திங்கள், 5 அக்டோபர், 2020

 

கலாமாம் எங்கள் கலாமாம்

 

கலாமாம் அப்துல் கலாமாம்

கனவு காணச் சொன்ன

கலாமாம் அப்துல் கலாமாம்

 

உலகோ ரெல்லாம் போற்ற

உயர்ந்த நிலையில் இருக்கும்

உண்மை யான தலைவர்

 

ஏற்றுக் கொண்ட பதவி

ஏற்றம் மிகுந்த தெனினும்

எளிமை யான மனிதர்

 

ஓய்வு பெற்ற போதும்

ஓய்ந்தி ருக்கும் நினைவை

உள்ளம் கொள்ளா மனிதர்

 

பள்ளி தோறும் சென்று

படிப்பின் மேன்மை யுணர்த்திப்

படிக்கச் சொன்ன ஆசான்

 

மழைநீர் வேண்டு மென்றால்

மரங்கள் தேவை யென்ற

மாண்பைச் சொன்ன மனிதர்

 

சின்ன வயது கனவில்

சிறகை முளைக்கச் செய்யும்

சிந்தை வளர்க்கச் சொன்னார்

 

கண்ட கனவை நினைவில்

கொண்டு வந்து காட்ட

கடிதாய் வுழைக்கச் சொன்னார்

 

துன்பம் துரத்தும் போதும்

திரும்பி நின்று பார்த்தால்

தூர வோடும் என்றார்

 

எண்ணும் ஆசை யாவும்

ஏற்றம் மிகுந்த ஒன்றாய்

இருக்க வேண்டும் என்றார்

 

கற்றுக் கொடுக்கும் குருவைக்

கடவுள் நிலையில் வைத்து

கைகள் கூப்பச் சொன்னார்

 

 

 

தலைமுறை இடைவெளி (தந்தையும் மகனும்)

வாழும் வாழ்க்கைப் பாதையில்

      வறுமை வந்த போதிலும்

வாழும் வழியைப் பெற்றிடும்

      வளமை யான கல்வியைக்

காலம் கருதி யளித்திடக்

      குருவைப் போல்தன் கடமையை  

நாளும் செய்து முடிக்கவே

      நல்ல எண்ணம் கொண்டவர்

 

வலிமை குன்றாத் தோற்றத்தில்

      வயதும் முதிர்ச்சி கண்டிட

இளமைப் பொலிவு மறைந்திடும்

      ஈர்க்கும் சக்தி குறைந்திடும்

அலையும் ஆசை மனத்தினில்

      அவல எண்ணம் தோன்றிடும்

முழங்கும் வாஞ்சைப் பேச்சினில்

      முரண்மை சொற்கள் சூழ்ந்திடும்

 

அழகு நிறைந்த பசும்வெளி

      ஆசை மகனோ டமர்ந்திட

அழகு பறவை குருவியும்

      அருகே அமர்ந்து ஒலித்திட

மழலை கேட்கும் கேள்விபோல்

      மாற்ற மில்லாக் கேள்வியைப்

பழமை நினைவில் பலமுறை

      பாச மகன்முன் கேட்டிட

 

பொறுமை யற்ற மகனவன்

      பெரிதாய்க் கத்திப் பேசவே

வெறுப்பைக் காட்டும் மகனிடம்

      வேறு வார்த்தை மொழிந்திட

விருப்ப மில்லாப் பொழுதிலும்

       வளர்த்த வளர்ப்பில் குற்றமோ

பொறுப்பை உணராக் குற்றமோ

       பொதுவி லறிய எண்ணினார்

 

பகைவர் போலப் பேசிடும்

       பெற்ற மகனின் எரிச்சலை

அகற்ற வேண்டும் என்பதால்

       அன்றே அன்பாய் எழுதிய

அகக்கு றிப்பு நூலினை

       அளித்துப் படிக்கக் கூறினார்

அகக்கு றிப்புச் செய்தியை

       அறிந்து கொண்ட மகனுமே

 

பந்த பாசப் பிணைப்புடன்

       பரித விக்கும் முதுமையில்

இந்த உலக வாழ்க்கையை

       ஈகை செய்யத் துணிந்திடும் 

விந்தை மிகுந்த நடத்தையால்

       விலக்க முடியா அன்பினைத்

தந்தை காட்டும் வழியினில்

       தானு மளிக்கத் தொடங்கினான்


                                                      கணேசுகுமார் பொன்னழகு

                                                       சிங்கப்பூர்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

 

கிழப் பிள்ளையின் குறிப்பேடு

 

இளமைப் பருவம் தூய்ந்திட

      ஈர முதுமை பெற்றதால்

வளமை யான சுரப்பிகள்

      வறட்சி நிலைக்குப் போகவே

வளப்பம் மிகுந்த பார்வையும்

      வரைய றைக்குள் சுருங்கிட

அழகு நிறைந்த மகனுடன்

      அமர்ந்து பேசும் காட்சியில்

 

மழலை மாறா வார்த்தையில்

      மகிழ்ந்து குழைந்து மொழிந்திட

பழகும் பிள்ளைப் பேச்சினைப்

      பருகி யின்பம் துய்க்கையில்

மழலை யன்னக் கேள்வியை

      மாற்ற மின்றித் தொடர்ந்திட

விளக்கம் கூறும் தந்தையும்

      வெறுப்பைக் கக்கும் மகனுமே!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

மனமுவந்து வாழ்த்துகிறேன்!

 

நான்காண்டு காலம்

      நட்புடனே பழகித்

தேனுண்ணும் வண்டாய்த்

      தினந்தோறும் வந்து

நான்சொன்ன தமிழை

      நன்முறையில் கற்று

ஆண்டிறுதித் தேர்வை

      அழகாக எழுதி

 

வானுயர  வாழ்வை

      வளர்ச்சியெனக் கொண்டு

மேன்மேலு முயரும் 

      மேற்படிப்பைப் படிக்க

மான்போலத் துள்ளி

      மகிழ்வுடனே செல்லும்

மாணவருக் கோயென்

      மனமுவந்த வாழ்த்து

 

நான்பார்க்கும் பணியில்

      நல்லெண்ணம் கொண்டு

நான்கினத்தின் உறவை

      நன்முறையில் சொல்ல   

வீண்வாத மின்றி

      விருப்புடனே கேட்ட

மாணவருக் கோயென்

      மகிழ்வான வாழ்த்து