புதன், 1 மே, 2019

"புது புது தொடக்கங்கள்"

நாளை விடியும் பொழுதை
நம்பி வாழும் உயிர்க்கு
காலை மாலை யென்று
கரைந்து மலரும் பொழுதும்
வேளா வேளை யென்று
விரைந்து முடியும் நாளும்
பாலை வார்க்கும் பொழுதாய்ப்
பாரில் தோன்ற வேண்டும்

விதியை நொந்து பேசும்
வீணர் இருக்கும் வரையில்
மதியின் மேன்மை யறிந்து
மகிழ்ச்சி கொள்வ தேது
புதிய புதிய தொடக்கம்
புகுத்த நினைக்கும் மனிதா
புதுமை எண்ணம் கொண்ட
புரட்சிப் பாதை திறக்கும்

திறமை கொண்ட மக்கள்
திராணி யற்று வாழும்
வறுமை நிலையைப் போக்கி
வளத்தைச் சேர்க்கும் புதுமை
பெருகி வளர்ந்து வந்தால்
பஞ்ச மெல்லாம் தீர்க்கும்
பொருள்கள் வந்து குவிய
 பூமி மாற்றம் காணும்


திங்கள், 29 ஏப்ரல், 2019

"என் கல்லறையில்..."

இந்தப் புவியில் பிறந்த மனிதன்
இறுதி வாழ்வை முடிக்கும் போது
வந்த நோக்கம் முடிந்த தென்று
வாழும் மனிதன் சொல்லக் கேட்டுச்
சொந்த மென்றும் பந்த மென்றும்
சொல்லிக் கொள்ளும் உற்றார் உறவும்
எந்த வழியும் ஏற்ப தில்லை
ஏற்ற வழியில் நடப்ப தில்லை

உடலும் உயிரும் பிரிந்த பின்னே
உலக வாழ்வு நிலைப்ப தில்லை
உடையோர் உள்ளம் வாடு மென்று
ஒட்டி வைத்துப் பார்ப்ப தில்லை
பட்டுத் துணியில் போர்த்தி வைத்துப்
பலநாள் பாது காப்ப தில்லை
கட்டி வைத்த கல்லின் அறையில்
காலம் முழுதும் இருப்ப தில்லை

பெற்றோர் உற்றோர் யாரு மற்று
பிரிந்து செல்லும் நேரம் வந்தால்
பற்று நீங்கிப் பரிவு பிறக்கும்
பார்ப்போர் நெஞ்சம் பதறித் துடிக்கும்
வற்றா குளமும் வாய்க்கால் வரப்பும்
வாழ்வில் சேர்த்து வைத்த வளமும்
கற்ற கல்வி பெற்ற செல்வம்
காடு தாண்டிச் செல்வ தில்லை

போகும் பாதை போலி யென்றும்
புதிய வாழ்வு தேவை யென்றும்
ஆகும் வழிகள் உரைத்த போதும்
அச்ச மின்றி வாழ்ந்த மனிதன்
சாகும் போது சொல்லும் சொல்லே
சான்றோர் ஆன்றோர் உரைத்த சொல்லாம்
வேகும் கட்டை வெல்வ தில்லை
வெற்றுப் பேச்சு நிலைப்ப தில்லை

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"ஓ மனமே"

மனமே மனமே தளராதே
மதிதான் இருக்கு மயங்காதே
தினமே தினமே நகராதே
திரும்ப இந்நாள் வாராதே
பணமே பணமே உன்னாலே
பந்த பாசம் காணோமே
குணமே குணமே எந்நாளும்
கனிவாய் இருக்க முடியாதோ

வாழ்வே வளமே பெருகாயோ
வறியோர் நலத்தை நான்பேண
ஏழ்மை நிலையில் நீவந்தால்
என்னைச் சுற்றி யார்வருவர்
ஊழின் பிறப்பாய் நீயிருந்தால்
உன்னைச் சுற்றி் யாரிருப்பார்
வாழ்வின் ஒளியாய் வழங்கிடவே
வருவாய் வளர்வாய் தினம்தினமே!
"கைப்பிடி மண்"

நாடாண்ட மன்னனும் நாளைவரும் சாவினை
நாடாமல் போவதில்லை நம்பியவர் - ஓடி
மறைத்தாலும் காலனும் கைகட்டி நிற்பதில்லை
இறுதியிலோ கைப்பிடி மண்

ஊராரும் உற்றாரும் உன்னுடனே உண்டாலும்
தேர்ப்போகும் வீதிபோல் கூட்டந்தான் - சேர்ந்தாலும்
உடையவர் யாருமின்றிச் சுட்டிடும் காட்டில்
கிடைப்பதோ கைப்பிடி மண்
"பெருங்கடல் பெருங்கடல் உன்னால்..."

விற்பனைப் பொருள்களைப் போலே
வெறுமனே எழுதிடத் துணிந்தே
கற்பனைக் குதிரையில் ஏறி
கவிமணம் பரப்பிட வந்தேன்
கற்றவர் பாடிய கவியின்
கருத்தினைப் படித்திட யெண்ணி
தற்புக ழற்றதால் நானும்
பாவிதழ் தூவிட முனைந்தேன்

பெருவுடல் பெருவுடல் கொண்டு
பிழைத்திடும் பிழைத்திடும் சடமே
கரும்பென கரும்பென இனிப்பின்
கட்டுடல் கட்டுடல் தன்னில்
சிறுமனம் சிறுமனம் பெற்றுச்
சிதைத்திட சிதைத்திட வேண்டேன்
பெருங்கடல் பெருங்கடல் உன்னால்
பிறிதொரு பெருங்கடல் நீந்தேன்

வாழ்ந்திடும் வாழ்கையின் முன்னே
வழிப்பறி கொள்ளையன் போலே
வீழ்த்திடும் யமனையும் கண்டால்
விரும்பிய வாழ்வுதான் எங்கே?
கீழ்த்தரம் உற்றவர் செயலால்
கிடைத்திடும் நிம்மதி யுண்டோ
தாழ்த்திடும் தன்னலம் தவிர்த்துத்
தரணியோர் வாழ்த்திட வாழ்வேன்
"இந்தக் கவிதைக்கு அதிகாரப்பூர்வ ஆதரவாளர்கள்"

இலக்கண மரபு கொண்டு
இயற்றிய இனிய கவியும்
இலக்கண மரபு மீறி
இயற்றிய புதுமை கவியும்
விளக்கிடும் கருத்தைக் கொண்டே
வேண்டுவோர் நெஞ்சி லென்றும்
இலக்கினைச் சுட்டிச் சென்று
இலக்கியச் சான்றாய் விளங்கும்

சிக்கலின் தன்மை யறிந்து
சிறப்புடன் சேவை செய்யும்
மக்களின் தேவை வேண்டி
மழைதரும் பயன்கள் போலே
பயிர்களின் பசுமை வேண்டி
பாய்ந்திடும் ஆற்று நீர்போல்
உயிர்களின் உள்ளம் நாடும்
உயரிய படைப்பே கவிதை
"இசைக்குழுக்களுக்கு இன்று விடுமுறை நாள்"

எம்எஸ்வி என்றாலே
இனிமைதரும் பாடலோடு
செம்மையான மெல்லிசையும்
செவிகளுக்குத் தேனூட்டும்

தாய்பாட்டு சேய்பாட்டு
தரமான தெம்பாங்கும்
வாய்பாட்டாய் அமைந்தாலும்
வளமான பொருளுமுண்டு

இசைப்பாட்டு வசைப்பாட்டு
எப்பாட்டாய் ஆனாலும்
இசைகொண்டு பாடும்போது
இனிமையினை அள்ளித்தரும்

மெல்லிசையின் மேன்மையிலே
மனம்கவர இசைத்ததனால்
மெல்லிசையின் வேந்தரென
மேன்மையோர்கள் அழைப்பதுண்டு

எத்தனையோ இசைக்குழு
இங்குவந்து இசைபாட
அத்தனையும் அவர்பாட்டை
அரங்கத்தில் அரங்கேற்றும்

பாட்டுக்குப் பஞ்சமில்லா
பாரினிலே பிறந்தபோதும்
கேட்போர்கள் சலிப்பின்றிக்
கைதட்டி வரவேற்பர்

இன்னிசைக்குத் இரைபோட்ட
இசைவேந்தர் இறந்ததாலே
இசைக்குழுக்கு இன்றொருநாள்
இசைபாட விடுமுறைநாள்
"ஆயுதம் இல்லா உலகில்"

இறைமீது கொண்டிட்ட
ஈடில்லா பக்தியாலே
கறைபடிந்த நெஞ்சினராய்க்
குமுகத்தில் சிலருண்டு

நிலமீது கொண்டிட்ட
நீண்டதொரு ஆசையாலே
நீசமனம் கொண்டோரும்
நிலப்பரப்பில் சிலருண்டு

மார்க்கமீது மதிப்புள்ளோர்
மாண்பற்ற போதனையில்
மதியிழந்து உழல்வோரும்
மண்மீது சிலருண்டு

வர்க்கமீது வாஞ்சையுள்ளோர்
வறுமையில்லா வாழ்வெண்ணி
வழிதவறிப் போவோரும்
வையகத்தில் சிலருண்டு

இனமீது கொண்டிட்ட
இணையில்லா இச்சையாலே
தனியரசு கேட்போரும்
தரணியிலே சிலருண்டு

அன்பில்லா ஆயுதத்தால்
அழிவைநாடி அடிவைத்து
வன்முறைக்கு இலக்காகி
வாழ்விழப்போர் சிலருண்டு

மேற்கண்ட சிலராலே
மேதினியில் தீர்வுவேண்டி
மேம்பட்ட செயலென்று
மரணத்தை உண்டாக்கும்

எண்ணத்தைத் தூண்டிவிட்டு
இழப்புகளை வரவேற்கும்
வன்மத்தார் கைகளிலே
விதவிதமாய் ஆயுதங்கள்

ஆயுதங்கள் தூக்குவதில்
யாருக்குப் பயனென்று
ஆய்ந்துநாம் பார்த்தாலே
அளப்பரிய உண்மைவரும்

நேயத்தை வளர்ப்பதற்கு
நெஞ்சமுள்ள மானிடரே
ஆயுதமற்ற உலகத்தை
அவனியிலே உருவாக்கி

அன்பென்னும் அரவணைப்பில்
அனவரையும் ஒன்றிணைத்து
துன்பமில்லா வாழ்வுதனைத்
தொடர்ந்துவரச் செய்திடுவோம்
'சிங்கை மகனுக்குத் தாலாட்டு'

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கண்ணேஎன் கண்மணியே
கறபகமே நீயுறங்கு
பொன்னேஎன் பொன்மணியே
பொற்பதமே நீயுறங்கு

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே நீயுறங்கு
பொன்னுறங்கு பூவுறங்கு
பொன்மணியே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ ...

கன்னித்தமிழ் நான்பாட
கண்ணயர்ந்து நீயுறங்கு
கண்ணயர்ந்து உறங்குமுன்நீ
கடக்கும்வழி கேட்டுறங்கு

ஆராரோ ஆரிரரோ ...

சிங்கையென்னும்ச சிறுநாடாம்
சீர்மைபல பெற்றநாடாம்
உங்கப்பன் தாத்தனோட
உழைப்பாலே உயர்ந்தநாடாம்

பிழைப்புநாடி வந்தவர்க்கும்
பிழைப்புகோடி தந்தநாடாம்
பிழையில்லா பெருமைகளைப்
பேருபெற்று வளர்ந்தநாடாம்

ஆராரோ ஆரிரரோ ...

உழைப்பைச் சுரண்டுகின்ற
ஊழலுமே இங்கில்லை
பிழைப்பைக் கெடுக்கின்ற
பித்தலாட்டம் இங்கில்லை

தண்ணீர்ப்  பிரச்சினையும்
தலைமேலே நிற்குதடா
தண்ணீர்ப் பிரச்சினையைத்
தகர்த்தெறிய தோள்கொடடா

ஆராரோ ஆரிரரோ ...

எல்லைப் பிரச்சினையும்
இன்றுவரை இருக்குதடா
எல்லைப் பிரச்சினையும்
இல்லாமல் நீசெய்யடா

சமயப் பிரச்சினையும்
சந்தில்வரப் பாக்குதடா
சமயப் பிரச்சினையும்
சத்தமின்றித் தீர்ப்பாயடா

ஆராரோ ஆரிரரோ ...

சிங்கையாம் நம்நாட்டில்
செந்தமிழும் தலைத்தோங்க
சங்கத்தமிழ் நீபாடிச்
சந்ததிக்கும் கற்றுக்கொடு

நல்லிணக்கக் கோட்பாட்டை
நாளைவரும் தலைமுறைக்கும்
நல்விதமாய்ச் சொல்லிவிடு
நல்லவராய் வளர்த்துவிடு

ஆராரோ ஆரிரரோ ...

பல்லினத்து மக்களோட
பண்பாட்டை மதிப்பதோடு
தொல்தமிழர் மரபினையும்
துலங்கும்படி செய்துவிடு

வந்தாரை வாழவைக்கும்
வாழ்வியலைக் கற்பதோடு
சொந்தபந்த சுற்றத்தோடு
சேர்ந்துவாழக் கற்றுக்கொடு

ஆராரோ ஆரிரரோ ...

செம்மாந்த இனமென்ற
சிந்தனையை வளர்பதோடு
நம்தமிழர் வளர்ச்சியிலே
நாளெல்லாம் உழைப்புகொடு

மண்சார்ந்த மரபுகளை
மனத்தினிலே பதிப்பதோடு
பண்பார்ந்த பணிவோடு
பழமையினை போற்றிவிடு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

"பேயாவது பூதமாவது"

பிள்ளைக்குச் சோறூட்ட
பேயென்றும் பூதமென்றும்
பொல்லாதப் பொய்யோடு
புரட்டுகளும் சொல்லிடுவார்
கள்ளமில்லாப் பிஞ்சுகளின்
கருணைமிகு நெஞ்சத்தில்
பள்ளத்தை உருவாக்கிப்
பயம்கொள்ளச் செய்திடுவார்

காலில்லா கறுப்புருவம்
காற்றினிலே மிதந்துவந்து
ஆள்பிடிக்கும் எண்ணத்தில்
ஆவியாக அலையுதென்பார்
நாளெல்லாம் நடுநிசியில்
நாத்துருத்தி வருமுருவம்
வேலியோரம் வேம்பினிலே
விழிபிதுக்கி நிற்குதென்பார்

வெள்ளையாடை மேலுடுத்தி
விரித்துவிட்ட கூந்தலோடு
எல்லையிலே இருக்குமென்பார்
எரிவிளக்குத் தெரியுதென்பார்
மல்லிகையும் மரிக்கொழுந்தும்
மணம்பரப்பி மயக்குதென்பார்
மரணத்தை விளைவிக்கும்
மாயைதான் வந்ததென்பார்

கறுப்பான ஓருருவம்
கலையில்லாப் பேருருவம்
இருட்டினிலே வருமென்றும்
இளையோரைப் பிடிக்குமென்றும்
கருத்தில்லாக் கதைகளுக்குக்
கைகாலை முளைக்கவைத்து
வெறும்வாயை மென்றிடுவார்
வீரத்தையும் கொன்றிடுவார்
‘மனமேடை’

நேசமில்லா நெஞ்சினருக்கும்
நன்மையிது வெனக்காட்ட
பாசமென்னும் பரிவோடு
பகிர்ந்தளிக்கும் பண்பினையும்
காசில்லா கருணையோடு
கள்ளமில்லா சிரிப்பினையும்
மாசில்லா எண்ணமோடு
மதிப்பான மாண்பினையும்

குணமென்னும் கோல்கொண்டு
குரங்காட்டம் ஆடுகின்ற
மனமேடைப் பந்தலிலே
மாத்தமிழால் ஏற்றிவைத்து
தினந்தோறும் பாடிவரும்
தெம்பாங்கு பாட்டோடு
மணம்பரப்பும் மலராலே
மரியாதை செய்திடுவோம்
"விதியின் விதிகள்"

சொற்போரில் சோராத
சுரணையுள்ள செந்தமிழர்
மற்போரில் மாண்டாலும்
மறப்போரில் வீழ்ந்தாலும்
தற்காக்கும் எண்ணத்தில்
தலைவிதியின் எழுத்தென்று 
ஒருபோதும் சொன்னதில்லை
உரைவழியும் எழுதவில்லை

உதிக்கின்ற உள்ளுணர்வின்
உண்மையினை உணராது
மதிகூறும் மாற்றத்தை
மனமேற்கச் செய்திடவே
சதிசெய்யும் சண்டாளர்
சாதகத்தின் துணைகொண்டு
விதிசெய்யும் வேலையென
வெறும்கூச்சல் செய்திடுவர்
"மடி"

ஆவின் மடிதேடும் கன்றும்
அன்னை மடிதேடும் சேயும்
கோவின் மடிதேடும் குடியும்
குடிகள் மடிதேடும் குலமும்

மேக மடிதேடும் மழையும்
மழையின் மடிதேடும் பயிரும்
சோக மடிதேடும் சுகமும்
சுகத்தின் மடிதேடும் வாழ்வும்

ஒன்றில் ஒன்றாய்க் கலந்தே
உயிரின் மடியாய்த் தோன்றும்
பண்பின் பயனாய் விளைந்து
பரிவின் மடியாய்த் தொடரும்

அன்னை தந்தை மடியில்
அன்பும் அறிவும் தோன்றும்
என்னுள் இணைந்தாள் மடியில்
இன்பக் குலமோ துலங்கும்
"காதல் இல்லா உலகில்"

புவியில் தோன்றும் உயிர்கள்
புதிய வாழ்வைத் தொடர
நவிலும் வார்த்தை நயத்தால்
நல்லோர் பலரும் வாழ
கவியின் கருத்துப் புலத்தில்
காட்சி கொண்டு படைக்க
புவியில் உள்ள காதல்
புதுமை யோடு விளங்க

வேதம் நான்கும் சொன்ன
வாழ்வின் உயர்ந்த நிலையும்
நாதம் பாடும் வாயால்
நவிலும் நல்ல சொல்லும்
சோதனை சூழ்ந்த வாழ்வில்
சுகமாய்ப் பெற்ற யாவும்
காதல் இல்லா உலகில்
கலைந்து போகும்  கனவாய்
"நிலவும் ஆதவனும்"

காலைத் தோன்றும் ஆதவனும்
கனிவாய் வந்து சூடேற்ற
வேளை யுச்சி வேளையென்று
வெப்பக் கனலு முயர்ந்தேறும்
மாலை நேரம் வந்ததுமே
மதிய சூடும் குறைந்திறங்கும்
காளை வேகம் கொண்டவனும்
களைத்து மேற்கில் உறவாட

இரக்க மற்ற இவ்வுலகில்
இணைந்தோர் பிரிந்தோர் இருவருக்கும்
உறவின் நெருக்க மதிகரிக்க
உண்மை யுள்ளம் மகிழ்ந்திருக்க
இரவில் தோன்றும் ஒளிநிலவும்
இன்பம் நல்கும் பனிநிலவாய்ப்
பரந்து விரிந்த பாரினிலே
பகல்போல் வெளிச்சம் கொட்டிடுமே
"பேச மறுக்கும் குருதிச் சுடர்"

கூடு விட்டு கூடு சென்ற
குருதி மாற்று அணுவால் தானே
வீடு நிறைந்து விருத்தி யாச்சு
வெறுமை மனதும் அமைதி யாச்சு
நாடு வாழ உழைக்கு மென்று
நம்பி நாளும் வளர்த்த பிள்ளை
கோடு போட்ட கட்டம் தன்னில்
கொள்கைக் குன்றாய் வளர்ந்த பிள்ளை

பத்து மாதம் சுமந்த பிள்ளை
பாசம் வைத்து வளர்த்த பிள்ளை
முத்து முத்தாய்ப் பேசும் பிள்ளை
முன்னோர் பெயரைக் காக்க யெண்ணிச்
சொத்து மீது நாட்ட  மின்றிச்
சொந்த மென்றே வாழ்ந்த பிள்ளை
மத்துக் கடைந்த வெண்ணெய் போலே
மனத்தைக் கொண்ட மாண்பு பிள்ளை

தாலி கட்டிப் போன பின்னே
தன்னைத் தானே மறந்த தாலும்
வேலி போல யிருந்த வுறவை
வெட்டி விட்டுப் போன தாலும்
காலில் விழுந்தும் கரையா நெஞ்சம்
கல்லின் தன்மை பெற்றார் போலே
பாலில் நஞ்சைக் கலந்தார் உள்ளம்
பேச மறுக்கும் குருதிச் சுடரே!
"வெளியில் ஆடும் விளக்கு"

           (வெண்பா)
காலை எழுந்த கதிரோன் களைப்பாறும்
வேளை புவியில் இருள்சூழ - மாலை
விலகும் பொழுதில் விழிக்கும் நிலவே
வெளியினி லாடும் விளக்கு


    (அறுசீர் விருத்தம்)
காலைக் கதிரொளி கலைந்திட
களைப்பில் யாவரு முளர்ந்திட
மாலை மடிந்திடும் வேளையில்
மயங்கும்  இருளினில் முளைத்திடும்
பாலை மணல்நிற மொத்திடும்
பனியின் குளிரினைப் பொழிந்திடும்
வாழ்வின் அடிப்படை யுணர்ந்திடும்
வெளியி் லாடிடும் விளக்கினில்
பட்டினத்துக் காற்று

மாமலையாம் பொதிகையிலே
மலர்ந்துவந்த மாதவளாம்
தேமதுரை தெருவெங்கும்
தென்றலாக மணம்பரப்பி
பாமரரும் பரதவரும்
பாடுபடும் பட்டினத்தில்
கோமகளாய்க் கொலுவிருந்து
குளிர்தருவாள்  நற்காற்றாய்

குடநாட்டுக் குன்றோடு கொள்ளிடத்துக் காவிரியில்
தடையின்றித் தவழ்ந்துவரும்
தர்மத்தின் தாயவளாம்
படகோட்டிப் பாடுபடும்
பாட்டாளிக் குடிசையிலும்
படர்கொடியாய்ப் பற்றிடுவாள்
பட்டினத்துப் பனிக்காற்றாய்.
"சொல்லவொரு வார்த்தை யில்லை
சூடவொரு பூவு மில்லை
நல்லவுள்ள மிருந்த போதும்
நாடிவர யாரு மில்லை
தொல்லைபல ஏற்ற வுள்ளம்
தொலைந்துதான் போக வில்லை
கொல்லவரும் பகைவர் முன்னே
குனிந்துயென்றும் நின்ற தில்லை

குத்துவாளின் கூர்மை தன்னை
குறுஞ்சிரிப்பில் கண்ட போது
சத்தற்ற தேகம் கொண்டு
சடம்போலே சாய்ந்த தாலே
புத்திசொன்ன பெரியோர் சொல்லைப்
பொருட்டாக எண்ண வில்லை
கத்திகொண்டு வீசும் போது
கடுகளவும் பயந்த தில்லை

வேசமுற்றோர் பேசும் பேச்சை
வேதமாக எண்ணிச் சென்று
நாசமான பின்னே தானே
நல்லபுத்தி பெறுவ துண்டு
நேசம்கொண்ட நெஞ்சம் தன்னை
நினைப்பதற்கு யாரு மில்லை
பாசமற்று பார்ப்போர் கண்ணில்
பரிவென்றும் பிறப்ப தில்லை
"கடல் அலையில் தமிழ்"

காற்றடிக்கும் திசையெங்கும்
கலஞ்செலுத்தி வாழ்ந்தயினம்
வேற்றவரின் வேரறுக்க
விற்படையும் வாட்படையும்
வேற்படையும் தேர்படையும்
விதவிதமாய்க் கொண்டயினம்
போற்றுவோர்க்குப் பொன்னோடு
பொருள்களையும் தந்தயினம்

நம்நாட்டு வேந்தரினம்
நாடுபல பிடித்தபோது
தம்மறத்தின் தீரமோடும்
தடந்தோளின் பலமோடும்
நம்மொழியாம் நற்றமிழை
நிலைநாட்டி வாழவைக்க
வம்பேதும் செய்யவில்லை
வரம்புமீறிப் போகவில்லை

நாற்றிசையும் கடல்சூழ
நடுவினிலே யமைந்தநாடு
வேற்றுநாடும் வியந்துபார்க்கும்
விந்தைபல கொண்டநாடு
வேற்றினங்கள் புடைசூழ
வெற்றிகளைப் பெற்றநாடு
மாற்றினத்து மொழிகளையும்
மணிமுடியாய்க் கொண்டநாடு

வாய்மொழியாய்க் கொள்ளாமல்
வாழுகின்ற மொழியாகத்
தாய்மொழியாம் தமிழ்மொழியைத்
தமதரசில் ஏற்றநாடு
தாய்தந்த பாலாகத்
தமிழ்மொழியை யூட்டுவதால்
சேய்பெற்ற பலனாகச்
செந்தமிழும் வாழுதிங்கே

வியாழன், 11 ஏப்ரல், 2019


சுற்றுச் சூழல் பாதுகாப்பு

முகிலரும்பு கொட்டுகின்ற முத்தான பூமியிலே
நெகிழிகளும் குப்பைகளும் நிறைந்தே போச்சு
மண்ணோடு மலர்வாசம் மணத்திடும் நிலமெல்லாம்
கண்பார்க்க காட்சியின்றிக் கட்டிடங்கள் ஆச்சு
வாமனனாய் முளைத்திட்ட வானளவு கட்டிடத்தால்
பூமித்தாயின் நெஞ்சமெங்கும் புண்ணாய்ப் போச்சு
சாலையோடும் வாகனங்கள் சத்தமோடு புகையினையும்
ஆலையோடும் இயந்திரங்கள் ஆழாகால விசத்தினையும்
மீண்டும் மீண்டும் சலிப்பின்றிக் கக்கியதால்
வான்வெளியும் மண்வெளியும் பயனற்ற நஞ்சேயாச்சு
நாமின்று செய்கின்ற கேடான செயலாலே
நாளைய தலைமுறையும் நலிவுறும் நிலையேயாச்சு!


சிங்கப்பூரில் தமிழ்

வாசமுள்ள தமிழிது வசந்தத்தை தூவுது
நேசமுள்ள நெஞ்சில் நித்தமது வாழுது
பொன்னைப்போல் உயர்ந்த பழந்தமிழ் மொழியிது
கண்ணைப்போல் கருத்தாய்க் காலமெல்லாம் காத்திடு.
                                 (வாசமுள்ள தமிழிது ...)

சிங்கப்பூர் நாட்டில் சிறப்புடனே விளங்கும்
சிங்காரத் தமிழிது சிந்தையிலும் வாழுது
நால்வகை மொழிகள் நாட்டுக்காய் இருந்தாலும்
நாளெல்லாம் நாவினிலே நவின்றிடும் தமிழிது
     (வாசமுள்ள தமிழிது ...)

ஏதேதோ மொழிகள் இங்கிருந்த போதும்
வேதத்தின் வித்தாய் விளங்கிடும் தமிழிது
அன்போடு ஆறுதலும் அளித்திடும் மொழியிது
பண்போடு பாசத்தையும் பகர்ந்திடும் தமிழிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

வல்லோர்கள் தடுத்தும் வாடாத மொழியிது
நல்லோர்கள் கூடி நாட்டிட்ட தமிழிது
பள்ளிமுதல் வகுப்பினிலும் படித்திடும் தமிழிது
கல்லூரி காலம்வரை கட்டாய மொழியிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

எழுத்துக்கும் பொருள்கொண்டு இயங்கிடும் தமிழிது
இளையோரும் முதியோரும் இயம்பிடும் மொழியிது
உழைப்பாளர் சேர்ந்தே உயர்த்திட்ட மொழியிது
பழமையிலும் புதிதாய்ப் பிறந்திடும் தமிழிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

ஆண்டுக்கு ஒருமாதம் அளவில்லா நிகழ்ச்சிகளை
ஈண்டிங்குக் கொடுத்திடவே இசைந்திட்ட மொழியிது
ஆன்றோரும் சான்றோரும் அழகழகாய்ப் படைப்புகளை
ஈன்றெடுத்த மொழியிது சிங்கப்பூர்த் தமிழிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

                           கணேசுகுமார் பொன்னழகு
                           சிங்கப்பூர்

           அன்பே! அன்பே!

கண்ணாய்க் கருத்தாய்க் காத்தாலும்
           கல்லின் குணமாய் இருப்பாயே
என்னில் உன்னைச் சேர்த்தாலும்
           எதிராய் நின்று முறைப்பாயே
அன்பே! அன்பே! என்றுன்னை
           ஆசை யோடு அழைத்தாலும்
என்போல் நெஞ்சால் அன்புருக
            என்றும் உன்னால் இயலாதே

அன்றில் பறவை பார்த்தாயா?
           அவற்றின் கதையைக் கேட்டாயா?
ஒன்றில் லாமல் உயிர்வாழா
            உயர்ந்த நெறியை உணர்ந்தாயா?
என்றும் இதுபோல் நாம்வாழ
            இன்றே நல்ல முடிவோடு
அன்பே! அன்பே! என்றென்னை
           ஆசை தீர அழைப்பாயோ!
சிங்கைத் தாயின் புதழ்வன்

சிங்கைத் தாயின் புதழ்வன்
           சீரிய குடும்பத் தலைவன்
இங்கு வந்த போதும்
          ஏற்றம் குன்றா வலியோன்
சங்க கால மரபை
          சமைத்து வாழும் மனிதன்
மங்காப் புகழை யென்றும்
          மதித்து வாழும் தமிழன்

சிங்கை நாட்டை யாளும்
           சிறப்பு வாய்ந்த அரசால்
எங்கள் தமிழைப் போற்ற
           ஏற்றுக் கொண்ட வழியில்
சங்க மொன்றை யமைத்துச்
           சலுகை பலவும் பெற்றுப்
பங்கு கொள்ளும் மாதம்
           பலரும் கூடும் மாதம்

ஏப்ரல் மாதம் முழுதும்
          எங்கள் மொழியைப் போற்றிக்
காப்புக் கவிகள் பாடிக்
          களிப்பு கொள்ளும் புலவன்
மூப்பு கொள்ளாத் தமிழை
         மூன்று தமிழாய்க் கொண்டு
காப்பி யங்கள் படைத்துக்
          காக்கு மெங்கள் மறவன்

மழலை குன்றாக் குழந்தை
          மேடை யேறிப் பேசும்
செழிப்பு மிக்கத் தமிழைச்
         சிந்தை கொள்ளும் மாதம்
உழைக்கும் தமிழ ரெல்லாம்
          ஒன்று கூடும் அரங்கில்
செழுமை நிறைந்த தமிழால்
          சிறப்புச் செய்யும் மாதம்


"பிடித்த உணவு"

அண்ணன் தம்பி
          அக்கா தங்கை
அன்னை தந்தை
          அனைத்து உறவும்
அன்பு கொண்டு
          அமர்ந்து இருந்து
உண்ணும் உணவே
          உயர்ந்த உணவு

               (வேறு)

காயமென்ற கட்டுடலைக்
           களைப்பின்றி வைத்திடவும்
பாயின்றி மெத்தையின்றி
           படுத்தவுடன் உறங்கிடவும்
நோயின்றி நொடியுமின்றி
           நலமோடு வாழ்ந்திடவும்
வாய்திட்ட உணவுதானே
           வளமான நல்லுணவு

              (வேறு)

நசிக்கிவரும் நாட்டாமை
           நாடுகளின் பிடிதன்னில்
நசிந்துவரும் நாடுகளும்
            நடைபிணமாய் யிருக்கையிலே
வசிப்பிடந்தான் ஏதுமின்றி
            வறுமையிலே வாழ்ந்தாலும்
பசித்திட்ட வயிற்றுக்குப்
            பழஞ்சோறும் கிடைப்பதில்லை

பசியோடு உணவின்றிப்
            பாரினிலே பலரிருக்க
வசிப்பதற்கு வீடின்றி
           வீதியிலே குடியிருக்க
பசிபோக்கும் பாலின்றிப்
            பாலகரும் அழுதிருக்க
புசிப்பதற்குப் புலாவோடு
             புதுவுணவும் கிடைப்பதெங்கே
   
              (வேறு)

பிடித்திட்ட உணவோ யில்லை
           பிடிக்காத உணவோ பசிக்குப்
பிடியளவு கிடைத்தால் கூடப்
           பிள்ளைக்குக் கொடுத்த பின்னே
மடிதடவி மகிழ்வார் அன்னை
            மனநிறைவு கொள்வார் பின்னும்
படியளந்தார் பண்பைப் போற்றிப்
            புகழ்ந்திடுவார்  கண்ணால் பனிப்பார்


"இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா"

மதுகுடித்த போதையிலே  மயங்கிட்டார்
            முன்சென்று மயக்கத்தின் காரணத்தை
மெதுமெதுவாய் யெடுத்துரைக்க முயன்றாலும்
            மனிதமனம் மயங்கியதா லவர்வாயில்
மதிகெட்ட பேச்சுவரு மேச்சுவரும்
            மேலானோர் சகித்தாலும் வெறுத்தாலும்
மதுசெய்யும் கொடுமைதனை யெடுத்துரைத்து
            மனிதத்தைக் காத்திடுவார். சிலர்மனமோ

மதுவளிக்கும் போதையினை யறிந்தாலும்
             மயக்கத்தின் வேதனையை வுணர்ந்தாலும்
இதுவெல்லா மரசியலில் சகஜமப்பா
             எனச்சொல்லிப் பிழைப்போரு மிங்குண்டு
இதெல்லாமா  சகஜமென்றி கழ்வோரும்
             எகத்தாளம் செய்வோரு மிங்குண்டு 
எதுவெல்லாம் சரியென்றெ டுத்துரைக்க
             ஏற்றதொரு மனிதமன மிங்கில்லை
பத்துச் சொற்களில் பாட்டு

தமிழே மொழியாய் யானதால்
            தரணி யெங்கும் சென்றதே
தமிழே விழியாய் யிருப்பதால்
           தாய்க்கு நிகராய் யானதே
தமிழே அமிழ்தாய் யிருப்பதால்
           தரத்தில் மேன்மை கொண்டதே
அமிழ்தாய் யினிக்கும் தமிழினை
           அள்ளிப் பருக வேண்டியே

முத்து முத்துச் சொல்லை
          மூன்று தமிழாய்க் கூட்டிச்
சத்துக் மிகுந்த  கருத்தால்
          சந்தப் பாட்டு ஒன்றை
வித்தாய்க் கொண்டு நானும்
          விரும்பி யெழுத முயன்று
பத்துப் புதியச் சொல்லால்
          பகுத்தே யெழுதிப் படைத்தேன்
"ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இங்கில்லை"

ஆணென்றும் பெண்ணென்றும்
           அவதரித்த பூமியிலே
மானிடரின் பிறப்பென்று
          மாறுபாடு கொண்டாலும்
ஊன்வேறாய் உடல்வேறாய்
          உலகோர்கள் பார்த்தாலும்
நான்பெரிது நீசிறிதென
          நாட்டாமை செய்யலாமோ

மண்போற்றும் மரபோடும்
          மானமிக்க மறத்தோடும்
அன்பிலே பேதமின்றி
           அரவணைத்து வாழ்ந்தயினம்
அன்றுமுதல் இன்றுவரை
            அதியமானும் ஔவையாரும்
கொண்டிருந்த நட்பினிலும்
            குறையேதும் கண்டதில்லை

மாநாய்க்கன் பெற்றவளாம்
             மதுரையினை எரித்தவளாம்
வானுயர்ந்த செங்கோலை
             வளைந்திடச் செய்தவளாம்
கோனுக்கு முன்னின்று
             குற்றத்தைச் சுட்டியவள்
மாண்புபல பெற்றவனை
             மதிகெட்ட மன்னனென்றாள்

வேண்டாத வெள்ளையரை
            வேரறுக்க  விழைந்திட்ட
வீரமங்கை வேலுநாச்சி
           ஆணுக்கு நிகர்பெண்ணும்
அரசாள முடியுமென்ற
            ஆணையினை யிட்டவள்போர்
ஆயுதம்தா னேந்தியவள்
             சேனைக்கு முன்னின்று
சிங்கமெனச் சீறியவள்

பெண்ணென்றும் ஆணென்றும் 
             பிரிவினிலே பேதமற்ற
பண்பாட்டு வாழ்வியலைப்
             பாமரனும் அறிந்திடவும்
எண்ணில்லா சான்றுகளை
             எடுத்துரைத்து விளக்கிடவும்
முன்னோர்கள் படைத்தளித்த
             முத்தமிழும் இருக்கிதிங்கே.
"நவீனத்தின் ஓவியம்"

நான்கினமும் சேர்ந்துவாழும்
          நல்லதொரு நிலப்பரப்பு
வான்பரப்பும் பரபரக்க
          வறண்டநிலம் பூமலரும்
தேன்வார்க்கும் பூக்களிலே
          தேனிக்களும் பாட்டிசைக்கும்
காண்போரின் கண்களுக்கு
          கவினுருவாய்க் காட்சிதரும்

நம்நாட்டின் எல்லைகளாய்
         நாற்புறமும் கடலலைகள்
நம்பிக்கை நாணயத்தின்
         நல்லதொரு குடியரசு
நம்மிளையத் தலைமுறைக்கோ
         நவரசத்தின் நாகரீகம்
நம்சிங்கை விளங்கிடுதே
         நவீனத்தின் ஓவியமாய்

சிங்கைத் தாய் தாலாட்டு

ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கண்ணேயென் கண்மணியே
கற்பகமே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆராரோ...

நம்மகதை நல்லகதை
நீயறிய ஏற்றகதை
வம்புதும்பு செய்யாம
வக்கனையா கேளுகண்ணே

சங்நீல உத்தமனாம்
சமர்செயலில் வல்லவனாம்
சிங்கமென்னும் பேருருவை
சமுத்ரத்தில் கண்டவனாம்

ஆராரோ ஆராரோ...

தங்கநிகர் பொன்னுருவை
தரணியிலே வெளிக்காட்ட
சிங்கபுரா என்னும்பேர்
சிதையாமல் வைத்தவனாம்

பங்கமில்லா பாசமோடும்
பால்நிலவின் ஒளியோடும்
சிங்கையென்னும் நம்நாட்டை
சிறப்புடனே ஆண்டவனாம்

ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கண்ணேயென் கண்மணியே
கற்பகமே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
சீறிச்சென்ற வெளிச்சத்தில் வான்வண்ணம்

காற்றடைத்த பையொன்று
           காலத்தின் கோலத்தால்
நாற்றுக்கு எறுவாகி
           நற்கதிகள் பெற்றிடவே
ஏற்றிவிட்ட ஏணிகளை
           இதயத்தில் கொழுவைத்து
மாற்றமில்லா மகிழ்வோடு
           மனமுருக வேண்டாமல்

பாரிலுள்ள படைப்புகளைப்
           பரிவின்றிச் சிதைப்பதாலும்
ஊரிலுள்ளோர் அனைவருமே
          உண்மையற்று கிடப்பதாலும்
ஏறிவந்த ஏணியென்று
          எண்ணாமல் விட்டதாலும்
சீறிச்சென்ற வெளிச்சத்தில்
          சிதறிடுதே வான்வண்ணம்.
       அரவின்வாய் அகப்பட்டு

பிறர்மீது கொண்ட பொறையைப்
           பிழையென்று எண்ணா மனிதன்
மறுபிறவி யெடுத்து வந்தும்
          மாண்பற்ற மனிதச் செயலால்
நரனாக வாழ்ந்த வாழ்க்கை
          நானிலமும் விரிந்த போதும்
அரவின்வாய் பட்ட அமிர்தாய்
         அர்த்தமின்றி அழிந்தே போகும்.
       காதலித்துப் பார்

பெண்சிந்தும் புன்னகையில்
           பேதைமனம் குறுகுறுக்கும்
வெண்ணிலவின் ஒளிமழையில்
           வீசும்தென்றல் வியர்வைதரும்
கண்மூடிப் படுத்தாலும்
           காதைமூடிக் கொண்டாலும்
உன்னிடத்தில் வந்தமாற்றம்
           உயிரற்றுப் போகும்வரை
      நான் நோக்கும் காலை

பள்ளி செல்லும் பிள்ளைகளும்
           பணிக்கு விரையும் பாமரரும்
உள்ளம் முழுதும் ஒருநினைவாய்
           ஓடும் இந்தப் பரபரப்பில்
நல்லோர் தீயோர் பாராது
            நகர்ந்து செல்லும் நாளேட்டில்
கள்ள மில்லா புன்சிரிப்பாய்க்
            கலைந்து போகும் கடிகாலை

புதன், 16 ஜனவரி, 2019



நெடுநல்வாடையில் இடம்பெற்றுள்ள உவமைகளும் அவற்றிற்குரிய நிலைக்களன்களும்

முன்னுரை
      சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் ஏழாவதாக அமைந்துள்ள இலக்கியம் நெடுநல்வாடையாகும். இந்த இலக்கியத்தின் ஆசிரியர் மதுரை கணக்காயனர் மகனார் நக்கீரர் ஆவார். நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல குளிர்க்காற்று என்பது பொருளாகும். மழைக் காலத்தில் வீசுகின்ற வாடைக்காற்று தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவிக்குத் துன்பத்தைக் கொடுப்பதோடு அவளது கண்களில் நீரையும் நிரப்புகின்றது. அதனால், அவளுக்கு அவ்வாடைக் காற்று மிக நீண்டதாகத் தோன்றுகின்றது. அதே வேளை போர்ப் பாசறையிலே தங்கியுள்ள வீரர்களிடம் பரிவோடு பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்ற தலைனுக்கு அது நல்லதாக இருப்பதோடு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது. சுருக்கமாகச் சொன்னால் நெடுநல்வாடை தலைவியின் அரண்மனை இருப்பையும் தலைவனின் பாசறை இருப்பையும் 188 அடிகளில் பாடுவதாக நீண்டு அமைந்துள்ளது.
பொதுவாகக் கவிதைகளைத் தகுதியாக்குவதற்கும் அழகுபடுத்துவதற்கும் மட்டுமின்றிப் பொருளின் தன்மையை அறிந்துகொள்வதற்கும் உவமைகள் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வகையில் நக்கீரரும் தம் நெடுநல்வாடையில் உவமைகளை ஆங்காங்கே கையாண்டுள்ளார். இத்தகைய உவமைகளின் சிறப்புகளும் அவை இப்பாடலுக்குப் பயன்படும் அழகும் ஈண்டு நோக்கத்தக்கது. இதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தொல்காப்பியர் கூறும் உவமைகளும் அவற்றின் நிலைக்களன்களும்
      ஒரு பொருளை மற்றொரு பொருளுக்கு உவமையாகக் கூறும்போது அவ்விரண்டிற்கும் பொதுவாகிய ஒரு தொழில் காரணமாகவும் அந்தத் தொழிலால் பெறும் பயன் காரணமாகவும் மெய்யாகிய வடிவு காரணமாகவும் மெய்யின்கண் நிலைபெற்றுத் தோன்றும் உருவாகிய வண்ணம் காரணமாகவும் ஒப்பிட்டு உரைக்கப்பெறும். இதனைத் தொல்காப்பியர்,
            வினைபயன் மெய்உரு என்ற நான்கே
            வகைபெற வந்த உவமத் தோற்றம் (உவமயியல் நூற் இளம் 1) என்று விதி செய்து காட்டுவார். வடிவும் வண்ணமும் பண்பில் ஒன்றாக அடங்குமாயினும் கட்புலன் பண்பு, உற்றுணர் பண்பு எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு வேறாகப் பிரித்துரைத்தார். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கனுள் அளவும் சுவையும் தன்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்குமாதலின், இந்நான்கே உவமப் பகுதியென்று தொல்காப்பியர் வரையறுத்தார்.
மேலும், அவர் உவமையின் நிலைக்களமமாகச் சிலவற்றைக் கூறியுள்ளார். அதாவது, வினையுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமம் எனத் தோன்றும் உவமைகள் சிறப்பு, நலன், காதல், வலி என்ற நான்கனுள் ஒன்றை நிலைக்களமாகக்கொண்டே அமைதல் வேண்டுமென்கிறார். இதனை,   சிறப்பே நலனே காதல் வலியோடு
      அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப (உவமயியல் நூற் 4) என்ற நூற்பாவால் அறியலாம். இவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையால் பெறுவது என்றும் நலன் என்பது வரும்பொருளின்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை என்றும் காதல் என்பது, நலனும் வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவை உள்ளனவாகக் கொண்டு கூறுவது என்றும் வலி என்பது, ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உள்ளதாகிய ஆற்றல் என்றும் பொருள் தருகிறார் தொல்கப்பியர். இத்தகைய உவமைகளும் அவற்றிற்குரிய நிலைக்களன்களும் நெடுநல்வாடையில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நெடுநல்வாடையில் உவமைச் சிறப்பும் அழகும்
1. கூதிர் காலத்தின் தன்மை
      கூதிர்க்காலத்தில் குளிரின் மிகையைக் கூறுவதற்காக நக்கீரர் வையம் பனிப்ப என்று நெடுநல்வாடைப் பாட்டைத் தொடங்கி அதில் கோவலரும் ஆநிரைகளும் அடையும் துன்பத்தை விளக்குகிறார். அதாவது, குளிர்காலத்தில் வாடை மிகுதியால் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் இயல்புடைய விலங்குகள் அம்மேய்ச்சலை மறந்திருந்தன. மந்திகள் குளிரால் நடுங்கின. மரத்தில் உறையும் பறவைகள் பிடிப்பின்றி நிலத்தில் வீழ்ந்தன. கன்றுகளை அரவணைக்கும் பசுக்கள் தமது கன்றுகளைப் பாலுண்ண அனுமதிக்காது உதைத்தன என்று விளக்குகிறார். மேலும், நிலையாக இருக்கும் உயிரற்ற மலையே குளிரால் நடுங்குகின்றது என்பதனைக் கூறவந்தவர், குன்று குளிர்ப்பன்ன என்ற தொடரில் தொல்காப்பியர் சுட்டும் பயன் உவமையைக் கையாண்டிருக்கிறார். இதன்மூலம் குளிரின் மிகுதியான வலிமையை உணர்த்த ஆசிரியர் குன்றின் நடுக்கத்தையே உவமையாகக் கூறியதால் இவ்வுவமை வலி என்னும் நிலைக்களனைக்கொண்டு அமைந்துள்ளது என்பது இனிது புலனாகும்.

2. மழைக்காலத்தில் ஊரினது செழிப்பு
      நக்கீரர் ஊரின் சிறப்பையும் செழிப்பையும் ஒருசேரப் புலப்படுத்துகிறார். மழைக்காலத்தில் ஊரில் உள்ள தாவரங்கள், நீர்நிலைகள், பறவைகள், மீன்கள், நெல், கமுகு, சோலை முதலியவற்றைப் பற்றித் தன் சொல்திறத்தால் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார். அதாவது, கூதிர் கால மழைத்துளியும் குளிர்வாடையும் ஊரில் உள்ள இயற்கையை எழிலுறச் செய்கின்றன என்கிறார். ஓரிடத்தில் புதர்கள் தோறும் பின்னிப் பிணைந்து வளர்ந்துள்ள முசுண்டைக் கொடியும் பீர்க்கங்கொடியும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் பீர்க்கம்பூவைப் பொன்னின் வண்ணத்தோடு ஒப்பிடுகிறார். மற்றோரிடத்தில் பாக்கு மரத்தின் கழுத்துப் பகுதியைப் பசுமையும் நீலமும் கலந்த நீலமணியின் வண்ணத்தோடு ஒப்பிடுகிறார். இவ்விரண்டையும் உருவுவமைகளாகப் பயன்படுத்திப் பொருத்திக்காட்டுவது மிகச் சிறப்பானதாகும். மேலும், இவ்வுவமைகள் தொல்காப்பியர் கூறியது போல் சிறப்பு என்னும் நிலைக்களனைக்கொண்டு அமைந்திருப்பது தெளிவாகிறது. இவற்றை, பொன் போல் பீரமோடு’, மும்முதர் கமுகின் மணியுறழ் எருத்து என்ற பாடலடிகளால் அறியலாம்.

3. தெருக்களின் அமைப்பு
ஊரில் உள்ள தெருக்களின் அமைப்பையும் சிறப்பையும் பற்றிக் கூறவந்த நக்கீரர் அவற்றில் நடைபெறும் இயல்பான நிகழ்வுகளையும் ஒருசேரப் பாடுகின்றர். உயர்ந்தோங்கிய மாளிகைகள் பல நிறைந்த பழஞ்சிறப்பினை உடைய ஊரில் உள்ள அகன்ற தெருக்களில் இறுகிய தோளையும் முறுக்குண்ட உடலையும் உடைய கீழ்மக்கள் வண்டுகள் மொய்க்கும் கள்ளினை உண்டவராய்த் தம்மீது பட்டுத் தெறிக்கின்ற கூதிர் கால மழைத் திவலைகளுக்கு அஞ்சாது, தழைகள் பொருந்திய மாலையையும் முன்பக்கமும் பின்பக்கமும் தொங்கக்கூடிய ஆடையையும் அணிந்தவராகத் தெருக்களில் திரிகின்றனர் என்று கூறுகிறார். மேலும், அந்தத் தெருவின் அமைப்பைக் கூறும்முகத்தான் ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் என்று ஆற்றின் வடிவைத் தெருவுக்கு மெய்யுவமையாக வெளிப்படுத்துவதன்மூலம் நம் நக்கீரரின் சொல்லாட்சியின் அழகு புலப்படுகிறது. ஆறு இருபக்கமும் கரையைக் கொண்டுள்ளதுபோல், நகரத்துத் தெருக்களும் இரண்டு பக்கமும் கரையைப் போன்று மாளிகைகளைக் கொண்டு இயல்பான நலம் தோன்ற வனப்புடன் விளங்குகிறது. எனவே, இவ்வுவமை, தொல்காப்பியர் சுட்டியது போல் நலன் என்பதனை நிலைக்களனாகக் கொண்டு அமைந்ததுள்ளது எனத் தெளிவாகிறது.

4. மாலை நேரமும் பெண்களின் வழிபாடும்
      மாலைநேரத்தில் வழிபாடு செய்யும் அழகிய பெண்களின் எழிலைக் கூறவந்த நக்கீரர் அவரது அணிகலன்களையும் அவற்றை அணிந்திருக்கும் முறைமைகளையும் கூறுகிறார். அதாவது, வெள்ளி போன்ற வெண்ணிறச் சங்குவளையல் அணிந்த இறுகிய முன்கையினையும் மூங்கில் போன்ற தோள்களையும் மெத்தென்ற சாயலினையும் முத்துப் போன்ற பற்களையும் மகரக்குழை அணிந்த காதுகளையும் இவற்றோடு கூடிய குளிர்ந்த நோக்கினையுடைய கண்களையும் பெற்ற மடவரல் மகளிர் அவர்கள் எனக் கூறுகிறார். இதனை,
            வெள்ளி வள்ளி, வீங்குஇறைப் பணைத் தோள்,
            மெத்தென் சாயல், முத்துஉறழ் முறுவல்,
            பூங்குழைக்கு அமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்... என்ற பாடல் வரிகளால் அறியலாம். இவற்றில் வெள்ளி வள்ளி என்னும் உருவுவமையும், வீங்குஇறை, பணைத்தோள், முத்து, பூங்குழை, மழைக்கண் போன்ற மெய்யுவமைகளையும் பயன்படுத்தியிருப்பது ஆசிரியரின் இலக்கிய நயத்திற்குச் சான்றாக விளங்குகிறது. இவற்றில் இயற்கை நலம் மட்டுமின்றிச் செயற்கை நலம் தோன்ற மகளிர் வனப்புடன் விளங்குகின்றனர். எனவே, இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டுவது போல் சிறப்பு என்பதனை நிலைக்களனாகக் கொண்டு அமைந்துள்ளது என்பது தெளிவாகும்.

5. கூதிர் காலத்தால் நேர்ந்த விளைவுகள்
      வாடை மிகுந்து கூதிர் காலம் வந்ததால் பறவைகள், விலங்குகள், மானிடர்கள் செயல்கள் பருவத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளதனை நக்கீரர் நயம்தோன்ற உரைக்கின்றார். புறாக்கள் கூதிர் காலக் குளிருக்கு அஞ்சி தம் இயல்பான நிலையினின்று மாறி உணவு தேடாமல் இரவு, பகல் தெரியாது செயலற்று ஓரிடத்திலேயே நிற்கின்றன. இது மட்டுமல்லாது குற்றேவல் செய்யும் பணிமக்கள், குளிர்ச்சியைப் போக்கும் கத்தூரி முதலிய சாந்துகளைக் கொள் என்னும் தானியம் போன்ற நிறத்தை உடைய கல்லில் அரைக்கின்றனர் என்கின்றார். இப்பாட்டில் நக்கீரர், பூச்சுக்கள் அரைக்கும் கல்லின் நிறத்தைக் குறிக்க உருவுவமையைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இதனைக் கொள்உறழ் நறுங்கல், பலகூட்டு மறுக என்ற தொடரால் அறியலாம். கொள் என்னும் தானியத்தைப் போல நிறத்தையுடைய கல் என்று அதன் இயல்பு நலம் தோன்ற உவமை கூறியிருப்பதால் இவ்வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக் கொண்டு அமைத்திருப்பதை அறியலாம்.

6. அரண்மனைத் தோற்றமும் உள்ளெழும் ஓசைகளும்
      அரண்மனை நுழைவாயிலின் தோற்றம் மிக உயர்ந்த மலையைப் போன்றுள்ளது என்பதை ஓங்குநிலை வரைப்பு என்றும் அதில் நீண்ட நெடிய கதவுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையினை நெய்யணி நெடுநிலை என்றும் ஓங்கி உயர்ந்த அரண்மனைக் கோபுரத்து வாயிலைச் சுட்டுமிடத்து குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில் என்றும் நக்கீரர் பாடுகிறார். அதாவது, குன்றைத் துளைத்தாற் போன்று வடிவுடைய ஓங்கிய நிலைகளைக் கொண்ட வாயில் என மெய்யுவமையைப் பயன்படுத்திருப்பது அவரது ஒப்பீட்டுத் திறமைக்கு மேலும் ஒரு சான்று எனலாம். இதன்மூலம் அரண்மனை வாயிலின் வலிமையை உணர்த்த ஆசிரியர் குன்றை உவமை கூறியதால் இவ்வுவமையின் நிலைக்களன் வலி என்பது இனிது புலனாகும்.
அரண்மனை முற்றத்து மணலில் கவரிமானும், அன்னமும் சுற்றித் திரிகின்றன. அச்சூழலுக்கேற்ப பந்திகளிலுள்ள குதிரையின் தனிமைப் புலம்போசையும் மகரவாய் போன்று பகுக்கப்பட்ட செயற்கை நீரூற்றில் விழும் நீரின் ஓசையும் கேட்கின்றன என்கிறார். மயில்களின் ஓசையைக் கொம்பு ஊதும் ஓசைக்கும், அரண்மனையில் உண்டாகும் ஆராவாரத்தை மலையில் உண்டாகும் ஆராவாரத்திற்கும் ஒப்புமைப்படுத்திப் பயனுவமைகளாகக் காட்டிச் செயற்கை நலம் தோன்ற அமைத்திருப்பது ஆசிரியரின் மனம் இயற்கையோடு ஒன்றியிருத்தலைக் காட்டுகிறது. இதனை,
                  கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை,
            நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (நெடுநல்வாடை 99, 100) என்ற அடிகளால் அறியலாம். மேலும், இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டும் சிறப்பினை நிலைக்களனாகக் கொண்டு அமைந்துள்ளன என்பது தெளிவாகும்.

7. அந்தப்புரத்தின் அமைப்பும் அழகும்
      அரண்மனையில் பரவியுள்ள இருள் நீங்குமாறு யவனரால் செய்யப்பட்ட பாவை விளக்குகளில் நெய் வார்க்கப்பட்டு, பருத்தித் திரி கொளுத்தப்பட்டு ஒளிர்கின்றன. மன்னனைத் தவிர குறுந்தொழில் புரியும் பணிமக்களும் அணுக முடியாத காவலை உடையாதாக அரண்மனை விளங்குகின்றது என்று ஆசிரியர் கூறுகிறார். அவ்வகை அரண்மனை எப்படிப்பட்டது என்பதை வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு என்கிறார். அதாவது மலையை ஒத்த உயரமுடைய அரண்மனை என்று மெய்யுவமையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், வலிமையான மலையை உவமை கூறியதால் இவ்வுவமையின் நிலைக்களன் வலி என்பது இனிது புலனாகும்.
அரண்மனையின் அந்தப்புரப் பகுதிகளில் வானவில் போன்று பல நிறமுடைய கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதனை, வில்கிடந் தன்ன கொடிய பல்வயின் என உருவுவமையைப் பயன்படுத்தியிருக்கிறார். மேலும், அந்தப்புரச் சுவர்களில் வெள்ளி நிறத்திலான வெண்சாந்து பூசப்பட்டுள்ளதை வெள்ளி யன்ன விளங்கும் சுதையுரீஇ என்றும் நீலமணியைக் கண்டாற் போன்ற கரிய திண்ணிய தூண்களை மணிகண் டன்ன மாத்திரள் திண்கல்ச் என்றும் செம்பின் நிறமொத்த சுவற்றைச் செம்புஇயன் றன்ன செய்வுறு நெடுச்சுவர் என்றும் ஒரே கொடியில் வடிவமும் அழகும் உடைய பூக்களை உடைய பூங்கொடி போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளதை உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்... என்றும் ஒப்புமைப்படுத்திக் கூறியிருக்கிறார். இவை காட்சிக்கு இனிமையானதாக அமைத்ததோடு மட்டுமல்லாமல்  பொருள்களுக்கேற்ற உருவுவமைகளையும் பயன்படுத்தியிருப்பது ஆசிரியரின் விரிந்த இலக்கிய அறிவைப் புலப்படுத்துகிறது.
      மேலும், இவற்றில் வானவில் நிறத்தைக் கொடிகளுக்கும் வெள்ளியின் நிறத்தை அரண்மனைச் சுவற்றின் நிறத்திற்கும் நீலமணியின் நிறத்தை அந்தப்புரத் தூண்களுக்கும் செம்பின் சிவந்த நிறத்தை அந்தப்புரச் சுவற்றிற்கும் செயற்கை நலம் தோன்றப் பொருத்திக் காட்டியிருப்பது சிறப்பு. எனவே, இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டியது போல் சிறப்பினை நிலைக்களனாகக் கொண்டு அமைந்துளளன என்பது தெளிவாகும்.

8. கட்டிலின் அமைப்பு
நாற்பது வயது நிரம்பிய முரசு போன்ற கால்களையுடைய யானை போரில் ஈடுபடும்போது தானாக விழும் அதன் தந்தத்தை எடுத்து வந்து தொழில் தெரிந்த தச்சனிடம் கொடுத்துச் செய்யப்பட்டது பாண்டில் என்னும் கட்டில் என்கிறார் நக்கீரர். இதனைத் தச நான்கு எய்திய பணைமருள் நோன்றாள்... என்ற படலடியால் அறியலாம். இதில் முரசு போன்ற கால் என்ற மெய்யுவமையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், இக்கட்டிலின் வேலைப்பாட்டு வடிவத்தைச் சிறப்புடைய உவமைகளால் எடுத்துரைக்கின்றார். அதாவது, தந்தத்தால் ஆக்கப்பட்ட கட்டிலின் பக்கங்கள் தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப்... என்றும் அக்கட்டிலின் கால்களை உள்ளி நோன்முதல் பொருத்தி, அடியமைத்துப்... என்றும் நக்கீரர் நயம்பட மெய்யுவமைகளைக் கையாண்டிருப்பது போற்றத்தக்கது. இவற்றில் முரசினை யானையின் கால்களுக்கும் மகளிர் மார்பகங்களைக் கட்டிலின் பக்கங்களுக்கும் உள்ளிப்பூண்டைக் கட்டிலின் கால்களுக்கும் சிறப்பிக்கும் பொருட்டுச் செயற்கை நலம் தோன்ற உவமையாகப் பொருத்திக் காட்டுவது மேன்மையுடையது. எனவே, இவ்வுவமைகள் தொல்காப்பியர் சுட்டும் சிறப்பினை நிலைக்களனாகக் கொண்டு அமைந்துள்ளன என்பது தெளிவாகும்.

9. புனையா ஓவியம் போல் அரசி
      கலைநுட்பமும் எழில் நலமும் மென்மைச் சிறப்பும் மிக்க பாண்டில் என்னும் கட்டிலில், முன்பு பல்வகை அணிகலன்களை அணிந்து மகிழ்ந்த தலைவி அவற்றையெல்லம் களைந்து சோகமே உருவாகப் படுத்திருக்கின்றாள். மேலும், அன்று வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற மோதிரம் அணியப்பட்ட அவள் விரல் இன்று மோதிரமின்றித் தழும்பாக உள்ளது. இதனை, வாளைக் பகுவாய்க் கடுப்ப வணக்குறுத்துச்... என்ற பாடலடியின்மூலம் விளக்குகிறார். அன்று பட்டாடை தரித்த இடையில் இன்று அழுக்காடை சுற்றப்பட்டிருக்கிறது என்பதையும் அன்று ஓவியப் பாவையாக இருந்த தலைவியின் இன்றைய நிலை கவலையே வடிவாக எழிலற்று வண்ணந்தீட்டப்படாத கோட்டு ஓவியமாக உள்ளது என்பதையும் கூறவந்த நக்கீரர், அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் என்ற பாடலடிகளின்மூலம் மெய்யுவமைகளைப் பயன்படுத்துகின்றார். இவற்றில் வாளைப் பகுவாய், புனையா ஓவியம் போல என்று தலைவியின் செயற்கை நலம் தோன்ற உவமை கூறியிருப்பதால் இவ்வுவமைகள் நலன் என்பதனை நிலைக்களமாகக்கொண்டு அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

10. தலைவியைத் தேற்றும் தோழியர்
      தலைவனைப் பிரிந்து துயரத்தில் வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழியர் தேறுதல் மொழிகளைக் கூறுகின்றனர் என உரைக்கும் நக்கீரர் அத்தோழியரின் எழில் நலத்தைத்
‘‘தளிர்ஏர் மேனித் தாய சுணங்கின்,
            அம்பனைத் தடைஇய மென்றோள், முகில் முலை...’’ என்று வருணிக்கிறார். அதாவது, மாந்தளிர் போன்ற மேனி என்று கூறும்போது உருவுவமையையும் தேமல், அழகிய மூங்கில் போன்ற மெல்லிய தோள், தாமரை மொட்டுப் போன்ற மார்பு ஆகியவற்றைக் கூறும்போது மெய்யுவமைகளையும் பயன்படுத்தி இத்தகைய மெத்தென்ற தன்மையுடைய தோழியர் என்று உவமைப்படுத்திக் கூறுவது அவரது நுழைமான் நுண்புலத்தைக் காட்டுகின்றது. மேலும், தோழியரின் அழகினை இயற்கை நலம் தோன்ற உவமை கூறியிருப்பதால் இவ்வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக் கொண்டது என்பதை அறியலாம்.

11. போர்ப் பாசறையும் அரசனின் ஆறுதலும்
      நள் என்னும் ஒலியெழுப்பும் இரவு நேரத்தில் சிறிதும் கண் துஞ்சாது, மன்னன் தன்னுடைய கடமையை ஆற்ற விருப்புடன் போர்களப் பாசறைக்கு வருகின்றான். அவ்வாறு வரும் அவன் அங்குள்ள காயம்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு வருகின்றான். அப்போது அவன் முன் வழி நடக்க வீரனொருவன் ஒளிப் பந்தத்தைக் கையிலேந்திப் பின்தொடர்கிறான். அக்காலம் கூதிர்காலம் என்பதால் வாடைக் காற்று வடக்குத் திசையிலிருந்து வீசுகின்றது. இதனால் ஒளிப் பந்தத்தின் சுடர் தெற்குநோக்கி அலைபாய்கின்றது. இதனை,
            வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
            தெற்குஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல்
            பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல என நக்கீரர் உரைக்கும் விளக்கின் சுடர் அசைவினை நாமும் நேரடியாகக் காண்பது போல உணர்கின்றோம்.
      போர்க்களத்தில் கட்டப்பட்ட யானைகளும் குதிரைகளும் போரில் பட்ட புண்களாலும் வாடையாலும் வருந்துகின்றன. குதிரையின்மீது இடப்பட்ட சேணம் கழற்றப்படாது உள்ளது. அதனை உணர்த்த பருமம் களையாப் பாய்பரி என உரைக்கிறார். இதன்மூலம் போர் முடியவில்லை தொடர்ந்து நடைபெறும் என்பது தெரியவருகிறது. கட்டப்பட்டக் குதிரைகள் கால் மாறி வைப்பதால் களத்தில் உள்ள சேற்றுத்துளிகள் மன்னன் மேல் தெறிக்கின்றன. இது எதனையும் பொருட்படுத்தாது மன்னன் கடமையே கண்ணாகப் போர்ப் பாசறையில் கடமையாற்றுகின்றான்.
      கூதிர்கால வாடையில் நள்ளிரவில், வெண்கொற்றக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் தவ் என்னும் ஓசையினையும் செறிவுமிக்க இரவில், இருளோசையையும் தவ்வெவென்று அசைஇ நள்ளென் யாமத்து என உரைப்பார் நக்கீரர்.



முடிவுரை

நக்கீரரின் நெடுநல்வாடை என்னும் இந்தச் சொல்லோவியம் பழஞ்சிறப்பினை உடைய மூதூர் கோட்டை வாசலிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு இடமாக உள்ளே நுழைந்து தலைவியின் கடைக்கண்ணில் வழியும் கண்ணீரைக் கண்டு மனம் தவிக்கிறது. தவித்த அக்காட்சி, கண்ணீரில் கிளம்பி, அக்கண்ணீருக்குக் காரணமாக விளங்கும் தலைவனாகிய அரசன் அலைந்து ஆறுதல் சொல்லும் போர்ப் பாசறையைக் காட்சிப்படுத்துகிறது. இந்தச் சொல்லோவியக் காட்சி, தலைவியாகிய அரசியின் பிரிவுத் துயரை நமக்குள்ளும் தூண்டி, அவல உணர்வை மிகுவித்து, தலைவிக்காக நம்மையும் தவிக்க வைக்கிறது. இத்தவிப்பே, நக்கீரரின் சொல்லோவியத்திற்கும் உவமை நயத்திற்கும் கிடைத்த வெற்றி எனலாம். மேற்கூறப்பட்டுள்ள கட்டுரையின்வழி கோட்டையின் வெளிப்புறத்தே தொடங்கும் கூதிர்கால வாடையிலிருந்து அந்தப்புரத்தில் வேலைப்பாடு மிகுந்த தந்தக்கட்டிலில் துயருடன் வீழ்ந்து கிடக்கும் தலைவியாகிய அரசியின் துயரில் பங்குகொள்ளும் காட்சி வரை மட்டுமே நக்கீரர் உவமைகளையும் அவற்றிற்குரிய நிலைக்களன்களையும் கொண்டு சொல்லோவியமாகத் தீட்டுகின்றார் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

கட்டுரைக்கு உதவிய துணைநூல்கள்

1.  தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை – டாக்டர். ந. சுப்புரெட்டியார், நான்காம் பதிப்பு, 2002, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600014.
2.  புனையா ஓவியம் – வெங்கட்ராம செட்டியர். இரண்டாம் பதிப்பு, 1962, பறம்பு நிலையம், சென்னை – 09.
3.  நக்கீரர் அருளிய நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும் – முனைவர் யாழ். சு. சந்திரா, முதற்பதிப்பு, 2008, செல்லப்பா பதிப்பகம், மதுரை – 625001.
4.  சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே – டாக்டர் ச. அகத்தியலிங்கம், இரண்டாம் பதிப்பு, ஜனவரி 2000, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600108
5.  நக்கீரர் ஓர் ஆய்வு – மு. பெரி. மு. இராமசாமி, முதற்பதிப்பு, 2000, பார்வதி பப்ளிகேஷன், சேலம்.


கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.