என்னுடைய இலக்கு
என்னிலக்கு எதுவென்று
என்னுள்ளம் நினைத்தபோது
எண்ணற்ற இலக்குகளும் என்மனத்தில் வந்ததுண்டு
இன்தமிழை நான்படித்து
இலக்கியங்கள் கற்றதனால்
எனக்கான இலக்குகளை எவையென்று அறிந்துகோண்டேன்
மயிலோடும் குயிலோடும்
மணம்வீசும் மலரோடும்
மயங்கிட்ட உள்ளத்தை மாசற்ற இலக்கியமாய்
உயிரோடு உளம்கலந்து உருவாகக்
கொடுத்தவரை
ஒருபொழுதும் மறவாது உயர்வாகப் போற்றிடுவேன்
தேனூரும் தீந்தமிழைத்
தெவிட்டாத இலக்கியமாய்த்
தினந்தோறும் பாடிவைத்த திருவாளர் புகழோடு
நானறிந்த நறுந்தமிழை
நாளைவரும் மாணவருக்கு
நல்லமுதாய்ப் புகட்டிவிட நயம்படவே நானுரைப்பேன்
ஏட்டிலில்லா இலக்கியமும்
ஏட்டிலுள்ள இலக்கியமும்
எடுத்தியம்பும் கூற்றோடு எல்லையில்லா பொருளினையும்
நாட்டிலுள்ளோர் அறிந்திடவே
நன்மைபல புரிந்திடவே
நனித்தமிழைக் கற்பிக்கும் நல்லபணி செய்திடுவேன்
கணக்கில்லா இலக்கியங்கள்
கடல்மூழ்கிப் போனதென்று
காதுவழிச் செய்தியொன்று கதையாக நமக்கிருக்க
கணக்கிருக்கும் இலக்கியங்கள்
கட்டழிந்து போகாமல்
கணினியிலே அச்சேற்றும் கடும்பணியை ஆற்றிடுவேன்
அவனிபோற்றும் எம்மொழியாம்
அமிழ்தான தமிழ்மொழியில்
அறிவார்ந்த அழகோடு அமைந்திட்ட படைப்புகளைப்
புவிபோற்றும் படைப்போடு
பொருத்தித்தான் பார்த்திடவும்
புத்தாக்கம் பெற்றிடவும் புதுமுயற்சி செய்திடுவேன்
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக