ஜூரோங் பறவைப் பூங்கா
பல்லினம் வாழும் பசுமை நகரில்
பாரோர் வந்து
பார்த்து மகிழ
உள்ள மெல்லாம் உவகை யோடு
உள்ளூர் உறவும்
ஒன்று கூட
புள்ளினத் தோடு புல்லும் பூண்டும்
பூத்துக்
குலுங்கிப் புன்னகை புரிய
உள்ளூர் வெளியூர் பறவைகள் கொண்டு
உருவம் பெற்ற
உன்னதப் பூங்கா
நாலா யிரத்தைத் தாண்டி யிருக்கும்
நான்கு நூறு பறவை யினங்கள்
நாலாப் புறமும் பறந்து திரிந்து
நாளும் பொழுதும் நலமாய் வாழ
வேழம் விளைந்த வெட்ட வெளியில்
வித்தைகள்
செய்து வேடிக்கை காட்ட
சோலைகள் நிறைந்த ஜூரோங் மேற்கில்
சொர்க்க மாக
அமைந்த பூங்கா
இயற்கை அழகின் இனிய படைப்பை
எடுத்து இயம்பும் மரம்செடி
யோடு
உயர்வு பெற்ற உன்னத ஆற்றல்
உருவம் கொண்டு விளங்கிட, நல்ல
முயற்சி கொண்ட மனிதர் கூட்டம்
முனைந்து செய்த முயற்சியால்
இங்கு
செயற்கை அருவியும் சேர்ந்தே இருக்கும்
சிங்கை நகரின்
சிறப்புப் பூங்கா
அரிய இனத்துப் பறவை களோடு
அமைதி ததும்பும்
அழகு மயில்கள்
உரிய இடத்தில் உலாவிடும் காட்சி
உள்ள மெங்கும்
நிறைந்தி ருக்க
சிறிய பெரிய பறவை இனங்கள்
செய்யும் பற்பல
செயல்கள் கண்டு
பெரியோர் சிறியோர் பேத மின்றிப்
பெருமிதம்
கொள்ளும் புள்ளினப் பூங்கா
பந்து உருட்டிப் பரவசப் படுத்தும்
பறவை யினத்தைப்
பார்க்கும் வேளை
ஐந்து வண்ண அழகு கிளிகள்
அருமை யாகப் பேசும் காட்சி
நொந்து போன நெஞ்சை யெல்லாம்
நீர்த்துப்
போகச் செய்வ தோடு
வந்தோர் போவோர் உள்ளம் தன்னை
வளைத்தி ழுக்கும் வண்ணப்
பூங்கா
கண்ணால் காணும் காட்சி யாவும்
காந்தம் போன்று
கவர்ந்தி ழுக்க
எண்ண மெல்லாம் எழுச்சி கொண்டு
இளமை யோடு இணைந்தி ருக்க
வண்ண வண்ணப் பறவைக் கூட்டம்
வந்து அமரும் வடிவைக் கண்டு
மண்ணில் தோன்றிய சொர்க்க மாக
மதிக்கச் செய்யும் பறவைப்
பூங்கா
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக