செவ்வாய், 20 செப்டம்பர், 2016

என் குறிக்கோள் 

உலக்குப்பெறா ஊர்க்கதையை உவமையோடு உருவகமாய்

      ஊதியூதிப் பெரிதாக்க உண்மையில்லாப் பேச்சோடு

விலக்கமற்ற வினாவொன்றும் விரைந்தோடி வருவதனால்

விலையில்லா நன்மதிப்பு வீணாகிப் போவதுண்டு


இலக்கென்றால் என்னவென்று இளக்காரம் செய்ததோடு

இனம்புரியா வினாக்களையும் என்னுள்ளம் கேட்டதுண்டு

இளந்தமிழின் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் கருத்துகளால் 

எனக்கான இலக்குகளை எதுவென்று அறிந்துகோண்டேன்


செந்தமிழின் செழுமையினைச் சீராகச் செதுக்கிவைத்துச்

      செம்மாந்து நிற்கின்ற சீராளர் இலக்கியத்தைச்

சிந்தாமல் சிதறாமல் சிறப்புடனே சொல்லிடவே

செந்தமிழைக் கற்பிக்கும் சீரியபணி யாற்றிடுவேன்


மயிலாடும் பாறையிலும் மலராடும் சோலையிலும்

      மதிமயங்கிச் சுற்றுகின்ற மாலைநேர வேளையிலும்
 
வெயிலோடும் மழையோடும் உறவாடும் உறவுகளை

வெள்ளந்தி மனத்தோடு விரும்பித்தான் பாடிடுவேன்


தமிழ்மொழியின் மூச்சாகத் தயக்கமில்லாப் பேச்சாகத்

தகையோர்கள் படைத்திட்ட தரமான படைப்போடு

தமிழன்னை அழகுபெறத் தனித்தமிழில் படைப்புகளும்

      தரமான ஆய்வுகளும் தயங்காது செய்திடுவேன்


உயர்வான படைப்பினிலே ஒளிந்திருக்கும் உண்மைகளை

உவமையோடு உருவகமாய் ஒப்பிட்டுக் காட்டிடவே

பயன்மிக்க ஆய்வுகளைப் பார்போற்றும் படைப்புகளாய்ப்


படைப்பதோடு அல்லாமல் பகிர்ந்திடவும் வழிசெய்வேன்

                                                                             கணேசுகுமார் பொன்னழகு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக