செவ்வாய், 20 செப்டம்பர், 2016

தமிழே தமிழே முத்தமிழே

தமிழே தமிழே முத்தமிழே

      தரணி போற்றும் தாய்த்தமிழே

அமிழ்தம் உந்தன் மொழியாகும்

      அதுவே எங்கள் விழியாகும்

நிமிர்ந்த நெஞ்சம் யாம்பெற்று

      நேரிய வாழ்வு வாழ்ந்திடவே

தமிழில் வந்து உதித்ததனால்

      தகையோர் போற்ற நடக்கின்றாய்


குவித்து வைத்த இலக்கியங்கள்

      கூறும் நல்லக் கருத்துகளால்

புவியில் உள்ளோர் உன்புகழைப்

      போற்றிப் பாடி வரவேற்றும்

நவிலும் வார்த்தை அழகோடு

      நாளும் உன்னை வாழ்த்திடவும்

செவிக்கு ஏற்ற செந்தமிழாய்ச்

      சிறந்த முறையில் விளங்குகிறாய்


சங்கப் புலவர் கூட்டணியில்

      சந்தம் பெற்ற படைப்புகளை

அங்க மெல்லாம் அணிகலனாய்

      அணிந்து வந்த அருந்தமிழே

பங்க மில்லாப் படைப்புகளைப்

      பாரில் பெற்றச் சிறப்போடு

எங்கள் நாடாம் சிங்கையிலும்

      ஏற்றம் பெற்றே வாழ்கின்றாய்


எங்கும் எதிலும் எப்போதும்

      இளைமை மாறா இன்தமிழே

மங்கா உந்தன் பெருமைகளை

      மாற்றார் போற்றிப் புகழ்ந்தாலும்

சங்கம் வடித்தப் பாட்டிசையைச்

      சான்றோர் பலரும் தந்தாலும்

சிங்கைத் தமிழர் படைப்பினிலும்

      சிறப்புப் பெற்றே செழிக்கின்றாய்


ஏற்றம் பெற்ற தமிழ்மொழியை

      எங்கள் நாட்டில் கொண்டாட

பற்றுக் கொண்ட தமிழரும்

      பாங்காய் வந்து சேர்ந்திடவும்

வேற்றி னத்து சான்றோரும்

விரும்பி வந்து கலந்திடவும்

ஏற்ற மாதம் இதுவென்று

ஏப்ரல் முழுதும் வளம்வருவாய்


                                 கணேசுகுமார் பொன்னழகு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக