும் தங்கவேலுவின் பாத்திரப் படைப்பு தம் வாழ்க்கையை நடத்துவதற்காக எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சி அதிகராத்திற்கு அடிபணியும் இயல்பைப் பெற்ற சராசரிக் குடிமகனின் அனைத்து இயல்புகளையும் கொண்ட மாந்தராகப் படைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தபோது இவர் ஆங்கில அதிகாரியிடம் தோட்டக்காரராகப் பணி செய்கிறார். இவர், தம் பணிவையே மூலதனமாக வைத்துத் தம் எதிர்கால மாப்பிள்ளைக்குப் பிரிட்டிஷ் படைப்பிரிவில் வேலைவாங்கிக் கொடுக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஜப்பானிய ஆட்சியாளர்க்கும் அடிபணிந்து, குடும்பத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் குடும்பப் பாசமும், கடமை உணர்வும் கொண்ட சாதாரண மனிதராக விளங்குகிறார். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என்று எதைப் பற்றியும் பொருட்படுத்தாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று, தம் வாழ்க்கையை ஓட்டிச் செல்லும் தங்கவேலு நடப்பியல் பாத்திரத்திற்கு அதாவது, ஒருநிலை மாந்தர் படைப்புக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.

2. முரண் பண்பு கொண்ட ஒருநிலை மாந்தர் படைப்பு

      மேலும், ஒருநிலை மாந்தர்கள் ஆழமான பண்பின் பிரதிபலிப்பு ஆகாமல் ஏதேனும் வேடிக்கையான இயல்பினை உடையவராய் இடையிடையே வந்து போவர். வேடிக்கையாக எதையாவது ஒன்றைச் செய்துவிட்டுப் போவது, விபரீதமாக ஒரு கெடுதலைச் செய்து விட்டுப் போவது, மனிதர்களிடம் காணப்படும் மிகத் தீய இயல்பின் வடிவமாக வந்து செயல்படுவது போன்ற தன்மைகள் ஒருநிலை மாந்தர்களிடத்துக் காணலாம்.

      அந்தவகையில், ‘வைகறைப் பூக்களில் இடம்பெறும் நல்லையா இயல்பான அதே நேரத்தில் ஆரவாரமற்ற முரண் பண்பு கொண்ட மாந்தராகப் படைக்கப்பட்டுள்ளான். நல்லையா தம் இளம் வயதிலிருந்து பழகி அறிந்த மணிமேகலை தன்னை விரும்பாது அன்பரசனை விரும்புகிறாள் என்பதை அறிந்ததும் கோபம் கொள்கிறான். அவன் மணிமேகலைக்கும் அன்பரசனுக்கும் பல கெடுதல்களைச் செய்கிறான். மேலும், அவன் தொடர்ந்து தன்னைக் காதல் செய்யுமாறு வற்புறுத்துவதன்மூலம் அவளது வெறுப்பிற்கு ஆளாகிறான். இந்திய தேசிய படையில் சேர்ந்து போர்க்களத்திற்குச் செல்லும்போது அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஆபத்தில் அன்பரசனால் காப்பாற்றப்படுகிறான்.

அன்பரசனுக்கு எவ்வளவோ கெடுதல்கள் செய்தாலும் அவற்றை நினையாது தனக்குச் செய்த உதவிகளை எண்ணித் திருந்துகிறான். ஆனால், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்னும் பழமொழிக்கேற்ப அவன் போர்க்களத்திலிருந்து திரும்பியவுடன் மீண்டும் மணிமேகலை மீது காதல் தொல்லைக் கொடுக்கிறான். பின்னர்த் தன் தாய் நாகம்மாள், அன்பரசன் முயற்சியால் திருத்தபடுகிறான். அவன், தன் செயலால் திருமணம் நடக்காமல் பாதிக்கப்பட்ட கண்மணியை மணந்துகொள்கிறான். நல்லையாவின் முரண் பண்பு கொண்ட இச்செயல்களால், அன்பு, பாசம், பொறாமை, வஞ்சக எண்ணம் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக எடுத்துக்காட்டி மற்றொரு நடப்பியல் மாந்தராக நாவலாசிரியர் காட்டுகின்றார்.

3. குறிக்கொள் கொண்ட ஒருநிலை மாந்தர் படைப்பு

மா. இளங்கண்ணன் இந்நாவலில் படைத்த பாத்திரங்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஒருநிலை மாந்தர் அன்பரசனின் அரசியல் வழிகாட்டியான அழகப்பனாகும். இவர் தான் பிறந்த நாடாகிய இந்தியநாட்டு விடுதலையில் ஆர்வம் கொண்டு நேதாஜியின் தொண்டராக விளங்குகிறார். இருப்பினும்,  அழகப்பன் காந்தியவாதியாகத் தம் கொள்கைகளை அன்பரசனுக்கு ஊட்டுகிறார்.

அழகப்பன் பிழைப்புக்காக சிங்கப்பூரில் இருந்தாலும், இந்திய நாட்டின் விடுதலை அடையவேண்டும் என்ற எண்ணத்தை எந்நேரமும் இதயத்தில் ஏந்தி அதற்காக, நேதாஜி படையில் சேர்ந்து போர்ப்படை அணித் தலைவராகத் பணியாற்றுகிறார். தம் அடிமை வாழ்விலும் உரிமை உணர்வு கொண்ட குறிக்கொள் பாத்திரமாக அழகப்பன் படைக்கப்பட்டுள்ளார். இப்படைப்பு இரண்டாம் உலகப் போருக்கு முன் தமிழர்கள் தாய்நாடாம் இந்திய நாட்டின்மீது கொண்டிருந்த பற்றையும் விடுதலை உணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.

உரையாடல்

      உரையாடலைப் பாத்திரப் பேச்சு என்றும் கூறுவர். நாவலில் உரையாடல் என்பது இரு பாத்திரங்களுக்கு இடையில் நிகழும் பேச்சு நிகழ்வைக் கதையில் எழுதிக் காட்டுவதாகும். பாத்திரப் படைப்பின் சிறப்பிற்கு உரையாடல் முக்கியமாக அமைகிறது. ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்துடன் வாய்விட்டுப் பேசுவதாக எழுதிக் காட்டுவது நாவலில் இடம்பெறும் உரையாடலாகும்.

   பாத்திரங்களின் பேச்சின் மூலம் அப்பாத்திரங்களின் பண்பு நலன்களை அறியமுடிகிறது. மேலும், பண்பு நலன்களையும் உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டி கதையையும் சுவை குன்றாமல் நடத்திச் செல்வதில் உரையாடலுக்குப் பங்குண்டு. உரையாடலைப் படிக்கும் வாசகன் பாத்திரங்களுடன் நெருக்கமாக முடிகிறது. பாத்திரங்களின் மனநிலை, உணர்ச்சி, உள்நோக்கங்கள் ஆகியவற்றை வெளிக்கொணர்வது உரையாடலின் பணி ஆகும்.

      அந்த வகையில் மா. இளங்கண்ணனின் வைகறைப் பூக்கள் நாவலில் வரும் உரயாடல்கள் பெரும்பாலும் மக்களின் பேச்சு மொழியில் அமைந்துள்ளன. பாத்திரங்கள் உரையாடும்போது இடையிடையே பழமொழிகளைப் பயன்படுத்தியிருப்பது ஆசிரியரின் அனுபவ வெளிப்பாட்டையும் மக்கள் தொடர்பையும் காட்டுகிறது. மேலும், இந்நாவலில் ஆங்காங்கே வரும் உரையாடல்களில் இருப்பொருள் தொணிக்கப் பேசுவது நாவலை ஆர்வமுடன் படிப்பதற்கு உதவுகிறது.

இருபொருள் உரையாடல்

     பித்தம் ரொம்ப இருந்தா தலை தூக்கவே முடியாது என்று முத்தையா கூறியதற்கு, அன்பரசன் நீங்க சொல்றதும் சரிதான். பித்தம் இருப்பதால்தான் நாம் இன்னும் தலை தூக்கமுடியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தோ வந்த வெள்ளையர் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்று கூறுவதிலிருந்த அன்பரசனின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் மற்றொரு பொருளைக் காட்டுகிறது. 

நாவலின் மற்றொரு இடத்தில் கோடாரிக் காம்பு பார்க்க அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது என்றான் அன்பரசன். அதற்கு, ‘ஆமாம் அழகாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் தம் இனத்தையும் வெட்டி வீழ்த்தப் பயன்படுகிறதே என்றார் அழகப்பன். இருவருடைய உரையாடலிலும் பொருள் நயம் மிளிர்வதைக் காணமுடிகிறது.

நாவலின் மற்றொரு இடத்தில் அன்பரசனுக்கும் மணிமேகலைக்கும் உடனே திருமணம் செய்து வைக்கச் சொன்ன நாகம்மாளிடம், வள்ளியம்மை எதுக்கும் எங்க வீட்டுக்காரரிடம் கேட்டுப்பார்க்கிறேன் என்று கூறுகிறாள். அதற்கு, நாகம்மாள் எல்லாம் நீ சொல்வதில்தான் இருக்கு நெருப்பையும் பஞ்சையும் கிட்ட வச்சிருக்கிறது நல்லது இல்லே! ஊர் ஒரு வகையாகப் பேசத் தொடங்கும் என்ற உரையாடலிலும் நெருப்பையும் பஞ்சையும் கிட்ட வச்சா பத்திக்கொள்ளுமா? அதில் தண்ணிய ஊத்தி வச்சா என்ற நல்லையாவின் உரையாடலிலும் படைப்பாசிரியரின் படைப்பாற்றல் விளங்கும்.

அன்பரசன் மணிமேகலைமேல் நீரைத் தெளித்தான் அப்போது தண்ணிய மேலே தெளிக்காதீங்க என்றபோது, அன்பரசன் பூமேல் நீர் தெளித்தாள் பூவுக்குத்தானே நல்லது. இந்த வெயில் நேரத்தில் வாடாமல் வதங்காமல் மணம் பரப்பிக் கொண்டு இருக்கும் என்றான். அதற்கு மணிமேகலை அதுவும் அளவோடு தெளித்தால்தான் வாடாமல் இருக்கும். அளவுக்கு மிஞ்சித் தெளித்தால் பூ அழுகிப் போய்விடும் தெரியுமா? தடுமன் பிடித்தால் என்ன செய்யுறது என்று இருபொருள்பட பேசுவது ரசிக்கத்தக்கது.

அன்பரசன் வேலையில் காட்டும் வேகத்தையும் சுறுசுறுப்பையும் கண்ட அழகப்பன் இன்னைக்கு ஒரே கொண்டாட்டமாய் இருக்கிறாயே என்ன காரணம்? நாடு விடுதலை அடையப் போகுதா என்று இருபொருள்பட பேசினான்.

நல்லையா வருவதைக் கண்ட மணிமேகலை உனக்குக் குளிர்விட்டுப் போச்சா? இன்னும் கொஞ்ச நேரத்தில எங்க வீட்டு சேவல் வரும். அப்புறம் உன்பாடு திண்டாட்டம்தான் என்று கூறுவதும் அதற்கு நல்லையா எங்க வீட்டுச் சேவலுக்கும் இரை போடுறீயா? போடு போடு அதுவும் உன்னுடைய சேவல்தான் என்று கூறுவதும் இருபொருள் உள்ள உரையாடல்தான்.
    
நாவலின் நடை

      எழுத்தாளரின் தனித்தன்மையைக் காட்டுவது அவர் நாவலில் கையாளும் நடை என்பர். நமது தமிழ்ப் புதினங்களில் கையாளப்பட்டு வரும் நடை காலந்தோறும் படைப்பாளர்க்குத் தக்கபடி மாறி மாறி வந்துள்ளது. தனித் தமிழில் எழுத வேண்டும் என்னும் கொள்கையுடன் மு.வ., மறைமலையடிகள் போன்றோர் எழுதினர். மு.வ.விற்குப் பின்னர் நடை அமைப்புப் பெரிதும் மாறிற்று. புதினங்களில் பல்வேறு நடை தோன்றிற்று. மிகுந்த தூய நடை இல்லாமல் தரப்படுத்தப்பட்ட மொழியைக் கையாண்டவர் கல்கி. ஜெயகாந்தன் போன்றவர்கள் தமிழ், மற்றக் கிளை மொழிகள், ஆங்கிலம் முதலிய மொழிநடையைக் கலந்து எழுதினர்.

   அந்தவகையில், நம் நாவலாசிரியரும் விசிப்பலகை, அருந்தகம், சிற்றுந்து, சுமையுந்து, ஒப்பம் இட்டு, சமூராவாளில் போன்ற சொற்களைப் பயன்படுத்துவார். பெரும்பாலும் இந்நாவல் தமிழக எழுத்தாளர்களான அகிலன், கல்கி, பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் எழுத்துகளையும் நடையையும் உள்வாங்கி எழுதியதுபோல் அமைகிறது. மேலும் வட்டாரச் சொற்களும், வழக்குச்சொற்களும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது. நாவல் பாத்திரங்களைக்கண்முன் பார்ப்பதுபோலவே இதன் நடை அமைந்துள்ளன.

நாவலில் பின்னணியும் சூழலும்

      ஆங்கிலத்தில் Settings, Background என்னும் சொற்கள் தமிழில் பின்னணி என்றும் பின்புலம் என்றும் சூழல் என்றும் சுட்டப்பெறுகின்றன. பின்னணி என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு கருத்தை விளக்குவதற்குத் தேவையானவற்றைக் காட்சிப் பொருளாகவோ அல்லது கருத்து விளக்கமாகவோ அமைப்பதாகும். நாவலைப் பொருத்தவரையில் பின்னணி என்ற சொல் பூகோளரீதியான பின்னணியை – அதாவது – கதை நிகழும் நாடு, இடம் முதலியவற்றையும் காலம், பருவம் முலியவற்றையும் சமுதாயச் சூழ்நிலையையுமே குறிக்கும்.            அந்தவகையில் மா. இளங்கண்ணன் அவர்களின் வைகறைப் பூக்கள் என்ற நாவல் சிங்கப்பூர், பிரிட்டிஷாராலும் ஜப்பானியராலும் அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்நாவலில் சிங்கப்பூரின் இடப் பின்னணி ஒரு வரலாற்றுக் கற்பனையாக அமைந்து, பின்னர்க் காலப் பின்னணியோடு கலந்துவிடுகின்றது.

     வைகறைப் பூக்கள், சிங்கப்பூரை அடிமை கொண்டிருந்த அயல்நாட்டு ஆட்சியாளரின் கீழ்த் தமிழர்கள் பட்ட துயரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வைகறைப் பூக்கள் நாவல் நாட்டு அடிமை நிலையையும் மக்களின் வாழ்க்கை நிலையினையும் எடுத்தியம்பும் நாவலாக உள்ளது.

எடுத்துரை உத்திகள்

எடுத்துரை என்பது ஆசிரியர் கதை கூறும் முறை ஆகும். இது நாவல், சிறுகதையில் பயன்படுகிறது. கதையை யார் கூறினால் பொருத்தமாக அமையும் எனக் கருதி அவர்கள் கூற்றால் கூறுதல் கதை கூறும் முறை ஒரு நாவலில் அடிக்கடி மாறக் கூடாது ஆசிரியரே கூறுதல் பெரும்பான்மையாக உள்ளது. ஆசிரியர் தன்மை இடத்திலிருந்து தானே ஒரு பாத்திரமாக அமைந்து கூறல். ஆசிரியர் தனியே படர்க்கை நிலையில் நின்று தான் பார்த்தது போலக் கதையைக் கூறல் பாத்திரங்களே கதையைக் கூறிச் செல்வதாக அமைத்தல் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் மாறிமாறிக் கதையைச் சொல்லிக் கொண்டு செல்லுதல் நனவோடை முறையில் ஒரு பாத்திரம் தன் பழங்கதையை எண்ணிப் பார்ப்பது போல் கூறுதல் முக்கிய இடமறிந்து கதையைத் தொடங்கல் முதலில் கதையையும் இறுதியில் முடிவையும் கூறல் கதையை நடுப்பகுதியில் தொடங்கி நனவோடை மூலம் முதல் பகுதியைக் கூறல்; நடுவில் உச்சகட்டத்தைக் கூறல் அல்லது இறுதியில் கூறல் ஆகியன கதை சொல்வதற்கு ஆசிரியர் பயன்படுத்தும் உத்தி எடுத்துரை உத்தியாகும்.

அந்தவகையில் நாவலாசிரியர் மா. இளங்கண்ணன் அவர்கள் அந்தந்தப் பாத்திரங்களே பேசுவதுபோலவும் கதை கூறுவதுபோலவும் உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், மாந்தர்கள் பேசும் பேச்சுகளில் படிம உத்தியையும் இறைச்சிப்பொருள்உத்தியையும்பயன்படுத்தியுள்ளார். இந்நாவலில் வரும் பெரும்பாலான உரையாடலுக்கு பழமொழிகளையும் அறநெறிகளையும் பயன்படுத்தியிருப்பது படிப்பவருக்கு இன்பம் ஊட்டுவதாக அமைந்துள்ளது.

நாவலின் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன் அந்த அத்தியாயம் சொல்ல வரும் நிகழ்வுகளுக்கு ஏற்ற ஒரு பாரதியார் பாடல் வரிகளைக்கொண்டே தொடங்குகிறார். இது ஒரு நல்ல உத்திமுறையாகும்.

வைகறைப்பூக்களில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள்

பிரிட்டிஷ் காலனித்துவம் ஜப்பானிய ஆதிக்க காலம் முதல் தற்காலச் சூழல்வரை சிங்கப்பூர்த் தமிழர்களது வரலாற்றின் பல்வேறு காலத்தை இவரது படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, இரண்டாம் உலகப்போர் காலங்களில் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஏற்பட்டப் பின்னடைவைப் பயன்படுத்தி, ஜப்பான் உதவியோடு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய அரசு மற்றும் அதன் படை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளும் இந்நாவலில் காணப்படுகின்றன.

இந்நாவலில் 1942 முதல் 1946 வரயிலான காலங்களில் நடந்த நிகழ்வுகளைக் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்ற வரலாற்று உண்மையையும் வெளிப்படுத்துகிறது.

தென்கிழக்காசிய நாடுகள் இரண்டாம் உலகப் போரை நேரடியாக அனுபவித்த வரலாற்றையும் இந்நாவல் வெளிப்படுத்துகிறது.

சிங்கப்பூர், பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து ஜப்பானியர் அதிகாரத்திற்கு உட்பட்ட காலங்களையும் அக்காலங்களில் சிங்கப்பூர் மக்கள் எதிர்கொண்ட வாழ்க்கை வரலாற்றையும் இந்நாவலில் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் மற்றும் ஜப்பானியர் அணுகு முறைகளை கூலிகளாக வாழும் தமிழர்கள் எதிர்கொண்ட முறைமைகளை இந்நாவல் வரலாறாகப் பதிந்துள்ளது.

சமகால வரலாற்று நிகழ்வுகளை புனைவாக்கி அதில் தமிழர்களின் பங்கேற்பை ஆவணப்படுத்தும் இந்நாவல் நேதாஜியால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் உருவாக்கிய இந்திய சுதந்திர அரசு நிகழ்வுகளையும் வரலாறாகப் பதிந்துள்ளது.

போர் நடைபெற்ற காலங்களில் கையில் காசு இருந்தாலும் உணவுப் பொருளுக்காக அலையும் மக்களையும் வரலாறாகப் பதிந்துள்ளது.

ஜப்பானியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் சிங்கப்பூருக்கு சோணந்த் என்ற பெயர் சூட்டப்பட்டது என்ற வரலாற்றையும், அதற்கு காரணம் குயின் மேரி என்னும் கப்பலில் சோணந்த் என்னும் ஜப்பானிய வீரர் இடுப்பில் குண்டுகளைக்  கட்டிக்கொண்டு குதித்த வரலாற்றையும் இந்நாவல் பந்துள்ளது.

ஜப்பானியர்களுக்கு பொய் பேசுவது, திருடுவது பிடிக்காது. அவர்களிடம் பொய் பேசினாலோ திருடினாலோ அவர்கள் தலையை வெட்டி கம்பத்தில் சொருகி ஊர் முச்சந்தியில் நட்டு வைப்பார்கள் என்ற வரலாற்றையும் பதிவு செய்துள்ளது.

நாவலின் வாயிலாக அறியலாகும் செய்திகள்

அவருடைய படைப்பான இந்நாவலில் பிரிட்டிஷ் காலனித்துவம் ஜப்பானிய ஆதிக்க காலம் முதல் தற்காலச் சூழல்வரை சிங்கப்பூர்த் தமிழர்களது வரலாற்றின் பல்வேறு காலத்தை இவரது படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. 

சாதாரண மக்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் சாதனைகளையும் தமது கதைகள் மூலம் எடுத்துச் சொல்லும் இளங்கண்ணன், உரிமை இழந்த அவர்களது குரலாக ஒலிப்பதையும் காணமுடிகிறது.

      இந்நாவல் சிங்கப்பூர் சமூகத்தையும் சாதாரண மக்களின் இன்ப துன்பங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகள், மனப் போக்குகள், கால மாற்றங்கள், சிந்தனை மாற்றங்கள் போன்றவற்றையும் அறிய முடிகின்றன.

சிங்கப்பூர் என்ற தீவின் வரலாற்றுக்குள் தமிழர்கள் நிகழ்த்திய ஊடாட்டங்கள். காலனியச் சூழலில் இந்திய தேசியத்தை, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் எதிர்கொண்ட தன்மை, தமிழகத்தின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், சிங்கப்பூர் மண்ணில் வடிவம் பெற்றுள்ள முறைமை. தமிழகத்தின் வெகுசன வாசிப்பு மொழி இந்நாவலில் ஏற்படுத்தியுள்ள செல்வாக்கு போன்றவற்றை அறியமுடிகிறது.

முடிவுரை

மேற்கண்ட ஆய்வின் மூலம் வைகறைப் பூக்களில்அதிகமாக சிங்கப்பூரின் வரலாற்றுப் பதிவுகளும் மக்களின் சராசரி வாழ்க்கை முறைகளுமே மேலோங்கியுள்ளது. அடுத்து சிங்கப்பூர் நாட்டின் சூழலையும் பெருமைகளையும், நாம் அதன் மீது வைக்க வேண்டிய பற்றுறுதியையும் வலியுறுத்துகிறது. மேலும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுவந்த நம் முன்னோர்களையும் பதிவு செய்துள்ளது.

மேலும், ரசிப்புத் தன்மையும், பெரும்பாலான கதை நிகழ்வுகளின் வெளிப்பாட்டு முறைகளும்  சிங்கப்பூரைச் சுற்றியதாக இருந்தாலும், தாய்த் திருநாட்டின்மீது கொண்ட பற்றையும் அது அடையவேண்டிய விடுதலையையும் ஆங்காங்கே ஆசிரியரின் வெளிப்பாடாக உணர்த்துகிறது. மேலும் இந்நாவலில் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு முற்றிலும் அற்றுப் போய்விடவில்லை என்பதையே  பல கதை நிகழ்வுகள் காட்டுகின்றன. இதன்மூலம் சிங்கை நாவல் ஆசிரியர்களில் நடப்பியல் பாத்திரங்களைப் படைப்பதிலும் துணைப் பாத்திரங்களைப் படைப்பதிலும் கைதேர்ந்தவராக மா. இளங்கண்ணன் விளங்குகிறார் என்றால் அது மிகையில்லை.


ஒப்படைப்பாளர்  :   கணேசுகுமார் பொன்னழகு
பட்ட மேற்படிப்பு பட்டயக் கல்வி (உயர்நிலை)
தேசியக் கல்விக் கழகம்
                             சிங்கப்பூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக