சனி, 30 செப்டம்பர், 2023

 

நதி

கூட்டுச் சேர்ந்து கும்மிருட்டாய்க்

கூடி வந்த கருமேகம்

மேட்டுப் பக்கம்  மின்னலோடு

மேவி யெங்கும் பொழிந்ததாலே

காட்டு வெள்ளம் கரைதேடிக்

கடந்து வந்த பாதையெல்லாம்

நாட்டு மக்கள் நலம்வாழ

நான்கு பக்கம் ஆறாச்சு (நதியாச்சு)

 

காலம்

காலமே! காலமே! முன் நகரு

காலமே! நேரமே! முன் நகரு

ஓடு! ஓடு! நீ ஓடு!

உன் மகிமை தெரிந்திட நீ ஓடு!

மனிதன் புரிந்திட நீ ஓடு!

 

ஊரு உலகம் எல்லாம்

உன்னைத் தேடி அலையுது பார்

ஒரு நிமிடம்கூட நிற்காதே

மனிதன் உன்னிடம் கெஞ்சுவான்

அதை நீயும் கேட்காதே

 

சூரியன் உதயத்திற்காக நிற்பாயா?

இல்லை மறைவிற்காக நிற்பாயா?

உய்வில்லா உன்தன் குறிக்கோளைப்

புனிதமான உன் வரவோடு

மனிதன் புத்தியில் உரைப்பாயா?

 

ஒன்று இரண்டு என்றில்லை

உயர்ந்த சக்தி அதைக் கொண்டு

நீ அழும் மனிதனைப் புதைப்பாய்  

உலகின் அழிவைக் கண்டு

ஊமையென வேடிக்கை பார்ப்பாய்

 

அதுவே உனது உரிமை

அது மட்டுமே உன் லட்சியம்

நிற்காதே! காலமே! நிற்காதே!

நீ நகர்த்தும் உலகில் நிற்காதே!

ஓடு ஓடு நீ ஓடு!

 

2. சிங்கையவள் பேரழகு காட்சிகள்

(சமனிலைச் சிந்து)

 

சிங்கப்பூர் நாடென்னும் பெயர்பெற்று – உலகில்

சீரோடும் சிறப்போடும் விளங்குகின்ற

சிங்கையவள் பேரழகு காட்சிகளை – இன்று

சிந்தாமல் சிதறாமல் நானுரைப்பேன்

 

சிங்கமுகம் மச்சவாலும் கொண்டதாலே – சிங்கை

சின்னமெனச் சரித்திரத்தில் நிலைத்தவளாம்

பங்கமில்லாப் பல்லினத்தார் பழக்கமதை – தன்னுயர் 

பண்பாட்டுப் பேரழகாய்க் கொண்டவளாம்  

 

அங்கமெல்லாம் அணிகலன்போல் கட்டடங்கள் – சூழ்ந்த    

அந்திநேரச் சிங்கையவள் மெய்யழகு

தங்கநிகர் மின்னொளியின் மின்னழகால் – ஒளிரும்    

தன்மையினைப் பெற்றிட்டப் பெருமகளாம் 

 

மார்கழியின் மையிருட்டில் முழுநிலவும் – அலைபோல்

முன்னகர்ந்து உச்சிவரும் கோலமதைக்

கார்காலப் பனிக்குளிரில் சாளரத்தின் – பின்நின்று

களிக்கின்ற காட்சிகளைப் பெற்றவளாம்

 

பூங்காவின் நகரென்று புன்முறுவல் – காட்டிப்

புத்துணர்வுப் பூக்களிலே நிறைந்தாலும்  

பூங்காவுக் குள்நகராய்ப் புதுப்பொலிவு – பெற்றிங்குப்   

புன்னகையின் பூரணத்தைத் தருபவளாம்

 

கண்ணோக்கும் இடமெல்லாம் காணுகின்ற – உயர்

கட்டடங்கள் கலையழகைத் தந்தாலும்

மண்ணூடி எழுகின்ற மரஞ்செடியின் – பேரழகு

மாண்புகளை மதித்திடச்  செய்பவளாம்


பன்னாட்டு விமானங்கள் பறந்துவந்து – நிற்பதோடு

பயணிகளும் பயனடையும் சேவையினைத்

தன்னாட்டுச் சாங்கியிலே அழகழகாய் – ஆற்றுவதால்

தரணியோர்கள் போற்றுவதை ரசிப்பவளாம் 


 

தமிழ்மொழி விழா 2023 பொதுப் பிரிவுக்கான போட்டிக் கவிதைகள்

1. அழகோ அழகு (அறுசீர் விருத்தம்)

ஆழிசூழ்ந்து ஆர்பரிக்கும் அலைநடுவே

அங்கமெல்லாம் பச்சைவண்ண ஆடைகட்டி

கீழிருந்து மேனோக்கும் கட்டடமாய்க்

கீறிவைத்த கோடாகக் கிளைபரப்ப

கீழ்திசையில் வீற்றிருந்து கோளோச்சும்

கலைமகளாம் சிங்கையென்னும் திருமகளை

வாழியநின் புகழ்வாழி யவேயென்று

வானுயர வாழ்த்துவதி லுமோரழகு

 

ஓருருவாய் எம்மனத்தில் நிலைபெற்ற

ஒப்பற்ற லீகுவானின் தலைமையாலும்

போருருவாய்ப் பொங்கியெழும் புலியொத்த

பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பினாலும்

பாருக்குள் வளர்ந்ததெங்கள் சிங்கைநாடு

பல்லினத்தார் வாழுகின்ற தேன்கூடு

பேருபெற்ற பழந்தமிழும் ஆட்சியிலே

பங்காற்றும் மொழியென்ப திலுமழகு

 

சீருருவச் செம்மையினைக் கொண்டிலங்கும்

சிங்கையாற்றுக் கரையோரம் நிலைபெற்ற

பேருருவ இராட்டிணத்தின் மீதேறி

பெருந்தொலைவுக் காட்சிகளைக் காணுகையில்

காரிருளைக் கிழித்தெறிந்து ஊடுருவும்

கதிரவனின் ஒளிவீச்சுக் கற்றைகளோ

நீருருவின் நிழல்போல விரிந்திருந்து  

நிலமெங்கும் எதிரொளிப்ப திலோரழகு