வெள்ளி, 4 ஜூன், 2021

 

கவிதை 2 வெளிநாட்டு ஊழியர்

 

தேர்ப்போல அசைந்தாடி

தெருவெங்கும் சுற்றியதால்

ஊரெல்லாம் ஒன்றுகூடி

      உருப்படாதெ னக்கூற  

 

ஊர்விட்டு ஊர்வந்து

ஒன்றாக வாழ்ந்தாலும்

பேர்கெட்டுப் போகாமல்

பெரும்பேரை வாங்கிடவே

 

தார்மீகப் பொறுப்புவந்து

தலைமேலே விழுந்ததாலே

கார்பொழுதும் கலங்காமல்

கடமையினை யாற்றுகின்றார்

கவிதை 1 - துயரம் துடைத்து வாழ்வர்

 

எங்கள் நாட்டு வளமே

இங்கு வாழும் மக்கள்

பங்க மில்லா வாழ்வை

பகிர்ந்து வாழ எண்ணி

அங்க மெல்லாம் அழுக்க

ஆழ்ந்து அயர்ந்து உழைத்து

எங்கு மில்லா உயர்வை

ஏற்று நன்றாய் வாழ்வர்

 

கள்ளம் கபடும் இன்றி

கடமை யாற்றி வாழும்

உள்ளம் பெற்ற தாலே

உயர்ந்து நிற்கும் மக்கள்

வெள்ளை மனத்தைப் பெற்று

வந்தோர் போவோ ரிடத்தும்

வள்ளல் தன்மை காட்டி

விரும்பும் வாழ்க்கை வாழ்வர்

 

பள்ளிக் கல்வி தன்னில்

பாடம் கற்கும் பிள்ளை

பள்ளம் மேடு பாரா

பரந்த பார்வை கொண்டு

உள்ள மெங்கும் உழலும்

உண்மைப் பாடம் படித்தும்

துள்ளு மிளமை துடிப்பில்

துயரம் துடைத்து வாழ்வர்

 

நாள் : 30 (30/04/2021)

தலைப்பு : நாம் தொலைந்ததெல்லாம் தொலைக்காட்சியில்தான்

 

தொலைதூரச் செய்திகளும்

    தூரதேசச் செய்திகளும்

கலைநுட்பக் காட்சிகளும்

    கண்களுக்கு விருந்தாக

அலைவரிசை அர்ப்பணிப்பில்

    ஆங்காங்கே பரவிடவே

தொலைக்காட்சிப் பெட்டிமூலம்

    துல்லியமாய்க் கண்டுணர்ந்தோம்

 

ஆரம்ப அலைவரிசை

    அரசுதந்த அலைவரிசை

நேரத்தைச் சுருக்குகின்ற

    நிழலுருவ காட்சிகளும்

பேரங்கள் பேசாத

    பெரியபடம் சிறியபடம்

வாரங்கள் தவறாது

    வந்ததெங்கள் வீட்டிற்கே

 

அலைவரிசை ஆர்ப்பரிப்பில்

    அங்குமிங்கும் அசைவின்றிச்

சிலைபோன்ற சித்திரமாய்ச்

    சுவற்றோரம் சாய்ந்திருந்தோம்

உலையின்றி உணவின்றி

    ஒளிபரப்பைப் பார்ப்பதற்குச்

தொலைந்துபோன நேரமெல்லாம்

    தேடினாலும் திரும்பிடாது

 

தனியார்தம் அலைவரிசை

    தாராளம் காட்டிடவே

சினிமாவை மிஞ்சுகின்ற

    சீரியநெடுந் தொடர்களையும்

தனிமனிதக் கருத்துகளில்

    தரமான கருத்தினையும்

இனிதான நிகழ்ச்சிகளாய்

    இன்றளவும் தருகின்றார்

 

கோர்த்தெடுத்த வார்த்தையிலே

    குறையில்லா கருத்துகளைப்

பார்ப்பதற்கும் கேட்பதற்கும்

    பட்டிமன்ற விவாதங்கள்

வார்த்தெடுத்த வகைகளிலே

    வண்ணவண்ணச் சித்திரத்தால்

சீர்பட்டுச் சிறப்பதற்குச்

    சிறுவருக்கும் சிறப்புரைகள்

 

ஏர்பிடிக்கும் உழைக்கின்ற

    ஏழைமக்கள் வாழ்வினையும்

கார்கால மேகத்தின்

    காற்றழுத்த சூழலையும்

ஊர்புறத்துச் செய்திகளாய் 

    உலகோரும் அறிந்திடவே

கூர்தீட்டிக் கொடுக்கின்ற

    குறையில்லா நிகழ்ச்சிகளும்

 

கலைகளெனக் கொண்டுவந்து

    கண்ணுக்குக் காட்சியாக்கும்

விலையில்லா நேரத்தை

    வீணின்றி விரையமாக்கும்

தொலைக்காட்சிப் பெட்டியால்தான்

    தொன்மையான மரபுகளும்

தொலைதூரம் சென்றதென்று

    தொடுக்கின்றார் வாதமின்று

 

கணேசுகுமார் பொன்னழகு.

 

நாள் : 29 (29/04/2021)

தலைப்பு : அவசரமாக நிதானிப்போம்

 

வெய்யோ னுறிஞ்சும் மண்ணீர் முழுதும்

விரைந்து பரந்து மேக மாகிப்

பெய்யும் மழையும் பயிர்கள் செழித்துப்

பாரோர் வாழ  பயனு றவீழும்

உய்யும் பலனை யுரியோர் கொள்ள

உயர்ந்த நிலையை யுலக மடையும்

செய்யும் செயல்கள் செம்மை யுறவே

சிறிது நேரம் சிந்தை செய்வீர்

 

முறையாய் முந்தி வெற்றி கொள்ள

மூளை யெண்ணும் எண்ணத் தோடு

மறையோர் சொல்லும் வார்த்தை கேட்டு

மூன்று நிமிடம் ஆறப் பொறுத்துக்

குறைவாய்ப் பேசிக் கூறும் கருத்தைக்

குற்றங் களின்றிக் கொள்வோ ரிங்கு

நிறைவா யதனை நெஞ்சில் பதித்து

நீண்ட வாழ்வை நிலையாய்ப் பெறுவார்

 

ஆக்கப் பொருத்தார் ஆறப் பொருப்பார்

ஆன்றோர் சொன்ன வாக்கிற் கிணங்க

நோக்கம் மறந்தோர் நொந்து வாழ்வார்

நுண்மை யறிந்தோ ருரைத்த கூற்றை

ஊக்கம் நிறைந்த உள்ளம் கொண்டு

உண்மை விளங்கும் உயர்ந்த செயலால்

தாக்க மின்றித் தரமாய்ச் செய்யும்

தன்மை வேண்டி நிதானம் காப்போம்

 

நாள் : 28 (28/04/2021)

தலைப்பு : மனம் மூடிய முகமூடிகள்

 

மனத்தினதன் மாட்சிமைகள்

மானிடர்க்குக் கிடைத்தவரம்

சினமென்னும் குணம்நீங்கின்

சீற்றமில்லா சீர்மையுறும்

வனத்தினது வளமைக்கு

வண்டுகளின் வாழ்வினறம்

தினந்தோறும் தொடர்ந்திடவே

திக்கெங்கும் சோலைவனம்

 

மனிதராகப் பிறந்தவர்கள்

மயக்கத்தில் இருந்தாலும்

புனிதராக வாழ்பவர்கள்

புண்ணியங்கள் செய்தாலும்

தனிமையான சூழலைத்

தமக்காக யுருவாக்கி

இனிமையோடு மிளமையோடும்

இன்னலின்றி மகிழ்ந்திடுவர்

 

மண்மீது நடக்கின்ற

முறையற்ற செயல்களையும்

கண்கொண்டு பார்த்தாலும்

மனம்மூடி யிருந்தவர்கள்

வன்குணத்தார் வீழ்வதற்கு

வினையேதும் செய்யாது

முன்னேற்றம் காண்பதற்கு

முகமூடி யணிகின்றார்

 

அகம்தோன்றும் ஆசைகளை

அடக்கியாளும் அன்பரிடம்

சகயாளாய்ப் பழகிடவே

சன்யாச சாமியாராய் 

முகமூடி யணிந்தாலும்

முன்நடக்கும் தவறுகளைச்

சகசமாகக் கொள்ளாது

சிரம்தாழ நாணிடுவார்

 

கணேசுகுமார் பொன்னழகு

 

நாள் : 27 (27/04/2021)

தலைப்பு : இலவசங்களுக்காகச் செய்த செலவுகள்

 

இல்லாத வர்களுக்கும்

இயலாத வர்களுக்கும்

இன்னல்ப டுவோருக்கும்

இரந்துநிற்கும் வறியோர்க்கும்

இலவசங்கள் கொடுப்பதிலே

எள்ளளவும் தவறில்லை

 

காலங்கள் கடந்தாலும்

கட்டுடல் தளர்ந்தாலும்

கல்லாத மக்களுக்குக்

கல்விதனைக் கற்பிக்க

கையேந்தி நின்றாலும்

கடுகளவும் தீங்கில்லை

 

கல்விதனைக் கற்றிடவும்

கடமையினை யாற்றிடவும்

செலவுசெய்யப் பணமின்றிச்

சிரமப் படுவோர்க்கு

இல்லையென்று சொல்லாமல்

இலவசங்கள் கொடுத்திடலாம்

 

இல்லையென்று வேண்டுவோர்க்கு

இரக்கமுடன் உதவுகின்ற

நல்லெண்ணம் கொண்டவர்கள்

நம்மிடையே யிருந்தாலும்

கள்ளமனம் கொண்டவரும்

கலந்தேதான் இருக்கின்றார்

 

அன்றுமுதல் இன்றுவரை

அன்றாடம் காய்ச்சிகளும்

அண்டித்தான் பிழைப்போரும்

ஆங்காங்கே யிருந்தாலும்

இலவசங்கள் கொடுப்பதனால்

இன்பமுடன் வாழ்கின்றார்

 

கணேசுகுமார் பொன்னழகு.

 

நாள் : 26 (26/04/2021)

தலைப்பு : தனிமையான சாலைகள்

 

முள்மரங்கள் சூழ்ந்திருக்கும்

மூன்றுமைல் தொலைவிருக்கும்

கள்ளிமலர்ச் செடிகளூடே

காடாக வளர்ந்திருக்கும்

குள்ளநரி மறைந்திருக்கும்

குறுமுயலும் குடியிருக்கும்

பள்ளமேடு குண்டுகுழிப்

பாதையிலே நிறைந்திருக்கும்

 

பள்ளிசென்று படிப்பதற்கும்

பக்கத்தூர் செல்வதற்கும்  

துள்ளியாடும் மனத்தோடு

தொலைதூரம் செல்வதற்கும்

வெள்ளைநிற சாலைகள்போல்

வீற்றிருக்கும் காட்டுவழி

உள்ளத்தில் பயமூட்டும்

ஊருக்கோ வழிகாட்டும்

அணியணியாய் மரம்வளர்ந்து

அழகழகாய்க் காய்த்திருக்கும்

கனியுண்டு களித்திடவும்

களைப்புதனைப் போக்கிடவும்

அணிலோடு அழகுபட்சி

அத்தனையும் அங்குவரும்

இனிமையான குரலெழுப்பி

இணையினையும் குசிப்படுத்தும்

 

காலத்தின் கோலத்தால்

காடெல்லாம் வீடாக

வேலமரக் காடுகளும்

வெற்றிடமாய்க் காட்சிதர

ஆலமரம் அரசமரம்

அத்துனையும் அழித்தொளித்து

நாலுவழிச் சாலைகளாய்

நெடுந்தூரம் நீண்டிருக்கு

 

இனிமையான பயணங்கள்

இன்றெமக்குக் கிடைத்திடவே

பிணிபோக்கும் மரங்களையும்

பிற்போக்காய் வெட்டிவிட்டு

நனிச்சாலை யமைத்தாலும்

நலமான பிடிப்பின்றித்

தனிமையான சாலைகளாய்த்

தடம்போலே விரிந்திருக்கும்

கணேசுகுமார் பொன்னழகு.