புதன், 29 டிசம்பர், 2021

 

சுப அருணாசலம் நினைவுப் பாட்டுப் போட்டி 

பாடல் 3

 

தன்னே நானே தானே நானே எம்மா

தன்னே நன்னே தானே நன்னே

தன்னே நானே (2)


சிங்கை நாடே சின்ன நாடே உலகில்

சீரும் சிறப்பும் பெற்று வளரும்

தங்க நாடே

உலகில் சீரும் சிறப்பும் பெற்று வளரும்

தங்க நாடே

 

சங்கத் தமிழும் சீனம் மலாயும் இங்கே

சமமாய்ப் புழங்க சட்ட மிட்ட

திரு நாடே 

இங்கே சமமாய்ப் புழங்க சட்ட மிட்ட

திரு நாடே

 

தானநானே தானநானே

தானநானே தானநானே

 

கொரோனாவின் தாக்கம்கண்டு

கொலநடுங்கித் விழித்திருந்தோம்

அதப்போக்கும் மருந்து தேடி

அங்குமிங்கும் அலைந்திருந்தோம்

 

நம் அரசாங்கம் சொன்னவற்றை

நாம் மீறாமல் கடைப்பிடித்தோம்

பாதுகாப்பாய்த் தனித்திருந்து - தொற்றுப்

பரவாமல் தடுத்து வந்தோம்

 

உலகப் பேராய்வு திருவாலே - பெருந்

தடுப்பூசி மருந்து கண்டோம்

அந்தத் தடுப்பூசி மருந்தாலே மீண்டும்

தொற்றுத் தாக்காமல் தடுத்து வந்தோம் 

 

ஒன்றிரண்டு அலைகளாக தொற்றும் பரவிடவே

ஊசிகளும் ஒன்றிரண்டாய்க் குத்திக்கொண்டோம்

வருங்காலம் விழிப்போடும் முனைப்போடும் நாமிருந்தால்

கொரோனாவை வென்றெடுத்து அழித்தோழிப்போம்

 

சுப அருணாசலம் நினைவுப் பாட்டுப் போட்டி 

பாடல் 2


சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க - நம்ம

சுபஅருணாசலம் நினைவு உரைப்போம் வாங்க

வெங்கல குரலுக்குச் சொந்தக்காரர் தானுங்க - அவர்

வேசமின்றிப் பாசம் வைத்தவர் தானுங்க

(சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க – நம்ம...)

பங்கமின்றிப் பகையின்றிப் பல்லினத்தார் வாழும் - நம்ம

பசுமைமிகு சிங்கை நாட்டவராம் நீங்க

சிங்கை நாட்டின் சீர்மையினைக் கெடுக்கும் - இந்தச்

சீரில்லாக் கிருமியினை அழித்திடவே வாங்க

 

கொரோனாக் காலச் சூழலிலும் நீங்க - பெரும்

கூட்டத்தோடு சேர்ந்திடாது தனித்தனியாய் வாங்க

அரசு சொல்லும் ஆணைகளைக் கேட்டு - நீங்க

அசுரத் தொற்றை விரட்டிடவே வாங்க

(சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க – நம்ம...)

நாசிவழி உள்ளே சென்று தாக்கி – உங்க

நல்லுடலை நசித்து நச்சுடலாய் ஆக்கி

மூச்சுமுட்டும் மூர்க்கத் தொற்றை விரட்ட – நீங்க

முகக்கவசம் மாட்டி எங்கும் போங்க

 

மரணத் தொற்றை மடியச் செய்யும் மருந்தை - நீங்க

மறந்திடாமல் போட்டுக் கொண்டு வந்தால்

அரக்கன்போல அழிவைத் தரும் தொற்றை - நீங்க

அண்டம் விட்டே அகற்றிடலாம் வாங்க

(சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க – நம்ம...)

 

சுப அருணாசலம் நினைவுப் பாட்டுப் போட்டி

பாடல் 1

மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு

மரணத் தொற்றை மாய்த்து வெல்லு

தனிமைப் படுத்தி வாழும் வாழ்வைத்

தகர்த்து எறியும் வழியைச் சொல்லு

 (மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

கொரோனா வென்னும் கொடுங்கிருமி தன்

கோரப் பல்லால் குருதி குடிக்க

மரணம் எண்ணும் மாயைப் பிடியில்

மாய்ந்து போகலாமா? மனிதா மாய்ந்து போகலாமா?

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

அம்மை காலரா சார்ஸ் டெங்கியென

அனைத்தையும் வென்ற மனிதா! இன்று

வெம்மைத் தொற்றாம் கொரோனாவை எண்ணி

விரக்திக் கொள்ளலாமா? மனிதா விரக்திக் கொள்ளலாமா?

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

விஷத் தொற்றை விரட்டி யடிக்கும்

வீரிய மருந்தைக் கண்டுபிடிப்போம் மனிதா

வீட்டி லிருந்தோ விலகி யிருந்தோ

வெகுதூரம் துரத்திடுவோம் மனிதா வெகுதூரம் துரத்திடுவோம்

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

மூக்கில் நுழைந்து நெஞ்சம் புகுந்து

மூச்சைப் பிடிக்கும் முரட்டுத் தொற்றைத்

தாக்கி யழிக்கும் மருந்து கொண்டு 

தடமின்றித் துடைத்திடுவோம் மனிதா தடமின்றித் துடைத்திடுவோம்

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

 

நாடு காக்கும் நாயகர்கள்’  - 1

 

வாய்ப்பு ஏதும் வழங்காத

வலிமை கொண்ட தொற்றோடு

ஓய்வு ஒழிச்சல் ஏதுமின்றி

உண்மை யோடு உழைப்பவராம்

 

வாய்ப்புப் பலவும் இருந்தாலும்

வளமை கொண்ட நாடாக்க

ஓய்வு ஒழிச்சல் ஏதுமின்றி

உண்மை யோடு உழைப்பவரே

 

நோயும் நொடியும் அண்டியோரை

நொந்த பார்வை பார்க்காது

தாயாய்க் காக்கும் மருத்துவரும்

தாங்கிப் பிடிக்கும் செவிலியரும்

 

தூய்மைப் பணியைச் செய்வோரும்

தொற்றுப் பரவைக் கணிக்கின்ற

தூய உள்ளக் காவலரும்

தொடர்ந்து இங்குப் போராடி

 

இம்மைப் பொழுதும் உறங்காது

இயன்ற உதவி செய்வதற்கும்

அம்மை யப்பன் போலிங்கு

அருகில் இருந்து காப்பதற்கும்

 

தம்மை யொப்புக் கொடுக்கின்ற

தன்மை வாய்ந்த தகையோராய்

நம்மில்  இருந்து உழைக்கின்றார்

நன்மை பலவும் புரிகின்றார்

 

கேடு விளைக்கும் தொற்றினையே

களைந்து ஒழிக்கும் பணியேற்று

நாடு காக்கும் நாயகராய்

நாளும் சேவை செய்கின்றார்

 

அங்க மெல்லாம் புண்ணாக்கி

அல்லும் பகலும் உழைப்பவர்கள்

 பாரதியும் தமிழும்

 

எட்டை யாபு ரமாண்டுவந்த

இனிமை நிறைந்த மன்னரிடம்

எட்டு வயதில் ஏடெடுத்து

இயற்றிச் சொன்னத் தமிழ்ப்பாவைக்

கிட்ட யிருந்து கேட்டோரும்

கிறங்கி யங்கு மகிழ்ந்திடவே

பட்ட மொன்று வழங்குகின்றார்

பார தியெனப் போற்றுகின்றார்

 

எட்ட நின்று யோசித்து

ஏற்ற மிக்கச் சொற்கொண்டு

பட்ட பாடு பகர்ந்திடவே

புதுமை நோக்கில் பாடிட்டார்

வெட்டுக் கத்திக் கூர்மைபோல

வினவு கின்ற மொழிகொண்டு

கொட்டி வைத்த பாட்டாலே

கொள்கை முரசு கொட்டிட்டார்

 

மண்ணில் வாழும் மக்களுக்கு

மாண்பு மிக்க வாழ்வுவேண்டி

எண்ண மென்னும் ஏற்றத்தால்

எழுச்சி கொண்டே எழுதிட்டார்

கண்க ளுருட்டிக் காட்டுகின்ற

கடுமை நிறைந்த பார்வையாலே

பெண்ணி னத்தின்  விடுதலைக்கும்

பெரும்பு ரட்சி செய்திட்டார்

 

கன்னித் தமிழைக் காதலித்துக்

கடைசி வரைக்கும் கைப்பிடித்துக்

சின்னக் குழந்தை பாட்டுகளும்

சீறும் புரட்சிப் பாட்டுகளும்

கண்ணன் காதல் பாட்டுகளும்

காலம் மறவாக் காவியமும்

பண்ண மைந்த யிசையாலே

பாடி நமக்குத் தந்திட்டார்             

 

வான்புகழும் வள்ளுவர்

 

அறம்பொரு ளின்பமென அத்தனையும் கூட்டிக்

குறளடி வெண்பாவால் யாத்து - திறன்மிகு

சொல்லின்  கருத்தாலே வான்புகழ் கொண்டதாம்

வள்ளுவரின் உண்மைக் குறள்

 

நெஞ்சினில் வஞ்சமின்றி நேசமுடன் நட்புறும்

பிஞ்சுமனம் கொண்டோ ருறவினைக் - கொஞ்சமும்

வீணுறவா யெண்ணாமல் நட்பி னுயர்வூட்டும்

வான்புகழும் வள்ளுவர் சொல்

 

கயமையென்னும் கெட்டொழுக்கம் மானிடர்க் கொன்றும்

பயனில்லை யென்றுரைக்கும் பாட்டில் – நயமான

சான்றுகளும் நல்லபல வார்த்தைகளும் சீராக

வான்புகழும் வள்ளுவத்தி லுண்டு

 

உழவுத் தொழிலை யுயர்தொழிலா யெண்ணி

உழலும் உழைப்பாளர் முன்னே - உழவினை

மாண்புறச் செய்கின்ற வான்புகழும் வள்ளுவரின்

மேன்மையுறு சொல்லே குறள்

 

புழாலோடு கள்ளுண்டு புத்திகெட்டுப் போவோர்

உழலுகின்ற பூமியில் உண்மையற்ற – வாழ்க்கையினை

நல்லதல்ல யென்று நமக்குரைத்த வான்புகழும்

வள்ளுவரின் வாய்மையே நன்று

 

களவியல் கற்பிய லென்னு மியல்பிரித்துக் காதல்

உளவியலை யுண்மையுடன் சொல்லி  - விளக்குகின்ற

வான்புகழும் வள்ளுவரின் வார்த்தை வரிகளில் 

தேன்சொட்டும் பாலே குறள்

 

பருவப்பெண் நாணத்தைப் பாவினத்து வெண்பா

கருப்பொருளாய்க் கொண்டுவந்து போற்றும் – திருக்குறள்

வான்புகழும் வள்ளுவரின் வார்த்தைகளில் வந்தவையால்

தேன்போல் இனிக்குமே யென்றும்

 

கன்னியவள் மெய்யழகைக் கண்முன்னே காட்சியாக்க

வெண்பாவின் கூறுகளால் வார்த்தெடுத்து – மென்னரம்பு

வீணையில் மீட்டுகின்ற மெல்லிசைபோல் கேட்குமே

வான்புகழும் வள்ளுவரின் வாக்கு

 

 

 

'கொன்னோய் கொரோனா'

 

செம்மை யில்லாத் தொற்றொன்று

செகத்தில் தோன்றிப் பரவிடவே

வெம்மை யூட்டும் கொரோனாவாய்

விரைந்து வந்து தாக்கியதால்

தும்மல் இருமல் சளியாகித்

தொடர்ந்து நெஞ்சில் குடியேற

நம்மை விட்டு அகலாது

நாளும் உயிரைப் பறித்ததுவே

 

பெற்றோர் பிறந்தோர் மற்றோரும்

பக்கம் இருந்து பார்த்திடவும்

பெற்று வளர்த்த பிள்ளைகளும்

பின்னே இருந்து தேத்திடவும்

உற்ற துயரில் பங்குற்று

உயிரை மீட்க உதவிடவும்

சற்றும் வாய்ப்பை வழங்காது

சாவின் மடியில் வீழ்த்தியதே

 

பொன்னும் பொருளும் கொடுத்தாலும்

புண்ணியம் கூடச் செய்தாலும் 

கொன்னோய் தந்த கொரோனாவும்

      கொடுங்கோல் காட்டி மிரட்டியதே

ஒன்றா மிரண்டாம் அலைகளென

      உருவம் மாறி வந்திங்கு

ஒன்று மறியா மழலைகளின்

      உயிரைப் பறித்துச் சென்றதுவே

 

வித்தாய் விளங்கும் பிள்ளைகளை

வீழ்ந்தி டாமல் காப்பதற்கு

மொத்த மாகக் கூடுகின்ற

முட்டாள் தனத்தை விட்டொழித்துக்

கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கும்

கொன்னோய் கொரோனாக் கிருமியினைச்

சுத்த மாகத் துடைத்தொழிக்க

சொந்த முயற்சி எடுத்திடுவோம்

 

 

நாடு காக்கும் நாயகர்கள்

 

சிங்கை யென்னும் நம்நாட்டை

சிறப்பு வாய்ந்த நாடாக்க

பங்க மில்லா அரசுவந்து

      பாடு பட்டு உழைத்தாலும்  

 

நோயும் நொடியும் அண்டியோரை

நொந்த பார்வை பார்க்காது

தாயாய்க் காக்கும் மருத்துவரும்

தாங்கிப் பிடிக்கும் தாதியரும்

 

தூய்மை செய்யும் வேளையிலும்

      துன்பம் வந்து சேர்ந்தாலும்

தூய மனத்தின் எண்ணத்தால்

தொற்றுப் பரவைத் தடுப்போரும்

 

கட்டுப் பாடு விதித்தாலும்

கால வரையு மில்லாது

சட்ட திட்டம் காக்கின்ற

சீர்மை மிக்கக் காவலரும்

 

பாது காப்பு முறையோடு

பள்ளிப் பாடம் முழுவதையும்

ஓதும் பாங்கில் கற்பித்து

ஒளிரச் செய்யு மாசிரியரும்

 

இம்மைப் பொழுதும் உறங்காது

இயன்ற உதவி செய்வதற்கும்

அம்மை யப்பன் போலிங்கு

அருகில் இருந்து காப்பதற்கும்

 

தம்மை யொப்புக் கொடுக்கின்ற

தன்மை வாய்ந்த தகையோராய்

நம்மில்  இருந்து உழைக்கின்றார்

நன்மை பலவும் புரிகின்றார்

 

ஓடும் நதிபோல் பயனுறவே  

உயர்ந்த எண்ணம் கொண்டதனால்

நாடு காக்கும் நாயகராய்

      நம்மி லின்றும் வாழ்கின்றார்