சிங்கப்பூர்
மாப்பிள்ளை ஒரு திறனாய்வு
முன்னுரை
தமிழ் நாடகம் தொன்மையானது. தொல்காப்பியத்தில் நாடகம் பற்றிய
குறிப்புகள் கிடைப்பதோடு, அதற்கு முன்னர் வழக்கில் இருந்த தொல்பழம் நூல்களிலும்
நாடகம் பற்றிய செய்திகள் இருந்த சிறப்பினை அறிஞர்கள் பலரும் நமக்கு எடுத்தோதியுள்ளனர்.
தற்போதையச் சூழலில் சொல்ல வேண்டுமென்றால் நாடகம் என்ற
படைப்பு நாவல், சிறுகதை ஆகியவற்றைவிடக் காலத்தால் முந்தியது. நாவல், சிறுகதை ஆகியவற்றை
உருவாக்கிய நடுத்தர வர்க்கத்திற்கு முன்பு வாழ்ந்த பழைய நிலப்பிரபுத்துவச்
சமூகத்தால் நாடகம் உருவாக்கப்பட்டது. கவிதை, நாவல், சிறுகதை ஆகியவற்றைப்
படிக்கும்போது அவற்றைப் படைத்தவரால் எடுத்துச் சொல்லப்படுவது போன்ற உணர்வை அவை
நமக்கு ஏற்படுத்துகின்றன.
ஆனால் நாடகத்தின் தன்மை இதிலிருந்து வேறுபட்டது. நாடகத்தைப்
படிக்கும்போது படைத்தவர் நினைவிற்கு வருவதில்லை, படைத்தவரையே மறந்து
விடுகிறோம். நாடகத்தில் வரும் பாத்திரங்கள் நம் கண் முன்னே இருப்பது போன்றும் நாடக
நிகழ்ச்சிகள் நம் கண் முன்னால் நடப்பது போன்றும் நமக்குத் தோன்றும். அந்த வகையில் ‘சிங்கப்பூர்
மாப்பிள்ளை’ என்னும் நாடகமும் அதில் உள்ள பாத்திரங்களும் நம் கண்முன்
நடமாடுகிறார்கள். அந்நாடகத்தைப் பற்றியும் அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரையில்
காண்போம்.
ஆசிரியர் பற்றி
சிங்கப்பூர்
எழுத்தாளர்களில் சே. வெ. சண்முகம் அவர்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவர். இவர்
எழுத்துத் துறையில் பல தடங்களைப் பதித்தாலும் நாடகம் எழுதுவதில் தனக்கென ஒரு
தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதும் நாடகங்கள் அனைத்தும் உண்மை நிகழ்வுகளைப்
பிரதிபளிக்கும் காலக் கண்ணாடியாகவே இருக்கும்.
இவர் தாம்
எழுதும் ஒவ்வொரு நாடகமும் வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இருக்கக் கூடது. அது
சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு செய்தியைத் தாங்கி நிற்க வேண்டும் என்று எண்ணுபவர்.
அதன்படியே எழுதுபவரும் கூட. அதே நேரத்தில் அறிவுரையாகவே கொடுத்தால்
பார்ப்பவர்களுக்கு சலிப்புத் தட்டிவிடும் என்று நகைச்சுவையுடன் எழுதி தாம் சொல்ல
வந்ததை மனத்தில் பதிய வைத்துவிடுவார்.
ஆசிரியரின் பிற படைப்புகள்
‘மீன் வாங்கலையோ’, ‘சிங்கப்பூர் குழந்தைகள்’, ‘பழத்தோட்டம்’, ‘இரணியூர்
நாகரத்தினம்’ போன்றவை ஆசிரியர் எழுதிய பிற நூல்களாகும்.
நாடகத்தின் கதைச் சுருக்கம்
சிங்கப்பூரில் 1950 – ல் வந்து குடியேறிய சின்னத்தம்பி தனது
மகன் சுந்தரலிங்கத்துடனும், மனைவியுடனும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவரது நண்பர் அனுபவம் அண்ணாமலை. மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோபால்சாமி
மற்றும் அவரது மகள் செல்வி. கோபால்சாமி சிங்கப்பூரில் உள்ள தமிழ் மக்களைச்
சிங்கப்பூருக்கு விசுவாசம் காட்டுமாறு சொற்பொழிவு ஆற்றுபவர். இவர் மகள் செல்வியும்
சுந்தரலிங்கமும் ஒருவரை ஒருவர் விரும்பி வந்தனர். இதற்கிடையில் சிங்கப்பூர்
கோபால்சாமியின் அக்காள் கணவரான வையாபுரி. வந்தவர் தன் மகனுக்குப் பெண் கேட்கிறார்.
கோபால்சாமியும் தனது ராஜபரம்பரையைச் சேர்ந்தவருக்குப் பெண் கொடுக்க வேண்டும் என்ற
எண்ணமுடையவர். அதனால் அவரும் இதற்குச் சம்மதிக்கிறார். செல்வி சுந்தரலிங்கத்திடம்
தன் அப்பாவிடம் பெண் கேட்குமாறு கூறுகிறாள். சுந்தரலிங்கம் காதல் விஷயம் முருகையன்
மூலம் சின்னத்தம்பிக்குத் தெரிய வர சின்னத்தம்பியும் திருமணத்திற்குச்
சம்மதிக்கிறார். சின்னத்தம்பி, அனுபவம் அண்ணாமலை இருவரும் கோபால்சாமியிடம் பெண் கேட்டுச்
செல்கின்றனர். கோபால்சாமி தனது ராஜப்பரம்பரையைச் சுட்டிக்காட்டித்
திருமணத்திற்குத் தடை விதிக்கிறார். செல்வியும் தன் தந்தையின் சொல்கேற்ப
தந்தையுடன் இந்தியா செல்கிறாள். தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்த
கோபால்சாமி தனது அக்காவின் பேராசையைக் கண்டு திகைப்புற்றுத் தனது மகள் செல்வியுடன்
சென்னைக்கு வந்தடைகிறார். அங்கே அனுபவம் அண்ணாமலையைப் பார்க்கிறார். அனுபவம்
அண்ணாமலையின் மனைவி சென்னையில்வந்ததால் அவரைக் காண வந்த அண்ணாமலை தனக்கு நேர்ந்த அனுபவத்தைக்
கூறி வேதனைப்படுகிறார். சிங்கப்பூரிலிருந்து தன் தாய்நாட்டுக்கு வந்து தன்
சொந்தங்களை ஆசையோடு பார்க்க வருபவர்களிடம் பணத்தை மட்டுமே எதிர்பார்க்கும்
அனுபவங்களை இருவரும் வேதனையோடு பகிர்ந்து கொள்கின்றனர். இடையில் சுந்தரலிங்கம்
சென்னை வருகிறான். வந்தவன் வையாபுரியின் மகன் மகாதேவனைச் சந்திக்கிறான். மகாதேவன்
தனது பெற்றோருக்குத் தெரியாமல் தனது மனைவி
குழந்தையுடன் வசித்து வருகிறான். மகாதேவன் சினிமாப் படம் தயாரிப்பதில்
ஆர்வம் உள்ளவன். சுந்தரலிங்கத்திடம் அவனுடைய காதல் விஷயத்தை அறிந்த மகாதேவன் தனது
மாமன் மகளே செல்வியென்றும் அவர்கள் திருமணத்திற்கு உதவி புரிவதாகவும் கூறுகிறான்.
அனுபவம் அண்ணாமலையும் இந்நாடகத்தில் கலந்துகொள்கிறார். இறுதியில் செல்விக்கும்
சுந்தரலிங்கத்திற்கும் திருமணம் நடைபெறுகிறது. கோபால்சாமியும் அவர்களுடைய
திட்டத்தை முன்பே அறிந்ததாகக் கூறுகிறார். ‘கறவை
மாடாயிருக்கிறதைவிடச் சிங்கப்பூர் மாப்பிள்ளைக்குக் கண்ணியமான மாமனாராயிருக்கிறதே
பெருமை’ அதுவே என் முடிவு என்று கூறுகிறார். சென்னைக்கு வந்த
வையாபுரியும் சிவகாமியும் தன் மகன் சொல் கேட்டுச் சிரித்த முகத்துடன் தன் காலில்
விழுந்த மணமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குகின்றனர்.
நாடகத்தில் இடம்பெறும் கதா பாத்திரங்கள்
சிங்கப்பூர் மாப்பிள்ளை நாடகத்தில் இடம் பெறும்
பாத்திரங்களை முக்கியப் பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் என இருவகையாகப்
பிரிக்கலாம். அவற்றில்,
கோபால்சாமி
வையாபுரி
சின்னத்தம்பி
அனுபவம் அண்ணாமலை
சுந்தரலிங்கம் (சின்னத்தம்பி
மகன்)
மகாதேவன் (வையாபுரி மகன்)
முருகையா
கிராமத்து ஆசாமி
சிவகாமியம்மாள் (வையாபுரி மனைவி)
செல்வி (கோபால்சாமி மகள்)
போன்றோர் முக்கியப் பாத்திரங்களாகவும், மற்றும், புரோகிதர், இபறாகிம், டேவிட், இளையர்
சிலர் போன்றவர்களை
துணைப்பாத்திரங்களாகவும் பிரிக்கலாம்.
நாடகம் நடைபெறும் இடங்கள்
சிங்கப்பூர் மாப்பிள்ளை நாடகம் நடைபெறும் இடங்களாக
சிங்கப்பூர், தமிழகம் என இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றில் முதலாவதாக,
செட் – 1 தெரு (சிங்கப்பூர்)
செட் – 2 கோபால்சாமி வீடு
செட் - 3 பூங்கா
போன்ற சிங்கப்பூர் இடங்களில் கதை
நடைபெறுகின்றது. இரண்டாவதாக,
செட் – 4 தெரு (சென்னை)
செட் – 5 கிராமத்து வீடு (தமிழ்நாடு)
செட் – 6 சென்னை லாட்ஜ் அறை
செட் – 7 கல்யாண மண்டபம்
மற்றும் ஒரு நிழல் காட்சி. போன்ற தமிழ்நாட்டுப் பகுதிகளில் கதை நடைபெறுகின்றது.
நாடகத்தின் சிறப்பு
சிங்கப்பூர் மாப்பிள்ளை நாடகத்தின் கதைக்கருவானது 1950
க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலத்து இந்தியர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்
காட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதை உண்மைக் கதை என்று நாடகத்தின் ஆசிரியர்
கூறுகிறார்.
இக்கதை சிங்கப்பூரில் ஆரம்பித்து இந்தியாவில் முடிவதாக
எழுதியிருப்பது ஆசிரியரியரின் தன் பிறந்த இடத்து பாசத்தை வெளிப்படுத்துகின்றது.
சிங்கப்பூர் இந்தியத் தொடர்பு தொப்புள்கொடி உறவாக
விளங்கினாலும் இங்குள்ள இந்தியர்கள் வருங்காலத்தில் எப்படி எச்சரிக்கையாக வாழ வேண்டும்
என்பதை இந்நாடகம் காட்டுகின்றது.
இந்நாடகம் படிப்பதற்கும் மட்டுமல்ல நடிப்பதற்கும் ஏற்ற
வகையில் எழுதியிருப்பது சிறப்புடையது.
இந்நாடகத்தில் காட்சிக்குக் காட்சி நடிப்பதற்கு ஏற்ற
குறிப்புகளுடன் நிகழ்ச்சிகளும் விளக்கப்பட்டு இருப்பது சிறப்புடையது.
சமூகத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் சில கோளாறுகளைப்
புரட்சிகரமாக சாடியுள்ளது.
நாடகத்திற்குத் தலைப்பு பொருத்தமா?
இந்த நாடகத்தில் இடம் பெற்றுள்ள சிங்கப்பூர் மாப்பிள்ளை
என்னும் தலைப்பு மிகவும் பொருத்தமுடையதாகவே உள்ளது. காரணம் கோபால்சாமி சிங்கப்பூர்
சிங்கப்பூர் என்று மூச்சுக்கு மூச்சு பேசினாலும் தன் உள் மனத்தில் தான் ராஜ
பரம்பரையைச் சார்ந்தவன் அதனால் தமிழகத்தில் உள்ள தன் அக்கா மகனுக்கே தன்மகளைக்
கட்டிக்கொடுக்க முடிவு செய்கிறார்.
ஆனால் தன் அக்காவின் சுயரூபத்தை அறிந்த கோபால் சாமி அங்கிருந்து
தானும் தன் மகளும் தப்பித்தால் போதுமென்று யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு
வருகிறார். வந்த இடத்தில் தன் அக்கா மகனும், அனுபவ அண்ணாமலையும்
சேர்ந்து சிங்கப்பூர் மாப்பிள்ளையான சுந்தரலிங்கத்திற்கு மணமுடிக்க போலியாக
நடிக்கிறார்கள்.
தன் மகளைக் கட்டிக்கொள்ள இருப்பவன் சிங்கப்பூரைச் சேர்ந்த
சுந்தரலிங்கமே என்று தெரிந்தும் அதைப் பற்றி வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்து திருமணம் முடிந்த பிறகு உண்மையை
ஒத்துக்கொள்கிறார்.
திருமணம் சென்னையில் நடைபெற்றாலும் அங்குள்ளவர்களிடம்
குறிப்பாக தன் அக்கா மாப்பிள்ளை யார்? என்று கேட்டக் கேள்விக்கு சிங்கப்பூர்
மாப்பிள்ளை என்று பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளதால் நாடகத்திற்கு இத்தலைப்புப்
பொருத்தமே.
கதையாசிரியரின் நாட்டுப் பற்று
சிங்கப்பூரில்
நிலையில்லாம் தமிழகத்திற்கும் சிங்கப்பூருக்குமாக அலைந்து கொண்டிருப்பவர்களை வசை
பாடுகின்றார். இதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சின்னத்தம்பி என்ற
கதாப்பாத்திரத்தின் வாயிலாக எனக்கு சோறு போடுகிற நாட்டை, வாழ்வு கொடுக்கிற
நாட்டை பாதுகாக்கிற நாட்டை இந்த சிங்கார நாட்டை அமைதியுடனும் செழிப்புடனும்
வைத்திருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதாக எழுதியிருப்பார். மிக
நுணுக்கமாகவே கையாள்கிறார். வாழ வைத்த – வாழ வைக்கும் நாட்டிற்கு விசுவாசமாக
இருக்க வேண்டும் என்கிறார். மற்றொரு இடத்தில் சென்னை தமிழரைக் கொண்டே
சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளீர்களா? அதுதான் சுத்தத் தமிழில்
பேசுகிறீர்கள் என்று கூறுவதாக அமைத்துள்ளார். இவற்றின் மூலம் கதையாசிரியர்
பிறந்தது தமிழகமாக இருந்தாலும், தன்னையும் தம் குடும்பத்தாரையும் வாழ வைத்த சிங்கப்பூரின்
மீது அளவற்ற பற்று வைத்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது.
அக்காலச் சூழல்
அக்காலத்தில்
சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள் இங்கையே நிலையாக குடியிருக்காமல் தாய்த் தமிழத்தை
நோக்கியே பயணமானார்கள். மேலும் இங்கு கடுமையாக உழைத்துச் சம்பாரித்தப்
பணத்தையெல்லாம் கொண்டு தம் சொந்த ஊரில் நிலங்கள் வாங்குவதற்கும், வீடு, மனைகள்
வாக்குவதற்குமாகப் பயன்படுத்தி ஏமந்துள்ளனர்.
தமிழகத்து தலைவர்களின் பேச்சாற்றலின் தாக்கம்
சிங்கப்பூரிலும் இருந்துள்ளது. உதாரணமாக, கோபால்சாமியின் பேச்சாற்றல் கேட்பவரை
மயக்கும் வண்ணம் இருக்கும். மேலும், மற்றவருக்கு சொல்லும் அறிவுரை தனக்கு உதவாது என்பதுபோல் நடந்துள்ளார்.
கதாப்பாத்திரம் பொருத்தமாக உள்ளதா?
இந்நாடகத்தில் உள்ள பாத்திரங்கள் நம் கண்முன் உலாவும்
மனிதர்களாகவே தெரிகிறார்கள். கோபால்சாமி என்னும் பாத்திரம் ஊருக்கு உபதேசம்
செய்பவராகக் காட்டியுள்ள பாங்கு அரசியல்வாதியின் அப்பட்டமான இரட்டை வேடத்தையே
காட்டுகின்றது. மேலும், கோபால் சாமியின் அக்காவின் பாத்திரம் இன்றும் நம்மிடையே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
செவ்வியின் பாத்திரப்படைப்பு ஆரம்பத்தில் படிப்பவர்க்கு
மனதில் நெருடலாக இருந்தாலும், செல்வி தன் தாய் இறந்த பிறகும் தந்தை மறுமணம் செய்து
கொள்ளாமல் தனக்காக இன்றுவரை வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்டத் தந்தையின்
சொல்லைத் தட்டக் கூடாது என்பதற்காக தான்மனம் மாறியதாக கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்
கூடியதே என்று படிப்பவர் எண்ணும் அளவுக்கு
செல்லவியின் பாத்திரத்தை படைத்திருப்பார்.
சிங்கப்பூரில் இன்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் அனுபவம்
அண்ணாமலைப் பாத்திரம் நடமாடுவதைக் காணலாம். மேலும் சின்னத் தம்பி போன்ற வெகுளி
மனம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கதையில் எழுத்தாளரின் தனித்திறன்
சிங்கப்பூர் மாப்பிள்ளை நாடகத்தில் ஆசிரியர் தன்
தனித்திறனாக பாத்திரங்களை மட்டும் வைக்கவில்லை அவர்கள் பேசுகின்ற ஒவ்வொரு
வசனத்திலும் இழல்பான எழுத்து நடையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், அவருக்கே உரித்தான
நகைச்சுவையாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் இன்றையத்
தலைமுறையினருக்கும், நாளையத் தலைமுறையினருக்கும் தேவையான ஒன்றை கதைக்கருவாக எடுத்துக்
கொண்டது தனித்திறனாகும்.
எழுத்தாளரின் அனுபவ வெளிப்பாடு
சிங்கப்பூர் மாப்பிள்ளையின் ஆசிரியர் தம் என்னுரையில் இந்நாடகம்
கட்டுக்கதையல்ல, கற்பனைச்சித்திரம் அல்ல இது கசப்பான உண்மைகளின் தொகுப்பு
என்று கூறியிருக்கிறார். மேலும், 1950க்கும், 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த இந்தியர்களின்
வாழ்க்கைப் போக்குக் குறித்த கதை என்கிறார். இக்கதையில் இடம்பெறும் பாத்திரங்கள்
நம்மோடு நெருங்கிப் பழகியவர்களே என்றும் கண்முன் நடக்கும் நிகழ்ச்சிகளின் வடிவமே
கதை என்று கூறுவதால் ஆசிரியரின் அனுபவத்தின் வேளிப்பாடாக இருக்குமோ என எண்ணத்
தோன்றுகின்றது.
பிறமொழி கலப்பு உள்ளதா?
இந்நாடகத்தில்
இடம்பெறும் மொழி என்பது பெரும்பாலும் தூய தமிழ் நடையிலேயே உள்ளது. அதே நேரத்தில்
பாத்திரங்களின் இயல்புக்கேற்ற இடங்களில் வேற்று மொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். இருந்தாலும்
பிறமொழிப்பயன்பாடு குறைவாகவே இருப்பதைப் பார்க்கும்போது ஆசிரியரின் தமிழ்மொழிப்
பற்றை. பறை சாற்றுவனவாகவே உள்ளது.
இவருடைய இந்த
மொழி நடைக்கு காரணம் தாய்த் தமிழகத்தில் இருந்த சில தனித் தமிழ்ப் பற்றாளர்களின்
ஈர்ப்பே என்று கூறுகிறார்.
கதையில் மொழிநடை
இந்நாடகத்தில் இடம்பெறும் மொழிநடை என்பது பெரும்பாலும் எளிய
இனிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நாடகத்தை படிப்பவர் உடனே பொருள்
புரிந்து தன்னையறியாமல் சிரித்து மகிழும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
கதைக் கரு இக்காலத்திற்குப் பொருந்துமா?
சிங்கப்பூர்
மாப்பிள்ளை என்ற நாடகத்தின் கதைக் கரு இக்காலத்திற்கு முழுவதுமாக பொருந்தி
வராவிட்டாலும். பெரும்பாலான பகுதி இக்காலத்திலும் பொருந்தி வருகின்றன. குறிப்பாக, கோபால்சாமியின்
இரட்டை வேடம், கோபால்ச்சாமியின் அக்கா பாத்திரம், அனுபவம் அண்ணாமலை
பாத்திரம் போன்றவர்கள் நடிக்கும் கதைப்பகுதி பொருந்தும்.
முடிவுரை
சிங்கப்பூர்
மாப்பிள்ளை நாடகம் படிப்பதற்கும், நடிப்பதற்கும் மட்டுமல்ல. இந்த நாடகம் உணர்த்தும்
கருப்பொருளைக் கைக்கொண்டு தமிழர்கள் குறிப்பாக சிங்கப்பூர் இந்தியர்கள்
விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது என்றால் அது மிகையில்லை.
கட்டுரையின் துணை நூல்
1. சிங்கப்பூர் மாப்பிள்ளை! நாடகம், சே.வெ. சண்முகம், சிங்கப்பூர்
இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்
ஒப்படைப்பாளர் : கணேசுகுமார் பொன்னழகு
பட்ட மேற்படிப்பு பட்டயக் கல்வி (உயர்நிலை)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.
ஒப்படைப்பு நாள் : 20. 11. 2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக