ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புத்தாண்டு வருகுதுபார்

புத்தாண்டு வருகுதுபார்தமிழ்
                புத்தாண்டு வருகுதுபார்
முத்தானதையினிலேதமிழ்
                முடுசூடி வருகுதுபார்

                எண்ணமதில் குடிகொண்டஉயர்                   
இனியதமிழ்ப் பாட்டோடு
                பண்பாட்டுப் பெட்டகமாய்தைப்
                                பொங்கலன்று வருகுதுபார்

                நன்செய்யுள் திருக்குறளைஉயர்
                                நாடுபோற்ற செய்ததமிழ்
பொன்னாண்டை கூட்டியிங்குஉயர்
புதுப்பொலிவு தருகுதுபார்

                கன்னித்தமிழ் வையகத்தில்உயர்
                                கலைகள்பல கொண்டிங்கு
                வண்ணத்தமிழ் புத்தாண்டாய்உயர்
                                வையகத்தில் வருகுதுபார்

                நன்னாளாம் புத்தாண்டில்உயர்
                                நல்லவர்கள் வாழ்த்திடவே
                என்னாளும் பொன்னாளாய்உயர்
                                ஏற்றமுடன் வருகுதுபார்

                                                                              பொன்.கணேசுகுமார்                                                                                     
                                                                                           சிங்கப்பூர்
       வந்தாய் வாழி புத்தாண்டே!

தமிழே தமிழே முத்தமிழே
                      தரணி போற்றும் தாய்த்தமிழே
அமிழ்தம் உந்தன் மொழியாகும்
                      அதுவே எங்கள் விழியாகும்
நிமிர்ந்த நெஞ்சம் யாம்பெற்று
                      நேரிய வாழ்வு வாழ்ந்திடவே
தமிழர் போற்றும் புத்தாண்டாய்
                      தையில் வந்து குடிகொண்டாய்

பட்டி தொட்டி வீடெல்லாம்
                      பாலில் சோறு பொங்கிடவே
வெட்டி வந்த செங்கரும்பும்
                      வீட்டின் முற்றம் தங்கிடவே
கட்டி வைத்த செவ்வாழை
                      காற்றில் ஆடி அசைந்திடவே
கொட்டிக் கொடுத்த இன்தமிழே
                      கோலத்தையில் நீவந்தாய்

குவித்து வைத்த நெல்மணிகள்
                      குலுக்கை எல்லாம் நிறைந்திருக்க
புவியில் உள்ளோர் உன்புகழை
                      போற்றிப் பாடி வரவேற்க
நவிழும் வார்த்தை அழகோடு
                      நாளும் உன்னைப் போற்றிடவே
செவிக்கு ஏற்ற செந்தமிழாய்
                      சிறந்ததையில் நீவந்தாய்

இருளைப் போக்கும் சூரியனை
                      இனிதே போற்றிப் புகழ்ந்திடவும்
அருளைக் கொடுக்கும் அருந்தமிழை
                      அருகே இருத்தி பாடிடவும்
விருந்து வைத்துக் கொண்டாடி
                      வெற்றிக் களிப்பால் போற்றிடவும்
விரும்பும்தையில் பிறக்கின்ற
                      வீரத் திருவே புத்தாண்டே

தமிழே உருவாய் கொண்டிங்கு
                      தையில் வந்து உதித்ததனால்
தமிழர் வாழும் நாடெல்லாம்
                      தாளம் மேளம் கொட்டியாடி
தமிழன் ஆண்டு உண்டென்று
                      தரணி எங்கும் குரலெழுப்பி
தமிழர் போற்றும் புத்தாண்டாய்
                      தையை என்றும் போற்றிடுவோம்

                                  பொன்.கணேசுகுமார்
                               சிங்கப்பூர்
           
        வந்தாள் தைப்பாவை

புத்தாண்டாய் வருகின்றாள்
                புதுப்பொலிவு தருகின்றாள்

உத்தமியாம் தைப்பாவை
                உலகோரை வாழ்த்திடவும்
முத்தமிழின் படைப்புகளை
      முகமலர ஏற்றிடவும்                   (புத்தாண்டாய்.....)
            
தமிழன்னை பெற்றெடுத்த
                தலைமகளாம் தமிழ்மொழியை
தம்மீது தாங்கியவள்
                தரணியிங்கு வந்திடவே                                    (புத்தாண்டாய்.......)

முத்தமிழாம் நறுந்தமிழை
      முடிமீது சூட்டிட்ட
சித்திரத்தைப் போலிங்கு
                சிறப்பான வடிவோடு                  (புத்தாண்டாய்.....)

சங்ககால இலக்கியமும்
      சமகால இலக்கியமும்
              அங்கமெங்கும் பூட்டிட்ட
      அருந்தமிழை வாழ்த்திடவே                                   (புத்தாண்டாய்.....)

புத்தியோடு புகழ்சேர்த்து
      புதுவாழ்வு வாழ்ந்திடவும்
மத்தாளம் கொட்டியினி
                மகிழ்வோடு இருந்திடவும்                               (புத்தாண்டாய்.......)

பெற்றோர்தம் பிள்ளையென
                பெருவாழ்க்கை வாழ்ந்திட்ட
உற்றார்நல் உறவோடு
                உளமாற வாழ்த்திடவே                                    (புத்தாண்டாய்.......)

                                                                   பொன். கணேசுகுமார்
                                                                            சிங்கப்பூர்