வெள்ளி, 7 ஏப்ரல், 2023

கிராமத்துக் கீதம் 


மாமே பெத்த புள்ள

மாநிறத்து சின்னப் புள்ள

சாமை அரிசி குத்தி

சமைக்கிறியே என்ன புள்ள


கண்ணங் குழி விழ

கண்சிமிட்டிப் பார்க்கும்புள்ள

எண்ண மெல்லாம் சிறகடிக்க

இங்கு வந்து பேசுபுள்ள


சோளவளக் காட்டுக்குள்ள

சும்மா நின்னு பேசினாலும்

ஆளரவம் கேட்குதுன்னு

அங்குமிங்கும் பாத்த புள்ள


ஒத்தயடி பாதை ஒன்னு

ஊரோரம் போகுதுன்னு

அத்தமக  ரத்தினமே

அங்கு வரச் சொன்னபுள்ள


பட்டுமேனி நோகாமா

பந்தளுக்குள் வளர்ந்தபுள்ள

சிட்டாட்டம் பறக்குறீயே

செத்தநின்னு பேசுபுள்ள


கட்டொழுங்கு குழையாம

கண்ணியமா வளர்ந்தபுள்ள

கட்டழகன் நானிருக்கேன்

கைகோர்க்க வாடிபுள்ள


எதிர்வீட்டு ஜன்னல்வழி

எட்டியெட்டி பார்த்தபுள்ள

எதிரேநான் நிக்கிறேனே                                                                              

இங்குவந்து பேசுபுள்ள

  

அதிகாலை வேளையிலே 

ஆத்துக்குப் போறபுள்ள 

புதிரான கேள்வியாலே 

புருவத்தைச் சுழிப்பதென்ன  


தொலைதூரம் நானிருக்கேன் 

துன்பத்தில் தோய்ந்திருக்கேன்

தொலைபேசியில் பேசிநீயும் 

துன்பத்தைப் போக்குபுள்ள


அந்திசாயும் நேரத்திலே

அம்மாவோடு போறபுள்ள

முந்திநீ போனாலும்

முகம்காட்டிப் போடிபுள்ள


சந்தியோரம் நானிருக்க

சாடைபேசிப் போறவளே

பிந்தி நடைபோட்டு    

பின்னழகைக் காட்டுறீயே

                       கொரோனாவும் பொருளாதாரமும்

 

ஆணென்றும் பெண்ணென்றும் அளவீடு காட்டாது

அண்டங்கள் எங்கெங்கும் அலைபோலே ஆர்பரித்து

மானிடரின் உயிர்மூச்சை மறிக்கின்ற கொரோனாவும்

மறுபடியும் மறுபடியும் மாலாது தோன்றியதால்

காணுகின்ற இடமெல்லாம் கட்டுமானத் தொழிலோடு

கலத்தொழிலும் கைத்தொழிலும் கைநழுவி நடுநடுங்க

தூணாக எண்ணுகின்ற துறைசார்ந்த பொருளியலும்

துரும்பாகத் தேய்ந்திங்குத் துன்பத்தில் ஆழ்த்தியதே!

 

தொற்றென்னும் துர்க்கிருமி தொந்திரவு செய்தபோது

தொழிலற்றுத் துன்புற்று வருந்தியோர்கள் பலருண்டு

பற்றில்லா பந்தத்தின் பாசாங்கு வார்த்தைகளோ

பசியாற்ற முடியாமல் பயனற்றுப் போனதனால்

பெற்றுள்ள படிப்பினைகள் பிழைப்பிற்கு வழிசொல்ல

பேரில்லாப் பேற்றினையே பெற்றிடாமல் பிரிந்துநின்று

கற்றவரைத் தொழில்நுட்பம் கரைசேர்க்க எண்ணினாலும்

கல்லாத மானிடர்முன் தோற்றேதான் போனதிங்கு

 

 இருள் என்பது குறைந்த வெளிச்சம்

 

விண்பரப்பின் வெளியில்

வெளிச்சமது குறைய

மண்பரப்பின் மீதில்

மையிருட்டு சூழும்

 

என்கின்ற மெய்யை

எல்லோரும்  அறிய

முன்னெடுத்துச் சொல்லும்

முத்தான வரியில்

 

இருளென்ற வொன்று

இங்கில்லை  யென்று

பொருளோடு கூறும்

புனைவில்லாக் கதையை

 

அறிவியலி லாழ்ந்த

அறிஞர்கள் கூடி

அறிவிற்கு உகந்த

ஆய்வுகளின் முடிவாய்

 

நெறிமுறைகள் செய்து

நீதியாளர் முன்னே

செறிவார்ந்த கருத்தைச்

செம்மையுடன் சொன்னார்