ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 25 (07.06.2020)

'ஒளியும் மனிதர்களும் உலாவரும் மிருகங்களும்'

மரஞ்செடிகள் மலரும் கொடிகள்
மலைகளோடு மண்டி யிருக்க
மிருகமோடு பறவை பூச்சி
மற்றவையும் வாழும் காடு
தரமில்லா மனித னிங்குத்
தமதுநல மொன்றை மட்டும்
பெரும்நோக்காய்க் கொண்ட தாலே
பெரும்காட்டை யழித்து வந்தான்

எல்லையில்லா வலிமை கொண்ட
இயற்கைவனம் வீழ்ந்த தாலே
உள்ளேயிருக்கும் மிருகம் கூட
ஊருக்குள் வந்து உலாவ
தொல்லைபல தந்து தந்து
துன்புறுத்தி நம்மை வாட்ட
வெளியிருக்கும் மனித ரெல்லாம்
விரைந்தோடிச் சென்றே யொளிந்தும்

கொடியநோயாய் உலகில் வந்த
கொரோனாவைப் போன்ற தொற்று
கடுமையான கட்டுப் பாட்டைக்
கடைப்பிடிக்க வைத்த தோடு
உடுத்துகின்ற உடையைப் போலே
உறவுகளைக் களைய வைத்து
முடிவில்லா மரணப் பயத்தை
முளைக்கவிட்டுச் சென்ற திங்கே

இயற்கையோடு இயைந்த வாழ்வை
ஏற்றமாக நினைத்த மனிதன்
செயற்கையிலே விளைந்த வாழ்வைச்
சிறப்பென்று கருதி வாழ
உயர்வான உண்மை வாழ்வும்
உரமில்லா பொய்மை வாழ்வாய்
உயிரற்றுப் போன தாலே
ஓடியோடி ஒளிகின் றானே




நாள் 32 (14.06.2020)

'ஒரே ஒருமுறை சுவாசித்துக்கொள்

சைகைகாட்டும் கைபோலச் - சற்று
சாய்ந்திருக்கும் கிளைகளோடு
வைகையாற்றுக் கரையோரம் - பரந்து
வளர்ந்திருக்கு மாலமரம்

கூகைமுதல் குருவிவரை - மிகக்
குதுகலமாய் அமர்ந்திருக்க
தோகைமயில் துடிப்புடனே - தன்
துணையோடு யாடிவரும்

ஆலையில்லா ஆற்றோரம் - மிக
அழகழகாய்ப் பூத்திருக்க
சோலையொன்றை வார்த்ததுபோல் - அந்தச்
சுற்றியுள்ள இடம்மாறும்

மாலைவெயில் மஞ்சளாகிப் - பின்
மையிருட்டாய் மாறயிலே
சோலையெங்கும் பூத்துள்ள - மலர்
சுகந்தத்தைப் பரப்பிவரும்

கொள்ளைகொள்ளு மழகோடு - இந்தக்
குறையில்லா வாசனையும்
எல்லையின்றிப் பரவியவை - இன்று
இல்லாமல் போனாலும்

உள்ளிருக்கு மிதயத்தால் - ஒரே
ஒருமுறைநான் சுவாசித்துக்
கொள்வதற்குச் சுகமான - காற்றுக்
கோர்வையினைத் தேடுகின்றேன்






நாள் 31 (13.06.2020) - 2

'நுரைக்குமிழிகளில் உடைந்த கனவுகள்'


அரையாண்டு விடுமுறையில்
அன்பான சொந்தமோடு
உறவாடி மகிழ்வதற்கும்
ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும்
உறுதியான முடிவினையே
உள்ளத்தில் கொண்டிருக்க
கறைபடிந்த குறையாகக்
கொரோனாவும் வந்திடவே

விரைவாகப் பறக்கின்ற
விமானங்கள் அத்தனையும்
கரைதாண்டிப் பறக்காமல்
கடுந்தடைகள் போட்டதனால்
நிறைவேறாக் கனவுகளாய்
நெஞ்சிருக்கும் எண்ணமெல்லாம்
நுரையெழுப்பும் குமிழியாகி
நொறுங்கித்தான் போனதிங்கு




நாள் 31 (13.06.2020) - 1

'நுரைக்குமிழிகளில் உடைந்த கனவுகள்'

வெள்ளந்தி மனத்தோடு
வேற்றுமைக ளேதுமின்றி
வெளிப்படையாய்ப் பேசுவோரை
விரோதியாகப் பார்க்கின்ற
கள்ளமனக் கூட்டினிலே
கலையாத வன்மங்கள்
தள்ளாடி நிற்காமல்
தறிகெட்டுப் போனாலும்

நிலையில்லா வாழ்வினையே
நிஜமென்று நம்பியவர்
நிலையான நிம்மதியை
நேர்வழியில் பெற்றிடாமல்
நிலைகொள்ளா கர்வமோடு
நித்தநித்தம் வாழ்ந்தாலும்
உலைவைத்துக் கெடுப்பதையும்
உயர்வாக நினைப்பதுண்டு

நரைப்பருவம் வந்தாலும்
நடைதளர்ந்து போனாலும்
குறைசொல்லும் எண்ணத்தைக்
கொன்றழிக்கா முடியாது
நுரைக்குமிழி வாழ்கின்ற
நொடிப்பொழுது வாழ்வாக
தரையினிலே பதியாத
தடமாக மறைந்திடுவார்





நாள் 30 (12.06.2020)

'அறைக்குள் சுழலும் உலகம்'

அன்னையவள் கருவறையில்
அடையாள மேதுமின்றிப்
பிண்டமாக வளர்ந்தவுடல்
பூமியிலே பிறந்தபின்னே
கண்டபடி நோவாமல்
கறையேதும் நேராமல்
கண்ணியத்தைக் கடைப்பிடித்துக்
கடமையினை யாற்றிடவே

எண்ணியவர் எத்தனையோ
ஏங்கியவர் எப்படியோ
கண்ணாடி காட்டுகின்ற
களங்கமில்லா வுருவம்போல்
முன்னாடி  வாழ்ந்தவரின்
முறையான வாழ்வுதனை
முன்னோடி யாய்க்கொண்டு
முனைகின்ற மாந்தரோடு

அண்டத்தில் வாழ்கின்ற
அனைத்தினத்து மக்களையும்
துண்டாடி வைத்துள்ள
தொற்றுநோயாம் கொரோனாவைக்
கொண்டவர்க ளுடலைவிட்டுக்
குறையில்லா வுயிர்போக
கண்டவர்கள் குலைநடுங்கிக்
குற்றுயிராய்க் கிடந்துருக

விண்டவர்கள் வேற்றுயிராய்
வெறுமையிலே வெந்துருக
கண்ணுக்குத் தெரியாத
கடுந்தொற்றுக் கிருமிவந்து
அண்டாம லிருப்பதற்கு
அரசாங்கம் ஆணையிட
கொண்டாட்ட மேதுமின்றிக்
குடிலுக்குள் குந்திட்டார்

காலைமுதல் மாலைவரை
குடும்பத்தார் நெருக்கமின்றி
வேலைக்குச் சென்றவர்கள்
வீட்டிற்குள் முடங்கினாலும்
வேளையெல்லாம் விரைந்தோடி
வீணாகக் கரையாமல்
நாளைவரும் விடியலுக்கு
நம்பிக்கை வைத்ததோடு

கணினியோட வுதவியாலே
கணக்கில்லா மக்களிங்குப்
பணியாளர் வேலைமுதல்
பார்வையாளர் திருத்துகின்ற
பணிப்புரையும் பார்த்தவுடன்
பயமின்றிச் செய்வதற்குப்
பிணிபோக்கும் மருந்தாகப்
பிழையின்றி யமைந்ததாலே

கண்கொத்திப் பாம்பாட்டம்
காத்திருந்து படம்பிடிக்கும்
கண்காணிப் பியந்திரத்தின்
கவலைகளோ சிறிதுமின்றி 
அன்றாடம் செய்கின்ற
அலுவலக வேலையெல்லாம்
நன்றாகச் செய்கின்றார்
நான்குசுவர் அறைக்குள்ளே




நாள் 29 (11.06.2020)

'சுவடுகளற்ற அலைகள்'

கார்மேகம் கலைந்தோட
காற்றடிக்கும் திசைபார்த்து
நேர்த்தியாகக்  கலம்செலுத்தும்
நிகரில்லா மீனவனோ
ஆர்ப்பரிக்கும் அலைநடுவே
ஆண்டாண்டு காலமாகப்
பார்ப்பவரும் கேட்பவரும்
பரிவோடு பரிதவிக்க

படபடக்கும் காற்றோடு
பாய்மரத்தில் சென்றாலும்
திடமான மனத்தோடே
திரைமீது சென்றாலும்
கடலோடி மீன்பிடிக்கும்
கட்டுமரக் காரனவன்
விடுகின்ற மூச்சுக்கும்
விலையின்றிப் போனதுபார்

கறையில்லா வாழ்வினையே
கடப்பாடாய்க் கொண்டொழுகிக்
கரைமீளும் மீனவனின்
கைத்தடமும் கால்தடமும்
உறைந்திருக்கும் சுவடுகளை
ஓயாத அலையொன்று
சுரம்பாடும் சோதனையில்
சுத்தமாக அழித்ததுபார்





நாள் 28 (10.06.2020)

'நிறமற்ற உலகில் நான் ஓவியன்'

வீடொன்றில் விளைகின்ற
விலையில்லா அன்பிற்குக்
கூடொன்றைக் கூட்டுறவுக்
குடும்பத்தில் கண்டாலும்
ஈடொன்று கொடுப்பதற்கு
இன்றிங்குக் காண்கின்ற
நாடொன்றே நமக்கான
நல்லதொரு அடையாளம்

சாதிமதம் பெயராலே
சங்கங்கள் ஏற்படவே
வீதிதோறும் விதவிதமாய்ப்
வீண்சண்டை விரோதங்கள்
தேதிவாரி யுண்டாகிப்
தெருவெல்லாம் பரவியதால்
நாதியற்ற அனாதைபோலப்
நல்லவர்கள் நிற்கின்றார்

அறம்போற்றும் அறவாளர்
ஆற்றாத அறக்கருத்தைப்
புறம்பேசும் பொறையாளர்
போதனையாய்ப் புகட்டுவதால்
வரம்பெற்றோர் வாழ்வினிலே
வளம்குறையக் காண்பதுபோல்
தரமானோர் வாழ்வினிலும்
தடுமாற்றம் காண்கின்றார்

நிறமற்ற வுலகத்தில்
நானுமோரோ வியனாக
இருந்தாலு மிங்கிருக்கும்
இடைத்தரகர் கூட்டத்தில்
கருத்தாக வுரைக்கின்ற
கணக்கற்ற வார்த்தைகளைப்
பொருந்தாத வண்ணத்தில்
புதுப்படமாய் வரைகின்றேன்





நாள் 27 (09.06.2020)

'மழைச்சாரலைச் சுடும் தேநீர்'

மாலை நேர மயக்கம்
மனத்தில் வந்து வருத்த
சாள ரத்தின் வெளியே
சாரல் மழையும் தூவ
கோல மயில்கள் கூடிக்
கொண்டை யழகைக் காட்டும்
வால்போல் வளர்ந்த இறகை
வட்ட வடிவில் விரிக்கும்

மாலை மங்கும் வேளை
மனிதர் கூட்ட மெல்லம்
வேலை முடிந்து விரைவாய்
வீடு நோக்கிச் செல்ல
கோல மயிலி னழகைக்
கொண்டி ளங்கும் பெண்ணோ
காளை கண்ணில் பட்டுக்
காற்றா யலைய விட்டாள்

மழையின் சாரல் வீழும்
மாலை மயங்கும் நேரம்
பழைய பாடல் எங்கோ
பாடும் சத்தம் கேட்டுத்
தலையை மெல்ல ஆட்டி
தாளம் போடும் உள்ளம்
அலையா யலைந்து வாட
அந்த நாளைத் தேடும்

மழையின் சாரல் வீழ்ந்து
மக்க ளெல்லாம் நனைய
குழந்தை யாட்டம் துள்ளிக்
குதித்து எங்கு மோட
குளிரில் உடலும் நடுங்கிக்
குடிக்கத் தேநீர் பருக
மழையின் சாரல் கூட
மங்கிச் சூடாய் மாறும்






நாள் 26 (08.06.2020)

'மூச்சில் அணையும் மெழுகுவர்த்திகள்'

தொற்று நோய்கள் தொற்றுமென்ற
துன்பம் நிறைந்த பொழுதினிலும்
வெற்றுப் பேச்சுப் பேசாமல்
வெள்ளை மனத்தால் நோவாமல்
பற்று மிக்கச் சேவையாலும்
பரிவு கொண்ட கருணையாலும்
சுற்றுப் புறத்தைத் தூய்மையாலே
சொர்க்க மாக்கித் தருவதற்கு

மெழுகாய் உருகும் மானிடரின்
மேன்மைக் குணத்தை யென்றென்றும்
கொழுவாய் வைத்தே யலங்கரித்துக்
குவித்த கரத்தால் போற்றாமல்
பழுது நிறைந்த எண்ணத்தால்
பரவச் செய்யும் மூச்சுகூட
வழுக்கல் நிறைந்த நெஞ்சத்தின்
வாய்மை யில்லா மூச்சாகும்

                           (வேறு)

மெழுகு வர்த்தியே மின்விளக்காய்
மிளிரும் குடிசைகள் பலவிருக்க
கொழுப்பு மேலிடக் கோள்மூட்டும்
குற்றச் செயலினை யெடுத்துரைப்பான்
குழுவாய் வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
குறைகள் நீக்கிட வாழ்பவனைச்
செழுமை குன்றிய போதினிலும்
சீர்மை மிகுந்திட வாழ்த்துரைப்பான்

சிறுமை மிஞ்சிடும் செயலினையே
சின்ன மதியினர் செய்தாலும்
பொறுமை காத்திடும் செயலாலே
புத்தன் இவனெனக் காட்டிடுவான்
வறுமை சூழ்ந்திடும் வேளையிலும்
வாய்மை தவறிடா வாழ்வினையே
சிறிதும் குறைத்திட மனமின்றிச்
சிரமம் நேர்ந்திட வாழ்ந்திடுவான்