சங்க இலக்கியப் பாடல்
‘படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர்
ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில்
மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை
இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்
தாம்வாழு நாளே’
-
பாண்டியன்
அறிவுடை நம்பி
சூழல்
குழந்தைப் பேற்றின் மேன்மையையும் இனிமையையும் பற்றி மக்களுக்கு
விளக்குவதற்காக, குழந்தையின் இயல்புகளையும் செயல்களையும் உள்ளது உள்ளவாறு பாண்டியன்
அறிவுடை நம்பி பாடிய பாட்டு.
பாடலின் கருத்து
உழைத்துச்
சம்பாதிக்கும் செல்வங்கள் பலவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பலரோடு உண்ணுகின்ற
மிகப்பெரும் செல்வம் கொண்ட செல்வராக இருந்தாலும், அவர்களுக்குச்
சின்ன அடி கொண்டு, சிறுசிறு அடிகள் வைத்து நடந்து, தன் சிறிய
மென்மையான கையை நீட்டி, நெய்யூற்றிப் பிசைந்த சோற்றினைக் கிண்ணத்தில் இருந்து
எடுத்துக் கீழே போட்டும், அதனைத் தோண்டியும், வாயால் கவ்வியும், உணவை உடல்மேல்
எல்லாம் படும்படிச் சிந்தியும், இன்ப மயக்கம் தருகின்ற குழந்தைச் செல்வம் இல்லையென்றால்
அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து பயன் இல்லை.
சுறுக்கமாகச்
சொன்னால் பிற செல்வங்கள் எவை இருந்தாலும், குழந்தைச் செல்வம்
இல்லை என்றால் அதனால் பயனில்லை. எல்லாச் செல்வங்களினும் உயர்ந்த உண்மையான செல்வம்
குழந்தையே என்கின்றார். இதைப்போல் வள்ளுவரும், ‘தம்
பொருள் என்ப தம் மக்கள்’ என்பர்.
குழந்தையின்
இளமைக் காலச் செயல்களை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுவது இப்பாடலின் சிறப்பு.
மேலும், ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’ போன்ற
சொல்லாட்சிகள் இப்பாடலுக்குச் சிறப்புச் செய்வன.
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக