வெள்ளி, 3 மார்ச், 2023

 3 தூய்மையோடு பாதுகாப்பும் தேவை

 

சிங்கைநகர் தோழரோடு செந்தமிழின் புலவர்களும்

சுற்றுப்புறத் தூய்மையோடு பாதுகாப்பும் தேவையென்று

பொங்குதமிழ்ப் பேச்சினூடே புன்னகையும் சிந்துகின்ற

தங்கநிகர் அருணாச்சலம் நினைவுநாளில் பாடுங்களே!

 

சங்குசிப்பி சங்கமிக்கும் சமுத்திரத்தின் சமவெளியில்

சல்லிகளும் சாக்கடையும் சடுதியிலே பரவுதுங்க

சாராயப் புட்டியோடு குளிர்பானப் புட்டியையும்

சகசமாக வீசுகின்றார் சங்கடத்தைக் கொடுக்கின்றார்

 

காகித்த்தின் கழிவுகளும் நெகிழிப்பை குப்பைகளும்

கணக்கின்றிச் சேருதுங்க கண்முன்னே கிடக்குதுங்க

கண்ணிவலைப் பின்னல்களும் கயிறுவலை முடிச்சுகளும்

கடலுயிரை மாட்டவைத்துக் கண்டபடி வதைக்குதுங்க

 

வான்வெளியும் கடல்வழியும் கழிவாலே கெடுவதற்குத்

தொழிற்சாலை வளர்ச்சியிங்குத் துணையாக இருந்தாலும்

மேலடுக்குக் கட்டடங்கள் மேல்நோக்கி உயருதுங்க

கீழடுக்குக் கட்டுமானம் கீழ்நோக்கிச் செல்லுதுங்க   

 

மரஞ்செடியும் கொடிவகையும் மண்ணிலின்று குறைந்ததனால்

மாசறுக்க மழையின்றி மாசிவெயில் கொழுத்துதுங்க

போக்குவரவு வண்டிகளும் புகைமூட்டம் கக்கியதால்

பசுமைவெளி புற்களுமே பாழ்நஞ்சாய் ஆனதுங்க

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 2 சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்...

 

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

சிங்கப்பூர் நல்ல சிங்கப்பூர்

சுற்றுப்புறச் சூழலைத்தான் சொர்க்கமாக்கி வைத்திருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

சீனம் மலாய் தமிழரெனப் பல்லினமும்

சிங்கப்பூர் மக்களெனச் சேர்ந்திங்கு வாழ்கின்ற

சிறந்ததொரு வாழ்வியலை இன்றுவரை கொண்டிருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

பாரில் கொழுவிருக்கும் பல்லின நாடுகளில்

பூங்கா நகரெனப் பாங்காய்ச் சொல்லிடவே

பார்க்கும் இடமெல்லாம் பசுமையினைக் கொண்டிருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

சிங்கப்பூர் மக்களோடு வெளிநாட்டுப் பயணிகளும்

சுற்றிச்சுற்றிப் பார்ப்பதற்கும் சொகுசாய்ப் பொழுதைக் கழிப்பதற்கும்

ஏற்றதொரு சூழலினை எழிலாகக் கொண்டிருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

கடலோர மணற்பரப்பில் களைப்பாறும் மக்களுக்குக்

குட்டிகுட்டித் தீவுகளும் குறுமரக் காட்சிகளும்

கண்ணுக்கு விருந்தளித்துக் களிப்பூற வைத்திடும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 1 சுயமாய் முடிவு எடுப்போம்

 

அருணா அண்ணன் நினைவை

ஆழ்ந்து போற்றும் நாளில்

சுற்றுச் சூழல் காக்க

சுயமாய் முடிவை யெடுப்போம்

 

வெய்யோன் ஒளியின் கதிரும்

பெய்யும் மழையின் நீரும்

கொய்யும் காயும் கனியும்

உய்வு தரவே வேண்டி

 

சுற்றும் முற்றும் கிடக்கும்

குப்பை கூளம் எல்லாம்

உற்ற இடத்தில் சேர்க்கும்

உன்னதப் பொறுப்பை ஏற்போம்

 

சொர்க்க லோகம் போல

சொலிக்கும் சிங்கை நாட்டைத்

தர்க்க மின்றி ஒன்றாய்த்

தூய்மை யோடு வைப்போம்

 

சிங்கை யெங்கும் பசுமை

சோலை வனம்போல் சூழ

பங்கம் இல்லா மரங்கள்

பரந்து செழிக்க வளர்ப்போம்

 

 

 பொங்கல் வாழ்த்து!


வானூரும் செங்கதிரோன்

              வையமெல்லாம் வலம்வரவும்

ஊனூறும் உயிர்களுக்கும்

              உணவளித்து உய்வதற்கும்

தானூரும் தன்னிழல்போல் 

              தைமாதம் முதல்நாளில் 

கோனூரும் தேரேறி

              குடதிசையில் நேருதிக்கும்  


வானூரும் இளம்பரிதி

              வார்க்கடலில் நீரெடுத்து  

மேனூரும் மேகமாகி

              மழையாகப் பொலிந்திடவே

மீனூரும் ஆறுகளும்

               மிகையாகப் பாய்ந்தோடி 

மானூரும் நிலமெங்கும்

              மகசூழைப் பெருக்கிவிடும்


தேனூரும் பூக்களாகத்

               திக்கெட்டும் மணம்பரப்பி

காணூரும் காட்சிகளாய்க்

               கண்களுக்கு விருந்தளிக்கும்

தீனூரும் எண்ணங்கள்

               தினந்தோறும் வந்தாலும்

தானூறும் தண்ணீர்போல்

               தைநாளில் தணித்துவிடும்

 *நன்னெஞ்சர் குருசாமி

நலமோடு வாழ்கவாழ்க!*

 

குன்றாத குணமோடும்

குறையாத மனமோடும்

அன்பான அரவணைப்பில்

அனைவரையும் நேசித்து

நன்றான பாதையில்

நாளெல்லாம் பயணிக்கும்

நன்னெஞ்சர் குருசாமி

நலமோடு வாழ்கவாழ்க!

 

மாணவர்கள் மாவுலகில்

மாண்புறவே வேண்டுமென்று

தேனென்று இனிக்கின்ற

தீந்தமிழின் மொழியினிலே

கோனென்று உயர்ந்துவாழும்

கொள்கையோடு இலக்கினையும்

கானம்போல் கற்பிக்கும்

கண்ணியவான் வாழ்கவாழ்க!

 

பருவத்தின் மாற்றத்தால்

படிக்கின்ற மாணவர்கள்

உருமாறி வந்தாலும்

உளமோடு வரவேற்று

பெருந்தேர்வுப் பயிற்சிகளைப்

பிழையின்றிக் கற்பிக்கும்

குருவாக வீற்றிருந்த

குருசாமி வாழ்கவாழ்க!

 

நிலையத்தின் நிலைமையினை

நித்தமிங்கு வளர்த்திடவே

பலபேரின் மத்தியிலே

பண்புடனே பேசினாலும்

நலமான கல்விகொண்டு

நயமாகக் கற்பிக்கும்

குலமகனார் குருசாமி

குறையின்றி வாழ்கவாழ்க!

 

நேயத்தின் நினைவாளர்

நற்குணத்தின் குருவாளர்

ஓய்வின்றி உழைப்பதற்கு

உடல்நலனும் உளநலனும்

தேய்வின்றி நலம்பெறவும்

தெளிவான வளம்பெறவும்

நோயின்றி நொடியின்றி

நூறாண்டு வாழ்கவாழ்க!

 

என்றும் அன்புடன்....

கணேசுகுமார் பொன்னழகு

தமிழாசிரியர்.