புதன், 6 மே, 2015

அன்னை!

அன்னை! அன்னை! அன்னை!
      அன்பு செலுத்தும் அன்னை!
என்னை, உன்னைக் காக்கும்
      இறைவன் போன்ற அன்னை!

என்னைப் போல யாவரும்
      இனிதே மகிழ்ந்து வாழ்ந்திட
அன்னை! என்றச் சொல்லை
      அன்பாய்ச் சொல்வாய் நாளும்

அன்னை! என்றச் சொல்லே
       அமைதி காணும் இன்பம்
என்றும் இதனைச் சொல்ல
       இன்பம் தோன்றும் நாளும்
இன்றும் சொல்வோம் வாழ்த்துகளை

எங்கள் ஐயா லீகுவான்யூ
இங்கு வந்து தோன்றியதால்
சிங்கை நகராம் நம்நாட்டை
சிகரம் போல உயர்த்திட்டார்
மங்காப் புகழை நாட்டுக்கு
மதியால் வாங்கித் தந்திடவே
சிங்கம் போன்ற ஆளுமையை
சிறப்பாய்ச் செய்தார் எந்நாளும்

ஓடும் நதியின் வேகத்தை
ஓயா செயலில் காட்டிட்டார்
காடும் மேடும் திருத்திடவே
கடின உழைப்பைக் கொடுத்திட்டார்
வாடும் ஏழை முதியோரின்
வாழ்வை மிளிர வைத்திட்டார்
நாடும் வீடும் நானிலமும்
நன்றாய் உரைக்கச் செய்திட்டார்

நானும் நீயும் சந்ததியும்
நலமாய் வாழ வழிசெய்தார்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வருவாய் வரவே வகைசெய்தார்
காணும் காட்சி யாவினிலும்
கருணைக் கடலாய் தெரிந்திடுவார்
ஈனும் தாயாய் இருப்பதிலும்
இவரே முதலாய் விளங்கிடுவார்

அன்பும் அறனும் தலைத்தோங்க
அன்றே கண்டார் நல்லிணக்கம்
ஒன்றுபட்டு வாழ்வதற்கும்
ஒருமைப் பண்பு வேண்டிட்டார்
இன்று வயது தொண்ணூறை
எட்டிப் பிடித்த லீகுவான்யூ
என்றும் இதுபோல் வாழ்ந்திடவே
இன்றும் சொல்வோம் வாழ்த்துகளை

பொன். கணேசுகுமார் எம். ஏ
சிங்கப்பூர்
களிப்புக் கொண்டு வாழ்த்துவோம்!

எங்கள் நாடு ஓங்கவே!
எழுச்சிக் கொண்ட சிங்கமே!
சிங்கை நகரை மாற்றியே!
சிறப்புச் செய்தாய் உண்மையே!

மக்கள் மனத்தில் என்றுமே!
மகிழ்ச்சி காண வேண்டியே!
சிக்கல் இல்லா வாழ்க்கையைச்
சீராய் எமக்குத் தந்தியே!

அக்கம் பக்கம் மனிதரும்
அன்பு கொண்டு பழகவே!
மக்கள் கூடும் இடங்களை
மதிப்பாய்க் கட்டச் சொன்னியே!

சீனர் தமிழர் மலாயினர்
சேர்ந்து வாழ வேண்டியே!
வானம் முட்டும் வீட்டினை
வடிக்கச் சொன்னாய் நன்மையே!

அன்று கண்ட கனவினை
அருமை திட்டம் தீட்டியே!
இன்று நினைவாய் ஆக்கிநீ
இன்பம் காணச் செய்தியே!


அன்று செய்த செயலினால்
அறிவு கொண்டோர் யாவரும்
நன்று என்று சொல்லியே!
நாமம் போற்றிப் பாடுவர்

கல்விக் கூடம் யாவிலும்
கன்னித் தமிழைப் படித்திட
நல்லத் திட்டம் தீட்டியே!
நன்மை செய்தாய் என்றுமே!

வெள்ளை உள்ளம் கொண்டநீ
வெற்றியோடு வாழவே!
கள்ளம் இல்லா மனத்துடன்
களிப்புக் கொண்டு வாழ்த்துவோம்.


பொன். கணேசுகுமார் எம். ஏ
சிங்கப்பூர்.
ஆசை!

பள்ளம் பார்த்துத் தண்ணீரும்
      பாய்ந்து வருவதைப் போலவே
அல்லும் பகலும் உழைத்துமே
      அதிக வெள்ளி சேர்க்கவும்
வெள்ளிப் பணம் கட்டியே
      வீடு வாசல் வாங்கவும்
உள்ளம் எல்லாம் பொங்கியே
      உருண்டு வருது ஆசையே!

பள்ளி செல்லும் பிள்ளைகள்
      பழகும் நட்பைப் போலவும்
இல்லை என்ற சொல்லையே
      இல்லை என்று ஆக்கவும்
நல்ல உள்ளம் கொண்டுமே
      நாலு வார்த்தைப் பேசவும்
கள்ளம் இல்லா மனிதராய்க்
      களித்துப் பேச ஆசையே!

ஏழ்மை கொண்ட மக்களும்
      ஏற்றம் பெற்று வாழவே
தாழ்ந்து இருக்கும் நிலையினைத்
      தரத்தில் உயர்த்திப் பிடிக்கவும்
வீழ்ந்து கிடக்கும் வெற்றியை
      வீறு கொண்டு எழுப்பவும்
ஆழ்ந்து தெளிந்த மனத்துடன்
      அன்பு செலுத்த ஆசையே!

நல்ல நல்ல நூல்களை
      நாளும் படிக்க வேண்டியும்
உள்ளம் நிறைந்த இருளையும்
      ஒழிந்து போகச் செய்யவும்
எல்லை யில்லா புகழுடன்
      இனிய பெயரை வாங்கவும்
கல்வி கேள்வி யாவிலும்
      கற்றுத் தேர ஆசையே!

பொன். கணேசுகுமார் எம்.ஏ
சிங்கப்பூர்.

அட்சயத்தின் அன்னமென...

செழுந்தமிழால் நிறைந்திட்ட சிந்தையோடு
      சிறப்பாகச் செய்ந்நன்றி செய்திடவே
எழுகின்ற ஞாயிற்றின் ஒளிபோல
      ஏற்றமுடன் தைப்பாவை வருகின்றாள்
உழுதுண்டு வாழ்கின்ற உழவரையும்
      உறுதுணையாய் இருக்கின்ற ஞாயிற்றையும்
தொழுதுண்டு நலம்பெறவே தைப்பாவை
துடிப்புடனே புத்தாண்டாய் வருகின்றாள்

தமிழன்னை கொழுவிற்கும் கோவிலிலே
      தங்கமென ஒளிவீசும் தைப்பாவை
தமிழாண்டின் தலைமகளாய்த் தரணியெங்கும்
      தாழ்பதித்து நடனமாடி வருகின்றாள்
தமிழ்மொழியின் சிறப்பெய்தும் பெட்டகத்தில்
      தரமான இலக்கணங்கள் இலக்கியங்கள்
அமிழ்தமாய் அங்கமெல்லாம் அணிந்துவந்து
      அவனியிலே அற்புதம்தான் செய்கின்றாள்

கோபுரத்துக் கலசமென நெடிதுயர்ந்து
      கொழுவிருக்கும் கோமகளாம் தைப்பாவை
ஆபரணமாய்ச் சூட்டிவரும் அருந்தமிழால்
      அண்டமெல்லாம் அலங்கரிக்க வைக்கின்றாள்
நூபுரத்து ஒலியோடு நுண்மையுமாய்
      நுவல்கின்ற செந்தமிழாள் தைப்பாவை
ஆபுத்திரன் கையிருந்த அட்சயத்தின்
அன்னமென அனைவருக்கும் பயன்தருவாள்
                                        கணேசுகுமார் பொன்னழகு
                                        சிங்கப்பூர்.
இனிய வாழ்த்துப் பாடுகின்றோம்!

கன்னித் தமிழாய்க் கவிதைச் சுவையாய்க்
கருத்தில் இணைந்து களிப்புடன் வாழ
எண்ணித் தெளிந்த எழுத்தில் வடித்து
இனிய வாழ்த்துப் பாடு கின்றோம்!
கண்ணின் மணியாய்க் கலையின் வடிவாய்
காட்சியில் திளைத்துக் கனிவுடன் வாழ
கன்னல் மொழியில் கருணை மழையாய்
கவிதை வடித்துப் பாடு கின்றோம்!

பொன்னின் ஒளியாய்ப் பூவின் மணமாய்ப்
புவியில் நிலைத்துப் பொறுப்புடன் வாழ
புன்னகை மழையில் பொழிவுடன் விளங்கும்
புதியத் தமிழில் பாடு கின்றோம்!
மண்ணின் உறமாய் மலையின் திடமாய்
மற்றவர் போற்றும் மதிப்புடன் வாழ
விண்ணில் தோன்றும் வெண்ணிற நிலவின்
வீசும் ஒளியாய்ப் பாடு கின்றோம்!
இனிய வாழ்த்துப் பாடும் உள்ளங்கள்
பொன். சசிகுமார்         – ச. விஜயலட்சுமி
பொன். கணேசுகுமார்      – க. மங்கையர்க்கரசி
பொன். சீவானந்தகுமார்
பொன். கண்ணபிரான்            – க. பாலகவிதா
ச. சமால் முகைதீன்       – ச. மெஹராஜ்பேகம்
வீ. சீனிவாசன்                  – சீ. சந்திரகலா
இரா. பரமசிவம்           – ப. பிச்சைமணி
நனிசிறக்க வாழ்த்துகின்றோம்!

அன்போடும் பண்போடும்
      அரவணைக்கும் மனத்தோடும்
அன்றிலைப்போல் வாழ்வதற்கு
      ஆசையோடு காத்திருக்கும்
பெண்ணவளின் கரம்பற்றிப்
      பெருவாழ்வு தொடங்கிடவே
நன்னாளாம் பொன்னாளில்
      நனிசிறக்க வாழ்த்துகின்றோம்!

சொந்தமென்றும் பந்தமென்றும்
      சூழ்ந்திருக்கும் சபையினிலே!
செந்திலவன் கரம்பற்ற 
      சேர்ந்திருக்கும் தேவியவள்
எந்நாளும் இந்நாளாய்
      இனிமையுடன் வாழ்ந்திடவே
செந்தமிழின் துணையோடு
      செம்மாந்து வாழ்த்துகின்றோம்!

இன்றுமுதல் தொடங்குகின்ற
      இல்லறமாம் நல்லறத்தை
ஒன்றிவிட்ட உள்ளத்தில்
      உயிராகப் போற்றிடவும்
பண்பாட்டின் பாதையிலே
பாங்குடனே நடத்திடவும்
நன்றான சொல்கொண்டு
      நன்னாளில் வாழ்த்துகின்றோம்!

அன்னை!

அன்னை! அன்னை! அன்னையவள்
      அன்பு கொண்ட அன்னையவள்
என்னை உன்னைக் காக்கின்ற
      இறைவன் போன்ற அன்னையவள்
அன்பும் அறனும் தலைத்தோங்க
அன்பை அமுதாய் ஊட்டியவள்
கண்ணே! பொன்னே! எனக்கொஞ்சி
     கன்னித் தமிழால் பாடியவள்

வாடும் பிள்ளை முகமறிந்து
வாட்டம் போக்கச் செய்திடுவாள்
ஓடும் நதியின் வேகத்தை
ஓயா செயலில் காட்டிடுவாள்
நாடும் வீடும் போற்றிடவே
நல்ல பண்பை ஊட்டிடுவாள்
வீடும் நாடும் போற்றுகின்ற
வீரக் கதைகள் சொல்லிடுவாள்

நானும் நீயும் எப்போதும்
நலமாய் வாழ வழிசெய்வாள்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வயிறு நிரம்ப வகைசெய்வாள்
ஈன்ற தாயாய் இருந்தாலும்
இவரே முதலாய் விளங்கிடுவாள்
காணும் காட்சி யாவினிலும்
கருணைக் கடலாய் தெரிந்திடுவாள்

கண்ணாய் வளர்த்தப் பிள்ளையைக்
     கட்டித் தூக்கிச் சீராட்டும்
பெண்ணை என்றும் உயர்வோடு
     போற்றிப் புகழும் நம்மினத்தில்
உண்மைத் தாயை என்றென்றும்
      உயிராய் எண்ணி வாழ்த்திடவே
கண்ணீர்த் ததும்பும் உள்ளத்தைக்
      காலில் வைத்து வணங்கிடுவோம்

                     பொன். கணேசுகுமார்,
                        சிங்கப்பூர்.
நாளும் நன்மை புரிந்திடுவோம்
பிஞ்சு பாலைக் குருத்துகளும்
பிடித்த மான செங்கரும்பும்
மஞ்சள் கொத்தும் மாவிலையும்
மனைகள் தோறும் மணமணக்க
நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு
நன்றி சொல்லும் தைநாளில்
வஞ்ச மில்லா இயற்கையை
வாஞ்சை யோடு வணங்கிடுவோம்.

நல்ல நாளாம் தைப்பொங்கல்
நம்மை நாடி வந்ததால்
உள்ள மெல்லாம் உவகையோடு
உற்றார் உறவும் சேர்ந்துகொள்ள
எல்லை யில்லா இன்பங்கள்
இன்று போலக் கிடைத்திடவே
கள்ள மில்லா களிப்புடனே
கால மெல்லாம் வாழ்ந்திடுவோம்.

உள்ளத் தனைய உணர்வுகளை
ஒன்ற வைத்துப் போற்றிடவும்
வெல்லத் தினிய நினைவுகளை
வேண்டும் மட்டும் பெற்றிடவும்
இல்ல மெல்லாம் இருள்விலகி
இனிய காட்சி தெரிந்திடவும்
நல்ல எண்ணச் செயலோடு
நாளும் நன்மை புரிந்திடுவோம்.
                                   கணேசுகுமார் பொன்னழகு
                                   சிங்கப்பூர்.
உயர்ந்திருக்கும் நம்தேசம்

இலக்கியங்கள் காட்டுகின்ற
எட்டடுக்கு மாளிகையை
இலக்காகக் கொண்டிங்கு
எழும்பியதோ கட்டடங்கள்

உலகமக்கள் விரும்புகின்ற
உயர்கல்விக் கூடங்களும்
உழைப்பாளர் ஒன்றுகூடி
ஓய்வெடுக்கும் விடுதிகளும்

கட்டிவைத்த கட்டடமாய்க்
கண்ணுக்கு விருந்தாகி
நட்டுவைத்த கொடிமரம்போல்
நாடெங்கும் பரந்திருக்கு

பொட்டுவைத்தப் புள்ளியாக
      புவியினிலே வீற்றிருந்து
கட்டுகோப்பு மாறாமல்
      கவினுருவாய் விளங்குதுபார்

காரிருளும் ஒளிவிளங்க
கண்கவரும் சித்திரமாய்
ஓரிடத்தில் நிலைபெற்று
உயர்ந்திருக்கும் நம்தேசம்

ஊர்க்கூடித் தேரிழுக்க
உலாவரும் உற்சவமாய்
சீரோடும் சிறப்போடும்
      செம்மையுற்று விளங்குதுபார்

                  பொன்.கணேசுகுமார்
                  சிங்கப்பூர்.
உதவும் கரங்கள்
உள்ளத்திலே ஒளியிருந்தால்
உதவிடவே வழிபிறக்கும்
நல்லசெயல் நாம்செய்ய
நாளெல்லாம் எண்ணிடுவோம்
கள்ளமில்லா புன்சிரிப்பில்
      காரியங்கள் ஆற்றிடவே
உள்ளமெல்லாம் உவகையோடு
      உன்கரத்தை நீட்டிவிடு
கண்ணிருந்தும் குருடராகக்
      காலமெல்லாம் வாழாமல்
எண்ணிறைந்த உதவிகளை
      இன்பமுடன் செய்துவிடு
பைகொடுத்து பலன்சேர்க்கும்
பாவியாக இல்லாமல்
கைகொடுக்கும் தோழராக
      கடமைதனை ஆற்றிவிடு