சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 17 (17/04/2021)

தலைப்பு : நேற்றின் பிம்பங்கள்   

 

கண்ணால் கண்ட காட்சி

கருத்தில் வந்து துளைக்க

வண்ண வண்ண கனவும்

வந்து வந்து போகும்

எண்ண குழியில் நிறைந்து

ஏற்றம் போல இறைக்க

உண்மை யான பிம்பம்

உள்ளம் தன்னில் உலவும்

 

பள்ளிக் காலச் சூழல்

பழைய நினைவை மீட்ட

வெள்ளி முளைத்த பின்பும்

வீதி தோறும் சுற்றித்

துள்ளித் திரிந்த இடங்கள்

துவண்ட மனத்தை மீட்டும்

அள்ளி யிறைத்த பொருட்கள்

அன்பின் திண்மை யூட்டும்

 

பிள்ளைப் பருவம் பற்றிப்

பேசு கின்ற பேச்சு

வெள்ளை மனத்தில் தோன்றும்

வேச மில்லாப் பிம்பம்

கொள்ளை கொள்ளு மின்பம்

குவிந்து கிடந்த போதும்

உள்ள மெல்லாம் தேங்கும்

உருத்த லில்லாப் பிம்பம்

 

காதல் பருவம் உய்ய

கன்னி மனத்தை வேண்டி

நோதல் வலியால் வாடும்

நோண்பைக் கொண்ட பின்பும்

காத தூரம் சென்று

கால்கள் கடுக்க நின்று

கோதை முகத்தைப் பார்த்த

குறைந்த காலப் பிம்பம்

 

பள்ளம் மேடு கொண்டு

பரந்து விரிந்த ஆற்றில்

வெள்ளம் பாய்ந்து செல்ல

விருப்ப மோடு குதித்து

தள்ளும் நீரின் எதிராய்த்

தாவித் தாவி நீந்தி

எல்லை வந்த காட்சி

எனக்குள் இருக்கும் பிம்பம்

 

 

நாள் : 16 (16/04/2021)

தலைப்பு : தோல்விகள் தோற்பதற்கல்ல 

 

எண்ணிய எண்ணமும் எடுத்த முயற்சியும்

இருப்பினைக் கொடுத்திட இயலா நிலையிலும்

கண்ணிய முறையிலே கடமை யாற்றிடும்

கருத்தினைத் தாங்கிய கொள்கைப் பிடிப்பினை

திண்ணிய உளத்தினில் தெளிவாய்ப் புகுத்திடும்

திறன்மிகு உழைப்பினைக் கொடுத்தே முயன்றிட

கண்களின் எதிரினில் காணும் காட்சியில்

களித்திடக் கூடிய இன்பம் தோன்றிடும் 

பலமுறை தோற்பினும் எடுத்த காரியம்

பயனுடன் முடித்திடும் பணியைச் செய்திடு

பலமெனக் கருதிடும் பெரியோர் சொல்படி

பாதைக ளமைந்திட பயணம் கொண்டிடு

உலகியல் நடைமுறை உன்னுள் ஒளிவிட

ஓய்ந்திடா மனமதில் ஊக்கம் பெற்றிடு

சிலமுறை முயன்றிடு முரிய முயற்சியும்

சீரிய வெற்றியைப் பெற்றே கொடுத்திடும்

 

கடலினில் அலைந்திடும் அலைபோல் நெஞ்சினில்

கலைந்திடா ஆசைகள் உன்னுள் பரவிட 

கடனெனச் செய்திடும் முயற்சி முழுவதும்

காட்டினுள் வெளிப்படும் ஒளிபோல் மங்கிடும்

உடலினில் தோன்றிடும் உற்சா கவலிமை

உளம்தனி லுயர்ந்திடும் போதே கொண்டிடும்

கடமையில் கருத்தினில் தொடர்ந்து முயன்றிட

கரத்தினில் தவழ்ந்திடும் வெற்றி தோன்றிடும்

 

 

நாள் : 15 (15/04/2021)

தலைப்பு : தங்கக் கூண்டுகளில் அந்நியர்

 

கொரனா கிருமி பரவி

கொடிய தொற்றும் தாக்க

மரணக் கணக்கும் கூடி

மனிதர் பயந்து நடுங்க

தருணம் பார்த்த அரசும்

தடுப்பு முறைகள் செய்ய

வரம்பு மீராச் சட்டம்

வடித்துக் கொடுத்த போது

 

சிங்கை யெங்கள் நாட்டை

சீர்மை செய்து உயர்த்த

அங்க மெல்லாம் தேய்ந்து

அயரா வுழைப்பைக் கொடுத்து

பங்கு கொண்ட அயலார்

பரிவு வேண்டி நிற்க

தங்கும் விடுதி யெல்லாம்

தரத்தில் கட்டி முடித்து

 

தங்கக் கூண்டாய் மாற்றித்

தான மாகத் தந்தார்

இங்கு வந்த அயலார்

இருக்கும் இடத்தை விட்டு

எங்கும் செல்ல முடியா

ஏக்க நிலையில் வாட

தங்கக் கூண்டில் மாட்டித்

தவிக்கும் கிளிபோ லானார்.

 

 

நாள் : 14 (14/04/2021)

தலைப்பு : அன்பெனும் மழை

 

விரும்பும் ஆணின் வரவைக் கண்டு

விரவும் நெஞ்ச ஆசை களோடு

அரும்பு கின்ற முல்லை மலரின்

அழகு மொட்டாய் முன்பல் சிரிப்பும்

கரும்பின் சுவையாய் இனிக்கப் பேசும்

கன்னிப் பாவை காந்த விழியின்

குறும்புப் பார்வை கொண்டு சிணுங்கும்

குமரிப் பெண்ணின் கோல வடிவும்

 

கள்ள மில்லாக் காளை நெஞ்சில்

காட்டு வெள்ளம் போல வந்து

தள்ளிக் கொண்டு போகும் போது

தடுமாற் றத்தில் தத்த ளிக்க

அள்ளி யெடுத்து அரவ ணைத்து

ஆசை யோடு கொஞ்சிப் பேச

துள்ளி யாடும் மனத்தி னூடே

தூவி டுமேஅன் பென்னும் மழையை

 

கிள்ளிக் கொஞ்சி கடிந்து கொள்ள

கிடைத்த நேரம் கொஞ்ச மெனினும்

துள்ளும் ஆசை கோடி வந்து

துடிக்கும் நெஞ்சில் ஆழப் புகுந்து

எல்லை யில்லா இன்ப மாக

இதயம் தன்னில் பெருகும் போதும்

இல்லை யென்ற எண்ணம் தோன்றி

இரந்தி டுதேஅன் பென்னும் மழையை

 

பருவப் பெண்ணின் பார்வை பட்டு

பாச மென்னும் பரிவைக் கேட்க

குருத்து போன்ற எந்தன் நெஞ்சில்

குத்தும் கண்ணால் கூர்மை காட்ட

உருவம் நலிந்து மெலிந்து போக

உள்ளம் மட்டும் உன்னில் வாட

அருவ மில்லா ஆசை கொண்டு

அலைந்தி டுதேஅன் பென்னும் மழையில்

 

 

நாள் : 13 (13/04/2021)

தலைப்பு : விடியாத இரவில்லை 

 

கருத்தான காவலோடு காலங்களும் மாறித்

தெருவெங்கும் சுற்றிவந்து பார்த்தும் – பெருகும்

கொடிதான குற்றங்கள் கூடினாலும் பாரில்

விடியா இரவில்லை நம்பு

 

குறையாத கோபத்தைக் கொண்டவர் நெஞ்சில்  

மறையாத எண்ணங்கள் மாறும் – கறையாய்ப்

படியாமல் உள்ளத்தில் ஊர்ந்தாலும் மண்ணில்

விடியா இரவில்லை காண்

 

கருவாகும் மேகங்கள் வானின்று பொய்க்க

உருவாகும் வேளாண் பயிர்கள் -  தலைக்க  

முடியாத சூழல்கள் ஆனாலும் நித்தம்

விடியா இரவில்லை பார்

 

கயவர்கள் கண்முன்னே காட்சிதர உள்ளப்

பயம்கொண்டு வாழும் மனிதன் – முயற்சி

படியேறிப் பக்குவமாய் வாழ்ந்தாலும் நாட்டில்

விடியா இரவில்லை பார்

 

நம்பியவர் நாசமாகி நம்மைவிட்டுப் போனாலும்

நம்முள் இருக்கின்ற மாண்புகளை – தம்முள்

மடியவைத்து தற்காத்துக் கொண்டாலும் பாரில்

விடியா இரவில்லை காண்

 

கணேசுகுமார் பொன்னழகு.

 

 

நாள் : 12 (12/04/2021)

தலைப்பு : கவிதை என் காதல்

 

எழுத்துச் சீரோடு அசைகூட்டி மொழிக்கு

ஏற்ற தளையாலே அடியாக்கி அமைய

எழுதும் போதிலது சந்தத்தின் இசையை

இட்டு நிரப்பிடவே இன்பத்தை இழையவிட்டு

பழுது ஏதுமில்லா பொருளூட்டும் சொற்களால்

படைக்கும் பாவலர்தம்  பைந்தமிழின் கூட்டே

கொழுத்தும் வெயிலுக்கோர் நிழலூட்டும் ஆல்போல்

கிளைகள் பரப்பிநிற்கும் கவிதையென்னும் பாட்டு

(வேறு)

உள்ளம் உறைந்த மனிதர் கூட

உடைந்து நெஞ்சா லுருக எந்தன்

உள்ளம் தொட்டு உண்மை கண்டு

உருத்து கின்ற செய்தி யெல்லாம்

வெள்ளம் போல விரவி டுமாறு

விவர மான வார்த்தை கொண்டு

நல்ல முறையில் கருத்துச் சொல்லி

நறுக்குத் துடுக்காய்க் கவிதை சொல்வேன்

 

பள்ளம் மேடு பார்த்து ஏறிப்

பாறை யுச்சி சென்ற தெல்லாம்

அல்லி மலரும் அரும்பும் காட்சி

      ஆசை மனத்தில் பதியும் நேரம்

வெள்ளம் பாயும் ஆற்றின் அழகும் 

      வீழும் அருவி விரையும் அழகும்

துள்ளித் திரியும் மானும் மீனும்

      துரத்திப் பிடிக்கும் சிறுவர் கூட்டம்

 

கொள்ளை கொள்ளும் குமுகக் காட்சி

      கொஞ்சும் நெஞ்சில் கூடி வந்து

வெள்ளம் போல பாய்ந்து வந்து

      வெறுமை நெஞ்சில் குடியும் கொள்ள

கள்ள மில்லா உள்ளம் கொண்டு

      கண்ணில் காணும் காட்சி யாவும்

நல்ல முறையில் நாளும் சொல்லி

      நன்றாய்க் கவிதை நானும் படைப்பேன்

 

 

நாள் : 11 (11/04/2021)

தலைப்பு : இயலாததெல்லாம் முயலாததே

 

கருத்தாளர் கல்வியாளர் என்றபேரில்

கடமைகண் ணியம்கட்டுப் பாடின்றிக்

கருத்துரையாய்ப் பொழிப்புரையாய்க் கொடுத்துவிட்டுக்

கண்டபடி குமுகத்தில் நடந்திடுவார்

விருப்பத்தின் வேண்டுதலை விண்ணப்ப

வேலையாக மட்டுமிங்குச் செய்துவிட்டு

இருந்தவர்கள் இருந்தபடி இருந்துகொண்டு

எல்லாமும் நடப்பதில்லை யென்றுரைப்பார்

 

நயமான நல்வினைகள் ஆற்றுகின்ற

நல்லோர்கள் நானிலத்தில் வாழ்ந்தாலும்

சுயநலத்தார் கூட்டமொன்று  சுணங்கிநிற்க 

சூழ்நிலைமேல் பழிபோட்டுப் பதுங்கிடுவார்

இயலாத தெல்லாமும் இங்கில்லை

என்பதையே உணர்ந்தோரும் ஏற்றோரும்

முயலாது முடமான மனத்தோடு

முன்னணியில் முந்திடவே ஆசைகொண்டார்

 

வயதான ஆன்றோரும் சான்றோரும்

வாழ்க்கையில் வெற்றிதனைப் பெற்றிடவே

சுயமான சிந்தனையில் உழன்றுழன்று

சோதனையைச் சாதனையாய்ச் சாற்றிடுவார்

அயராத முயற்சியாலும் உழைப்பாலும்

அடைதற்கு முடியாத ஆள்மையோடு

உயர்தற்கு முடியாத உயர்வினையும்

உலகத்தார் மெச்சுமாறு தொட்டிடுவார்

 

கணேசுகுமார் பொன்னழகு.